இயக்குனர் பி.வாசுவின் வாரிசு, ஷக்தி வாசுவை நினைவிருக்கிறதா? சின்னத்தம்பி, நடிகன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இப்பொழுது வளார்ந்து, ஒரு சில படங்களில் நடித்துவிட்டார். ஒரு நல்ல படத்தின் மூலம் திரையுலகில் தன் பெயரை நிலைநாட்டிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் போராடி வருகிறார். அவர் நடிக்கும் அடுத்த திரைப்படம்தான் ஆட்டநாயகன். ஆதித்யா, மலையாள நடிகை ரம்யா நம்பீசன், நாசர் போன்றவர்களும் நடிக்கும் இத்திரைப்படத்தை கிருஷ்ணராம் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படமாம்! எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்துதான் சொல்ல முடியும். சமீபத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. படத்தைப் பார்ப்பதற்கு முன், பாடல்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
லக்கடி
கோரஸ் கூச்சல், விசில், அதன் பிறகு "லக்கடி லக்கடி" என்று சப்தம். கதாநாயகனின் ஓபனிங் ஸாங் போல! ஏதோ விஜய் படத்தின் முதல் பாடல் போலிருக்கின்றது. அக்மார்க் குத்துப் பாடல், அக்மார்க் ஸ்ரீகாந்த் தேவா! பாடகர் யாரென்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம், ஷங்கர் மஹாதேவனேதான். சில மாற்றங்கள் – அற்புதம் என்றும் கூடச் சொல்லலாம். என்னவென்றால், பாடலின் வரிகள் புரிகின்றன, அவை கேட்கும்படி நன்றாகவே உள்ளன!! உபயம் கவிஞர் வாலி. இது போன்ற பாடல்களுக்குக் கூட யோசித்து எழுதியிருக்கிறார். "பெரிய விஷயம்" என்று பாராட்டுவதா, இல்லை "பொறுமை அதிகம்" என்று வியப்பதா என்று தெரியவில்லை.
பட்டாம்பூச்சி
கார்த்திக்கின் குரலில் நேராக பாடல் ஆரம்பிக்கிறது. கதாநாயகன் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்குதாம். ஏன் என்று கேள்வி வேண்டுமா, என்ன! காதல்தான். ஸ்ரீகாந்த் தேவா கூட மெலடியைத் தரமுயன்றிருக்கிறார். என்ன, மெலடியும் கொஞ்சம் அதி வேக நடையிலேயே அமைந்திருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை, அநேக குத்துப்பாடல்களை கேட்ட செவிகளுக்கு இதுவே பெரும் வித்தியாசம்தான். மெட்டைப் புதிது என்று சொல்லிவிட முடியாது, இதற்கு முன்பு கேட்ட பாடல்களின் சாயல் தெரிகிறது. இருந்தாலும் பரவாயில்லை. இரண்டாம் சரணத்தில் சாதனா சர்கம் பாடுகிறார். ஆரம்பிக்கும் பொழுதே, "இலமையில்" என்று வாலியின் அழகிய தமிழைக் கொல்கிறார். தாளம் போட வைக்கும் மென்மையான பீட்ஸும் கார்த்திக்கின் குரலும் பாடலை நினைவில் நிற்க வைக்கின்றன.
செக்க
"ஏலேலோ" என்று கிராமத்திய பாடலைப் போல ஆரம்பித்து, விரைவிலேயே குத்துப் பாடலாக மாறிவிடுகிறது. என்ன கொடுமை செய்துவிட்டேன், சாதனா சர்கம் தமிழைக் கொலை செய்கிறார் என்று சொல்லி!! அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று சாதனாவைப் புகழும் அளவிற்கு, இதோ மனிதர் பாடுகின்றார், "செக்க செவ்வாழ, சொக்க வைச்சாழே, சின்னக் கண்ணாழே, பிச்சு தின்னாலே! மல்லவாழ தோப்போரம், மவுராசி வருவாலா, பன்னியாரம் தருவாலா!" ஐயகோ! யார் என்று யோசனையா, நம் வடக்கிந்திய நண்பர் உதித் நாராயண்தான்!! அனுராதா ஸ்ரீராம் அற்புதமாக கலக்க, இவரோ நம் செவிகளை ரொம்பவும் சோதிக்கிறார். வாலியின் குறும்பு மிக்க வரிகள் எல்லாம் படுகொலை செய்யப்படுகின்றன. ஸ்ரீகாந்த் தேவாவின் குத்துக்கு ஆட்டம் போட்டுவிட்டு, வரிகளை எல்லாம் செவிகளிடம் அண்டவும் விடக்கூடாது.
