காடிப் பொழிவு அல்லது அமில மழை (acid rain)
இது தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டு உண்டாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இயற்கையாகப் பொழியும் மழையிலும் கூட சிறிதளவு கார்பன் டை ஆக்சைடு கலந்திருப்பதால் அதில் அமிலத்தன்மை இருப்பதுண்டு. ஆனால் தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் பெருமளவு கரி, எண்ணெய் ஆகியவற்றை எரித்தல், வாகனங்கள் வெளியிடும் கழிவுப்புகை போன்றவற்றால், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகியன வளிமண்டலத்தில் கலந்து விடுகின்றன. மேற்கூறிய இவ்வாயுக்கள் மேலெழும்பி, காற்றோடு கலந்து, தோன்றிய இடத்தில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் வரை செல்லும் வாய்ப்பு உண்டாகிறது. அப்போது அவை வளி மண்டலத்திலுள்ள நீர்த்துளிகள், உயிர் வளி (oxygen) ஆகியவற்றோடு வேதியியல் வினை புரிந்து கந்தக அமிலமாகவும், நைட்ரிக் அமிலமாகவும் மாறுவதோடு, மழை, பனிப்பொழிவு, மூடுபனி ஆகியவற்றுடன் கலந்து தரையையும் அடையும். சாதாரண மழையில் pH (ஹைடிரஜன்) 6 என்னும் அளவில் இருக்க, காடி மழையில் 4.5 அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும். காடி மழை பயிர், தாவரம், கடல் வாழ் உயிரினம் ஆகியவற்றிற்குப் பெரும் தீங்கு விளைவிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். காடி மழைக்குக் காரணமான புகை ஏதோ ஒரு நாட்டின் தொழிற்கூடங்களில் உருவானாலும் அதனால் விளையும் தீங்கு பல்வேறு நாடுகளையும் பாதிக்கிறது என்பதே உண்மை. இம்மழையினால் பெரிதும் பாதிப்படைந்த நாடுகள் தெற்கு ஸ்வீடன், நார்வே, மத்திய ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி ஆகியன. எனவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தமது தொழிற்கூடங்களில் இருந்து கந்தகக் கழிவுகள் வெளியேறுவதைத் தடுக்கப் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
குத்தூசி மருத்துவம் (acupuncture)
சீனாவில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்து வருவது இக்குத்தூசி மருத்துவ முறையாகும். நமது அனைத்து அனுபவங்களுக்கும், அவற்றிற்குரிய எதிர் அனுபவங்களும் இருப்பதாகச் சீனர்கள் நம்பினர்; அவ்விரு அனுபவங்களையும் முறையே யின்/யாங் (Yin/Yang) என அழைத்தனர். இந்த யின், யாங் ஆகிய இரண்டும் இணைந்து ஒன்றை ஒன்று நிறைவு செய்வதோடு, உடலில் ஒருவகை சமச்சீர்மையையும் உருவாக்குகின்றன. இச்சமச்சீர்மை குலையும் போது உடலில் நோய்கள் தோன்றக்கூடும். சீனக் கோட்பாட்டின்படி யின்/யாங் ஆற்றல்கள் நமது உடலில் உள்ள கால்வாய்களின் (channels) வழியே சென்றுகொண்டு இருக்கின்றன. இக்கால்வாய்களில் ஆயிரக் கணக்கான புள்ளிகள் (spots) உள்ளன. ஒவ்வொரு புள்ளியும் மனித உடலுறுப்பு ஒவ்வொன்றின் பணியினுடைய சின்னமாக அமைகிறது.
உடலின் நரம்புப் பாதைகளில் அனிச்சைச் செயல் நுட்பங்கள் (reflex mechanisms) வாயிலாக வலி உணர்வுச் சமிக்கைகள் நிறுத்தப்படக்கூடும். குத்தூசி வழியிலான செயல்பாடுகள் இதற்கு உறுதுணையாக அமைகின்றன; அதாவது வலி தோன்றாமலிருக்கத் துணை புரிகின்றன. அடுத்து குத்தூசி மருத்துவத்தின் வாயிலாக வலி நீக்குவதற்குக் காரணமாக உள்ள எண்டார்பின்ஸ் (endorphins) என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது; இது மூளைக்குச் சென்று வலி உணர்வுக்கான செய்திகளைத் தடுக்கிறது; எனவே வலி உணர்வு தோன்றுவதில்லை. தலைவலி, செரிமானக் கோளாறுகள், கீல்வாதம், மூச்சுவிடுதல் தொடர்பான நோய்கள், பால் வினை மற்றும் இதயத் தொடர்பான நோய்கள் ஆகிய பல்வேறு நோய் நிவாரணத்திலும், குத்தூசி மருத்துவம் துணைபுரிகிறதென்றாலும், இதனையே முழுமையாக நம்புவதற்கில்லை என்பது மருத்துவ உலகின் கருத்தாகும்.”