அரசியல் வியாதிகள் (1)

மசூதிக்குப் போகிற வழியில் ப்ளாட்ஃபாம் ஓரத்தில் அந்த அற்புதமான ஓவியத்தைப் பார்த்தேன்.

சரஸ்வதி.
வெள்ளைத்தாமரைப் பூவில் வீற்றிருக்கிற சரஸ்வதி,
வீணை மீட்டிக் கொண்டிருக்கிற சரஸ்வதி.
வசீகர முகம் ஒளிரும் சரஸ்வதி.

கூட்டத்தோடு கூட்டமாய் நின்று அந்த ஓவியத்தை ரசித்தேன்.

வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
என்று முன்னொரு காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த பாடல் ஞாபகத்துக்கு வந்தது.

இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்த ஓவியக்கலைஞன் ப்ளாட்ஃபாமில் பின்புறச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.
தரைமட்டத்திலிருந்து கொஞ்சமே கொஞ்சம் உயர்ந்திருந்த நாலு சக்கரத் தள்ளுவண்டி.
துணைக்கு ஒரு தெரு நாய்.
பார்வையாளர்கள் சில்லறையைப் போட்டுவிட்டுப் போவதற்கான வசூல்க் குவளையன்று.

இளம்பிள்ளை வாதத்தால் சூம்பிப்போன கால்களோடு தள்ளுவண்டியில் உட்கார்ந்திருந்த அவனுடைய கால்களில் உயிரில்லை, ஆனால் கைகளில் என்னவொரு கலை!

மசூதியிலிருந்து அசர் தொழுகைக்கான அழைப்பு, ஒலிபெருக்கியில் மிதந்து வந்த பின்னால்தான் அந்த இடத்தை விட்டு நகர மனசு வந்தது.

அவனுடைய குவளையில் ஒரு அஞ்சு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டு மசூதிக்கு நடந்தேன்.

அடுத்த நாள் சாயங்காலம், அந்த ஓவியன் அதே இடத்தில் இருப்பானா என்கிற சந்தேகத்தோடே வந்தேன்.
இருந்தான்.

இப்போது லஷ்மியின் ஓவியம்.
‘வரலக்ஷ்மி வருவாயம்மா
திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா’
என்று காலையில் ரேடியோவில் கேட்ட சுசீலாப் பாடலை என் வாய் முணுமுணுத்தது,

"என்ன பாய் சாமி, இந்துப் பாட்டப் பாடறீங்க" என்ற குரலுக்குப் பார்வையைத் திருப்பினேன்.

ஓவியன்.

போலியோ ஓவியன்.

என்னுடைய லுங்கியையும் தாடியையும் தொப்பியையும் பார்த்து என்னை இனங்கண்டு கொண்டு பாய் சாமி என்று பெயர் வைத்துவிட்டது ரசிக்கும் படித்தான் இருந்தது, அவனுடைய ஓவியத்தைப் போலவே.
பேச்சுக் கொடுத்தேன்.

"ஏம்ப்பா, தொப்பியும் தாடியும் வச்சிருந்தா இந்துக் கடவுள் படத்துல இருக்கிற கலைய ரசிக்கக்கூடாதா?"

"ஐயையோ, அழகா, தாராளமா ரசிக்கலாம் சாமி. ஒங்களப் போல போலித்தனம் இல்லாத ஆளுங்களத்தான் எனக்கு ரொம்பப் புடிக்கும் சாமி."

"டெய்லி இங்க தான் படம் வரைவியா?"

"இங்கயிருந்து ஜனங்க வெரட்டி விடற வரக்யும் இங்கதான் கெடப்பேன் சாமி."

"ஒன்ன யார்ப்பா வெரட்டிவிடப் போறாங்க. பார் ஒனக்கு எத்தன ரசிகர்கள் இருக்காங்கன்னு."

"வெரட்டறதுன்னா அடிச்சி வெரட்டறதுதானா சாமி? ஜனங்களுக்கு அலுப்புத்தட்டிப் போயி வசூல் கொறஞ்சி போச்சின்னா, என்ன வெரட்டி விட்ட மாதிரிதான்."

"கையில இருக்கிற மாதிரி, நாக்குலயும் ஒனக்கு விஷயம் இருக்கு."

"ஐயையோ, நாக்குல விஷமா?"

"விஷமில்லப்பா, விஷயம். நல்லாவே பேசற. நீ படம் வரையற அழக நா பாக்கணுமே."

"ஓ. பாக்கலாமே, நாளக்கி வாங்க. ஒரு மூணு மணி போல வாங்க, பாக்கலாம்."
அடுத்த நாள் ரெண்டே முக்காலுக்கே ஸ்பாட்டுக்கு வந்து விட்டேன்.

எனக்காவே காத்திருந்த மாதிரி, என் முகத்தைப் பார்த் ததும் சந்தோஷமாய் அவன் படம் வரைய ஆரம்பித்தான்.
வர்ணங்கள் அவனுடைய விரல் நுனியில் உயிர் பெறும் அற்புதத்தைப் பார்த்துப் பிரமித்து நின்றேன்.
ஒரு மணி நேர உழைப்பில் உயிர் பெற்றது முருகக் கடவுளின் அழகான ஓவியம். பால் வடியும் முகத்துடன் பாலமுருகன்.

