மாற்ற முடியாத விதயங்களுக்காக மனதை அலட்டிக்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்பவர்களுக்கு இன்று பஞ்சமே இல்லை. தோல் நிறத்தில் தொடங்கி அவர்கள் அடுக்கும் பட்டியலை வைத்து ஒரு புத்தகமே போடலாம். அப்படியான பட்டியல்கள் மூலம் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் சட்டங்களை உடைத்துக் கொண்டு வெளிவராத வரை அத்தகைய மனநிலை கொண்டவர்களுக்கு வெற்றி எட்டா உயரத்தில்தான் இருக்கும்.
மாற்ற முடியாத விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, மாற்றுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுவது என்ற இரண்டு வகைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றை மகிழ்ச்சிக்கான அம்சங்களாக மாற்றி விட முடியும்! அப்படி மாற்றிக் கொண்டவர்கள் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள். வாழ்க்கையை வசப்படுத்தி இருக்கிறார்கள்.
வெள்ளம், புயல், அடர்பனி என மாற்ற முடியாத விதயங்களுக்காக நீங்கள் வருத்தப்படுவதால் என்ன நிகழும்? உங்களுக்கு மன உளைச்சல்தான் ஏற்படும். இவைதான் என்றில்லை; எவற்றையெல்லாம் உங்களுடைய ஆற்றல், திறன் ஆகியவற்றுக்கு உட்படாதவை, மாற்ற முடியாதவை என உணர்கிறீர்களோ அவற்றையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்! அணைக்கட்டு நிரம்பி வெள்ளம் வரப்போகிறது என அறிவிக்கப்பட்டால் அணையில் இருந்து வரும் வெள்ள நீரைத் தடுக்கப் போகிறேன் எனக் கிளம்புவது முட்டாள்தனமில்லையா? இந்த முட்டாள்தனமான செயல், நீங்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கும்போது புத்திசாலித்தனமான செயலாக மாறிவிடுகிறது! எந்த ஒரு செயலுக்குமே இது போன்ற இரண்டு முடிவுகளில்தான் தீர்வுகள் இருக்கும்.
இவற்றில், முட்டாள்தனமான தீர்வை எடுப்பவர்களைக் கூட அறிவுரைகளும், விளக்கங்களும் சொல்லி புத்திசாலித்தனமான தீர்விற்கு நகர்த்தி வந்து விடலாம். ஆனால், இவ்விரண்டிலும் அகப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்கள், "இந்த மாதம் பருவ மழைக்கான மாதம் இல்லையே! பின் எப்படி அழிவைத் தரும் வெள்ளம் வருமளவுக்கு மழை வந்தது? ஒருவேளை கலிகாலம் தொடங்கிடுச்சோ?" என சம்பந்தமேயில்லாத விதயங்களுக்குள் நுழைந்து கொண்டு தங்களைக் குழப்பிக் கொள்வார்கள்.
இந்த மாதிரியான பயம் அல்லது மன சலனத்தின் வழி வரும் சந்தேகங்கள் உங்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முடக்கிப் போட்டு விடும். ஒருவித வெறுமையை உணர்த்த ஆரம்பித்து விடும்.
இந்தியக் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர்.இராதாகிருஷ்ணன் முதன் முறையாக அமெரிக்காவுக்குச் சென்றபோது வாசிங்டனில் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தது. காற்று, இருள் இவற்றோடு பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது.
விமானத்தை விட்டு இறங்கிய இராதாகிருஷ்ணனை வரவேற்ற அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி, "தங்களுடைய பயணத்தின்போது இங்கே இவ்வளவு மோசமான தட்பவெப்ப நிலை இருப்பதற்காக வருந்துகிறேன்" என்று கூறினார். அதற்கு இராதாகிருஷ்ணன் "மிஸ்டர் கென்னடி! நம்மால் மோசமானவற்றை மாற்ற முடியாது. ஆனால், அது பற்றிய நம் மனக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்" என்றார். இந்த மனநிலைக்கு வந்து விட்டால் உங்களாலும் எதையும் எதிர்கொள்ளவும், இயல்பாய் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அதனால், வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள்! அதனால்தான் நம் முன்னோர்கள் அப்படியான எதார்த்த நிகழ்வுகளை ‘விதி’ என்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலேயே "விதியை மாற்ற முடியும்" என்று சொல்லாமல் "விதியை மதியால் வெல்லலாம்" என்று சொல்லித் தந்தனர். ஆனால் நாமோ, நமக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக, விதிவிலக்காக எடுத்துக் கொள்ள வேண்டியவற்றையெல்லாம் எடுத்துக்காட்டுகளாக எடுத்துக் கொண்டு விட்டோம்.
இஸ்லாமிய கலிபாக்களில் ஒருவரான ஹஜ்ரத் அலியைச் சந்தித்த யூத இளைஞன், "விதிக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை எனக்குச் சொல்ல முடியுமா?" என்று கேட்டான். ஹஜ்ரத் அலி அவனிடம், "உன் வலதுகாலைத் தூக்கு" என்றார். அவனும் தூக்கியபடி நின்றான்.
"சரி… இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்கு" என்றார்.
"அது எப்படி முடியும்?" என்றான் யூத இளைஞன்.
"ஒற்றைக் காலை மட்டும் தூக்கு என்றதும் உன்னால் முடியும் என்று நினைத்துச் செய்தாய் அல்லவா? அதுதான் பகுத்தறிவு. இன்னொரு காலையும் தூக்கச் சொன்னபோது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா? அதுதான் விதி" என்றார். அந்த யூத இளைஞனைப் போலப் பகுத்தறிவுக்கும், விதிக்குமான வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும். சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுவதன் வழி மாற்றங்களையும், மாற்றங்களின் வழி மகிழ்ச்சியையும் உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்!
