அறிமுகம்

இரவு எட்டு மணிக்கே அந்த கிராமம் இரண்டாம் சாம நிலையிலிருந்தது. மார்கழி மாசம். மலையடிவாரமாதலால் ஊர்மந்தை அனாதையாய்த் தவித்து கொண்டிருந்தது.

மனித நடமாட்டத்தையே காணோம்.

நான்கு பக்கங்களும் வெறித்துப் பார்த்தான், மருது. தன்னையறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டு… அவனை உலுக்கியது.

"ஹும்… எதுக்கு நாம இங்க வரணும்? வீதியில இழுத்துக்கிட்டுப் போகும்போது எத்தன பேரு காறித் துப்புனாங்க… அப்பனும், ஆத்தாவும் வா(ழ்)ந்த ஊருதான்னாலும் என்னய அவமானப்படுத்துன ஊருல்ல.."

…எல்லாக் கடவும் அவனின் பார்வை அலசலாய் ஊடுருவியது. ஊர் மந்தைக்கு முன்னால் அப்படியே நின்றுவிட்டான், மருது.

"பேசாமக் கண்ணு காணாத தெசப் பக்கம் போயிருக்கணும். மனசு கேக்கலியே… இங்கதான வரணும்னு தோணுச்சு.."

ம்?

‘வசந்திப் புள்ளயப் பத்தின தகவல் தெரியணும்.. இத்தனை வருசமா ஒண்ணுந் தெரியல… எங்க போறது…? யாரப் பாக்கறது…?’

ம்?

‘இருண்டு கெடக்கற ஊர்ல? ஊரணி மேட்ல இருக்கற நாட்டாமக்கார வீட்ல கேட்டாச் சேதி தெரியும்…’

…மருதுவின் மனம் நிலையின்றித் தவித்துப் போக… மந்தைக்கு முன்னால் போட்டிருந்த பட்டியக் கல்லில் அமர்ந்து கொண்டான். ஈரமாய்க் காற்று அழுத்திய போது துண்டை எடுத்துக் காதுகளை மறைத்துக் கட்டிக் கொண்டான். பழைய சம்பவங்கள் யாவும் நினைவில் கோரமாய் எழுந்து நின்றன…

‘டேய் மானங்கெட்ட பய மகனே… கோயில் காசக் களவாங்க எப்படிடா உனக்கு மனசு வந்திச்சு…?’

‘ப்த்தூ…!’

‘சை!’ தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து, துப்பிய எச்சிலை அழுந்தத் துடைப்பதுபோல் … முகத்தைத் துடைத்துக் கொண்டான், மருது.

‘இந்த வேப்ப மரத்தடியிலதான என்னையக் கூட்டியாந்து அடிச்சாங்க… மரம் இன்னும் அப்படியே நிக்குது… ஊர் மந்தையில் இப்பக் கரண்டு போட்டிருக்காங்க… என்னமோ ஒரு வௌக்கும் எரியல.. ஹும்? ஊரே மாறிப் போச்சு…’

…மருது எழுந்து நின்றான்.

எங்கும் அரவமில்லை. மெள்ள நடந்தவன் நின்றான்… ‘சரி… சரி… பைய நடந்து போனமுன்னா போற வழியில பால்ச்சாமிக் கோனார் வீட்ல விசாரிச்சுப் பாக்கலாம்…’நடந்தான்.

‘ம்? பத்துப் பன்னண்டு வருசமா ஒண்ணுந் தெரியலயே…’ ஊர் உருமாறி விட்டிருந்ததில் ஒன்றும் மட்டுப்படவில்லை அவனுக்கு. ஊருக்கு முன்பு உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்றான்.

