அட! ஆமாம், இது ஒரு சினிமாவின் பெயர்தான். எத்தனை அழகாக இருக்கிறது! புதுமுகம் மீரா கதிரவன் இயக்க, மோஸர்பேயர் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராயாகிக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம். தமிழ் சினிமா உலகிற்கு மற்றுமொரு பெண் இயக்குனரின் வரவு. இத்தனை நாட்களாக நீங்களெல்லாம் (வி.ப்ரியா, ஜெ.எஸ். நந்தினி, மீரா கதிரவன் – உங்களைத்தான்!) எங்கே இருந்தீர்கள்?
திறமை வாய்ந்த சுஹாஸினி, ரேவதி போன்றவர்கள் "நம்மால் ஜனரஞ்சகமாகப் படம் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு, வேறு பாதையில் சென்றுவிட்டார்கள். கடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமா கண்டது எல்லாம் வெட்டு, குத்து, அடிதடி – அவ்வளவுதான்! ஆடிக்கொரு முறை மணிரத்னம், கௌதம் மேனன் போன்றவர்கள் படம் செய்வார்கள். ஆண் வர்க்கத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமாவை விடுவிக்க கண்டிப்பாக பெண்கள் தேவை அல்லவா! வருக, வருக!!
(வாய் கிழிய இவ்வளோ பேசிப்புட்டேன்! நீங்களாச்சும் கொஞ்சம் அருவா, "டேய், அவனப் போடு", இதெல்லாம் இல்லாம கொஞ்சம் நல்லதா படம் எடுப்பீங்க அப்படிங்ற நினைப்புல! அதுல மண்ண வாரிப் போட்டுடாதீங்க!)
மீரா கதிரவன் இயக்கும் இத்திரைப்படத்தில் ஜெய், புதுமுகம் நந்தகி (இன்னும் ஒரு அழகான பெயர்) நடிக்க, விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். கூடிய சீக்கிரம் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இசைத்தட்டில் ஒன்பது பாடல்கள் இருக்கின்றன. கேட்டு விடுவோமே!
நீ ஒத்தச் சொல்லு சொல்லு
"நீ ஒரு வார்த்தை சொல்லு, எது வேணும்னாலும் செய்வேன்" என்று நாயகன் தன் காதலியைப் பார்த்துப் பாடும் அழகான பாடல். குழலின் இனிமையோடும், மென்மையான பீட்ஸோடும் பாடல் ஆரம்பிக்கும் போதே தாளம் போட வைக்கிறது. நல்லதோர் மெலடிக்கு ஆயத்தம் ஆகி விடுகின்றோம். கவிஞர் ஏகாதசியின் வரிகளை ரஞ்சித்தும் நீதாவும் அழகாக பாடியிருக்கிறார்கள். பாடல் முழுதும் கிராமிய மணம் வீச வைத்திருக்கின்றார் விஜய். சபாஷ்!
குஜ் குஜ் கூட்ஸ் வண்டி
குழந்தைகள் பாடும் முழு நீளப் பாடல். கேட்கும்பொழுதே அவ்வளவு நன்றாக இருக்கிறது! அஞ்சலி திரைப்படத்தில் வருவது போலிருக்கும் இது போன்ற பாடல்கள் எப்போதாவதுதான் வருகின்றன. பாடலைக் கேட்கும்பொழுதே, நாமும் சிறு பிள்ளையைப் போல், ஏதோ ரயில் வண்டியைத் துரத்தும் பிரமை ஏற்படுகின்றது!! அதற்குத் தகுந்தாற்போல் விஜய் ஆண்டனியின் வயலினும், உருமி மேளமும் சக்கை போடு போடுகின்றன. ஏகாதசி எழுதியிருக்கும் இப்பாடலைப் பாடியிருக்கும் ஸ்ரீமதிக்கு மட்டும் அல்ல, உடன் கோரஸ் குரல் கொடுத்திருக்கும் அனைவருக்கும் கோடி பாராட்டுக்கள்.
வடக்கா தெற்கா
சோகம் கலந்த ஹம்மிங்கில் ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து ஸ்ட்ரிங்ஸ், வயலின் என்று துன்பக் கடலில் தள்ளி விடுகின்றார் விஜய். காதலியின் பிரிவில் தவிக்கும் நாயகன் பாடும் பாடல். ஏகாதசி எழுதியிருக்கும் இப்பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கின்றார் – ரொம்பவும் அழகாக! பிரபல மலையாள இயக்குனர் ஸ்ரீனிவாசனின் அருமை மகன் இத்தனை அற்புதமாக பாடுவாரா? இப்பாடலில் தன் மெட்டை மட்டும் நம்பி, மென்மையான வாத்தியங்களை மட்டும் அழகாக பயன்படுத்தியிருக்கின்றார் விஜய். மனதை வருடிவிட்டது, ஐயா!
