பிரமிட் (pyramid) கட்டியவர்கள் கணித மேதைகள்:
எகிப்தியர்களால் ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முன்னரே மிகப் பெரிய பிரமிட்கள் கட்டப்பட்டு வந்தன. இப்பொழுது இருப்பது போல் எந்திர பளு தூக்கிகள் மற்றும் வெட்டுச் சாதனங்கள் இல்லாத அக்காலத்தில் இச்சாதனை மேற்கொள்ளப்பட்டது எவ்வாறு என்பது இன்னும் விளங்காத புதிராகவே உள்ளது. ஆனால் ஏராளமான கருங்கற்களைச் செதுக்கி எடுத்துச் சென்று மாபெரும் பிரமிட்களை உருவாக்க எண்ணிலடங்கா அடிமை மனிதர்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதே இப்புதிருக்கான விடையாகக் கருதப்படுகிறது. இந்தக் கட்டுமானம் ஒன்றை மேற்கொள்வதற்கு 10,000க்கும் மேற்பட்ட அடிமைகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
தட்டை முகங்கள் (flat faces) கொண்ட இந்த முப்பரிமாண உருவங்கள் (three dimensional figures) பன்முகம் கொண்டவை (polyhedrans) என அழைக்கப்படுகின்றன. மிகப் பெரிய கட்டமைப்பு கொண்ட இந்த பிரமிட்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. துல்லியமான மிகப் பெரிய பிரமிட்களைக் கட்டியவர்களுக்கு மிகச் சிறந்த கணித அறிவு இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகப் புலனாகிறது.
இந்த பிரமிட்களைக் கட்டியவர்கள் கணிதக் கட்டளை விதிகளை (formulae) அறிந்தவர்களாகக் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, "ஒரு செங்கோண முக்கோணத்தின் இரு பக்க அளவுகள் தெரிந்தால், மூன்றாவது பக்கத்தின் அளவைக் கண்டறிய இயலும்" எனும் பிதாகரஸ் கோட்பாட்டை (Pythagoras theorem) அவர்கள் அறிந்திருந்தனர் என்பது உண்மை.
எண்களின் தேவை
பொருட்களின் எண்ணிக்கையை விவரிக்க எண்கள் தேவைப்படுகின்றன. சொற்கள் (words), கைச் சைகைகள் (hand gestures), எழுதுதல், குறியீடுகள் (symbols) அல்லது எண்களைப் (numerals) பயன்படுத்தி எண்ணிக்கையை நாம் வெளிப்படுத்துகிறோம். ஓர் எண்ணிக்கையைப் பற்றிப் பேசும்போது, நாம் சொற்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, "ஐந்து" என்னும் சொல் "5" எனும் எண்ணுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எழுதும் போது சொல், எண் ஆகிய இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எத்தனைப் பொருட்கள் என்பதைத் தெரிவிப்பதும் எண்களின் பணியாக உள்ளது. மேலும் பல பொருட்களுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட பொருளின் இருப்பிடத்தை (position), எடுத்துக்காட்டாக, இரண்டாவது(2nd), ஆறாவது(6th) என்பவை போல விவரிக்கவும் எண்கள் பயன்படுகின்றன. ஒரு பொருளின் எடை, ஒருவரின் வயது போன்றவற்றைத் தெரிவிக்கவும் எண்கள் தேவை. எண்ணங்களை விவரிப்பதற்கு வசதியான வழியாகவும் எண்கள் விளங்குகின்றன.
தற்போது நாம் பயன்படுத்தும் எண்களை அரேபிய முறையில் (Arabic numerals) அமைந்தவை எனக் குறிப்பிட்டாலும், உண்மையில் அவை இந்தியாவில் தோன்றியவையே எனக் கருதப்படுகிறது. ரோமானிய எண்களும் குறிப்பிட்ட சில சமயங்களில், குறிப்பிட்ட சில காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
“