பாளையங்கோட்டைப் பக்கம் போய்ப் பலப்பல வருஷங்கள் ஆகிவிட்டன. மஹாராஜ நகரில் இப்போ காலி மனைகளே இல்லை என்று சொன்னார்கள். கிழக்கே, ரயில் தண்டவாளத்தைத் தாண்டி ஊர் கன்னா பின்னாவென்று விஸ்தாரமாகி விட்டதைச் சொன்னார்கள். பாங்க் காரர்கள் போட்டு வைத்திருக்கிற பூட்டுக்கள் நம்ம வீட்டிலும் கேட்டிலும் தொங்கிக் கொண்டிருப்பதையும் சொன்னார்கள். வீட்டை மீட்டுக் கொள்கிற நல்ல காலம் விடிகிற வரை அந்தப் பக்கமே போகக் கூடாது என்கிற வைராக்யத்திலிருக்கிறேன்.
இப்போது தையல் நாயகித் தெரு வளர்ந்து வயசுக்கு வந்திருக்கும். நம்ம வீட்டை ஒட்டியிருந்த காலி ப்ளாட்டில் குடிசை போட்டிருந்த சங்கரம்மா குடும்பம் புலம் பெயர்ந்திருக்கும். பஸ் ஸ்டாப்புக்குப் போகிற போதும் வருகிறபோதும் நாங்கள் கடந்து போகிற ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனியின் முதல் வீட்டில், அந்த ஃபாரஸ்ட் ஆஃபீஸரின் நாலு அழகுப் பெண்களுக்கும் கல்யாணமாகிக் குடும்பங்கள் பெருகியிருக்கும்.
ஃபாரஸ்ட் ஆஃபீஸருக்குத் தூத்துக்குடியில் வேலை. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வந்து குடும்பத்தோடு இருந்து போகிறவர் என்பது தெரியும். மற்றபடி அந்தக் குடும்பத்தோடு பழக்கம் இல்லை.
அந்த வீட்டு கேட்டுக்குள்ளே அம்பாஸடர் கார் ஒன்று ஆடாமல் அலுங்காமல் நிற்கும்.
வாப்பாவுடைய ஸ்டாண்டர்டு 10 கார், அவர் ரிட்டயர் ஆனவுடன் கைமாறிப்போய், டவுன்பஸ்தான் ஒரே வாகனம் என்று ஆகிப்போனது.
கல்யாணமாகிப் போய்க் கைக்குழந்தையோடு அன்னை இல்லத்துக்கு வந்திருந்த நூருன்னிஸா, ஜங்ஷனுக்கு ஷாப்பிங் போக வேண்டுமென்று சொல்ல, என்னுடைய தலைமையில் எல்லோரும் கிளம்பினோம்.
ஃபாரஸ்ட் ஆஃபீஸர் வீட்டைக் கடந்து கொண்டிருந்த போது வெராண்டாவில் அந்த நாலு பெண்களும் அம்மாவும் இருந்தது தெரிந்தது. பக்கவாட்டில் அம்பாஸடர் கார்.
“தூறல் போடுதுண்ணே” என்றாள் நூருன்னிஸா.
“சின்னத் தூறல்தான், மழை வராது” என்று சமாதானப்படுத்தினேன்.
“இந்த வீட்ல அந்தக் கார் சும்மாவே நிக்கிது. குடுத்தாங்கன்னா எவ்ளோ நல்லாயிருக்கும்! மெல்ல கேட்டுப் பாக்கறியா?”
“சீ, ஔராத. அவங்களுக்கும் நமக்கும் நல்லா பழக்கம் கூடக் கெடையாது. சட்டுன்னு போய்க் கார் கேட்டா என்ன நெனப்பாங்க! மூஞ்சியில அடிச்ச மாதிரி நோன்னு சொல்லிருவாங்க.”
“அதெல்லாம் சொல்ல மாட்டாங்க. பார், அவங்க எல்லார் கண்ணும் நம்ம மேலதான் இருக்கு. நா போய்க் கேக்கறேன் பார்.”
என்னையும் இழுத்துக் கொண்டு நூரி அந்த கேட்டின் முன்னே போய் நின்றாள்.
வெங்கட்ராமனோ வெங்கடகிருஷ்ணனோ என்று ஒரு பெயர்ப்பலகை உள்வாயிலில் தெரிந்தது.
“வந்து…. ஜங்ஷன்… தூறல்…. ஒங்கக் காரு….” என்று கிழக்குத் தொடர்ச்சி மலை மாதிரி நூரி இடைவெளிவிட்டு விட்டு வார்த்தைகளை விடவும் அந்தப் பெண்மணி பிலுபிலு வென்று பிடித்துக் கொண்டாள்.
