அரசு விழாக்களில் மாலைகளுக்கு பதிலாகப் புத்தகங்களைப் பரிசளிக்க வேண்டும் எனக் கலைஞர் கருணாநிதி பணித்திருக்கிறாரம் அவர் சொன்னதன் குறிப்பு புரியாதா தொண்டர்களுக்கு?. இப்போது பரிசாகக் கொடுக்கப்படும் புத்தகங்கள் கலைஞரின் குறளோவியம், மற்றும் தொல்காப்பியம் தானாம். பரிசளிக்கப்படும் பல புத்தகங்கள் யருக்கும் தெரியாத விற்காத புத்தகங்களாம். வாங்குபவர்கள் படிக்கப்போகிறார்களா என்ன? விற்பனையை அதிகரிக்க இப்படியும் ஒரு உத்தி!
நமது நிருபரின் கற்பனை உரையாடல் அல்ல.. பாராளுமன்றத்தில் நடந்தது இது.
யஷ்வந்த் சின்ஹா: வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணி, ரஷ்யா போனாங்களே, அங்கே தலைவர் புட்டினைப் பார்க்கவே முடியல்லியே. ஹெ, ஹே..
மன்மோஹன்சிங்: அங்கே மட்டும் என்ன வாழ்ந்தது? 1991லே நீங்க மந்திரியா இருந்தபோது ஜப்பான் போனீங்களே, அப்ப அந்த ஊர் நிதி மந்திரியைப் பார்க்க முடிந்ததா? சொல்ல வந்துட்டீங்க..
யஷ்வந்த் சின்ஹா: மன்மோஹன் சிங், நான் நிதி மந்திரியா இருந்த போது நீங்க என் கீழ ஆலோசகரா இருந்தீங்க, ஞாபகம் இல்லையா?
லாலு பிரசாத் (குறுக்கிட்டு): சின்ஹா, பீஹார் முதல் மந்திரி கர்ப்பூரி தாகுர் கிட்ட நீங்க அசிஸ்டண்டா இருந்ததை மறந்துட்டிங்களா?
யஷ்வந்த் சின்ஹா: ஆமாமாம், அப்பல்லாம் ஏதாவது சிபாரிசை எடுத்துக்கிட்டு நீங்க என் ரூமுக்குத்தானே வருவீங்க?
(விவாதம் தொடர்கிறது. நாம்தான் நிறுத்தி விட்டோம்.)
இப்படிக் கீழ்வெட்டு வெட்டுவது, எல்லா மன்றங்களிலும் சகஜம்தான். ஆனால், சில மேல் நாடுகளில் இவை புத்திசாலித்தனமாகவே கையாளப்பட்டிருக்கின்றன.
வின்ஸ்டன் சர்ச்சிலிடம் எதிர்க் கட்சித் தலைவி: நான் உங்கள் மனைவியாக இருந்தால், உங்களுக்கு விஷம் கொடுத்திருப்பேன்.
சர்ச்சில்: நான் உங்கள் கணவனாக இருந்தால் அதைத் தயங்காமல் குடித்திருப்பேன்.
எதிர்க்கட்சித் தலைவர், அதிபர் அப்ரஹம் லிங்கனிடம்: உங்கள் அப்பா தைத்துத் தந்த செருப்பைத்தான் நான் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
லிங்கன்: அவர் தைத்துத் தந்த செருப்பு இவ்வளவு வருஷங்கள் உழைக்கிறது பார்த்தீர்களா? அதுதான் அவரது தொழில் திறமை. இப்பவும் ஏதாவது பழுது ஏற்பட்டால் சொல்லுங்கள், நான் சரி பண்ணித் தருகிறேன்.
பெற்றவரைக் கைவிட்டால் மாமியார் வீடு
வயதான காலத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்ற மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் நாட்டாளுமன்றம் ராஜ்ய சபாவில் அணமையில் நிறை வேற்றப்பட்டுள்ள்து. இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்பது இந்த சட்டத்தின் சிறப்பம்சம்.