வார்த்தையில
தமிழ் தெரிந்தவர் பாடினால், எத்தனை நன்றாக இருக்கிறது – இது போல! இம்முறை வாலி தன் வரிகளால் நம்மை துக்கக் கடலில் மூழ்கடிக்க முயற்சிக்கின்றார். ஹரிசரணின் குரலும் ஒரு கை கொடுக்கிறது. வாத்தியங்களே இல்லாத மிகச் சிறிய பாடல். தன் ‘டண்டணக்கா’ கருவிகளை நம்பாமல், பாடகரின் திறமையை மட்டும் நம்பியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. நன்று!
ஒண்ணாரூபா
இதோ திரும்பிவிட்டார் ஸ்ரீகாந்த் தேவா, தனக்கு நன்கு தெரிந்த குத்துப் பாடல் மெட்டுக்கு! பாடகர் வேல்முருகனின் குரலில் கிராமிய மணம் கமழ்கிறது. விவேகாவின் வரிகளை ரொம்பவும் அழகாய்ப் பாடியிருக்கிறார். ஒரு சில தினங்களுக்கு முன், யுவனின் இசையமைப்பில் ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ என்றொரு படம் வெளிவந்தது நினைவிருக்கிறதா? அதில், "என் ராசாத்தி" என்று ஒப்பாரி முறையில் கலக்கிய அந்த மறக்க முடியாத குரலுக்குச் சொந்தக்காரர்தான் இந்த வேல்முருகன். பாடகரைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி இப்பாடலில் வேறொன்றும் இல்லை.
ஆட்டத்தப் பாரு
இது தமிழ்ப் பாடல்தானே? இயக்குனர் கிருஷ்ணராமே எழுதியிருக்கிறாராம். ஆரம்பத்தில் வெறும் ஆங்கில வரிகள். அப்புறம் ஸ்ரீகாந்த் தேவாவின் வழக்கமான டண்டனக்கா பீட்ஸ். அப்புறம்தான் பாடல் ஆரம்பிக்கின்றது. ஒரு நிமிடம், இந்த மெட்டை எங்கோ கேட்டிருக்கிறோமே! இளையராஜாவின் இசையில், சிவாஜி நடித்து, ‘நான் வாழவைப்பேன்’ என்றொரு படம் வந்தது. அதில் முக்கியமான பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அவர் பாடும் "ஆகாயம் மேலே" பாடலை அப்படியே சுட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து, வேறு வரிகளைப் போட்டு, ஆங்காங்கே ஆங்கிலத்தில் பிதற்றினால், அடையாளம் கண்டுபிடிக்க முடியாதா என்ன!
ஸ்ரீகாந்த் தேவாவின் பெயர் சொல்லும் ஆல்பம். அவருக்கென்றே உண்டான அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ளன. மனிதர் கொஞ்சம் குத்துப்பாடல் ரகங்களைக் குறைத்துவிட்டு, இன்னும் கொஞ்சம் தரமான இசையைக் கொடுக்க முயற்சி செய்தால், அவருக்கு மட்டுமல்ல, தமிழ் இசை உலகிற்கே நன்மை விளையும்!! அவரின் தந்தை கூட அவ்வப்பொழுது "நலம் நலமறிய ஆவல்", "வண்ண நிலவே", "எழுதுகிறேன் ஒரு கடிதம்" போன்ற மறக்க முடியாத மெட்டுக்களைத் தந்திருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும்!
“
good””