பூஞ்சோலை கிராமத்தில் கந்தசாமி என்ற ஏழை முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தமது மகன்களிடம் அடிக்கடி இவ்வாறு சொல்வது வழக்கம்.
"என் அருமைக் குழந்தைகளே! நம்மிடம் நிலம், ஆடு, மாடு இல்லை. பொன், பொருள் எதுவும் இல்லை. அதனால் நீங்களே முயற்சி செய்து வேறு வகையான செல்வங்களைத் திரட்டிக் கொள்ள முயல வேண்டும்! மேலும் மேலும் அதிக ஞானமும், அறிவும் பெற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்! எதுவும் உங்கள் பார்வையிலிருந்து தப்பக்கூடாது! அது நிலங்களுக்குப் பதிலாக நல்ல, கூர்மையான அறிவை உங்களுக்குத் தரும். பொன்னுக்குப் பதிலாக புத்திசாலித்தனத்தை அளிக்கும். அப்படிப்பட்ட செல்வங்களை நீங்கள் அடைந்து விட்டால் உங்களுக்கு ஒருபோதும் கஷ்டம் வராது. மற்ற எல்லோரையும் விட நீங்கள் ஒரு படி உயர்ந்தே நிற்பீர்கள்."
ஒரு நாள் கந்தசாமி இறந்து போனார். சகோதரர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து, இனி என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.
மூத்தவன் சிவா தன் இரு சகோதரர்களைப் பார்த்து, "இங்கே இருந்து கொண்டு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், பல இடங்களுக்கும் சென்று உலகைச் சுற்றிப் பார்ப்போம். அவசியம் ஏற்பட்டால் ஆங்காங்கே கிடைக்கும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்வோம். அதனால் நாம் எங்கே சென்றாலும் பட்டினி இல்லாமல் வாழலாம்" என்றான். மற்ற இருவரும் அதற்குச் சம்மதித்தனர்.
மூவரும் பயணத்துக்கு வேண்டியவற்றைத் தயார் செய்து கொண்டு புறப்பட்டனர்.
பல காடுகளையும். மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றனர். இவ்வாறு பல நாட்கள் நடந்தனர்.
தம்மிடம் இருந்த அனைத்தையும் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். களைத்து, ஓய்ந்து போயிருந்தார்கள். கால்கள் வலி எடுத்தன. ஆனால், அவர்கள் பயணம் செய்த சாலை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. அதனால், சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டார்கள்.
முடிவில், தொலைவில் மரங்களும், வீடுகளும் கோயில் கோபுரங்களுமாக ஒரு பெரிய நகரம் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். சகோதரர்கள் அதை நோக்கி வேகமாக நடந்து சென்றனர். இனிமேல் நமக்கு நல்ல காலம்தான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அந்த நகரத்தை நெருங்கி வந்ததும், மூத்த சகோதரன் சிவா, தரையைக் கவனித்து விட்டு, "சற்று நேரத்திற்கு முன்பு இந்த வழியாக ஒரு குதிரை சென்றிருக்கிறது" என்று கூறினான். அவர்கள் மேலும் சிறிது தூரம் நடந்தனர். அப்பொழுது இரண்டாவது சகோதரன் ராமு அந்தச் சாலையின் இரண்டு புறமும் பார்த்து, "அந்தக் குதிரைக்கு ஒரு கண் தெரியாது" என்றான்.
மூவரும் மேலும் நடந்தனர். அப்போது மூன்றாவது சகோதரன் சேகர், "அந்தக் குதிரை மீது ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் சென்றிருக்கிறார்கள். கூடவே அவர்கள் பின்னால் அவர்கள் வளர்க்கும் நாயும் சென்றிருக்க வேண்டும்" என்றான்.
"உண்மைதான்" என்று மற்ற இருவரும் ஆமோதித்தனர். மூவரும் தொடர்ந்து நகரத்தை நோக்கி நடந்தனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஒருவன் அவர்கள் எதிரே வந்தான். மூத்த சகோதரன் அவனைப் பார்த்துவிட்டு, "ஐயா! நீங்கள் எதையாவது இழந்து விட்டுத் தேடிச் செல்கிறீர்களா?" என்று கேட்டான்.
உடனே எதிரே வந்தவன், "ஆமாம்! ஏன் கேட்கிறீர்கள்?" என்று கேட்டான்.
"நீங்கள் தொலைத்தது குதிரையையா?" என்று சிவா கேட்டான்.
"ஆமாம். குதிரையேதான்" என்றான் அவன் வியப்புடன்.
"அதற்கு இடது கண் தெரியாதா?" என்று கேட்டான் ராமு.
"ஆமாம்" என்றான் அவன் மலைப்புடன்.
"ஒரு பெண்ணும், சிறு குழந்தையும் அதில் சென்றார்களா? அவர்கள் பின்னால் நீங்கள் வளர்க்கும் நாயும் சென்றதா?" என்று சேகர் கேட்டான்.
வந்தவன் சகோதரர்கள் மூவரையும் உற்றுப் பார்த்தான். அவர்கள் மீது அவனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது.
"நீங்கள்தான் என்னுடைய குதிரை, மனைவி, குழந்தை, நாய் எல்லாரையும் எங்கேயோ கொண்டுபோய் அடைத்து வைத்திருக்கிறீர்கள்! உண்மையைச் சொல்லுங்கள். அவர்களை என்ன செய்தீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு இவர்கள், "உங்களுடைய குதிரையை நாங்கள் பார்த்ததே இல்லை. உங்கள் மனைவி, குழந்தை, நாய் எதையும் நாங்கள் பார்க்கவில்லை" என்றனர்.
"அப்படியானால் இவ்வளவும் உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?" என்று கேட்டான் அவன்.