விஜயகாந்த் பாணியில் ஒரு புள்ளி விவரம்
தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் கடைகள் 6700. தினசரி விற்பனை ஆகும் அயல் நாட்டு மதுபானம் 90 ஆயிரம் பெட்டி. அயல்நாட்டு பீர் 45 ஆயிரம் பெட்டி. விற்பனை 25 கோடி ரூபாய். ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனை 1 கோடியே 10 லட்சம் பெட்டிகள். விடுமுறை நாட்களில் குடிப்பவர்கள் 60 லட்சம் பேர். இந்தக் கடைகளில் நாள் ஒன்றுக்கு விற்பனை 25 கோடி ரூபாய். தீபாவளி அன்று விற்பனையான மதுபானத்தின் மதிப்பு 60 கோடி ரூபாய். 2006-2007ல் மதுபான விற்பனை 8900 கோடி. இதன் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள வருவாய் 7450 கோடி ரூபாய். அதற்கு முந்தின ஆண்டு 7338 கோடி ரூபாய்தான். 2008-2009க்கான இலக்கு 10000 கோடி ரூபாய். ‘குடி உயரக் கோன் உயரும்’ என்றுஇதைத்தான் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது!
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நமது அரசியல் சட்டத்தில், அடிப்படை உரிமைகளை விடப் புனிதமான வழிகாட்டி நெறிமுறை பூரண மது விலக்கு.
பின் குறிப்பு: கிலோவுக்கு 2 ரூபாய் அரிசித் திட்டம் விவசாயக் கூலிகளின் குடிப்பழக்கத்தை ஊக்குவித்துள்ளது. இப்படி ஸேம் ஸைட் கோல் போட்டவர், ஆற்காடு வீராஸ்வாமி.
சொன்னதும் சொல்லாததும்
நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம். – காங்கிரஸ் தலைவர் சோனியா
ஆனால் ஒன்றுமே சொல்லமாட்டோம்.
முதல்வர் கருணாநிதி காலையிலேயேதான் எல்லாப் பத்திரிகைகளையும் படித்து விடுவார். அப்படித்தான் பேப்பரைப் படித்துவிட்டு, என்னப்பா, மின் தடையாமே, உடனே நடவடிக்கை எடு" என்று என்னிடம் சொன்னார். – ஆற்காடு வீராசாமி
அப்போ மின் தடை இருப்பதெல்லாம் பேப்பரைப் பார்த்துத்தான் உங்களுக்குத் தெரியுமா? பெரிய பெரிய தமிழ்நாட்டுப் பிரச்சினைகளெல்லாம் எப்படித் தீர்க்கப்படுகின்றன என்று தெரிகிறதா?
கருணாநிதியை நான் பாராட்டினேன் என்று சொல்வதைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. கொலைப்பழி சுமத்தி என்னைக் கட்சியிலிருந்து விரட்டிய கருணாநிதியை நான் எப்படிப் பாராட்டுவேன்? – ம.தி.மு.க. தலைவர் வை.கோ.
சந்தேகம் வருவது சகஜம் தானே! பொடா சட்டத்தில உங்களை உள்ளே தள்ளிய அரக்கி ஜெயலலிதா ஆட்சியை அகற்றுவேன்னு சவுண்டு விட்டுட்டு இப்போ அன்னையின் ஆணைக்காக வாய்பொத்தி நிற்கலையா, நிக்கலையா?
மூன்று ஆண்டுகள் தேவகவுடா குடும்பம் தாறுமாறாகச் சொத்து சேர்த்துள்ளது. இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் – பி.ஜே.பி. எடியூரப்பா
இந்த விஷயம் ஏழு நாளில் எங்கள் ஆட்சியை தேவகவுடா கவிழ்த்தபின்புதான் எங்களுக்குத் தெரிந்தது.
எதிர்க்கட்சிகள் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. மேடை நாகரிகம் மிக முக்கியம். – அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
நாங்கள் எதிர்க்கட்சி ஆனால் மட்டும்தான் அப்படிப் பேசலாம்.
“