மனிதர்களுக்கு வியர்வை வருவது
வேர்த்தல் என்பது வெப்பச் சூழலில் நம் உடலைக் குளிர்விப்பதற்கான ஒருவகை விசை நுட்பமாகும் (mechanism). இது நமக்கு மிகவும் தேவையான ஒன்று. மனித உடலின் வெப்பம் இயல்பு நிலையான 37.0 செ.கி அளவுக்கு மேல் சில பாகைகள் அதிகமானாலும் அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும். வெப்பச் சூழலில் மனித உடலின் வெப்பம் இயல்பு நிலைக்கு மேலே செல்லும்போது வேர்வைச் சுரப்பிகள் வேர்வையை உற்பத்தி செய்கின்றன. இவ்வேர்வை தோலின் மேல் ஆவியாக மாறுகிறது. இந்நிகழ்ச்சியினால் தோலின் குருதிக் குழாய்களிலுள்ள வெப்பம் சுற்றுப்புறத்திலுள்ள காற்றுக்கு மாற்றம் செய்யப்பட்டு விடுகிறது. இவ்வாறு நமது உடலின் வெப்பநிலை இயல்பு நிலையிலேயே இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மிகுந்த வலி, உள்ளத்து உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் எதிர்பாராத நிகழ்வுகள், அச்சம், சுவையான உணவை மிகுதியாக உட்கொள்ளல் ஆகியவற்றாலும் மனிதர்களுக்கு வேர்ப்பதுண்டு.
வயிறு தன்னைத்தானே செரித்துக் (digestion) கொள்வதில்லை
வயிற்றின் உள்வரிப் (lining) பகுதிகளிலிருக்கும் சுரப்பிகளிலிருந்து (glands) உற்பத்தியாகும் இரப்பைச் சாறுகளில் (gastric juices) உள்ள அமிலங்களுடன் சேர்த்து, உண்ணும் உணவைச் செரிக்கும் உடலுறுப்பே, வயிறு ஆகும். வயிற்றின் உள்வரியானது கோழையின் உயிரணுக்களால் (mucous cells) உற்பத்தி செய்யப்படும் தடிமனான சளி அல்லது கோழையால் பூசப்பெற்றுள்ளது; இதன் காரணமாக உணவுடன் சேர்த்துத் தன்னையும் செரிமானம் செய்வது கொள்வதிலிருந்து வயிறானது தடுக்கப்படுகிறது. அமிலத் தன்மை கொண்ட செரிமானச் சாறுகளுக்கு எதிராக வயிற்றைக் காக்கும் வகையில் மிதமான காரத் தன்மை கொண்ட இந்தக் கோழை/சளி செயல்படுகிறது.
வயிற்றின் உள்வரியானது சேதமடைந்தால், வயிற்றிலுள்ள உயிரணுக்கள் மடிந்து போகும்; ஆயினும் இவை உடனடியாக புதிய உயிரணுக்களால் ஈடு செய்யப்படும். பாதுகாப்புக்காக உற்பத்தி செய்யப்படும் கோழை/சளி போதுமான அளவுக்கு இல்லாத கடுமையான நிலைமைகளில், வயிற்றின் உள்வரி கடுமையாகச் சேதமடைந்து வலிமிக்க வயிற்று அழற்சிப் புண் (stomach ulcer) ஏற்படக்கூடும்.
முடி, நகம் ஆகியவற்றை வெட்டும்போது வலி உண்டாவதில்லை
நரம்பு முனை வெட்டப்படும்போது அல்லது அதில் காயம் ஏற்படும்போதுதான் வலியுணர்வு ஏற்படும். முடி மற்றும் நகம் ஆகியவற்றில் நரம்பு முனைகள் இல்லை என்பதால், அவற்றை வெட்டும்போது வலி உண்டாவதில்லை. இருப்பினும், நகம் மற்றும் முடி ஆகியவற்றின் அடிப்பகுதிகளில் உயிரணுக்கள் இருப்பதோடு அவற்றில் நரம்பு முனைகளும் உள்ளன. எனவேதான் நகத்தின் அடிப்பகுதி வெட்டப்பட்டாலோ, தலையிலிருந்து முடியை வேரோடு பிடுங்கினாலோ தாங்கமுடியாத வலியுணர்வைப் பெறுகிறோம்.
“