‘ஹும்? இங்ஙனதான பால்ச்சாமிக் கோனாரோட வீடு இருந்திச்சு… இதென்னா இத்தத் தாண்டி கார வீடா இருக்குது. இருக்கும். கோனோரோட மக்க மாருகளெல்லாம் பெரிய பெரிய படிப்புப் படிச்சாங்கள்ல…’

…கோனாரின் வீட்டுக்கு எதிரே பார்த்தான். கருவை மண்டிக் காடாயிருந்தது. அழுகுனித் தேவாங்குகளின் கிறீச்சிடும் குரல்கள் விட்டு விட்டு ஒலித்தது. காட்டுக்கு மேற்கே சம்பைப் பள்ளம். பள்ளத்தின் மேட்டில்தான் மருதுவின் அத்தை வீடு இருந்தது.

நடையில் துரிதம் கூடியது.

எலும்பும் தோலுமாய் நிற்கும் அடிமாட்டினைப் போல் மூங்கில்கள் துருத்திக் கொண்டு… அதே பழைய வீடு! வீட்டைக் கண்டதும் கண்ணீர் வந்தது அவனுக்கு. கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பதைப் போலிருந்தது… பாதி வீடு. மீதி வீட்டில் குடியிருப்புக்கு உண்டான இலேசான அடையாளமாய் மெல்லிய விளக்கொளி…

‘மொதல்ல அயித்த இருந்த வீட்லயே விசாரிச்சுப் பாப்பம்’

…மருது வாசல் வரை போயிருப்பான்… ஒரு கறுத்த நாய் எழுந்து வந்து ஜீவனற்ற குரலில் இடைவிடாது குரைத்தது. சற்றுப் பின்வாங்கினான். நாய் முன்னே வந்தது.

"ச்சீ… ச்சீ…"
பயந்தபடி மருது மேலும் பின்வாங்கிய போது, வீட்டினுள்ளிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவள் நாயை அடக்கி விட்டிருந்தபடி நின்றாள். மேலும் நாய் குரைக்கவே…

அவள் கேட்டாள்…

"அதாரு?"

‘இதாரு? வத்தி வறண்டு போயி தலமயிரு சிலிப்பிக்கிட்டு இப்படி வந்து நிக்கிறவ…? அப்பொ அயித்தையும்… வசந்திப் புள்ளயும்… ஹும்? இதென்னா சோதனை காஞ்சிவனம்…?’

சங்கடமும் கடுப்புமாய் அவள் மீண்டும் கேட்டாள்…

"அதாருங்கறேன்ல?"

அவன் தயங்கியபடி சற்று முன்னே போனான்…

"எம் பேரு மருது. எங்கப்பன் சொக்கனோட ஒன்னாப் பொறந்த காமாட்சி அயித்தயும்… அயித்தமக வசந்திப்புள்ளயும் இந்த வீட்லதான் குடியிருந்தாக…"

…வழுக்கி விட்டதைப் போல் முன்னே வந்த அவள், இருப்பிலிருந்த எண்ணெய் பானையை நழுவ விட்டதைப் போல் கத்தினாள்…

"மச்சான்…!"

"!….?"

"நா வசந்தி மச்சா!"

"நா… மருது வந்திருக்கேன் புள்ள…!"

அழுது கொண்டே சொன்னவனை வீட்டினுள் அழைத்துக் கொண்டு போய்… ஒரு பாயை எடுத்து விரித்தாள். பாய்க்கு இடையில் தரை தெரியவே, பழைய துணியை எடுத்து விரித்து கையைப் பிடித்து அவனை அமர வைத்தாள்.

விளக்கை எடுத்து வந்து அவனுக்கு முன்னால் வைத்து விட்டுத் தானும் குத்துக் காலிட்டுத் தரையில் அமர்ந்து தேம்பினாள், அவள். துண்டை முகத்தில் வைத்துக் கொண்டு மருதுவும் அழுதான்.

***

சற்று நேரங்கழித்து மூக்கைச் சிந்தி மூலையில் வீசி எறிந்தாள் வசந்தி. விளக்கில் எண்ணெய் ஊற்றினாள். அவனுக்கு எதிரே செம்மையாக அமர்ந்து கொண்டு, அவன் கையைத் தொட்டுக் கேட்டாள் …

"ஏஞ்சாமி கஞ்சி ஊத்தறேன் குடிக்கிறியா…?"

"ம்… வெஞ்சனம்?"

