பாரதத்தில் ரத்தினங்களுக்குப் பஞ்சமா? சில நினைவுகள்
2001 ம் ஆண்டிற்குப் பின் அளிக்கப்படாத பாரத ரத்னா விருதுக்கு இப்போது ஏகப்பட்ட போட்டி. வாஜ்பாயிக்குத் தர வேண்டுமென்று அத்வானியின் வாதம்; கன்ஷிராமுக்குக் கொடுக்கவேண்டுமென்ற மாயாவதியின் மிரட்டல்; மறைந்த தன் தந்தை பிஜு பட்னாயக்குக் கொடுப்பதே தகுமென ஜூனியர் பட்னாயக்கின் பாச வேண்டுகோள்; முலாயம் சிங்கே முற்றிலும் பொருத்தமானவர் என சமாஜ்வாதிக் கட்சியின் முனகல்; எப்போதோ மறைந்துபோன பாபு ஜெகஜீவன்ராமுக்காக சிலரின் முதலைக் கண்ணீர்; இதன் நடுவில் என்.டி.டி. வி நடத்தியஒரு வாக்கெடுப்பில் எம். எஃ. ஹுசேனின் பெயர் வந்தபோது அதன் மீது சில வெறியர்களின் தாக்குதல்.
1954 ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களையும், நாட்டின் நலனுக்காகாக உன்னத சேவை செய்தவர்களையும் கவுரவிக்க வேண்டுமென்ற உயர்ந்த கண்ணோட்டத்துடன் துவங்கப்பட்ட இந்த விருது இப்படி அல்லல் படுகிறது.
1962 ம் ஆண்டு அவரால் துவங்கப்பட்ட இந்த விருது டாக்டர் ராஜேந்திர பிரசாதிற்கு அளிக்கப்பட்டது, அவர் எவ்வளவோ மறுத்தும்! டாக்டர் ஜாகிர் ஹுசேன், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் குடியரசுத்தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்கள். மூதறிஞர் ராஜாஜி, லால் பகதூர் சாஸ்திரி (அவர் மறைந்தபின்பு) அவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் பற்றி இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.
இதுவரை 40 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டதில் நேருஜியின் குடும்பத்தில் நேருஜி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகிய மூவரும் பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறார்கள். ( நான்காவதாக சோனியா காந்திக்கு அளிக்கப்படவேண்டுமென ஆர்வமுள்ள காங்கிரஸ் கட்சியாளர்களுக்குத் தோன்றலாம்)
இந்தியாவின் முதல் கல்வி மந்திரியும் விடுதலைப் போராட்ட வீரருமான அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டபோது அதை அவர் நிராகரித்தார். ஆனால் அவரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு அந்த விருது அளிக்கப் பட்டது. காமராஜ், எம்.ஜி. ஆர்., ஜெயபிரகாஷ் நாராயண் உட்பட 10 பேர்களுக்குக்கு அவர்களின் மறைவுக்குப்பின் பாரத ரத்னா அளிக்கப்பட்டது.
அன்னை தெரசா மற்றும் அமர்த்தியா சென், அவர்கள் நோபல் பரிசு பெற்ற பின்பே இந்த விருது பெற்றார்கள். எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களும், லதா மங்கேஷ்கர் அவர்களும் மகசேசே விருது பெற்ற பின்பே பாரத ரத்னா விருது பெற்றார்கள்.
மொரார்ஜி தேசாய் அவர்களுக்கு அவருடைய அந்திம தினங்களில் நினைவிழந்து இருந்தபோது இந்த விருது அளிக்கப்பட்டது.
விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கும் முறையும் அதன் பின்னிருக்கும் நோக்கங்களும் பலமுறை ஐயங்களுக்கு அப்பால் இல்லை என்றாலும் உண்மையிலேயே இந்த விருத்துக்குத் தகுதியான அதற்கு பெருமை சேர்க்கக் கூடிய ரத்னங்கள் இல்லையா என நம்மை யோசிக்க வைக்கிறது. எனக்கு, உனக்கென்று ஏலம் போட்டுக் கேட்கிற அளவிற்கு இந்த விருது நம் அரசியல்வாதிகளிடம் படும் பாடு நம்மைக் கவலைப்படவும் வைக்கிறது
கடைசிச் செய்தி :
பாரத ரத்னா விருது பெரும் அரசியல் சர்ச்சையாக்கப்பட்டு விட்டதால் இந்த ஆண்டும் யாருக்கும் பாரத ரத்னா விருது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அப்பாவி அப்பா!
தங்களின் பல தலைமுறை வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைக்கும் பல அரசியல்வாதிகளின் மத்தியில், பீகார் மாநிலத்தில் உணவு அமைச்சராக இருந்த மோகன்லால் குப்தாவின் மகன் உதய பிரகாஷ் குப்தா தன் வருமானத்திற்காக தினமும் சைக்கிளில் சென்று செய்தித்தாள்களை விற்பனை செய்கிறார். அவர் தந்தை பீகார் மாநில அமைச்சராக இருந்தபோதிலும் ஐ. டி. ஐ மெக்கானிக் படித்துள்ள அவருக்கு வேலைக்கு சிபாரிசு செய்ய மறுத்து விட்டாராம். பிழைக்கத் தெரியாத மனிதரோ?!
ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோவில் பசுமாடுகள் இறந்து விட்டனவாம். அற நிலையத்துறை அமைச்சர் மாடுகளை தானம் செய்பவர்கள் பராமரிப்புச் செலவுக்கு நிதி தருவதில்லை என்றாராம். இதைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் திருவாளர் புரளியார் ஒரு கதையைக் கிளப்பி விட்டிருக்கிறார். ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை நுழைய விடாமல் ஜெயலலிதா தடுத்ததால்தான் இறைவன் சீற்றத்தால் இந்த இழப்பு நேர்ந்திருக்கிறது என்கிறார். அவரவர்கள் கொளுத்திப் போட வேண்டியதுதானே? காசா? பணமா?
ஜெயலலிதா ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு விஜயம் செய்து விட்டார். “ இது என் தாய் வீடு. எப்ப வேணாலும் வருவேன், போவேன்” என்று தாமே தம் தலையில் அட்சதையைப் போட்டுக் கொண்டு விட்டார். “இருபது வருஷத்துக்கு அப்புறம் இப்போதுதானே முதல் முறையாக வருகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “யார் சொன்னது?” என்று சீறிப் பாய்கிறார். “பதினோரு வருஷத்துக்கு முன் ஒரு தடவை வந்திருக்கிறேனாக்கும்!” அம்மையார் இப்போது கலைஞரை விட கேப்டனுக்குத்தான் அதிகம் பயப்படுவது போல் தெரிகிறது. விளைவாக, எம்.ஜி.ஆர். நாமம் எங்கும் முழங்குகிறது!
“