ஸ்ரீ நரசிங்க தேவ் கண்களை மூடியபடி தியானத்தில் அமர்ந்திருந்தார். அவர் இருந்த இடம் வாரணாசி. தன் குருவால் அருளப்பட்ட மந்திரத்தை ஓதியபடியே அவர் துர்கையின் தரிசனத்திற்காக தவம் இருந்தார். வங்கத்தைச் சேர்ந்தவராதலால் இயல்பாகவே துர்கை அவரது இஷ்ட தெய்வமானாள்.
திடீரென்று அவர் கண்முன் ஓர் ஒளி பாய்ந்து பரவி அதன் நடுவில் துர்க்கை நின்றாள். சிறு பெண் வடிவத்தில் பாவாடை சட்டையுடன் அலங்காரபூஷணியாகக் காட்சியளித்தாள்.
"நான்தான் ஹன்ஸேஸ்வரி. உன் பக்தி என்னை இங்கு வரவழைத்து விட்டது. என் நல்லாசிகள் என்றென்றும் உனக்குக் கிடைக்கும்" என்று கூறியபடியே மறைந்து போனாள் துர்க்கை. அன்னையின் தரிசனத்தால் அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் நரசிங்க தேவ். தான் கண்டது போலவே ஒரு சிறு பெண் உருவத்தில் துர்க்கையைச் செதுக்கி, பிரதிஷ்டையும் செய்தார். பின், மிகப்பெரும் முயற்சியால் அழகான கோயிலாக அது கட்டி முடிக்கப்பட்டது. இதுதான் ஹன்ஸேஸ்வரி கோயில்!
ராகவேந்திர தத்தா என்ற ஜமீந்தாரின் பரம்பரையில் வந்தவர் நரசிங்க தேவ். இவருடைய முன்னோர்கள் தங்கள் திறமைக்காக வங்காள நவாப், மாமன்னன் ஷாஜஹான், ஔரங்கசீப் போன்ற அரசர்களிடமிருந்து விருதுகள் பெற்றிருக்கின்றனர். அவர்கள் வழி வந்த நரசிங்க தேவ் அரபு, சம்ஸ்கிருதம், பெர்ஷியன், வங்காளம் போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். இவருக்கு இரு மனைவியர் உண்டு.
இவர் கட்டிய ஹன்ஸேஸ்வரி ஆலயத்தில் தேவி இருக்கும் நிலையே மிக அழகு! நமது உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களைக் கொண்டு குண்டலினியின் யோக சக்தி உயர்நிலையை சஹஸ்ரா என்ற உச்சியில் நிலைநிறுத்தும் கலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் இதழ்த் தாமரை மீது ஒற்றைக்காலில் நின்றபடி தவம் இயற்றும் கோலத்தில் தேவி காட்சியளிக்கிறாள். இந்தச் சிலை கல்லால் வடித்ததல்ல; மிகப் பழமையான வேப்பங்கட்டையில் செதுக்கப்பட்டது. அம்மனை இப்படி வேப்ப மரத்தில் எழுந்தருளச் செய்திருப்பது மிகப் பொருத்தமானதுதான்.
கூடவே மஹிஷாசுரமர்த்தனி, அருகில் ராதா-கிருஷ்ணர் ஆகியோர் சிலைகளும் காணப்படுகின்றன. பெண்கள் தம் கையாலேயே அபிஷேகம் செய்து பூஜிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அருகில் ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதில் டெரகோட்டா சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த இடத்திற்குப் பள்ளி மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவுக்கு வருவது போல் தங்கள் ஆசிரியர்களுடன் வந்து பார்வையிடுகின்றனர். தியானமும் பழகுகின்றனர்.
நரசிங்க தேவ் இந்தக் கோயிலைக் கட்டிய மனத் திருப்தியுடன் காலமானார். அவர் முதல் மனைவி அவருடன் உடன்கட்டை ஏறினார். இரண்டாவது மனைவி தன் கணவரின் ஆன்மிகச் சேவையைத் தொடர்ந்து மேற்கொள்ளலானார். தியானப் பயிற்சி மையம் தொடங்கி அனைவருக்கும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். கல்வியுடன் சேர்ந்து ஆன்மிக வாழ்க்கையிலும் உயர இந்தக் கல்விக்கூடம் இன்றும் வழி காட்டுகிறது. தியானத்தில் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றன. கூடவே ஹன்ஸேஸ்வரியின் அருளும் சேர, கேட்கவா வேண்டும்?
கொல்கத்தாவிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்தால் இந்தக் கலைக்கோயிலைக் காண்டு களிக்கலாம். போகும் வழியெல்லாம் மூங்கில் காடுகள். அதைத் தாண்டிப்போனால் பான்ஸ்பெரியா வனப்பகுதி வரும். அங்கிருந்து சிறிது தூரத்தில் இந்தக் கோயில் நமக்கு தரிசனம் அளிக்கிறது.
கொல்கத்தா செல்பவர்கள் இந்தக் கோயிலுக்கும் சென்று, அம்மன் அருளையும் தியானப் பயிற்சியையும் ஒருங்கே பெற்று நிறைவுறலாமே!