அல்வாக்கள் பலவிதம் (3)

5. அரிசி அல்வா
 
தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 100 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
பால் – 200 மில்லி
கேசரித் தூள் (அ) குங்குமப்பூ – சிறிது
நெய் – 200 கிராம்
சர்க்கரை – 600 கிராம்
ஏலக்காய் – 8
முந்திரி – 6

செய்முறை:

அரிசி, ஜவ்வரிசி இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, இரண்டையும் பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கேசரித் தூள் அல்லது குங்குமப்பூ சேர்த்துக் கலக்குங்கள். அத்துடன் 2 கப் நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு, சர்க்கரையுடன் சிறிது நீரைச் சேர்த்துக் கரைத்து, கம்பிப் பதம் வரும் வரை பாகு காய்ச்ச வேண்டும். அதில் அரைத்த கலவையைக் கொட்டிக், கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறிப், பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது, நெய் தடவிய தாம்பாளத்தில் அதைக் கொட்டிச் சமப்படுத்தி, ஏலத்தூள், சீவிய முந்திரி ஆகியவற்றை மேலே தூவி அழுத்தி விட்டுத் துண்டுகள் போடலாம். இந்த அல்வா, பாம்பே அல்வா போல் இழுக்க இழுக்க சூப்பராக வரும்.

6. ரவை அல்வா

தேவையான பொருட்கள்:

ரவை – 200 கிராம்
பால் – 200 மில்லி
சர்க்கரை – 500 கிராம்
நெய் – 200 கிராம்
முந்திரி – 10
ஏலக்காய் – 4
கேசரித் தூள் – சிறிது
ஜவ்வரிசி – 2 தேக்கரண்டி

செய்முறை:

ரவையை லேசாக வறுத்துப் பாலில் ஊறவிடுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்கு அரைத்து எடுங்கள். அரைக்கும்பொழுது, ஊற வைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக அரைத்ததும், மீதிப் பாலுடன் ஒரு கப் நீரையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள். கூடவே கேசரித் தூளையும் சேர்க்க வேண்டும். அடி கனமான உருளியில், சர்க்கரையுடன் சிறிது நீரையும் சேர்த்துக், கரைந்தவுடன் கம்பிப் பத்துக்குப் பாகு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, கை விடாமல் கிளற வேண்டும். சற்றுக் கெட்டியானதும், ஏலப்பொடி சேர்த்துக் கிளற வேண்டும். நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றி, அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வரும்பொழுது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, சீவிய முந்திரியால் அலங்கரித்துத் துண்டுகள் போடலாம். எளிமையான ரவை அல்வா தயார்!

About The Author