அரசியல் அலசல்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள், மும்பை குண்டு வெடிப்பு நடந்த நாள் என்று தீவிரவாதிகளுக்கு நினைவிருக்குமோ இருக்காதோ, நமது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நினைவுபடுத்தி விடுகிறார்கள். அன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என்று அப்போது மட்டும் ஒன்று விடாமல் ரயில், பஸ், விமானம் என்று தீவிர சோதனை, மெட்டல் டிடெக்டர் இத்யாதி, அடுத்த நாளிலிருந்து வழக்கம்போல் ‘கொர்..ர்’தான்! அப்படியென்ன தீவிரவாதிகள் மாங்காய் மடையர்களா? இவர்கள் எதிர்பார்க்கும் நாளில் குண்டுகளை வெடிக்கச் செய்ய! இந்தச் சோதனைகளையெல்லாம் விளம்பரமில்லாமல் செய்து மக்களையாவது பீதியடையாமல் இருக்கச் செய்யலாமே!

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அப்போது தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர் நானக்சந்தின் மனைவி விமலாதேவி தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதாக அரசு கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று வருந்தினார் (ஆறு வருஷம்தானே ஆகிறது? அதற்குள் என்ன அவசரம்?). தங்களது குறைகளைத் தீர்க்காமல் இது போன்ற அஞ்சலிகள் தேவையில்லை என்று கூறினார். தர்மசங்கடத்தில் மன்மோகன் நெளிய, உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டில் இன்னும் ஒருவருஷத்தில் நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அரசை எதிர்ப்பதென்றால், ‘தைய தக்க’ என்று குதிக்கும் இடது சாரிகளும், பா.ஜ.க.வும் இதைக் குறித்து இதுவரை பார்லிமென்டில் வாயையாவது திறந்திருக்கிறார்களா?

கார்கில் போரில் இறந்தவர்களுக்காக மக்கள் அனுப்பிய நிதியெல்லாம் அவர்கள் குடும்பத்தைச் சென்றடைந்திருக்கும் என்று தவறுதலாக நினைத்து விடாதீர்கள். செஞ்சிலுவைச் சங்கத்திடம் அளிக்கப்பட்ட கார்கில் நிதி அவர்க்ள் குடும்பத்தாருக்குக் கார் வாங்கவும் ஜில் ஏ.சி. வாங்கவும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மறுமலர்ச்சி இந்தியா எனும் அரசு சாரா சமூக அமைப்பு பெற்ற தகவல்கள் இவை.
கல்லறைகளில் கூடச் சில்லறை சேர்க்கும் கும்பல் என்றுதான் மாறும்?

***

பெரியார் பிராமணர் ஓட்டலிலிருந்து எதுவும் வங்கக் கூடாது என்று கூறியதற்காக நாய்க்குட்டிக்குப் பால் கூட வாங்காமல் வரும் அளவுக்கு பிடிவாதமாகக் கொள்கையைக் காப்பாற்றியவர் வீரமணி என்கிறபோது புளகாங்கிதம் அடைந்தேன் – கலைஞர் கருணாநிதி

ஜாதி ஒழிப்பு என்றால் இதுதானோ? ஹிட்லர் யூதர்கள் மீது காட்டிய வெறுப்புக்கும், தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியிடம் வெள்ளையர்கள் காட்டிய இன வெறிக்கும், இவர்களது ஒரு குறிப்பிட்ட ஜாதி துவேஷத்திற்கும் அதிகம் ஒன்றும் வித்தியாசமில்லை என்றே தோன்றுகிறது. இப்படி வாய்ச் சவடால் விடும் இவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி?

கலைஞரின் பெயர் கொண்ட டி.வி.யில் ஒரு காட்சி, தன் கணவனை மீட்பதற்காக மனைவி ஒரே காட்சியில்
கோவிலில் அம்மனுக்கு முட்டி போட்டு நடந்து அங்கப் பிரதட்சினம் செய்து, மண்சோறு சாப்பிட்டு, கையில்
கற்பூரத்தை எரித்து அத்தனை பகுத்தறிவான செயல்களையும் செய்கிறார்.

இது பற்றி மற்றவர்கள் கருத்து என்ன? சோ சொல்கிறார்:

பெரியாரின் நாயைப் பட்டினி போட்ட வீரமணி நல்ல வேளை, தன் விஷயத்தில் கொள்கைப் பிடிப்பு எதையும்
காட்டவில்லை, பிராமணப் பெண்மணி ஜெயலலிதாவையும், அவரது ஆட்சியையும் ஆதரித்தார்; இத்தனைக்கும்
பிராமணர் வாஜ்பாய் ஆட்சி அமைய உதவியாக ஜெயலலிதா இருந்தபோதும் அவரைப் புகழ்ந்து தள்ளினார் (‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் அளித்ததும் இவர்தான் – நாம்). கொள்கை நாய்க்கு மட்டும்தான்.

ஈ.வே.ரா.வின் சொத்து முழுதும் ஈ.வே.ரா.விற்குக் கிடைக்கும்படி வாதாடி வெற்றி பெற்றுத் தந்தவர் ராஜகோபாலாச்சாரி என்ற பிராமணர். கருணாதியின் மருத்துவராக இருந்த நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தியும் அந்தணர்தான். நாயை மட்டும் பட்டினிபோட்டது நாயமா?

