காற்றாலைகள் (Wind Mills):
எண்ணெய் வளம், வாயு மற்றும் நிலக்கரி போன்றவை எளிதில் கிடைக்காமற் போகும் நிலையில் மக்களுக்குத் தங்கள் கார்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறவும், வீடுகளில் ஒளியைப் பெறவும், சாதனங்களை இயக்கவும் பிறவகை ஆற்றல்களை நாட வேண்டியுள்ளது. மேலும் மின் ஆற்றல் உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் நிலக்கரி போன்ற எரி பொருள்களால் (fuels) சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் அபாயமும் உண்டாகிறது. இவை போன்ற காரணங்களால் காற்றாலைகளின் வளர்ச்சி பெருகி வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் காற்று பெருமளவு வீசும் இடங்களில் மிகப் பெரிய காற்றாலைகளைக் காண முடிகிறது.
காற்றாலைத் தகடுகளைச் (windmill blades) சுழற்ற வலிமையாகவும் நிலையாகவும் வீசும் காற்று பயன்படுத்தப்படுகிறது. தகடுகளின் சுழற்சியால் மின் உற்பத்தி செய்யும் எந்திரத்தின் தண்டு (shaft) சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நவீன காற்றாலைகள் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. பெரும் குழுக்களாக அமைந்துள்ள இவை காற்றாலைப் பண்ணைகள் (wind farms) எனப்படுகின்றன. வீடுகளுக்குத் தேவையான மின்சாரம், ஆடுமாடுகளுக்கும் வேளாண்மைக்கும் தேவைப்படும் நீரிரைத்தலுக்கான மின்சாரம் ஆகியவற்றை இப்பண்ணைகள் வாயிலாகப் பெற முடிகிறது.
கதிரவ / சூரிய ஆற்றல் பலகைகள் (solar panels):
ஆற்றலைப் பெறுவதற்கான புதிய வழிமுறைகள் பற்றித் தொடர்ந்து எப்போதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. கதிரவனிடமிருந்து ஏராளமான ஆற்றலைப் பெற இயலும் என்றாலும், தற்போது அந்த ஆற்றலின் மிகக் குறைந்த அளவையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்தச் சூரிய ஆற்றலின் ஒரு சிறு பகுதியைக் கொண்டே உலகின் ஆற்றல் தேவையைப் பெருமளவு நிறைவு செய்ய இயலும். சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழிமுறைதான் கதிரவ ஆற்றல் பலகைகள். தற்போது பல வீடுகளில் வசிப்போர், தமக்குத் தேவையான ஆற்றலை இதன் வாயிலாகப் பெறத் துவங்கியுள்ளனர். இப்பலகைகள் வீட்டின் கூரை/மாடி மேல் அமைக்கப்பட்டு, சூரிய ஆற்றலை உறிஞ்சி வீடுகளில் தண்ணீரைச் சூடாக்கி வீட்டிலுள்ளோர் பயன்படுத்தி வருகின்றனர். முதலாவது கதிரவ ஆற்றல் நிலையம் (solar energy station) ஒடெய்லோ (Odeillo) என்பவரால் 1969ஆம் ஆண்டு ஃபிரான்சில் நிறுவப்பட்டது. ஆற்றலைப் பெறுவதற்கு கதிரவனின் திறனைப் பயன்படுத்தியதோடு, எவ்வளவு ஆற்றலைப் பெற முடியுமோ அவ்வளவு ஆற்றலைப் பெறுவதற்குத் தேவையான எண்ணிக்கையில் பல சூரியப்/கதிரவப் பலகைகளும் பயன்படுத்தப்பட்டன. என்றாவது ஒரு நாள் கதிரவனின் ஒளியை விண்ணில் (space) சேமித்துப் புவிக்கு ஆற்றலை அனுப்பி வைக்க முடியும் என அறிவியலார் நம்புகின்றனர்.
கதிரவ ஆற்றல் பலகை அமைப்பின் உள்ளே இருக்கும் குழாய்களில் உள்ள நீரைச் சூரியக் கதிர்கள் வெப்பமடையச் செய்கின்றன. குளிர்ந்த நீர் பலகைகளிலுள்ள குழாய்களில் நுழைந்து சூரிய ஆற்றலால் வெப்பமடைந்து வெளி வரும்போது சேமிக்கப்படுகிறது அல்லது பயன்படுத்தப்படுகிறது.
“