கருச்சவ்வுத் துளைப்புச் சோதனை (Amniocentesis)
கருவிலுள்ள குழந்தைகளிடம் மரபுவழிக் குறைபாடுகள் (Genetic abnormalities) எவையேனும் உள்ளனவா என்பதைச் சோதிப்பதற்கான நோயறியும் உத்தியே (Diagnostic technique) கருச்சவ்வுத் துளைப்புச் சோதனையாகும். வயிற்றினுள் வளரும் குழந்தையைச் சுற்றியுள்ள கருப்பை நீர்மத்தின் (Amniotic fluid) மாதிரியை எடுத்து மேற்கூறிய சோதனை நடத்தப்படுகிறது. கருவுற்ற 16ஆவது வாரத்தில் சாதாரணமாக இச்சோதனை நடத்தப்படும்; இக்காலகட்டத்தில் சோதனை நடத்துவதற்குப் போதுமான நீர்மம் கிடைப்பதோடு, மரபணுக் குறைபாடுகள் எவையேனும் கண்டறியப்பட்டால் கருவைக் கலைத்துவிடவும் இயலும். இதனால் பின்னாளில் குழந்தைக்கும் குடும்பத்துக்கும் ஏற்படக்கூடிய துன்ப துயரங்கள் தவிர்க்கப்படுகின்றன.
உட்புழைகொண்ட ஊசி (Hollow needle) ஒன்றைக் கருவுற்ற தாயின் அடிவயிற்றுப் பகுதியில் உணர்வகற்றம் (Anaesthesia) செய்யப்பட்ட இடத்தில் கவனமாகச் செருகி கருப்பை நீர்ம மாதிரி (Sample fluid) எடுக்கப்படும். இவ்வாறு எடுக்கப்படும் நீர்மத்தின் அளவு சுமார் 20 மி.லி. இருக்கலாம். வளர்ந்து வரும் குழந்தையின் உடல் உயிரணுக்கள் (Cells) இந்நீர்மத்தில் இருக்கும். இவ்வுயிரணுக்களில் மேற்கொள்ளப்படும் வேதியல் (Chemical) மற்றும் நுண்ணோக்கிச் (Microscopic) சோதனைகள் வாயிலாக வேண்டிய தகவல்களை அறிய முடியும்; முக்கியமாக, வேறு வகையில் அறியப்பட இயலாத மரபணுக் குறைபாடுகள் உள்ளனவா, இல்லையா என்பதை அறியலாம்.
கருப்பை நீர்மத்தின் உயிரணுக்களில் மேற்கொள்ளப்படும் குரோமோசோம் பகுப்பாய்வின் வாயிலாகக் குழந்தையின் பாலினத்தையும் அறிய இயலும்.
அணுக் கடிகாரம் (Atomic clock)
நேரத்தை அளவிடுவதற்கான சாதனமே அணுக்கடிகாரம். நேரத்தை இது மிக மிகத் துல்லியமாக அளவிடக் கூடியது. சாதாரண எந்திரக் கடிகாரங்களில் சுருள் வில்லும் (Coiled spring) குவார்ட்ஸ் கடிகாரங்களில் குவார்ட்ஸ் படிகங்களும் (Quatz crystals) பயன்படுத்தப்பட்டு நேரம் அளவிடப்படுகிறது; இவற்றைப் போலல்லாமல் அணுக் கடிகாரங்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் (Molecules) பயன்படுத்தப் படுகின்றன.
அணுக்கடிகாரங்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் அடங்குவன சீசியம் அணுக்கள், ஹைடிராஜன் அணுக்கள் மற்றும் அமோனியம் வாயுவின் மூலக்கூறுகள் ஆகியனவாகும். சீசியத்திற்கு மாறாக ரூபிடியம் அணுக்கள் தற்போது அணுக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சில அணுக் கடிகாரங்களில் 200,000 ஆண்டுகளில் ஒரு வினாடி மட்டுமே கூடவோ குறையவோ செய்யும். ஆய்வுக்கூடங்கள், வானிலை மையங்கள் போன்றவற்றில் இந்த அணுக் கடிகாரங்கள் பயன்பாட்டில் இருக்கும்.
“