ஒப்புகிறேன்
வீடு புகுந்து நம் பெண்களின்
முந்தானை இழுக்கும் மூர்க்கக் கரங்களை
முழுதாய்க் கொய்வது முறையான செயல்தான்
சகோதரா
அதில் மரணம்
உன் மண்ணின் பெருமைக்கும்
தன்மான உணர்வுக்கும்
மனிதகுல இனத்திற்கும்
மகத்தான தொண்டுதான்
O
ஆனால்
நடந்து முடிந்த களத்தில்
வீரம் கொள்வதென்பது
இனி வரும் சந்ததிப் பெண்களின்
முந்தானையையும்
இழுக்கக் கொடுக்க
இன்றே கையொப்பமிடும்
சாசனமல்லவா
O
‘வெட்டு’ என்பது
என்றும் விட்டுப் போகும் விசயமா
வெட்டாமையே பேரறிவல்லவா
O
சாவதா வாழ்க்கை
வாழ்வதன்றோ வாழ்க்கை
வீசியெறிந்த விதை
விழுந்த இடம் முளைக்கும்
வெட்டிச் சரிந்த கிளை
தரை தொட்டதும் துளிர்க்கும்
உலகின் உயிர்கள் வாழ்வதற்கே
அதை
உணர்த்தும் இயற்கையை
உற்றுப் பார் சகோதரா
O
வெறியரின் தலைகளை
வெட்டிச் சாய்ப்பது
உனக்கு வெற்றியா தோல்வியா
தொடரும் அழிவுகள் என்பது
எக்காலத்தும் எவர்க்கும்
தோல்விதானே சகோதரா
O
அன்று
அணுகுண்டால் அழிந்தது ஜப்பான்
இன்றோ அதுதன்
உழைப்பின் வெற்றியோடும்
பொருள்வளப் பெருக்கோடும்
அறிவுச் சுடர் ஏற்றி
உள்ளத் திண்மை பூட்டி
உலகை வென்றே உலா வருகிறதே
அந்தப்
பேரெழில் கண்டாயா
அதுவன்றோ வெற்றி
அதுவன்றோ வீரம்
அதுவன்றோ வாழ்வு
O
‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here
“