பாளையங்கோட்டை
இன்னும் ஒரு கிராமிய மணம் கலந்த ஆரம்பம், பெண்களின் கோரஸோடு. விடலைப் பையன்கள் சந்தோஷத்தில் பாடும் பாடலை நா.முத்துகுமார் எழுத, விஜய் ஆண்டனியே பாடியுள்ளார். தாளம் போட வைக்கும் பாடல். நம்மூரில் நடக்கும் திருவிழாவிற்கு நம்மைக் கொண்டு சென்று விடுகிறது! பாடலின் ஒவ்வொரு வரியிலும் விஜய் ஆண்டனியின் பெயர் எழுதியுள்ளது!
கோல் தனா ரங்குபாய்
பாடலின் ஆரம்பித்திலேயே தபலா சக்கைப் போடு போட்டு விடுகின்றது. மராத்தியில் (என்று நினைக்கிறேன்) ஆரம்பித்து, கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு தமிழுக்கு மாறுகின்றது. ஏக்நாத் வரிகளை எழுத, மால்குடி சுபா இப்பாடலைப் பாடியிருக்கின்றார். ஆண்களை மகிழ்விக்கும் பெண்கள் அவர்தம் வாடிக்கையாளர்களை வரவேற்பது போன்ற பாடல். வரிகளில் மாதரின் வலியும் தெரிகின்றது! பாடல் ஹிட்டானால், மால்குடி சுபாவின் குரலின் கன கச்சிதப் பொருத்தமே காரணமாக இருக்க முடியும்.
எத்தனையோ கத உண்டு
சினிமாவில் ஒரு நாடகம். அந்த நாடகத்தில் ஏதோ ராஜகுமாரி. அவள் மற்றொருவருக்கு இன்னும் ஒரு கதை சொல்கிறார். அக்கதையில் இன்னும் ஒரு ராஜகுமாரி, அவளின் கொடுமைக்கார சித்தி – என்று ஒரு சிண்ட்ரெல்லா கதை. அவளைக் கடத்தும் ஒரு அரக்கன். அரக்கனிடமிருந்து ராஜகுமாரியை விடுவிக்கும் ஒரு இளவரசன். அவ்வளவுதான் பாடல். ஒரு அழகான கற்பனை! ஏகாதசி வரிகளை எழுத, ஸ்ரீமதுமிதாவும், மஹாலக்ஷ்மி ஐயரும் பாடியிருக்கின்றார்கள். நாடகம் வெள்ளித்திரையில் எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்.
ஒத்தையடிப் பாதை
சிதார் சுருதி மீட்ட, ஆங்காங்கே கார்ட்ஸ் மட்டும் கேட்க, வேறு வாத்தியங்கள் ஏதும் இன்றி ஒரு பாடல். ராமா திருவிடையான் வரிகளை எழுத, வீரா சங்கர் பாடியிருக்கிறார். உண்மையில் சொல்லப்போனால், இதைப் பாடல் என்றே சொல்லக் கூடாது – வீரா சங்கரின் குரல் விளையாட்டு என்றே சொல்ல வேண்டும்! காதலை நினைத்து சந்தோஷத்தில் "உன்னை எனக்குத் தர்றியாடீ" என்று ஏங்கும் பாடல். "ஊத்திக் குடிச்சது போல் உன்னைப் பாத்தாலே தடுமாறும்" என்று அவர் தடுமாறுவது இருக்கின்றதே, அப்பப்பா!
மாடத்து ஒளி விளக்கே
மீண்டும் வீரா சங்கரின் குரல் விளையாட்டு – இம்முறை சோகக் கடலில் விழ வைக்கின்றது ராமா திருவிடையானின் வரிகள். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இது போல் புதுமையாக செய்ய நினைத்ததற்கு விஜய் ஆண்டனிக்கு ஒரு "ஓ!" போடலாம். வெள்ளித்திரையில் எப்படி அமைந்திருக்கின்றது என்று பார்க்க வேண்டும்! வீரா சங்கரின் பாவங்கள் அனைத்தையும் திரையில் கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல!!. "உண்மைக் காதலுக்கு மனசு கசிஞ்சு உருகுதடீ" என்று உருகுகின்றார் பாருங்கள்..அப்பப்பா!
ஆராரோ ஆரீராரோ
மீண்டும் வீரா சங்கர், அதே ஸ்டைலில் இம்முறை ஏகாதசியின் வரிகளைப் பாடுகின்றார். இந்தப் பாடல் கிட்டத்தட்ட ஏழு நிமிடம். சோகம் கலந்த தாலாட்டுப் பாடல். மீண்டும், திரையில் எப்படி இதை காண்பிக்கப் போகிறார்கள், எப்படி அனைவரையும் ஆழ்ந்து ரசிக்க வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது!!
மொத்தத்தில், விஜய் ஆண்டனியிடமிருந்து ஒரு நல்ல இசைத்தட்டு. வீரா சங்கரின் மூன்று பாடல்களும் அருமை, அற்புதமான முயற்சி! ஓரிரு நல்ல மெலடிகள், தன் பாணியிலேயே ஓரிரு பாடல்கள் என்று கலந்து தந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. வாழ்த்துகள்! இனி வரும் தருணங்களிலும், இது போல் புதிதான முயற்சிகளை மனிதர் செய்வார் என நம்புவோமாக!
“