தீ அணைப்பான்கள் (Fire extinguishers)
தீ அணைப்பான்கள் அடிப்படையில் இரு வழிகளில் செயல்படுகின்றன – எரியும் பொருட்களைக் குளிர்விப்பது மற்றும் தீயுக்குத் தேவையான உயிர்வளிப் (ஆக்சிஜன்) பரவலைத் தடுக்கும் வகையில் செயலற்ற மேற்படலத்தால் (inert coating) எரியும் தீயைப் போர்த்தி அணைப்பது ஆகியனவே அவை. பலவகைத் தீ அணைப்பான்கள் புழக்கத்தில் உள்ளன. மிகச் சாதாரணமாகப் பயன்படும் தீ அணைப்பானில் மிகுந்த வெப்பத் திறன் உள்ள தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது; இதிலிருந்து நீரை உயர் அழுத்தத்தோடு பீச்சி அடிப்பதால், திறன்மிகு குளிர்விப்பானாக, தண்ணீர் செயல்பட்டுத் தீயை அணைக்கிறது. இருப்பினும் எரிகின்ற பொருள் எண்ணெயாக இருந்தால், தண்ணீரைப் பயன்படுத்தும் தீ அணைப்பான்களைப் பயன்படுத்த முடியாது. இத்தகைய நிலைமைகளில் நுரையைப் (foam) பயன்படுத்தும் தீ அணைப்பான்கள் பயன்படுகின்றன. இவற்றில் தீயைக் குளிர்விக்கும் திறன்கொண்ட அடர்ந்த நுரை பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு வகைத் தீ அணைப்பானில் கார்பன் டெட்ராகுளோரைட் என்னும் வேதிப் பொருள் குளிர்விக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது; இது எந்திரங்கள் மற்றும் மின் கருவிகள் உள்ள இடங்களில் உண்டாகும் தீயை அணைக்க உதவுகிறது. கரியமில வாயுவைப் (கார்பன் டை ஆக்சைடு) பயன்படுத்தும் தீ அணைப்பான்கள் பாதுகாப்பானவை மற்றும் மிகுந்த பயன் உள்ளவை; இதில் கரியமில வாயு செயலற்ற மேற் படலமாக அமைந்து தீ பரவாமல் தடுக்கிறது. தீயால் எரியும் பொருளின் தன்மைக்கேற்ப, பலவகைத் தீ அணைப்பான்கள் பயன்படுத்தப் படுகின்றன; ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வடிவமைப்பும் செயல்படும் தன்மையும் கொண்டவை.
மிதவைப்படகு (hovercraft)
மிதவைப்படகு என்பது காற்று மெத்தையில்/மெல்லணையில் (air-cushion) அமைந்துள்ள ஒரு சக்கரங்களற்ற வாகனம். சுமார் 1.5 மீட்டர் தடிமனுள்ள மெத்தையில் இப்படகு அமைந்திருக்கும். இக்காற்று மெத்தை, உராய்வைக் குறைக்கக் கூடியது. மிதவைப் படகுக்கு அடியில் இருக்கும் ரப்பர் காப்புறையைக் (rubber skirt) கொண்டு மெத்தை உருவாக்கப்படுகிறது; இதில்தான் மிதவைப் படகு அமைந்திருக்கும். ரப்பர் காப்புறை சுமார் இரண்டரை மீட்டர் ஆழமுள்ளது. ஆற்றல் மிக்க விசிறிகளைக் கொண்டு காப்புறையின் கீழே காற்றை நிரப்பி காற்று மெத்தை உருவாக்கப்படும். உந்து சுழலிகளைக் (propellers) கொண்டு மிதவைப்படகு முன்னோக்கித் தள்ளப்படுகிறது. வாயுவினால் இயங்கும் விசையாழிப் பொறியின் (gas turbine) உதவியால் விசிறிகளுக்கும் உந்து சுழலிகளுக்கும் தேவையான ஆற்றல் வழங்கப்படுகிறது. மிதவைப்படகின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை இருக்கும்; இது கப்பலின் வேகத்தை விடக் கூடுதலானது. இருப்பினும் புயல் போன்ற மோசமான வானிலைக்கு மிதவைப்படகு ஏற்றதல்ல.
சேமிப்பு மின்கலங்கள் (Storage batteries)
மின்னாற்றலைச் சேமிக்கும் இடமாக (store house) விளங்குவது சேமிப்பு மின்கலங்களாகும். மின்னாற்றல் முன்னிலை மீட்சி கொண்ட (reversible) வேதியியல் (chemical) மின்னூட்ட (charge) வடிவில் சேமிக்கப்படுகிறது. மிகவும் சாதாரணமான சேமிப்பு மின்கலமாக விளங்குவது ஈய-அமில ஒருங்கிணைப்பி (lead-acid accumulator); இதில் ஈயம் மின்வாயாகவும் (electrode) கந்தக அமிலம் மின் கடத்தித் திரவமாகவும் (electrolyte) அமைந்துள்ளன. துவக்கத்தில், ஈயத்தால் உருவாக்கப்பட்ட மின்கலத்தின் இரண்டு மின்வாய்களிலும், ஈய டை ஆக்சைடு பூசப்பெற்றிருக்கிறது. முதல் முறையாக மின்கலம் மின்னூட்டம் பெறும்போது, வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. மின்கலம் பயன்பாட்டில் இருக்கையில் நிகழும் வெளியேற்றத்தின் (discharge) போது மீண்டும் வேதியியல் மாற்றங்கள் நேர்மாறாக (reverse way) நிகழ்கின்றன. ஈய-அமில மின்கலத்தின் ஒவ்வொரு மின்கலமும் இரண்டு வோல்ட் மின்னழுத்தத்தை உற்பத்தி செய்கிறது; எனவே கார் மின்கலத்தின் ஆறு மின்கலங்களும் 12 வோல்ட் அளிக்கும். நிக்கல்-இரும்பு மற்றும் நிக்கல்-காட்மியம் மின்கலங்கள் பிறவகைச் சேமிப்பு மின்கலங்கள் ஆகும். இவற்றில் நிக்கல் மற்றும் இரும்பு அல்லது காட்மியம் மின்வாய்களாகவும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மின்கடத்தித் திரவமாகவும் அமையும்.
“