என்
ஈர நிலத்திலிருந்து
ஆயிரம் புறாக்கள்
எங்கோ பறந்து போகின்றன…
அவற்றில் அசையும்
சிறகுகளின் இசையின்
அடையாள மில்லாத
அழுகை…
அழுகையின் அழுத்தம்
மேகத்தைக்
கருக்க வைக்கிறது…
கனக்க வைக்கிறது…
கனம்
சலனங்களின் சாயாத
அச்சு
சலனம்… அது என்ன
அசைவுகளின் அகரமா?
பூகம்பக் கொழுந்துகளா?
நடுக்கத்தின் நாட்டியமா?
எதிரொலி அழுகை
ஈர வடங்களாக…
இதோ… இதோ…
என்னை நோக்கி
இறங்கி வருகின்றன.
என்னை அவை
எப்படிப் பிணிக்கும்?
கண்ணின் கனவுகள்
கிண்ணத்தில் இறங்குமா?
நெஞ்சில் மீண்டும்
புறாக்களின்…
சிறகுகள் சிலிர்த்துக்
கொள்கின்றன – வான
முகம் ஏன்
மீண்டும் கருக்கிறது?