பிளாஸ்டிக் (Plastic)
பல்படியாக்கல் (Polimerization) எனும் வேதிச் செயல் முறை வாயிலாக பிளாஸ்டிக்குகள் உருவாக்கப் படுகின்றன. இன்றைய அறிவியலும் தொழில் நுட்பமும் இல்லாத பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே வேதியியலாளர்கள் பிளாஸ்டிக் செயல்முறை பற்றி அறிந்திருந்தனர். முதலாவது பிளாஸ்டிக்கான வினைல் குளோரைட் 1838இல் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்டைரன் (Styrene) 1839 இலும், அக்ரிலிகஸ் (Acrylics) 1843இலும் பாலிஸ்டர் (Polyster) 1847இலும், உருவாக்கப்பட்டன. ஆனால் அப்போது இவற்றின் பயன்பாட்டிற்கான வாய்ப்புகள் பற்றி அறியப்படவில்லை.
அந்நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வேதியியல் அறிஞ்ர்கள் செலவில்லாத வேறு சில பொருட்களைக் கண்டறியத் தீர்மானித்தனர். 1869 ஆம் ஆண்டு ஜான் ஹயாட் என்பவர் தந்தத்திற்குப் (Ivory) பதிலாக செல்லுலாய்ட் (Celluloid) என்ற பொருளைக் கண்டு பிடித்தார். இது மிகவும் கடினமான, வளைந்து தரக்கூடிய (malleable) புரட்சிகரமான பொருளாக விளங்கியது, மேலும் பல வேதியியலாளர்கள் புதிய சேர்க்கைப் (Synthetic) பொருட்களை உருவாக்கினர்.
இருப்பினும் பிளாஸ்டிக்கின் மிகப் பெரிய வளர்ச்சியாக விளங்கியது 1909ஆம் ஆண்டில் லியோ மேக்லண்ட் என்பவரால் கண்டறியப்பட்ட ஃபினால் ஃபார்மல்டிஹைட் (Phenol formoldehide) எனும் பொருளாகும். இது மிகவும் மலிவானதாகவும் எந்த உருவத்திலும் வார்க்கக் கூடிய பொருளாகவும் விளங்கிற்று. அவர் இப்பொருளை பேக்லைட் (Bakelite) என அழைத்தார்; இது பொது மக்கள் பயன்பாட்டிற்காகப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் மழைக்கால ஆடைத் தயாரிப்புக்கு ஏற்ற பொருளாக விளங்குகிறது. இது நீர், காற்று, சுருக்கம் ஆகியவற்றிற்கு ஈடு கொடுப்பதாகவும், எளிதில் துடைக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
களிமண் (Clay)
குறைந்தது 15,000 ஆண்டுகட்கு முன்னரே வனைபொருட்களை (Ceramics) உருவாக்கக் களிமண் பயன்பட்டதாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 10,000 ஆண்டுகட்கு முற்பட்ட, கற்காலத்திற்குப் பின்பகுதி சார்ந்த களிமண் பாண்டங்களின் துண்டுகள் கண்டறியப் பட்டுள்ளன.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெருப்பைப் பயன்படுத்தி வலிமையான, நீர் கசியாத களிமண் பாண்டங்களைத் தயாரிக்க மக்கள் அறிந்திருந்தனர். களி மண்ணைச் சுடுவதன் வாயிலாக அதன் பண்பு நலன்களில் மாற்றம் ஏற்படுவதை மக்கள் கண்டறிந்தனர்.
சிறு பாண்டங்களைத் தயாரிப்பதிலிருந்து கட்டடப் பொருட்களை உருவாக்கும் வகையில் பின்னர் களி மண்ணின் பயன்பாடு விரிவடைந்தது. களி மண் அடிப்படை சார்ந்த செங்கற்கள், ஓடுகள் போன்றவை அத்தகைய பொருட்களுள் அடங்கும். செங்கற்கள் மற்றும் பானைகள் ஆகியவற்றை உருவாக்கும் 5,000 ஆண்டுகால எகிப்திய சுவர் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
களி மண்ணைப் பயன்படுத்தும் திறன் மக்களுக்கு வளர வளர, மிக நுட்பமான பொருட்களையும் அவர்கள் உருவாக்கத் தொடங்கினர். மிக உயர்ந்த கலை நுணுக்கங்கள் கொண்ட, பல்லாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட, சில மண்பாண்டங்களும் கண்டறியப்பட்டுள்ளன; தூரக் கிழக்கு நாடுகளில் இத்தகையவை கிடைத்துள்ளன. இப்போதும் கூட உலகம் முழுதும் வனைபொருட்கள் தயாரிப்புத் தொழில் சிறந்து விளங்குகிறது.
செங்கல் தயாரிப்போர் பழங்காலத்தில் அதற்கெனத் தனியான சூளைகளை (சிறப்பு வகை அடுப்புகளை) பயன்படுத்தினர்; இதன் காரணமாக செங்கல்லின் வாழ்நாள் நீண்டு விளங்குகிறது.
“