"சந்தையில வாங்குன உலுவக் கருவாடு சுண்ட வச்சிருக்கேன்," என்றவள்… கருவாடும் கம்மங் கூழுமுன்னா என் ராசாவுக்குக் கறியும் சோறும் வேணாமுல…" என்று கூறித் தட்டை எடுத்தவளிடமிருந்து மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது. அப்படியே அழுது விட்டாள்.

"பசிக்குது புள்ள…!"

"ஊத்திட்டேன் ராசா…" என்று கூறியவள் அவதி அவதியாய் தட்டில் பழைய சோற்றைப் பிழிந்து வைத்தாள். சட்டியிலிருந்த கருவாட்டுக் கூட்டை ஊற்றிப் பிசைந்து மருதுவின் முன்னால் வைத்தாள். சோற்றை அள்ளி வேக வேகமாக விழுங்கினான், மருது. பாவம் அவனுக்கு என்ன பசியோ…

‘அடப்பாவி மகனே… நீ இப்படியா உருக்கொலஞ்சு போவ? உன் சிரிப்பும், கேலியும் கிண்டல் பேச்சும் எங்கே போச்சுய்யா…’

…கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, பழைய சோற்றைப் பிழிந்து கருவாட்டுச் சட்டியில் போட்டு… புரட்டி எடுத்து தட்டில் போட்டாள் வசந்தி.

…ஈர விழிகளோடு அண்ணாந்தவன் அவளையே பார்த்தான்.

***

பழைய துணிகளைப் போட்டலம் கட்டி… தலைமாட்டில் வைத்துவிட்டு இன்னொரு சேலையைப் போர்வை போல் மடித்து, அவனைப் படுக்கவைப்பதற்காக வேண்டி… அம்மிக் கல்லுக்கு அருகில் கோழியும் குஞ்சுகளோடும் நின்ற பஞ்சாரத்தை நகர்த்திக் கொண்டு போய் திருகைக்குப் பக்கத்தில் நிறுத்தியபோது…

கோழியோடு குஞ்சுகளும் கூப்பாடு போட்டன.

"யம்மா… யம்மா…"

தலையைச் சொறிந்து கொண்டு வந்த சிறுவனை வாரித் தூக்கினாள், வசந்தி. அவன் கலக்கத்தில் அடம்பிடித்து அழுதான்.

"தூங்கு கண்ணு… அம்மா இருக்கேன்ல…" என்றவள் அச்சிறுவனின் கடைவாய் ஓரம் வழிந்த நீரைத் துடைத்து விட்டு, மடியில் கிடத்தி அவனைத் தூங்கிடச் செய்து… தட்டிக் கொடுத்தபோது… அந்த வீட்டையும், அவளையும் வெறித்தான் மருது.

"வசந்தி… அது ஆரோட புள்ள…?"

"எம்புள்ளதான்!" என்றவள், தூங்கிப் போன சிறுவனின் முகத்தைத் திருப்பினாள். சிறுவனின் முகம் சுண்டியது. விளக்கை முன்னே இழுத்தாள்…

"பாரு… பேருகூட ஒம்பேருதெ வச்சிருக்கேன்…" என்று கூறித் தேம்பினாள்… "இதுக்கென்னமோ அதுட்டமில்லே…" …கண்ணீர் பொலபொலத்தது.

"பயலோட அப்பே?"

அவனுக்கு விரித்திருந்த பாயில்… மடியிலிருந்த மகனைக் கிடத்தினாள். விளக்கைக் கையில் எடுத்தவள், தலைக்கு மேல் மாட்டப்பட்டிருந்த அந்தப் போட்டாவில் ஒளிபடர விட்டபோது …
எழுந்து பார்த்த மருது அதிர்ந்தான்.

நாறும் நூலுமாய் அந்த போட்டோவைச் சுற்றி ஒரு மாலை! மங்கிய ஒளியில் மருது உற்று நோக்கினான்?

