குறுகலான அந்தத் தெருவுக்குள், பாதித் தெருவை ஆக்கிரமித்துக் கொண்டு, நீள வசத்திலும் குறுக்கு வசத்திலும் காலிக் குடங்கள் அணிவகுத்திருந்தன. அத்தனைக் குடங்களுக்கும் ஈர்ப்பு மையமாய், நீர் வற்றிப்போன ஒரு கார்ப்பரேஷன் குழாய். அந்தக் குழாயிலிருந்து ஏதாவது ஈரம் கசிகிறதா என்று ஜாடை மாடையாய் நோட்டம் விட்டவாறு பல ஜோடி வியர்த்த விழிகள்.
ஆரவாரமில்லாமலிருந்த அந்தத் தெருவில் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டு ஒரு சைக்கிள் அந்தப் பிரதேசத்தில் பிரவேசித்தது. சைக்கிள்காரப் பையன், பேப்பர் விற்கிறவன் தலைப்புச் செய்தியைக் கூவுகிற மாதிரி உரத்த குரலில் ஒலிபெருக்கிக் கொண்டு வந்தான்.
“அக்கா, நம்ம தெரு சின்னராசு லாரி ஏறி செத்துப் போய்ட்டான்… பெரீம்மா, தண்ணி லாரி ஏறி சின்னராசு செத்துப்போய்ட்டான்…. கடக்காரச் செட்டியாரே, ஒங்கட்ட பீடி வாங்குவானே அந்தச் சின்னராசு. அண்ணா ஆர்ச் சிக்னல்ல பாடி கெடக்கு. செல்லம்மக்கா, ஒங்க சொந்தக்காரப் பய சின்னராசு தான். சைக்கிள் நசுங்கி ரோட்லயே கெடக்கு.”
சில விநாடிகளில் தெருவே காலியாகிவிட்டது, காலிக்குடங்களை அனாதரவாய் விட்டு விட்டு. செல்லம்மாவும் போனாள்.
செத்துப்போன சின்னராசு தனக்கு என்ன உறவு என்று மனக்கணக்குப் போட்டபடியே கும்பலோடு கும்பலாய் நடந்தாள். இவளுடைய பெரியம்மாவோட மூத்த மகளைக் கட்டிக் குடுத்த வீட்டில், அந்த மாமனாருடைய தம்பியுடைய சம்பந்தியுடைய…. வேண்டாம் ரொம்ப தூரமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. குழாயடியில் நிற்கிறபோது ரெண்டு மூணு முறை இவளைப் பார்த்துப் பல்லைக் காட்டியவன் என்பது மட்டும் நினைவுக்கு வந்தது.
விபத்து நடந்த இடத்தில் கூட்டம் ஏறிக் கொண்டேயிருந்தது. சின்னராசுவின் உடல் ஒரு துணியால் முழுமையாய்ப் போர்த்தப்பட்டுக் கிடந்தது. உடலின் தலைமாட்டில் தண்ணீர் டாங்க்கரின் ஒரு சக்கரம். பக்கத்திலேயே உருக்குலைந்து போன சைக்கிள் ஒன்று.
செத்துப்போனவனின் அம்மாவும் அக்காமாரும் தலையிலும் நெஞ்சிலும் அறைந்து கொண்டு அழுதார்கள். அந்தத் தெருக்கார ஆண்கள் சிலர், பிணத்தைத் தரச் சொல்லிப் போலீஸ் அதிகாரிகளோடு வாதிட்டுக் கொண்டிருக்க, சின்னராசுவை உரிமை கொண்டாடிக் கொண்டு வந்த கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
போர்வை போர்த்திய உடல், நசுங்கிப்போன சைக்கிள், கொலைகாரத் தண்ணி லாரி எல்லாவற்றையும் செல்லம்மா மாறி மாறிப் பார்த்தாள். அந்த ராட்சச லாரியில் அவளுடைய கண்கள் நிலைகுத்தி நின்றன. கும்பலுக்குள் புகுந்து தண்ணி லாரியை சமீபித்தாள்.
மீசையில்லாத போலீஸ்காரர் ஒருவர் லாரிக்குப் பக்கத்தில் நின்றிருந்தார். போலீஸ் என்றால் செல்லம்மாவுக்குக் கொஞ்சம் கிலிதான் என்றாலும், இந்தப் போலீஸ்காரருடைய அபூர்வமான மீசையில்லாத தோற்றம் ஒரு தோழமையைத் தோற்றுவித்தது.
அந்தப் போலீஸ்காரரை இன்னும் சமீபித்து, ‘ஏட்டையா’ என்று மெல்ல அழைத்தாள். அவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அழைத்தவள் இவள் தான் என்றறிந்து ‘என்னயாம்மா கூப்ட்ட’ என்றார்.
“யார்ம்மா நீ, செத்துப் போனவனத் தெரியுமா ஒனக்கு?”
“ஆமா ஏட்டையா, எங்களுக்கு சொந்தந்தான்.”
“பாடியப் பாத்தியா? பாத்துட்டன்னா கௌம்பி வீடு போய்ச் சேரு.”
“ஏட்டையா ஒங்கட்ட ஒரு சமாசாரம் கேக்கணும்.”
“அது சரி, கத பேசற நேரமாம்மா இது? ஏட்டையான்னு டபக்னு எனக்கு ப்ரமோசன் குடுத்துட்ட. ஒன்னத் திட்டவும் முடியாது. இன்னா சமாசாரம் சொல்லு.”
“இந்த ராலி டைவரும் கிளினரும் எங்க ஏட்டையா?”
“எஸ்க்கேப் ஆய்ட்டானுவ. விட்டுர்வமா? நைட்டுக்குள்ள தூக்கிப் போட்டுட்டு வந்துர மாட்டோம்! சரி நீ எடத்தக் காலி பண்ணு.”
“சமாசாரத்த இன்னும் நா கேக்கவே இல்லியே ஏட்டையா?”
“இன்னா கேக்கப் போற? பாடிய எப்ப தருவாங்கன்னு கேப்ப. அதெல்லாம் போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சி நைட்லதான் குடுப்பாங்க. போதுமா? சரி கௌம்பு.”
“அதில்ல ஏட்டையா. வேற ஒரு மேட்டர்.”
“இன்னாமா ரோதனையாப் போச்சு. ஏ.ஸி. வர்ற நேரம். சட்டு புட்னு சொல்லு இன்னா மேட்டர்?”
“ஏட்டையா, இந்தத் தண்ணி ராலில ரெண்டே ரெண்டு கொடம் தண்ணி புச்சிக்கலாமா ஏட்டையா?”
(கல்கி, “விபத்து”, 25.06.2006)
My goodness! It is such a build-up and while one is thinking about the emotional climax, there is this sudden drop to the ridiculous. Nice change in tempo, especially in a water-starved locale.