அர்த்தமும் அனர்த்தமும்

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளராக அத்வானி தேர்வு செய்யப்பட்டுள்ளார் – செய்தி

அத்வானியின் ஜாதகத்தில் அவருக்குப் பிரதமராகும் ராசியே இல்லை – லாலுபிரசாத்

அரசியல் அண்ணாசாமி: உங்க ஜாதகத்தைப் பாத்தீங்களா?

இந்தியாவின் பல நகரங்கள் தினம் ஆறு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிப்பது சரத் குமாருக்குத் தெரியுமா? குளிர்சாதன வசதிகள், வாஷிங் மெஷின், கிரைண்டர், ஃபேன் போன்ற வசதிகள் எல்லாம் சரத் குமார் போன்றவர்களுக்கே தேவைப் படுகின்றன – மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி

அரசியல் அண்ணாசாமி: அட, உங்க வீட்டிலெல்லாம் ஃபேன் கூட இல்லையா?

வரும் 19ம் தேதி என் பிறந்த நாள். கட்சியினரும், முன்னணித் தலைவர்களும் கூட்டணிக் கட்சி நண்பர்களும் என்னை வாழ்த்த வர வேண்டாம் – நிதித்துறை அமைச்சர் அன்பழகன்!

(‘என் நிலைமை எப்படியாச்சு பாத்தீங்களா? என் பிறந்த நாளை நானே சொல்ல வேண்டியிருக்கு! ஹூம்..
இதுக்கப்பறமாவது யாரவது வந்து வாழ்த்துச் சொல்லிப் பரிசு கொடுங்கப்பா!’ என்பாரோ மனதுக்குள்?)

தமிழகத்தில் 40 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மற்ற கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக தியாக காங்கிரஸ் உள்ளது – மத்திய அமைச்சர் வாசன்

அரசியல் அண்ணாசாமி: அப்படியே புல்லரிக்குதுங்க, தியாகம் பண்ணாம ஒரு தரம் நீங்களே தனியா நின்னு காமராஜர் ஆட்சியைக் கொண்டு வாங்களேன்!

இனிமேல் யாரையும் கோட்டைக்கு அனுப்புவதில்லை. அடுத்த தடவை நாமே போய் ஆள்வதென முடிவெடுத்திருக்கிறோம் – பா.ம.க. தலைவர் ராமதாஸ்

அரசியல் அண்ணாசாமி: அப்படியா! முடிவெடுத்திட்டீங்களா? நாங்க என்னவோ நாங்கெல்லாம் ஓட்டுப் போட்டுத்தான் ஆட்சி
அமைக்கிறாங்கன்னு தப்பாப் புரிஞ்சிட்டிருக்கோம்.

எனது பதினைந்தாவது வயதில் இளைஞரணியில் சேர்ந்தேன் – இப்போது எனக்கு வயது 55. இன்னும் இளைஞர் அணித் தலைவராக இருக்கிறேன் – மு.க. ஸ்டாலின்

அரசியல் அண்ணாசாமி: கவலைப்படாதீங்க – 80 வயதானாலும் தொடர்ந்து இளைஞர் அணித் தலைவரா இருப்பீங்க!

அணு சக்தி ஒப்பந்தம் பற்றி ஷரத் பவார் நச்சென்று சொன்ன வாசகம்:  "Left is right."

***

தலித் மக்களுக்காகப் போராடுவதாகக் காட்டிக்கொள்ளும் அரசியல் தலைவர்களுக்கிடையே இந்த மனிதர்
தனித்து நின்று அவர்கள் முன்னேற்றத்துக்கு நிஜமாகவே பாடுபடுகிறார்.

இவர் காட்டில் சேகரித்த சுள்ளிகளை விற்று, அந்தப் பணத்தில் படித்து, சாதித்து, அமெரிக்காவில் நிறுவனம் நடத்துபவர், தமிழகத்தைச் சேர்ந்தவர், பெயர் மைக்கேல் தேவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கடும் பண நெருக்கடிகளுக்கிடையே படிப்பில் சாதனை புரிந்து, தனியாக சுகாதார அமைப்பு ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் அமெரிக்காவுக்குப் பறந்தவர், அங்கு பல மருத்துவ நிறுவனங்களுக்கு நர்சுகள், தெரபிஸ்டுகள் போல் பல சுகாதாரப் பணியாளர்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் அமைத்தார். இது வரை 15 தலித்துகளை அனுப்பியுள்ள இவர் இன்னும் 35 தலித்துகளை விரைவில் அமெரிக்காவில் பணி செய்ய அனுப்பப்போகிறாராம்.

ஒரு சின்னக் காரியத்துக்கெல்லாம் கூடத் தம்பட்டம் அடித்துக் கொள்ளுபவர்களுக்கிடையே தன்பாட்டுக்கு ஓசையில்லாமல் சாதித்துக் காட்டிய இவரது பணி வளர வாழ்த்துக்கள்.

About The Author