.’…திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…’

அதன்பிறகு, தினமும் மூணு மணிக்கு முன்பாகவே போலியோ ஓவியனுக்கு முன்னால் ஆஜராகிவிடுவதும், அவன் வரைந்து முடிக்கும் வரைக்கும் பார்த்துக் கொண்டேயிருப்பதும், பிறகு அவனோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாகி விட்டது.

ஒரு நாள் திருப்பதி வெங்கடாஜலபதி.
ஒரு நாள் விநாயகர்.
ஒரு நாள் தில்லை நடராஜர்.
ஒரு நாள் பரமசிவன் பார்வதி – ட்டு இன் ஒன்.

இப்படியாய்ப் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் ஈஸா நபியின் (ஏசுநாதர்) படத்தைத் தத்ரூபமாய் வரைந்தான்.
அடுத்த நாள், ஈஸாநபியின் அன்னை, பீபி மர்யம் (கன்னி மேரி).

மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாயிருக்கியேப்பா நீ என்று நான் ஸர்ட்டிஃபிகேட் கொடுத்ததுக்கு அவன் சொல்லுவான்:

"இந்த நாட்டுல பிறந்து வாழ்ந்துட்டிருக்கிற ஒவ்வொரு உண்மையான மனுஷன் ஒடம்புலயும் மத நல்லிணக்க ரத்தந்தான் ஓடுது பாய் சாமி. நீங்க இந்துப் பாட்ட முணுமுணுக்கறீங்க. சாமிப் படங்கள ரசிக்கிறீங்க. நீங்க ஒரு உண்மையான இந்தியன். நெறைய பேர் உள்ளுக்குள்ள ஒங்களப் போலத்தான் இருக்காங்க. இந்த அரசியல்வாதிங்கதான் தங்களோட சுயநலத்துக்காக குட்டயக் கொழப்பி மீன் பிடிக்கிறாங்க. இந்த அரசியல்வாதிங்க திருந்தணும், இல்லாட்டி ஒழியணும். அப்பத்தான் நாடு உருப்படும்."

"ரொம்ப அனுபவப்பட்டவன் மாதிரி பேசறியேப்பா."

"அடிபட்டவன் சாமி. இப்பப் பாருங்க இந்தத் தொகுதியில இடைத் தேர்தல் வந்துருச்சு, சுவரெல்லாம் தேர்தல் வாசகம், கலர்க் கலராப் போஸ்டர். வாக்குறுதிகள், வசவுகள், சவால்கள், சவுடால்கள்…"

"நீயும் அடுக்கு மொழி தான் பேசற, அரசியல்வாதி மாதிரி."

"அரசியல்வாதியோட என்ன ஒப்பிட்டுப் பேசாதீங்க சாமி. அது எனக்கு அடியோட புடிக்காது."

"சரியப்பா பேசல, ஆமா, ஒன்னோட ஃப்ரண்ட், அந்த நாய எங்க காணல?"

"எங்கயாவது ஜோலியாப் போயிருக்கும்."

"ஜோலி என்ன மண்ணாங்கட்டி ஜோலி, எங்கயாவது தெருப்பொறுக்கப் போயிருக்கும். தெரு நாய் தான!"

"தப்புசாமி. அது, நா பொற போட்டாத்தான் திங்கும். இந்த மனுஷங்கள விட அது நன்றியுள்ள பிராணி சாமி. அது தெரு நாய் இல்ல. நாந்தான் இப்பத் தெரு நாய். ஆனாலும் பரவாயில்ல, இந்த வாழ்க்க எனக்குப் புடிச்சித்தான் இருக்கு. துரோகிகளையும் திருட்டுப் பசங்களையும் நம்பியிருந்த என்னோட பழைய வாழ்க்கைய விட, நாயையும் ஒங்களப் போல ஒண்ணுரெண்டு நல்லவங்களையும் சார்ந்திருக்கிற இந்த பிளாட்பார வாழ்க்க எவ்வளவோ மேல்."

"அதென்னப்பா ஒன்னோட பழைய வாழ்க்க?"

"அதெல்லாம் இப்ப என்னத்துக்கு சாமி, வுடுங்க. பாய் சாமி, நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணணுமே."

"செய்யறேம்ப்பா, சொல்லு."

"பாய் சாமி, நா இந்துக் கடவுள் படமெல்லாம் வரஞ்சிட்டேன். கிறிஸ்தவக் கடவுள் படமும் வரஞ்சிட்டேன். ஒங்க அல்லா படம் மட்டும் மாதிரிக்கிக் கெடக்யவேயில்ல. எனக்கு அல்லா படம் ஒண்ணு கொண்டு வந்து தர்றீங்களா சாமி."

"அல்லா படம் கெடக்யாதுப்பா. அல்லாவுக்கு உருவம் கெடையாது. ஒண்ணு செய்யறேன். எங்க மக்கா மதினா மசூதிப் படம் வேணா கொணாந்து தாறேன். அதப் பாத்து நீ வரை."

மக்கா மதினா படத்தைக் காலையில் கொண்டு தருவதாய் வாக்களித்து விட்டு அங்கிருந்து அகன்றேன்.

(மீதி அடுத்த ‏இதழில்)”

About The Author