புதை மணல் (quick sand)
தளர்ச்சியான, பிடிப்பற்ற, தண்ணீர் கலந்த மணல் படுகையே புதை மணல் எனப்படுகிறது. ஆற்றின் கரைகள், கடற்கரை போன்ற இடங்களில் இது காணப்படும்; இதன் கீழே தண்ணீரை உட்செல்ல விடாத களிமண் உள்ளது. பார்ப்பதற்குக் கெட்டியான தரை போல் காணப்பட்டாலும், புதை மணல் எடையைத் தாங்காது; மேலும் அதன் மீது கால் வைப்போரை உள்ளிழுத்துச் சிக்க வைத்துவிடும். அருகிலுள்ள நீர்ப் பகுதியிலிருந்து புதை மணலுள் செல்லும் நீர் அதனடியிலுள்ள களிமண் பகுதியால் உறிஞ்சப்படாமல் இருப்பதால், இவ்வாறு நிகழ்கிறது.
ஸ்கூபா (SCUBA)
"ஸ்கூபா" என்னும் சொல் ஆங்கிலத் தொடர் ஒன்றிலுள்ள சொற்களினது முதலெழுத்துகளைச் சேர்த்து உருவாக்கிய சொல்லாகும் (acronym) – Self-Contained Underwater Breathing Apparatus (SCUBA). "நீருக்கடியில் சுவாசிப்பதற்காக / உயிர்ப்பதற்காக அணிந்து கொள்ளும் சாதனம் என்று இத்தொடருக்குப் பொருள். நீச்சலடிக்கும்போது நீச்சல் வீரர்களால் வாயில் பொருத்திக் கொள்ளும் ஒரு கருவியுடன், அழுத்திய காற்று நிரப்பப்பெற்ற ஒன்று அல்லது இரண்டு சிறு தொட்டிகள் நீச்சல் வீரரின் முதுகில் கட்டப்படும் வகையில் இச்சாதனம் அமைந்திருக்கும். இச்சாதனத்தின் உதவியுடன் நீச்சல் வீரர் நீரினுள் சாதாரணமாகச் செல்லும் ஆழத்தைவிட கூடுதலான ஆழத்திற்குச் சென்று நீந்த இயலும். இத்தகைய சாதனம் முதன் முதலாக 1943ஆம் ஆண்டு கேப்டன் ஜேகுவஸ் யூவ்ஸ் கஸ்டவ் மற்றும் எமிலி காக்னன் (Captain Jacques – Yves Cousteau and Emlie Gagnan) என்போரால் உருவாக்கப்பட்டது.
தொலை உணர்தல் (Remote sensing) முறை
வானூர்தி அல்லது செயற்கைக் கோள் (satellite) ஆகியவற்றைப் பயன்படுத்தி பூமியின் இயற்கை வளங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் ஒரு வகைத் தொழில்நுட்பத் திறனே (technique) தொலை உணர்தல் என்பது. இதில் பயன்படுத்தப் படும் அடிப்படை முறை ஒளிப்படவியல் (photography) – குறிப்பாக அகச்சிவப்பு (infrared) மற்றும் போலி வண்ண (false color) ஒளிப்பட முறையே ஆகும். நவீன தொலை உணர்தல் முறைக்கான செயற்கைக் கோள்களில், சிறப்பு வகை ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு, பூமியின் பரப்பிலுள்ள குறிப்பிட்ட பகுதியினை ஒரே நேரத்தில் பலவண்ணங்களில் ஓளிப்படங்கள் எடுக்க இயலும். இந்த தனிப்பட்ட படங்களை மின்னணு முறையில் செயல்படுத்தி அப்பரப்பினைப் பற்றிய பல்வேறு தகவல்களை – பூச்சிகளால் அழிக்கப்படும் பயிர்கள்; காடுகள், மீன் வளம் நிரம்பிய கடற்பகுதிகள், நிலத்தடி நீர் பற்றிய தகவல்கள், கனிம வளங்கள் போன்றவற்றை – அறிய முடிகிறது. இயற்கை வளங்களைக் கண்காணிக்கவும் மேலாண்மை செய்யவும் தொலை உணர்தல் முறை ஓர் இன்றியமையாத சிறந்த கருவியாக விளங்குகிறது.
“