கடல் நீரின் உப்புச் சுவை
பெருமளவு சோடியம் குளோரைட், சிறிய அளவிலான பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் கார்பனேட்கள் போன்ற பல உப்புக் கரைசல்களைக் கடல் நீர் பெற்றிருப்பதால் அது உப்புச் சுவையுடன் கரிக்கிறது. மழை மற்றும் பனி ஆகியவற்றால் அரிக்கப்பெற்ற பாறைகளின் உப்புகள் அவற்றின் வழியே ஓடும் ஆறுகளின் நீருடன் கலந்து செல்கிறது. படிப்படியாக தேய்மானத்துக்கு உட்படும் மலைகள் வெளிவிடும் வேதிப்பொருட்கள் ஆறு/நதி நீருடன் கலந்து உப்புக் கரைசலாகக் கடலில் கலக்கின்றன. மேலும் சில வகை உப்புகளும் கடலுக்கு அடியிலுள்ள பாறைகளிலிருந்து கடலில் சேர்கின்றன. ஆனால் உப்பைக் கடலுக்கு எடுத்துச் செல்லும் நதி நீரோ, ஆற்று நிரோ உப்புச் சுவையுடன் இருப்பதில்லை; ஏனெனில், இந்நீரிலுள்ள உப்பின் அளவு மிக மிகக் குறைவானதே ஆகும். கடல்களைப் பொறுத்தவரை, அவற்றிலுள்ள நீர் சூரிய ஒளியால் தொடர்ந்து ஆவியாகிக்கொண்டே இருப்பதோடு, நீரிலுள்ள உப்பு கடலிலேயே தங்கி விடுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருப்பதால் உயர் அடர்த்தி மிக்க உப்புக் கரைசல் கடல் நீரில் தங்கி அதன் சுவையும் உப்பாக உள்ளது.
கடல்களின் நீர் பொங்கி வழிவதில்லை
இதற்கான காரணம் தண்ணீர்ச் சுழற்சியில்தான் (water cycle) அமைந்துள்ளது. உலகிலுள்ள ஏரி குளங்கள், ஆறு நதிகள் கடல்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் உள்ள மொத்தத் தண்ணீரும் எப்போதும் ஒரே அளவில்தான் உள்ளது; இந்நீர்நிலைகளில் நீரின் பகிர்மானம் (distribution) மட்டுமே அவ்வப்போது மாறுகிறது. கடல்கள், ஏரிகள், நதிகள் மற்றும் நிலம் ஆகியவற்றிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகும்போது இத்தண்ணீர்ச் சுழற்சி தொடங்குகிறது. ஆவி நிலையிலுள்ள நீர்த்திவலைகள் மேகங்களாக மாறி மழையாகவும் பனியாகவும் பொழிகின்றன; இதில் 75 விழுக்காடு கடல்களில்தான் பொழிகிறது. மீதமுள்ளது நிலத்தில் விழுகிறது. இந்நீரின் ஒரு பகுதி நிலத்தில் கசிந்து நிலத்தடி நீராக மாறுகிறது; மற்ற பகுதி ஆறு, நதிகளில் விழுந்து கடலில் கலக்கிறது. இவ்வாறு கடல்களில் கலக்கும் நீரின் அளவு அவற்றிலிருந்து ஆவியாகும் நீரின் அளவு ஆகியவற்றுக்கிடையே ஒரு சமநிலை (balance) நிலவுகிறது. எனவேதான் கடல்கள் பொங்கி வழிவதில்லை.
நீல வானம்
பூமியிலிருந்து நோக்கும்போது வானம் நீல நிறமாகத் தோன்றுவதற்குக் காரணம், சூரிய ஒளி புவியின் வளிமண்டலத்தால் (atmosphere) சிதறடிக்கப்படுவதே (scattered) ஆகும். சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தை அடையும்போது, அது காற்று மற்றும் தூசு ஆகியவற்றின் தொங்கிக்கொண்டிருக்கும் மூலக்கூறுகளைத் (molecules) தாக்குவதால் எல்லாத் திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது. சூரிய ஒளியில் பல்வேறு அலைநீளங்களைக் (wavelengths) கொண்ட ஒளி அலைகள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. சிதறடிக்கப்படும் மூலக்கூறுகளின் அளவைப் பொறுத்து எந்த நிறம் மிகுதியாகச் சிதறடிக்கப்படுகிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் உள்ள வாயு மூலக்கூறுகள் நீல நிறத்தை மிகுதியாகச் சிதறடிக்கும். பகல் நேரத்தில் மிகுதியான நீல ஒளி, பூமியை நோக்கிப் பிறழ்ந்து (deflect) வருவதால் வானம் பகலில் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது. இருப்பினும், நிலவில் வளிமண்டலம் இல்லை என்பதால், சூரிய ஒளியின் சிதறல் அங்கு மிகவும் குறைவு; எனவே நிலவிலிருந்து பார்க்கும்போது வானம் கருமை நிறமாகக் காட்சியளிக்கும். “