‘இப்படி எடுத்தெறிஞ்ச பார்வ… நிமுந்த நெஞ்சு…ம்? இதாரு எங்கயோ பார்த்த மாதிரி…’
… பட்டென்று பொரி தட்டியது.

‘ஓ… ஓடப்பட்டி பரமு… ‘

"வசந்தி, படத்துல இருக்கிறது பரமுதான?"

"பரமுதான்!"

எதுவும் சொல்ல மனமில்லாமல் அந்தப் போட்டோவையே உறுத்துப் பார்த்தான், மருது. ‘என்னயிது? என்னமாதிரியான ஒடம்பு… ஆளவச்சு அடிச்சுப் போட்டாலும் சாக ஆறுமாசமாகுமே… அடடா… செத்தே போனானா?’

…எதுவுமே பேசாமல் நின்றவனிடம், மெல்லக் கேவியபடி சொன்னாள்…

"மச்சான், நீ அந்த சுந்தரத்தக் கொல பண்ணிட்டு… கோயில் பணத்த எடுத்ததுக்கு, போலீசு ஒன்னய இழுத்துக்கிட்டுப் போகவும்… நா உப்பு வாங்கப் போனாக் கூட இந்த ஊரு என்னய ஒருமாதிரியாப் பார்த்துச்சு…"

…அழுகையின் ஒலியைக் கூடிய மட்டும் குறைத்துக் கொண்டு மேலும் சொல்ல முடியாதவளாய் வசந்தி கரைந்தாள்.

‘வசந்தி நீயுமா என்னயக் கொலகாரன்னு நெனச்ச? நீயுமா என்னயக் கொள்ளயடிச்சவன்னு நம்புன? அடிப்பாவி! அந்தச் சண்டாளன் மாயழகு… கோயில் சொத்தையெல்லாம் தனதாக்கிக் கிட்டதுமில்லாமேப் பணத்தையும் எடுத்தானே…’

‘ஹும்…’

‘களவு நடந்ததப் பாத்த அந்த சுந்தரத்தக் கொல பண்ணிட்டு கோயில்ல தூங்கின எம்மேல பழியப் போட்டு, பன்னண்டு வருசம் என்னய உள்ள இருக்க வச்சுட்டானே…’

‘ஹும்…’

‘போ! நீ என்னயக் கொலகாரன்னே நெனச்சிட்டுப் போ… நா தண்டனய அனுபவிச்சுட்டுத்தானே வந்திருக்கேன்… என்னய ஒங்கிட்ட நாயப் படுத்தறதால நாம்பட்ட வேதன சொகந்தரப் போகுதா…?’
…வெகு நேரம்வரை மருது வார்த்தையைத் தவிர்த்திருந்தான். வசந்தி ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள். கேவலும் விசும்பலும் சற்று அவளிடம் விடுதலை பெற்றிருந்த போது… மருது கேட்டான்…

"என்னா புள்ள… நீ ஏதும் பேசல?"நா பொம்பள என்னா செய்யிவேன்? எங்கம்மாவும் ரத்தப் போக்குல கெடந்துச்சு… மேலூரு ஆஸ்பத்திரியில சேத்து ராத்தூங்காமப் பகத் தூங்காமப் பாத்தே… பேரு தர்மாஸ்பத்தரி. மருந்து மாத்தரகூட வெளியில வாங்கியாரச் சொன்னாக…”

"சொல்லு… அழுகாதபுள்ள…"

"காசுக்கு எங்க போவேன்? என்னா பண்ணுவேன்" … இப்படிக் கேள்விகளை அடுக்கியவள் நிறுத்தி, அவனை நிதானமாய் உறுத்துப் பார்த்தாள்.

"அயித்த?"

"எங்கம்மா படுக்கையிலேயே பொணமாகிப் போச்சு மச்சான்!"

…சுவரில் சாய்ந்து கொண்டு சுருதியின்றி அழுதான் மருது… "அத்தெ… அத்தெ…"
வெளியில் அந்த நாய் எதற்கோ ஊளையிட்டது.