“அதுக்கு ஏம்மா இவ்ளோ யோசன பண்றீங்க! இந்த வழியாத்தான் நீங்க போறீங்க வர்றீங்க, கார் வேணும்னு கேட்டா ஆஹா கொண்டு போங்களேன்னு சொல்லப் போறோம். அவங்களக் கூப்புடுங்களேண்டீன்னு இதுகள்ட்ட சொன்னா, கொரல் குடுக்க வெக்கப்பட்டுக்கிட்டு நிக்கிதுக. சும்மா நிக்கிற கார், நீங்க யூஸ் பண்ணினா தேஞ்சா போயிரப் போகுது? தம்பி, சாவி இந்தாங்க. ஒங்களுக்கு எப்ப வேணும்னாலும் உரிமையோட வந்து சாவியக் கேட்டு வாங்கிக்குங்க. அப்போதான் எங்களுக்கு சந்தோஷம். என்ன?”
தூறல் வலுத்து மழையாய்ப் பெருகியது. இப்படிப்பட்ட உன்னத மாந்தர்கள் கைக்கெட்டுகிற தொலைவில் ஜீவித்திருக்கும் போது மழைக்கென்ன மனக்குறை!
ராத்திரி சாப்பாட்டு வேளையில் வாப்பா ஒரு பட்டாசு கொளுத்திப் போட்டார்.
“இந்த ஃபாரஸ்ட் ஆஃபீஸர் வெங்கட் வூட்ல ஒரு கார் நின்னுச்சே, அது இப்ப இல்லியா?”
பொசுக்கென்று எனக்குப் புரையேறி விட்டது. கார் கடன் வாங்கின கதை தெரிந்தால் வாப்பா கோபித்துக் கொள்வார் என்று தோணமலேயே போய்விட்டதே!
“கார் அங்கதானே வாப்பா நிக்கிது….” என்று நூருன்னிஸா முணுமுணுத்து வைத்தாள்.
“இருக்கா! சாயங்காலம் இல்லியே?”
“வந்து…. சாயங்காலம் அவங்க எங்கயாவது போயிருப்பாங்க.”
“எங்க போனாங்க, எல்லா டிக்கட்டும் வூட்லதான இருந்துச்சு! சாயங்காலம் நா அந்த வூட்டுக்குப் போயிருந்தேனே!”
எனக்குத் திரும்பவும் புரையேறப் பார்த்தது….
“வாப்பா…. நீங்க…. அந்த வூட்டுக்கு….” என்று நூரி மென்று விழுங்கினாள்.
“போனேன். சும்மாப் போகல. அஃபிஷியலாப் போனேன். அந்த ஃபாரஸ்ட் ஆஃபீஸர் மேல எவனோ மொட்டப் பெட்டிஷன் போட்டிருக்கான். இன்கம் டாக்ஸ்லயிருந்து ரெய்டுக்கு வந்துட்டாங்க. சாட்சிக்கி என்ன வந்து கூப்ட்டாங்க. எனக்குத் தெரிஞ்ச வரக்யும் வெங்கட் நேர்மையான ஆஃபீஸர்தான். அத நா இவங்ககிட்ட சொல்ல முடியுமா? கம்ப்ளீட்டா ஸர்ச் பண்ணாங்க. ஆனா ஒண்ணுமே சிக்கல. ரெய்டு பார்ட்டில ஒரு ஆஃபீஸர் என்ட்ட ரகசியமாக் கேட்டார், வெங்கட் கார் வச்சிருக்காரான்னு. நா வெளிய பாத்தா, காரக் காணல. ஆமான்னு சொல்லவா இல்லன்னு சொல்லவான்னு எனக்குத் தெரியல. நிச்சயமாத் தெரியாம நா ஆமான்னு சொல்லப் போக, அது அந்த நல்ல மனுஷனுக்குப் பாதகமாப் போயிரக்கூடாதே! கார் இருக்கறதாத் தெரியலன்னுட்டேன். இப்பப் பாத்தா, கார் நிக்கிது. இருவத்தி நாலு மணி நேரமும் அங்கேயே நிக்கிற அந்தக் கார், அந்த மூணு மணி நேரம் எங்கேயோ போய்ட்டு வந்து அந்த அழகான குடும்பத்தைக் காப்பாத்தி விட்டிருக்கு பார், இதான் அல்லாவோட வேல!”
வாப்பா இப்போது இல்லை. அந்த வெங்கட் குடும்பம் இப்போது எங்கேயோ!
வருஷங்கள் பல கடந்தும் அன்றைய நிகழ்வுகளை இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறபோது திரும்பவும் ஒரு மனச்சிலிர்ப்பு.
அன்றைக்கு நடந்தது, நல்லவர்களை ஆண்டவன் என்றைக்கும் கைவிடமாட்டான் என்பதைக் காட்டுகிற ஓர் அற்புதம்தான். அவன் அருள் புரிந்தால் அற்புதங்களுக்கா பஞ்சம்!
(யுகமாயினி, டிசம்பர் 2008)
“