அழகின் சிரிப்பில் (2)

சிறு குழந்தை
விழிகளில் இடம் கிடைக்காத போது
அழகு…
உழவன் தோளுக்குத் தாவும்.

மலர் தொடுக்கும்
விரல்வளைவை ஒப்பிட்டுப் பார்க்க
வானவில்லை அழகு
தேடிக் கொண்டிருக்கும்

கவிஞன்
கைவிட்ட சந்தங்கள்
சந்தனக் காடுகளில் தவமிருக்கும்!

கவிதையில்
இடம் கிடைக்கும் என்று
காத்திருந்த வார்த்தை.. கிடைக்காதபோது,
கிட்டவா! சும்மா வா நீ
என அழைத்துக்
கிளி கொத்தும் இடத்தில் ஒரு
கனியாய்த் துடிக்கும்.

இருளின் அழகை – அவன்
வருணித்தான்.
சாளரந் திறந்து பார்த்த
சந்திரனும்
நட்சத்திரங்களும்
விடிய விடியக் கண்களை
மூடவில்லை!

புறப்படும் அந்த
இருளின் நடையழகைப் பார்ப்பதற்காக
இரவின்
கடைசி நொடிகளில்
வந்து நிற்கும் சூரியன்…
ஒவ்வொரு நாளும் தனது ஏமாற்றத்தை
அந்தியிடம்
சொல்லிவிட்டுப் போகிறான்.

பாட்டாளிகளுக்காகப்
பழுத்த கோபம் அவன்
எழுத்தில்! அந்த
வெப்பம் பட்டுக் கொப்பளித்துப் போனது
வானம்!

நட்சத்திரங்களைத்
தேடியவர்கள்
கொப்பளங்களில் கண்பட்டுச்
சுட்டுக் கொண்டனர்!

வானம்கூட அவன்
கண்களுக்குள் போய்த் திரும்பி,
வைகறையில்
பிழையிருந்தால் திருத்திக் கொள்ளும்!

எழுந்தது செங்கதிர் – எங்கும்
விழுந்தது தங்கத் தூறல்!
அவன்
ஆக்கிய இந்த
வாக்கிய வெள்ளத்தில் கதிர்களைத்
தினமும் சூரியன் கழுவிக் கொள்வான்
அழுக்குப் போக!

வட்டமாய்ப் புறாக்கள் கூடி உண்ணும்
தீனியை அவன் பாட்டும்
கொத்தியுண்டு..
பிளந்து கிடக்கும் மானுடத்துக்கு
அளந்து கொடுக்கும்
ஞானம்!

தங்கள் உயரங்கள் பற்றித்
தர்க்கித்துக் கொண்டிருக்கும்
மலைகளின்
சரிவுகளில்
ஆழங்களைத் தியானித்து அவன் கவிதை
அருவிகளில்
இறங்குகிறது!

தங்கத்
தகடுகளான சருகுகளை
அவன் விரல்கள்
தடவிக் கொடுக்கும்போது
உதிர்ந்த
வருத்தமே அவற்றுக்கு
உண்டாவதில்லை!

பட்டணத்துக் கூச்சல்
அவன்
பாடலைக் கீறும்போது…
சிற்றூர்,
மூலிகையோடு அவன்
காலருகே வருகிறது.

இயற்கையின் மார்பில்
பாலருந்தி
வளர்ந்த தமிழ் அவனைக் கண்டு
பூக்காடாய்ச் சிரிக்கிறது! பறந்து
போயங்குப் பாடுகிறான்
பொன் தும்பியாய்!

About The Author