"எங்களுடைய கண்களை நன்கு பயன்படுத்தவும், பல விவரங்களையும் சேர்த்துத் தக்க முடிவுக்கு வரவும் தெரிந்தவர்கள் நாங்கள். இது எங்கள் தந்தை எங்களுக்குக் கற்றுத் தந்த பாடம்" என்று சகோதரர்கள் மூவரும் பதிலளித்தார்கள். மேலும், "சீக்கிரமாக இந்த வழியாகச் சென்றால் உங்களால் அவர்களை அடைய முடியும்" என்று மற்றொரு பாதையையும் காண்பித்தனர்.
"நான் இதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. எல்லாரையும் நீங்கள்தான் மறைத்து வைத்திருக்கிறீர்கள். சீக்கிரம் என்னிடம் திருப்பித் தாருங்கள்" என்று கூச்சலிட ஆரம்பித்தான் அவன். கூக்குரல் கேட்டு அங்கு கூடிய மக்கள், எல்லாவற்றையும் கேட்டறிந்து அவ்வழக்கை வழக்காடு மன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அந்த வழிப்போக்கன் நீதிபதியை நோக்கி, "ஐயா! நான் எனது மந்தையை மலைக்கு ஓட்டிச் சென்றேன். என் மனைவியும், சிறு குழந்தையும், ஒரு கண் தெரியாத என் குதிரை மீது அமர்ந்து, நாயுடன் என்னைப் பின் தொடர்ந்து வந்தார்கள். ஆனால், எப்படியோ அவர்கள் பின்தங்கி, வழி தவறி எங்கோ சென்று விட்டார்கள். நான் அவர்களைத் தேடிச் சென்றபோது இவர்கள் மூவரும் எதிரே நடந்து வந்தார்கள்…" என்று தொடங்கி, மூன்று சகோதரர்களுடன் ஏற்பட்ட தகராறு வரை சொல்லி முடித்தான்.
நீதிபதி சற்று நேரம் சிந்தனை செய்து பார்த்தார். "நீ அவர்களிடம் ஒன்றுமே சொல்லாதபோது, அவர்களால் எல்லாவற்றையும் அவ்வளவு நன்றாக விவரிக்க முடிந்ததெனில், அவர்கள்தான் குற்றவாளிகளாக இருக்க வேண்டும். நீ சென்று அவர்களை அழைத்து வா" என்றும் உத்தரவிட்டார்.
உள்ளே வந்த மூன்று சகோதரர்களையும் உற்றுப் பார்த்த நீதிபதி, "நீங்கள் இவருடைய குதிரையையும், நாயையும் என்ன செய்தீர்கள்? இவருடைய மனைவியையும் குழந்தையையும் எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?" என்று மிரட்டும் குரலில் வினவினார்.
"ஐயா நீதிபதி அவர்களே! நாங்கள் திருடர்கள் இல்லை; நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை" என்று சகோதரர்கள் பதிலளித்தனர்.
உடனே அவர், "அது எப்படி? இவர் உங்களிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் எல்லாவற்றைப் பற்றியும் திறம்பட விவரித்தீர்களாமே! ஆனால், இப்பொழுது எதையும் பார்க்கவில்லை, எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று சாதிக்கிறீர்கள். என்ன துணிச்சல்!" என்று கோபத்துடன் இரைந்தார்.
உடனே சகோதரர்கள், "ஐயா! நாங்கள் எல்லாவற்றையும் பிழையின்றி விவரித்ததில் நீங்கள் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எதையும் தவறாமல் கவனமாய் உற்று நோக்க நாங்கள் எங்கள் சிறு வயது முதலே பழகிக் கொண்டவர்கள். எல்லாவற்றையும் கவனமாய்ப் பார்பதற்கும், சிந்திப்பதற்கும், நாங்கள் நீண்ட காலம் செலவு செய்து கற்றுக் கொண்டோம். அதனால்தான் எதையும் பார்க்காமலே எங்களால் ஊகித்துச் சொல்ல முடிந்தது" என்று விளக்கிக் கூறினர்.
நீதிபதி சிரித்து விட்டார். "கண்ணால் காணாத ஒன்றைப் பற்றி அவ்வளவு நன்றாகத் தெரிந்து கொள்ள முடியுமா?" என்று கேட்டார்.
"முடியும்" என்று மூன்று சகோதரர்களும் உறுதியான குரலில் பதில் அளித்தனர்.
"அப்படியானால் சரி. நீங்கள் சொல்வது உண்மைதானா என்று சோதித்துப் பார்க்கிறேன்" என்று சொன்ன நீதிபதி, மன்ற ஊழியர்கள் இருவரை அழைத்து, அவர்கள் காதுக்குள் ஏதோ சொன்னார்.
அவர்கள் உடனே வழக்காடு மன்றத்தை விட்டு வெளியே சென்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்தனர். ஒரு பெரிய பெட்டியை அவர்கள் இருவரும் தூக்கி வந்து அதை நீதிபதி முன் மெதுவாகக் கீழே வைத்தனர்.
மூன்று சகோதரர்களும் இதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். பெட்டியை எங்கிருந்து கொண்டு வந்தார்கள், அதை எப்படித் தூக்கினார்கள், எப்படி அது தரையில் வைக்கப்பட்டது என்பதையெல்லாம் அவர்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்
.
நீதிபதி இப்பொழுது அவர்களைப் பார்த்துக் கிண்டலாக, "கண்ணால் பார்க்காமல், காதால் கேட்காமல், தீர விசாரிக்கவும் செய்யாமலே எல்லாவற்றையும் அறியக்கூடிய ஞானிகளே! அந்தப் பெட்டியினுள் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று கேட்டார்.
–அடுத்த வாரம்…