கலவரம்
அது இங்கே தினம் வரும்
அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்
O
தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக
இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா
திடீர்த் துவேசம் உன்னைத்
துண்டாடித் துண்டாடி
வெறியின் பசிக்குத்
தீனியாக்கிவிட்டதா
O
முதலில்
என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்
இது
ஓரிரு நிமிடங்களில்
காய்ந்துபோகும்
ஈர ஒத்தடம்தான்
இதனால்
உன் உயிருக்குள்
கொதி கொதித்துக் குமுறும்
நெருப்பு ஊற்றுகள்
நிச்சயமாய்
நிற்கப்போவதில்லைதான்
ஆகையினாலேயே
நிரந்தர நிவாரணத்தின்
விடியல் கீற்றாய்
இந்தக் கவிதை உருவாக வேண்டும்
என்ற உயிர்த் தவிப்போடு
என் வார்த்தைகளை
உருக்கி உருக்கி
உன்முன் வார்க்கிறேன்
நீயோ –
இன்றைய வெறிச் சூறாவளியில்
வெற்றிகண்ட இனத்தின்
துவம்ச வதைகளால் குதறப்பட்ட
தளிர்க்கொடியாய் இருக்கலாம்
அல்லது –
தோல்விகண்ட இனம்
துவைத்துக் கிழித்து
துயரக் கொடியில் தொங்கவிட்ட
நைந்த ஆடையாய் இருக்கலாம்
நீ யாராய் இருந்தாலும்
என் கரிசனம் மட்டும்
உனக்கு ஒன்றுதான் சகோதரா
இன்று நான்
உனக்குச் சொல்லும் சேதியை
உன் மூளையின் மத்தியில்
ஓர் சுடராக ஏற்றிப்பார்
இங்கே
கண்ணீரை முந்திக்கொண்டோ டும்
உன் இரத்த அருவியை
நாளை
அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம்
நியாயம் இருக்கிறதுதான்
தன்மானமென்பது கடைப்பொருளல்ல
அது உன் உயிர்ப் பொருள்தான்
உன்னத உணர்வுகளின்
கருப்பொருள்தான்
O
‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here
“