மலைப்பகுதியின் உயரத்தில் மூச்சு விட அல்லது சுவாசிக்கச் சிரமப்படுதல்
சமவெளிகளில் இருப்பதைவிட மலையுச்சிப் பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் (atmospheric pressure) மிகக் குறைவாக இருக்கும். இதன் விளைவாக, காற்றின் ஒரு கன அளவில் உயிர்வளியின் (oxygen) கன அளவு குறைவாக இருக்கிறது; எனவே உடலுக்குத் தேவையான/போதுமான அளவு உயிர்வளியை சுவாசிப்பின் (breathing) போது பெறமுடிவதில்லை. இதனால் அதிக அளவு உயிர்வளியைப் பெற, நமது நுரையீரல்கள் (lungs) கூடுதல் முயற்சி செய்ய வேண்டியுள்ளது; எனவே சுவாசிப்பிலும் சிரமம் ஏற்படுகிறது. இருப்பினும் மலைப்பகுதியில் வழக்கமாக வாழ்ந்து வருவோர், சுவாசிப்பில் சிரமத்தை உணர்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு இரத்தத்தில் அதிக அளவு ஹீமோகுளோபின் இருப்பதால் போதுமான அளவு உயிர்வளி கிடைக்க வாய்ப்பு உண்டாகிறது.
உறக்கத்தின் தேவை
பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களுக்கு உறக்கம் ஓர் இயல்பான செயலாக அமைகிறது. ஒரு மனிதர், சராசரியாக, தம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உறக்கத்தில் செலவழிக்கிறார். இருப்பினும், குழந்தைகள் ஓரளவு அதிகமாகவும் வயதானவர்கள் சற்றுக் குறைவாகவும் உறங்குகின்றனர் எனலாம். உறக்கம்-விழிப்பு என்னும் சுழற்சி, இரவு-பகல் சுழற்சியுடன் பொதுவாகப் பொருந்திச் செல்கிற உயிரியல் கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இரவில் நன்கு உறங்கியதன் பின்னர் நாம் புத்துணர்ச்சி பெறுகிறோம் என்பதைத் தவிர உறக்கம் நம் உடலுக்கு என்ன செய்கிறது என்பது நமக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால், தனிப்பட்ட ஒருவருக்கு உறக்கமின்மையால் என்ன நிகழ்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். போதுமான உறக்கமின்மையின் காரணமாக, எரிச்சல், எதிலும் ஈடுபாடின்மை இவற்றோடு மயக்க நிலைமையும் கூட ஏற்படுகின்றன. எனவே, புதியதோர் நாளை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றலை நமக்கு உறக்கம் அளிக்கிறது எனலாம்.
கனவு காணல்
உறக்கத்தின்போது ஏற்படும் இயல்பான ஒரு நிகழ்வே கனவு. உண்மையில், ஓர் இரவில், உறக்கத்தின்போது கனவின் பல சுழற்சிகள் நிகழ்கின்றன. உறங்குகையில் எப்போது வேண்டுமானாலும் கனவுகள் வரலாம்; ஆனால், கனவின் ஒரு படிநிலையான (step) விரைவுக் கண் அசைவு (Rapid Eye Movement – REM) உறக்கம்தான் பெரும்பாலான கனவுகளை உற்பத்தி செய்கிறது. இந்த விரைவுக் கண் அசைவு உறக்கத்தின்போது ஒருவர் விழித்துக்கொண்டால், பொதுவாகக் கனவு உயிரோட்டத்துடன் மீண்டும் நினைவு கூரப்படும்.
நமக்கு ஏன் கனவு உண்டாகிறது என்பதை விளக்கும் சரியான காரணம் ஏதும் இன்னும் அறியப்படவில்லை. ஒரு கருத்துப்படி, கனவுகள் என்பவை பகல்நேர உண்மை நிகழ்வுகளின் நீட்சியே ஆகும். நமது நனவுநிலையின்/விழிப்புநிலையின் போது உள்வாங்கப்படும் பல்வேறு கருத்துகள், உணர்வுகள், உள்ளத்து நிகழ்வுகள் ஆகியவற்றின் தாக்கமே கனவுகளாக வருகின்றன. புகழ்பெற்ற உளவியல் வல்லுநர் சிக்மண்ட் ஃபிராய்ட் என்பவர் கூற்றுப்படி இளமைக்கால ஆழ்ந்த உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ஆசைகளின் நிறைவேற்றமே சில கனவுகள் ஆகும். அவை அடக்கப்பட்ட உணர்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவற்றை மாறுபட்ட வடிவத்தில் வெளிப்படுத்துபவையாக விளங்குகின்றன.
“