"யாரோடயோ சண்டை போட்டுக் காயம்பட்டுக் கட்டுப்போட, அந்த நேரத்துல பரமு அங்க வந்தாக. ஆஸ்பத்திரியில என் நெலமயப் பாத்துட்டு பொணத்தப் பொதைக்கிற வரைக்கும் இருந்திட்டுப் போகும்போது… என்னயப்பாத்து எங்க போவேன்னு கேட்டாக…

"நா ‘கோ’ன்னு அழுததப் பாத்து, கூடவே என்னயக் கூட்டிட்டுப் போயி…" …மேற்கொண்ட சொல்ல நா எழாமல் பைத்தியக்காரியைப் போல் பேதவித்துப் பார்த்தாள், வசந்தி. சுவரில் சாய்ந்து கொண்டவள் நிலையின்றி வெறித்தாள்.

…வெகு நேரம் வரை இருவரும் பேசுவதறியாது தவித்திருந்தார்கள். பின் மருதுதான் கேட்டான்…
"பரமு எதுனால செத்துச்சு?"

"அவுக சாவாகளா… இல்ல சாகற வயசா…? ஊர்ச் சொத்த அடிச்சுச் சேத்த அந்த பாவி மாயழகு, அவுக சந்தன மரத்தத் திருடனதாப் போலீசுல புடிச்சுக் குடுத்துட்டான்."

"அழுகாமச் சொல்லு…"

"திரும்பி வந்தவுக ஆத்தரத்துல மாயழகக் குத்திப் புட்டாக… அவனோட ஆளுக இவுகளை வழிமறிச்சு…" அவள் அழுதாள்.

இதைக்கேட்ட மருது எதுவும் சொல்லவில்லை. வாசல் வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தான். வாடையில் கிடந்த அந்தக் கறுப்பு நாய் உடலை வில்லாய் வளைத்து சோம்பல் முறித்தது. இருண்ட திசையை நோக்கி ஊளையிட்டோடியது.

‘ஹூம்! தாய்மாமன் மகன். நானிருக்கேன் புள்ளயின்னு ஒரு வார்த்தை சொல்ல மனசு வருதா? என்னதான் ஆயி செயிலுக்குப் போயிட்டு வந்தாலும் ஆம்பள – புதுமாப்பளதான! என்னயச் சொல்லு, கைம்பொண்டாட்டி. அழுதாலும் சிரிச்சாலும் இனிமே இந்தப் புள்ள மொகந்தெ…’

அவள் தன் மகனைத் தூக்கி நெஞ்சில் போட்டுக்கொண்டு சுருண்டுவிட்டாள். அவன் சுவர் ஓரமாகப் படுத்துவிட்டான். பின் எதுவும் பேசாமல் தூங்கிப் போனார்கள்.’

விடிந்தது. பஞ்சாரம் திறந்துவிட்டு, கோழியுடன் குஞ்சுகளும் குப்பை கிளறின. கொல்லைப் புறமுள்ள பட்டியக் கல்லில் வசந்தி மீன் உரசிக் கொண்டிருந்தாள்.

சீலையைப் போர்த்தியபடி படுத்திருந்தான், மருது.

படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த வசந்தியின் மகன் வழக்கம்போல் முகத்தைச் சுண்டவைத்து ஒரு பாட்டம் அழுதான். பின் எழுந்தவன், பக்கத்தில் படுத்திருந்த மருதுவைப் பார்த்து அழுவதை நிறுத்தினான். பயந்தபடி நெருங்கி உற்றுப் பார்த்தான்.

மெல்லப் புரண்ட மருது, அவனைப் பார்த்துச் சிரித்தான். சிறுவனுக்கு அச்சமேற்பட்டது. பின்வாங்கியவன், அப்படியே மீன் உரசிக் கொண்டிருந்த அம்மாவிடம் ஓடினான்.

"அம்மா… அதாரு?"
உரசிய மீனை அறுக்கப் போனவள், மூக்கு தூக்கினாள். கேள்வியில் கவனப்படாமல், மகன் நிற்பதைக் கண்டு மெலிதாய்ப் புன்னகைத்தாள்.

