(இந்தக் கட்டுரை 19.11.2009 அன்று Times of India பத்திரிகையில் வெளியான "Use your desires to evolve consciously" (authored by Swami Niranjananda Saraswathi) என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்படுகிறது.)
உங்களுடைய ஆசைகளை உணர்வுபூர்வமான ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வாறு உபயோகிப்பது?
நாம் வாழும் இந்த உலகம் ஆசைகளால் நிறைந்தது. ஆசைகள் இல்லாத மனிதர்களே இல்லை. காட்டில் தவம் புரியும் தவசிகளுக்கும் கூட ஆண்டவனை அடையும் ஆசையும் உலக மக்கள் உய்வு அடைய வேண்டும் என்ற ஆசையும் உள்ளன.
தந்த்ரா மற்றும் யோகா என்பவை இந்தியாவில் தோன்றி கீழை நாடுகள் மூலமாக மேலை நாடுகளுக்குச் சென்றவை! இரண்டு வழிகளுமே உணர்வுபூர்வ ஆன்மீக வளர்ச்சிக்குப் பயன்படுபவை.
தந்த்ரா என்பது தங்களின் தற்போதைய நிலையை அப்படியே ஏற்றுக் கொள்வது. இந்த எற்றுக் கொள்ளலே உங்களுடைய மேல்நோக்கு ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அடிப்படைத் தேவையானது – ஏற்றுக் கொள்ளல் மட்டுமே.
தந்த்ராவின்படி எதையும் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. கட்டுப்பாடு என்பது ஓடும் குணம் கொண்ட நீரை ஒரு பாத்திரத்தில் வைப்பது போன்றது. ஒரு சிறு துளை ஏற்பட்டால் போதும். நீரின் வெளிப்புற ஓட்டத்தைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது. மனித மனமும் இது போன்றதுதான். தோல்வியைச் சந்தித்துப் பின் வெற்றியைத் தழுவிய முனிவர்களின் சரிதைகளே இதற்கு சரியான சான்றாக அமைந்துள்ளன.
நமது மனம் பல ஆண்டுகளாக – ஏன் பல ஜென்மங்களாகப் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாசுபட்டதால் புண்பட்டுவிட்டது. அதைப் பண்படுத்துவது எப்படி என்பது ஒரு கேள்விக்குறியதாகி விட்டது.
ஒன்றைக் கவனமாக நினைவில் கொள்ள வேண்டும். ஆன்மீக விதிப்படி ஆன்மீக வளர்ச்சி அடைந்தே தீர வேண்டும். அது கட்டுப்பாடுகளால் நிரம்பித் ததும்பும் மனதின் எல்லைகளைக் கடத்தல் மூலமே ஆக வேண்டும். இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு ஜென்மத்தில் அது நடந்தே தீர வேண்டும். இது ஆன்மீக மொழியில் “மெய் ஞான அனுபவம்” எனப்படும்.
இந்த மன எல்லைக் கடத்தல் என்பது தந்த்ரா மூலமும் ஏற்படலாம்; யோகா மூலமும் ஏற்படலாம்.
பல நியமங்களைக் கொண்டது யோகா. நியமங்களைக் கடைபிடிப்பது யோகாவின்படி இன்றியமையாதது. ஆனால் வெற்றி என்பது நிச்சயமில்லை. அது மனோசக்தி மற்றும் முயற்சியின் அளவைப் பொறுத்தது. நமது வேலை, உண்மையான தீவிர முயற்சி செய்வது மட்டுமே! புத்தர் 12 ஆண்டுகள் முயற்சி செய்து முடித்த பின் அமைதியாக ஓய்வு கொண்டபோது பெளர்ணமியன்று மெய்ஞானம் பெற்றார் என்பது உலகம் அறிந்த உண்மை.
உங்களை இப்போதுள்ள நிலையில் முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலமும் மனதில் ஏற்படும் எண்ண ஓட்டத்தைக் கூர்ந்து கவனித்தல் மூலமும் நீங்கள் ஆன்மீகப் பயணத்தைத் துவங்குகிறீர்கள். இதனால் எண்ணங்கள் ஒடுக்கப்பட்டு மனம் ஒரு நிலைப்படும். இது உண்மையிலேயே வெற்றியின் முதல் படியாகும்.
