எங்கள்
இரத்தத்தின் இசை, தமிழ்!
உறங்காத
நரம்புகளி உணர்வு நடனம்,
தமிழ்!
வாழ்க்கை
எங்கள் இதயத்துடிப்பில்
பேசும் பேச்சு,
தமிழ்!
சூரிய
மனப்பாடம் செய்துகொண்ட
ஒளியின் மூலப்பிரதி,
தமிழ்!
நகல் குளிர்ச்சியை
நாடெல்லாம் இறைக்கிறது நிலா..
ஈரத்தின் அசல்
இருக்கிறது எங்களிடம் தமிழாய்!
கிறுக்கிக் கிறுக்கி
மின்னலை அழிக்கிறது வானம்!
ஒரு தமிழ் வாக்கியம்போல்
இதுவரை எழுத முடியவில்லையே!
தேவையில்லை
என்று தமிழ்
தேர்வு செய்யாத சந்தங்கள்
அருவிகளில்.. அலை கடல்களில்..
காலம்,
பூமியின் எந்தப் புள்ளியில்
முதல் மனிதனைக்
கண்டதோ
அந்தப் புள்ளியைச்
சந்தனக் காடாக்கியது, தமிழ்!
வரலாறு,
முதல் பக்கத்தை வரைய
உட்கார்ந்தது
பஃறுளியாற்றின் கரையில்!
குமரிக்கோடுகளைத்
தாலாட்டிய தாய்க்கோடுகளிலிருந்து
இலக்கிய மணத்தை
ஏற்றிக் கொண்டு வந்தது காற்று!
கருத்துகளின் வாகனம் இல்லை;
கர்ப்பப் பை தமிழ்!
எதைச் சொல்ல
நாங்கள் எண்ணினாலும்
அதைச் சொல்ல
எங்களுக்குமுன் எண்ணும், தமிழ்!
விதைகளை
நாங்கள் கையில் வைத்திருப்போம்;
விளைச்சலை அது
நிலத்தில் வைத்திருக்கும்!
‘அகரத்தில்’
நாங்கள் கால் ஊன்றும்முன்,
தமிழ்
‘னகரத்தில்’
வெற்றிக்கொடி ஏற்றி வைக்கும்!
வளமான மொழியின்
வாரிசுகள் என்பதால்
செருக்கு எம் தலையை
நிமிர்த்தும்!
அர்த்தமுள்ள
அந்தச் செருக்கு ஆணவம் என்றால்
‘ஆமாம் போடா’ என்போம்!
ஓர் உடல் வாழ
ஓருயிர் போதும்..
பத்து உயிர் வேண்டும் என்பது
பைத்தியக்காரத்தனம்!
ஓர் உயிரான தமிழ் போதும்
தமிழனுக்கு!
இது
குறுகிய நோக்கம் என்றால்
இந்தக்
கற்புள்ள தப்பு
மீண்டும் மீண்டும் செய்யப்படும்.
(”நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்” கவிதைத் தொகுப்பிலிருந்து – சிறப்பு அனுமதியுடன்)
கற்புள்ள தப்பு -என்பது போன்ற வார்த்தை இணைப்புகள் அருமை
nise very super