மறுபடியும் வீட்டைக் காண்பித்து கை நீட்டியவன்,"அதாரும்மா…?" என்றபோது, அவனிடம் கடுமை கூடியிருந்தது. வீட்டை நோக்கி நீட்டிய கையை மடக்கவில்லை. அவனின் பார்வையின் உக்கிரத்தைத் தவிர்க்க முடியாமல் எழுந்தாள். வியர்த்துப் போய் நெஞ்சு படபடத்தது.

"படுத்திருக்கறதாரும்மா…?"

கையிலிருந்த மீன் நழுவியது.

கொல்லைப்புற வாசலில் மருது நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள், வசந்தி.

சிறுவன் அம்மாவை நோக்கினான்.

‘ஈரச் சீலயோட ஏழு வெள்ளிக்கு பாண்டி முனி கோயிலுக்குப் போயி தவமிருந்து பெத்த மகன்… நாம் பெத்த ஆறு வயசுப் பாலகன் அதாருன்னு ஒன்னயக் கேக்குதே… நான் என்னா பதில் சொல்லுவேன் சாமீ…?’

அவளின் கீழிமைகளில் நீர் நிரம்பி வழியத் துவங்கும் முன் –

மருது அழைத்தான்.

தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாள் வசந்தி. "எங்கழுத்துல கெடந்த மஞ்சக் கயறு போச்சு" என்று சொன்னவள்… இடைவெளியில் மௌனமாகி…

"அவன்… அந்தப் பாவிப்பய மாயழகு ஏழெட்டு மாசம் ஆஸ்பத்திரியிலேயே கெடந்து செத்துப்போனான்!" என்று கூறினாள். இதைக் கேட்ட மருதுவின் புருவங்கள் உயர… விழிகள் ஒளிர்ந்தன. இன்னும் கொஞ்சம் அவளை நெருங்கினான்.

"அந்த மாயழகு குத்துப்பட்டுச் செத்துப் போனானா…?"

அவள் மௌனமாகத் தலையை ஆட்டினாள்.

‘மனசு குளுந்து போச்சுன்னு சொல்லுவாக… காதுல தேனூத்துன மாதிரின்னும் சொல்லுவாக… உம்மடியம்மா… உம்ம…’

அவளின் இருண்ட முகம் பிரகாசமானது.

‘மருது நீ மனுசன்டா…. மனுசன். உன் பாபம் சும்மா விடுமா?’

"ஓடப்பட்டியில அவுகளோட காணி கொஞ்சம் கெடக்கு. கம்போ, சோளமோ கைவெதப்பா வெதச்சு விடறது. என்னத்தையோ எனக்கும் எம்புள்ளைக்கும் பொழுதுபோகுது…"

…மண்டிய தாடியைச் சொரிந்து கொண்டான் மருது. போர்த்திய சீலையை இறுக்கினான். அண்ணாந்து அந்த போட்டாவைப் பார்த்தான்.

"இந்தப் படத்தக் காட்டி எம்புள்ள ‘இதாரு… இதாரு’ன்னு கேக்கும். ‘தெய்வம் சாமி, தெய்வம் சாமி’ன்னு சொல்லுவேன். மத்த மத்தப் புள்ளகளப் பாத்துட்டு, ‘அப்பன் எங்க… அப்பன் எங்க’ன்னு கேக்கும். நா வருஞ்சாமி வருஞ்சாமி ன்னு சொல்லுவேன்…!"

"வா ராசா… நாந்தெ ஒங்கொப்பெ…!" சொல்லி அழுது கொண்டே வந்த அச்சிறுவனைத் தூக்கிக் கொண்டான். அந்தப் பிள்ளையின் பாதங்களை ஏந்திய வசந்தி முகத்தில் புதைத்துக் கொண்டு அழுதாள்.

…இரவில் மருது வந்தபோது குரைத்த அந்தக் கறுப்பு நாய் அவர்களைச் சுற்றிக் குழைந்து வந்தது.

(செம்மலர், அக்டோபர் 1989)

About The Author