வான்வெளியில் கருங்குழி (Black hole)
கருங்குழி என்பது விந்தையான ஆனால் எளிதில் விளங்கிக்கொள்ள இயலாத ஒரு வானியற் பொருளாகும். இதிலிருந்து ஒளி ஏதும் தெரிவதில்லை; அருகில் வரும் எந்தப் பொருளையும் ஆற்றலையும் இது உறிஞ்சிக் கொள்கிறது; எனவே இது கருங்குழி எனப் பெயர் பெற்றுள்ளது. மிக பெரியதொரு விண்மீன் அழிந்துபட்டதால் இஃது உண்டாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
எல்லா விண்மீன்களுக்கும் வாழ்க்கைச் சுழற்ச்சி என்பது உள்ளது – அவை பிறக்கின்றன, வளர்கின்றன, முதுமை அடைகின்றன இறுதியில் மடிந்தும் போகின்றன. அவை மடிவது துவக்கத்தில் அவற்றின் நிறையைப் (mass) பொறுத்தது. விண்மீன் மிகப் பெரிய நிறையுடன் இருக்குமானால் – சூரியனைப் போல் 30 மடங்குக்கு மேற்பட்ட நிறை கொண்டதாக இருக்குமானால், விண்மீன் மடிவது மிகப் பேரிடியுடனும் பேரோளியுடனும் அமையும்; இது சூபர்நோவா (Supernova) எனப்படுகிறது. இந்தப் பேரிடிக்குப் பின்னர், அவ்விண்மீன் சின்னஞ்சிறியதோர் பொருளாக கருங்குழியாக அமைகிறது. கருங்குழியின் ஈர்ப்புப் புலம் (gravitational field) மிக வலிமையுள்ளதாகும்; ஒளியைக்கூட வெளியேற அனுமதிக்காது. எனவே கருங்குழியைக் காண முடிவதில்லை. இருப்பினும் அருகிலுள்ள விண்மீன்களின் மேல் அதன் ஈர்ப்பு விளைவு மற்றும் பிற விளைவுகள் வாயிலாகக், கருங்குழியின் இருப்பிடத்தை வானியல் வல்லுநர்கள் கண்டறிந்து விடுவர்.
இரத்த வகை (Blood group)
எல்லா மனிதர்களின் இரத்தமும் சிகப்பு நிறம் கொண்டவையே என்றாலும், கண்களுக்குப் புலப்படாத சில வேறுபாடுகளும் அவற்றில் உள்ளன. சிகப்பு இரத்த உயிரணுக்களின் சவ்வில் (membrane) சில புரதங்கள் அதாவது ஆண்டிஜென்கள், இருப்பதால் அல்லது இல்லாமல் இருப்பதால் மேற்கூறிய வேறுபாடுகள் அமைந்துள்ளன. இந்த ஆண்டிஜென்களின் அடிப்படையில் மனித இரத்தம் பல வகைகளாக (types) அல்லது குழுக்களாகப் (groups) பிரிக்கப்படுகின்றன. மிகச் சாதாரணமான இரத்த வகை அமைப்புகள் A B O இரத்த வகைகள் எனப்படுகின்றன; இதனை 1900ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் கார்ல் லாண்ட்ஸ்டினர் (Karl Land Steiner) என்பவராவார். A மற்றும் B என்று அழைக்கப்படும் இரண்டு ஆண்டிஜென்கள் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்து இந்த அமைப்பு, மனித இரத்தத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றது. வகை A இரத்தக் குழுவின் சவ்வில் ஆண்டிஜன் A உடன் எரித்ரோசைட்ஸ் இருக்கும். வகை B இரத்தம் ஆண்டிஜன் Bயைக் கொண்டிருக்கும்; வகை AB , ஆண்டிஜன் A மற்றும் B ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும். நான்காவது இரத்த வகையான O குழுவில் ஆண்டிஜன் A மற்றும் B ஆகிய இரண்டில் எதுவும் இராது.
1940ஆம் ஆண்டில் லாண்ட்ஸ்டினர் மற்றும் அலெக்சாண்டர் வினர் ஆகிய இருவரும் குருதி உறைமக் காரணி (Rh-factor) எனும் மற்றோர் ஆண்டிஜனைக் கண்டு பிடித்தனர். பெரும்பாலான மனிதர்கள் தங்கள் இரத்தச் சிகப்பு உயிரணுக்களில் குருதி உறைமக் காரணியைப் பெற்றுள்ளனர்; அவர்களுக்கு Rh-பாசிடிவ் இரத்தம் இருப்பதாகக் கூறப்படும். இந்த ஆண்டிஜனைப் பெறாதவர்களுக்கு Rh-நெகடிவ் இரத்தம் இருப்பதாகக் கூறப்படும். ABO வகைகள் மற்றும் குருதி உறைமக் காரணி ஆகியவற்றைத் தவிர்த்து, பல எரித்ரோசைட் ஆண்டிஜன்கள் உள்ளன; இதனால் பல்வேறு இரத்த வகைகளும் உள்ளன.
ஒருவருக்கு இரத்தக் கொடை (blood transfusion) அளிக்கும் போது கொடையாளியின் இரத்தமும் பெறுவரின் இரத்தமும் ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது முக்கியம்.
“