தற்காலத்தில் பிரபலமாகி வரும் "விபஷ்யானா" என்ற யோகா முறை இதையே போதிக்கிறது. "விபஷ்யானா" என்ற ஸம்ஸ்க்ருத சொல்லிற்கு "விசேஷமாக கூர்ந்து கவனித்தல்" என்று பொருள். எதைக் கவனித்தல்? எண்ண ஒட்டத்தினைக் கவனித்தலே ஆகும். நமது மூச்சு எண்ணங்களைத் தாங்கிச் செல்லும் வாகனமாகும். மூச்சினைக் கூர்ந்து கவனித்தல் மூலம் எண்ணங்கள் கவனிக்கப்படுகின்றன.
புத்தர் இதையே போதித்து வந்தார். "இஹி பாஸிகோ" என்ற அவருடைய விபஷ்யானா பயிற்சியினை அவர் உலகை விட்டுச் செல்லும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை போதித்தார். இன்று அதே போதனை "விபஷ்யானா" யோகா என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.
யோகாவில் உள்ள கட்டுப்பாடுகள் தந்த்ரா மற்றும் விபஷ்யானாவில் இல்லை. தந்த்ராவின்படி கட்டுப்பாடுகள் மேல் நோக்கு ஆன்மீகப் பயணத்திற்கு முட்டுக் கட்டைகளாகும்.
இந்தியாவில் போஜ மஹாராஜாவைப் பற்றி அறியாதவர்களே இல்லை. அவருடைய காலத்தில் தந்த்ராவில் வெற்றி கண்ட பல ஆயிரம் தாந்த்ரீகர்கள் இருந்தனர். ஆனால் கட்டுப்பாடுகள் நிறைந்த சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் ஒட்டு மொத்தமாகக் கொல்லப்பட்டார்கள் என்பது வருந்தத்தக்கது.
இன்றும் தாந்த்ரீகர்கள் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு பரம்பொருளுடன் இணைந்து மறுபிறவியைக் கடந்த ஓஷோ (ரஜனீஷ்) ஒரு தாந்த்ரீகரே. பயிற்சியும் அளித்தார். அவர் சாதித்த சாதனைகளும் சந்தித்த சோதனைகளும் உலகம் அறிந்த விஷயம்.
தந்த்ராவும் யோகாவும் இரு வித வெளிப்பாடுகளைக் கொண்டவை என்றாலும் இவைகளின் தொடக்க மூலம் ஒன்றே. ஆரம்பத்தில் இருந்த தந்த்ராவின் அடிப்படையில் அமைந்ததே யோகா. யோகாவின் எல்லா கோட்பாடுகளும் தந்த்ராவிலிருந்தே தோன்றின.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளில் (திபெத்) மன ஓட்ட நிலையைக் கடந்த ஞானிகள் வெகு அளவில் இருந்தனர். அவர்களின் மறைவு அதிகமானதால் கட்டுப்பாடுகள் நிறைந்த யோகா முறைகள் தோன்றின.
மனித எண்ணங்களின் வகைகள் :
மனித எண்ணங்கள் கீழ்க்கண்ட விதத்தில் மட்டுமே இருக்க முடியும்.
1. ஒரு பொருளைப் பற்றி (உயிர் உள்ள, உயிர் இல்லாத)
2. மனிதர்களைப் பற்றி (கடவுளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
3. இறந்த, நிகழ், எதிர் கால நிகழ்வுகள் பற்றி
ஒன்று மற்றும் இரண்டு, மூன்றாவதோடு தொடர்பு கொண்டதாக இருக்கும்.
இதைத் தவிர நான்காவது விதம் எண்ணத்தில் இருக்க முடியாது. 10 நிமிடம் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை எழுதிப் பார்த்தால் இந்த உண்மை நிரூபணமாகும்.
Conceive என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளான "உருவாகுதல்" என்பது இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே பொருந்தும். 1. எண்ணம் 2. குழந்தை.
மூன்றாவது இது வரை இல்லை. இனிமேலும் ஏற்படாது.
எனவே, எண்ணத்தைக் கடப்பது என்பது தந்த்ரா மற்றும் யோகாவின் அடிப்படையாகும். இவைகள் இரண்டு வித உபாயமாகும். முதலாவது கட்டுப்பாடுகள் அற்றது. இரண்டாவது கட்டுப்பாடுகள் நிறைந்தது.
“
ஒரு சிறிய திருத்தம். புத்தர் 6 ஆண்டுகள் தவப் பயிற்சியில் ஈடுபட்டதாக படித்திருக்கிறேன். மகாவீரர்தான் 12 ஆண்டுகள். மற்றபடி உங்களது கட்டுரை மிகவும் பயன் தரக்கூடியது. நன்றி.