அமீர், யுவன் கூட்டணி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. 2010ஆம் ஆண்டு தொடங்கி, இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த இசை வெளியீடு கடந்த வாரம் கனடாவில் நடைபெற்றது. ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் நான்கு மட்டுமே தமிழ்! மற்றவை இந்தி, ராப்(Rap) வகைப் பாடல்கள்.
ஐசலாமே ஐசலாம்
டெக்னோ இசை அதிர ஒலிக்கும் ஐட்டம் நம்பர் பாடல். மானசியின் கிறங்கடிக்கும் குரலில் ரசிக்க முடிகிறது. இடையில் வரும் வாத்தியங்களின் ஒலிச் சேர்ப்பு, பாடலுக்கு வேறு ஒரு பரிமாணம் தருகிறது. மதுரைப் பொண்ணின் வாசம் அடித்தாலும், யுவன் கேட்க வைக்கிறார்.
"உண்மையில் யாரும் புத்தன் இல்ல,
தப்பில்லா வாழ்க்கையில் உப்பேயில்ல" என்று சினேகனின் வரிகள் போதைத் தத்துவம் சொல்கின்றன.
காற்றிலே நடந்தேனே
மழலைக் குரலில் உதித் நாராயணன், ஸ்வேதா பாடியிருக்கும் டூயட் பாடல். உதித்தின் குரல் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், தெளிவற்ற உச்சரிப்பால் வார்த்தைகள் சரி வரப் புரியாமல் போகின்றன. இவருக்கும் சேர்த்து ஸ்வேதா தெளிவாகப் பாடியுள்ளார். பல்லவி அழகாக ஆரம்பித்தாலும் சரணம் சற்று நெருடலாக அமைகிறது. இதைத் தவிர்த்துப் பார்த்தால் இது அழகிய மென் கற்பனைப் பாடல்.
"மெய்யோ பொய்யோ தோணவில்லை, ரசிகன் கவிஞன் ஆகினேன்",
"மின்னல் முதுகில் ஏறியே நூறு கண்டம் தாவினேன்" போன்ற மிகை வரிகள் கவரும் ரகம்.
ஒரு துளி விஷமாய்
இந்திப் பாடகர் ஷாரிப், ஸ்ரேயா கோஷல் கூட்டணியில் ஒரு விதச் சோகப் பாடல். இடையில் வரும் தபேலா இசையைத் தவிர்த்தால் இது ஒன்றுமே இல்லை. காதலை மையமாக வைத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஓர் உரையாடல் நடந்தால் எப்படி இருக்கும்?… அதை அழகாகக் கவிதையாக்கி இருக்கிறார் சினேகன்.
யாவும் பொய்தானா?
இழந்த காதலின் வலி சொல்லும் பாடல். மதுஸ்ரீயின் குரல், பாடலுக்குக் கூடுதல் உயிர்ப்பு சேர்க்கிறது! இதில் தபேலா இசைத்தவர்களைத் தனியாகப் பாராட்டலாம்! இசைக் கோர்ப்பும் அவ்வளவு துல்லியம்! மொத்த ஆல்பத்தில், உடனடி வெற்றியை எட்டும் வாய்ப்பு இதற்கே அதிகம்! யுவனின் பெயர் சொல்லும் மென்சோகப் பாடல்களின் வரிசையில் இதுவும் இடம் பிடிக்கும்.
"உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை நானும்
தேடிப் பார்த்ததில் சுகம் கண்டேன் நானடா"
"ஓசையின்றியே வார்த்தை அனைத்தும் சாக…" போன்ற சினேகனின் வரிகள் குறிப்பிடத்தக்கவை!
அகடம் பகடம்
இது இந்திப் பாடல். பாடியிருப்பவர் மொஹித் சௌகான். இந்தியில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இதில் வரும் டிரம்ஸ் இசை தமிழ்ப் படத்திற்குப் புதிது. வார்த்தைகள் புரியாவிட்டாலும் செவியை ஈர்க்கிறது. இசைக்கு, மொழி முக்கியம் இல்லை என்று யுவன் தன் பங்குக்கு ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
ஆல்பத்தின் மைனஸ் எனப் பார்த்தால், இந்தப் பாடல்கள், யுவனின் தற்போதைய பாடல்களை அவ்வப்போது நினைவுபடுத்துகின்றன. அதற்கு யுவனைக் குறை சொல்ல முடியாது. இது 2010ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட படம். சரியாகச் சொன்னால், அவருடைய தற்போதைய படைப்புகள்தான் இதன் பாதிப்பில் அமைந்துள்ளன. நிச்சயம் பின்னணி இசையில் வித்தியாசம் காட்டியிருப்பார் என எதிர்பார்க்கலாம்.
படத்தின் விளம்பர வாசகம் ‘A Mafioso Love Story’. இதற்கேற்ப, ஆல்பம் மென் மற்றும் டெக்னோ இசையின் சரிவிகிதக் கலவை!
“