(‘காந்தி ஜெயந்தி’ யன்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் பாடப் பெற்றது.
கஸ்தூரிபாய் காந்தி அம்மையார் அவர்களின் கண்ணோக்கில் காந்திஜியின் அமரத்வம்)
பூமிதனில் சத்தியத்தைப்
பொன்னணியாய்ப் பூண்டிருந்த
மாமுனிவர் என்கழுத்தில்
மாலையிடும் பேரடைத்து
நாயகர்முன் சென்றவழி
நான்நடந்து நல்லறத்தின்
தாயகமாம் சிறைச்சாலைத்
தண்ணிழலில் தவமடியில்
தலைசாய்த்து உயிர்விட்ட
தன்னையினால், மாங்கல்யம்
குலையா திருத்தநெற்றிக்
குங்குமத்தோ டுடலெரிந்து
தான்முன்னர் இங்குவந்து
தரைமெழுகிக் கோலமிட்டு
வானுலவும் மீன்தொடுத்து
வாசமலர் வளைவமைத்து
பஞ்சனைய மென்பாதம்
பாவாமல் நீலவெளி
சஞ்சரிக்கும் முகிற்பெண்ணை
சர்க்காவைச் சுற்றவைத்து
வானவில்லில் நூல்தோய்த்து
வண்ணஉடை பண்ணிவைத்து
கானப் பறவையொன்றைக்
கடவுள்துதி பாடவிட்டு
இடப்பக்க மாடத்தில்
இருந்தொளிரும் சூரியனும்
வலப்பக்க மாடத்தில்
வளர்ந்தொடுக்கும் சந்திரனும்
பகலிரவாய்ச் சுழல்காலப்
பாதைவழி ஐந்தாண்டு
மிகஆவல் ஊறும்வழி
மீளாமல் பதித்திருந்தேன்!
சிறைச்சாலைப் பரப்பிற்குள்
சிறியதொரு நினைவாங்கு
அறச்சுடரோன் எனக்காக
அமைத்தங்கு அகலேற்றும்
பெற்றியினைப் பார்த்தவுடன்
பெருமிதத்தால் பூரித்தேன்!
சுற்றியொளிர் செங்கதிரோன்
சுடரதற்கு இணையாமோ?
பாரத்தோர் நூறாண்டு
பாடுபட்டுப் பெற்றஇன்ப
வாரிதியில் மூழ்கியெழும்
வாழ்வினருந் திருநாளில்
தேசமெலாம் தொழுதேத்தும்
தெய்வமகன் தன்போக்கில்
காசினியின் வீதிவழி
கால்நோக நடந்துசெலல்
பார்த்ததுமோ உடன்தொடரும்
பாக்கியத்தை இழந்ததற்காய்
வார்த்தைகளுக் கெடாத
வருத்தம்நான் இங்குற்றேன்!
பின்னொருநாள் அண்ணலவர்
பிரார்த்தனைக்கு விரைந்துசெலும்
இன்தோற்றம் தென்படஎன்
இமைகளைநீர் நனைத்ததுவே!
கற்றெந்தன் நினைவன்று
சயனத்தில் ஆழ்ந்ததுவோ?
ஒற்றைத்தனிக் குரல்கேட்கும்
‘ஓராமா’ என்றழைத்து
அதையடுத்து விண்திரையில்
அழுகுரல்கள் மோதியதும்,
இதயத் துயிலகன்று
இருவிழியும் நான்திறந்தேன்.
‘ஏராமா’ என்றழைத்து
ஏகாந்த மாகவந்தார்;
சீராளன் தன்முகத்தில்
சிரிப்புடனே எதிர்வந்தார்.
கோலுன்றா தென்னெதிரில்
கூப்பியதன் கரங்களுடன்,
பூலோகம் பின்நீத்துப்
பூதஉடல் பின்நீத்து,
குதிரைவரும் திக்கறியக்
குளம்பொலிகள் உதவுதல்போல்
மதியமெழும் பொழுதறிய
மலரல்லி உதவுதல்போல்
மூன்றுமுறை குண்டொலித்து
முன்னறிக்கை தான்விடுக்க
ஆன்றதவச் செல்வரெனை
அடைவதற்காய் முன்வந்தார்.
ககனவெளி தவம்நோற்ற
கன்னியவள்நான் எதிரடைந்தேன்
அகழகு ததும்புமொரு
அருள்மனத்தை எதிர்நோக்கி!
அந்திவரும் வேளையிலே
அடுத்ததினம் மாலையிலே,
சுந்தரமாம் யமுனைநதிச்
சூழலிலோர் மேடையிலே
‘வென்றதறம்!’ என்றுசொலி
வேள்வித்தீ பலர்வளர்க்க,
கோடானு கோடியர்கள்
கூடிநின்று ஆசிசொல,
மந்திரம் கற்றோருரைக்க,
மணமுயர்ந்த பெருமளவு
சந்தனத்தில் எழுந்தசுடர்
சாட்சியென்று மாலையிட்டார்.
நாடெங்கும் பாலிகையை
நதிகளிலே பின்தெளித்தார்!
வீடெங்கும் கோலமிட்டு
விளக்கேற்றி நலங்குவைத்தார்!
மன்னரவர் தினந்தோறும்
மாளிகையில் சாளரத்தின்
முன்னமர்ந்து குனிந்துநெடு
மூச்செறிதல் ஏன்தானோ?
very good!