நான் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் விற்பனை முகவராகப் பணியாற்றியபோது நிகழ்ந்த சம்பவம். இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் நான் சொல்லப்போகும் இந்த நிகழ்வை எதிர்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
அதுவரை, தவணைகளில் பணம் கட்டுவது, பாலிசி காலம் முடிந்ததும் போனசோடு பணத்தைத் திரும்பப் பெறுவது என்றே இருந்து வந்த பாலிசிதாரர்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பங்குச்சந்தை பக்கம் கூட்டி வர ஆரம்பித்தன. "ஒருமுறை முதலீடு செய்யுங்கள்! மூன்றே ஆண்டில் இரட்டிப்புக்கு நிகரான தொகையைப் பெறலாம்" என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும், முகவர்களின் அரைகுறை விளக்கங்களினாலும் பலரும் பங்குச்சந்தைப் பாலிசிகளில் பணத்தை முதலீடு செய்தனர். இப்படியான கவர்ச்சி விளம்பரத்தால் கவரப்பட்ட எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சில இலட்சங்கள் பெறுமானமுள்ள தன்னுடைய இடத்தை விற்று அவ்வளவுக்கும் பாலிசி வாங்கி பல இலட்சங்கள் பெறத் திட்டமிட்டார். தகவல் தெரிந்ததும் அவரைப் பணத்தோடு அலுவலகத்திற்கே அள்ளி வந்த முகவர் ஒருவர் பங்குச்சந்தைப் பாலிசிகளாகப் போட்டுக் கொடுத்தார். இரண்டு வருடம் போனதும் பங்குச்சந்தை படுக்க ஆரம்பித்து விட, முதலீடு செய்த சில இலட்சங்களிலேயே சில இலட்சம் குறைய ஆரம்பித்தது தெரிந்ததும் பாலிசி வாங்கிய அந்த நபர் பதறிப் போய்விட்டார். நேரடியாக இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு வந்து பெரும் களேபரத்தை ஏற்படுத்தினார். "எல்லாத்துக்கும் சரி எனச் சொல்லித்தான் பாலிசி எடுக்கக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறீர்கள்" என்று சொல்லி அங்கிருந்த அலுவலர்கள் அவர் வாயை அடைத்து விட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவருக்குத் தெரிந்து விட்டது. ஆனால், அதை நினைத்துக் கொண்டு அவர் அப்படியே முடங்கிப் போய் விடவில்லை. உடனடியாகப் பாலிசியை முடித்து இருக்கின்ற சில இலட்சங்களை வாங்கி அப்போது எங்கள் பகுதியில் வளர்ந்து வரும் தொழிலாக இருந்த ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தார். முதல்முறை முதலீட்டில் செய்த தவற்றால் உண்டான அனுபவத்தால் இம்முறை மிகவும் கவனமாகவே முதலீடு செய்தார். அடுத்த ஓராண்டில் அவர் போட்ட சில இலட்சங்கள் பல இலட்சங்களாக அவருக்குத் திரும்பி வர ஆரம்பித்தன. தனி அலுவலகம் வைத்துச் செயல்படும் அளவுக்கு இன்று அத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார். தனக்கு ஏற்பட்ட சிக்கலான அந்த நிலையை விதி என்று நினைத்து அவர் முடங்கிப் போகவில்லை. அதை மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை அறிந்து தன் மதியால் வென்றார். இழந்த மகிழ்ச்சியை அடுத்த வருடமே இரட்டிப்பாக அறுவடை செய்தார்.
இவரைப் போல முதலீடு செய்திருந்த மற்றவர்கள் சாத்தியங்களை ஆராயவில்லை. மாற்று வழி முதலீடுகளின் மூலம் இழந்த பணத்தை மீட்பதற்கான சாத்தியங்கள் இருந்தும் அவற்றை அவர்கள் செயல்படுத்திப் பார்க்க முயலவில்லை. மூன்று வருடம் கழித்து போட்ட பணம் வந்தால் கூடப் போதும் என்று காத்திருந்து போட்ட பணத்தையும் விடக் குறைவான பணத்தை மட்டுமே பெற்றனர். "எல்லாம் விதி! போகணும்னு இருந்திருக்கு. போயிருச்சு" எனப் புலம்பித் திரிவதாலும், மாற்ற முடியாதவற்றுக்குரிய விதியை மாற்றக்கூடிய விதயங்களின் மீது சுமத்தி சமாதானம் சொல்லிக் கொள்வதாலும் எந்தப் பயனுமில்லை. சாத்தியங்கள் இருந்தும் அவற்றைச் செயல்படுத்திப் பார்க்க பயந்தவர்களால் ஒருபோதும் முன்னோக்கி நகர முடியாது!
வாயிலிருந்து லிங்கம் எடுப்பதும், திருநீற்றைக் காற்றில் வரவழைப்பதும், பார்வையாலேயே பீடைகளை ஓட்டுவதும்தான் அற்புதங்கள் என நினைக்காதீர்கள். இவையெல்லாம் அற்பங்கள்! இந்த அற்பங்களை விட அற்புதமான அற்புதம் விதிவிலக்கிற்கும் எடுத்துக்காட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து விதியை மதியால் வெல்வதும், அதன் மூலம் உங்களைப் பார்த்து மற்றவர்களை ஆச்சர்யப்பட வைப்பதும்தான்!
இந்த அற்புதத்தை உங்களின் ஒவ்வொரு செயலிலும், நடவடிக்கையிலும் நிகழ்த்துங்கள்! வாழ்வு வசப்படும்! மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்!