பொதுவாகவே எண்ணெய் வளம் கொழிப்பவை வளைகுடா நாடுகள். மத்திய கிழக்கு நாடுகள் என அழைக்கப்படும் இந்த அரபு நாடுகள், தமது பொருளாதாரத்துக்கு முழுக்க முழுக்கத் தம்மிடமுள்ள எண்ணெய் வளத்தையே நம்பியிருக்கின்றன. இவர்களிடமுள்ள எண்ணெய் வளந்தான் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசுகள் இவர்களிடம் நட்புறவு பாராட்டி, இவர்களுடன் சுமுகமான உறவைக் கடைப்பிடிக்கக் காரணம். பெரும்பான்மையான ஆசிய நாட்டவர்களுக்குக் காலங் காலமாக வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் நாடுகளாகவும் இந்த வளைகுடா நாடுகள் திகழ்ந்து வருகின்றன.
இந்த வளைகுடா நாடுகளில் மிகச் சிறியதாய்க் கருதப்படும் கட்டார், இன்றைய காலக்கட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தபடி இருக்கின்றது. காரணம், இங்கு ஏற்பட்டுள்ள பெரியதொரு அரசியல் மாற்றந்தான்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தாலும், ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இந்த நாட்டின் முடிக்குரிய இளவரசரான ஷேக் ரமின் பின் ஹமாட் அல்தானி அவரது தந்தையிடமிருந்த ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
உள்நாட்டுப் புரட்சியா? அல்லது ஆட்சியிலிருந்தவர் இறந்து விட்டாரா?… அப்படி எதுவுமே இல்லை. தந்தையிடமிருந்து தனயனுக்கு ஆட்சி கைமாறியது பற்றி அலுவல்ரீதியாக அரசு எந்த விளக்கமும் இதுவரை கொடுக்காவிட்டாலும், இதுவரை ஆட்சியிலிருந்த ஷேக் ரமின் நோய்வாய்ப்பட்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இப்படியான ஆட்சிக் கைமாற்றம், அரபு நாடுகளிடையே இப்பொழுதுதான் முதல் தடவையாக நடைபெற்றிருக்கின்றது. இது முடிவின் ஆரம்பமா? அல்லது ஆரம்பத்தின் முடிவா? காலந்தான் பதில் சொல்லும்.
ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றுள்ள ஷேக் ரமின், பிரித்தானியாவில் கல்வி கற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடனடியாகத் தற்போதைய அரசியல் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் புதிய அதிபர் புகுத்தமாட்டார் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள். இன்று, இந்தச் சிறிய நாடான கட்டார் அரசியல்ரீதியாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியுள்ளது. மத்திய கிழக்கில் அரசியல் தலையீடுகளில், ஒரு பலம் வாய்ந்த நாடாக இது திகழ்ந்து வருகின்றது. கடந்த ஆண்டு லிபியாவின் புரட்சிப் படைகளுக்குக் கைகொடுத்த கட்டார், இப்பொழுது சிரிய நாட்டின் புரட்சிப் படைகளுக்கு உதவி வருகின்றது. வளைகுடா நாடுகளின் வேறு அமைப்புகளுக்கும் நேசக்கரம் நீட்டி வருகின்றது.
அளவில் சிறிதாக இருந்தாலும், நடவடிக்கைகளால் உலகின் பெரும் கவனத்துக்கு ஆளாகி வரும் இந்த வளைகுடா நாட்டைப் பற்றிச் சற்றே விரிவாக அறிந்து கொள்வோமே!
மேற்கு ஆசிய நாடான கட்டார், தனது தெற்குப் புறமாக சவுதி அரேபியாவை எல்லை நாடாகக் கொண்டிருக்கின்றது. இதனுடைய ஒரேயொரு எல்லை நாடு இதுதான். கட்டாருக்கு மிக அண்மையிலுள்ள இன்னொரு வளைகுடா நாடு பாரெயின். முத்துக் குளிப்பதுதான் காலங்காலமாகக் கட்டாருக்குச் சோறு போட்டு வந்த தொழில். வளைகுடா நாடுகளில் மிகவும் வறிய நாடாக ஒரு காலத்தில் இருந்ததும் இதுதான்! 1971 வரை பிரித்தானிய ஆட்சியின் கீழ்தான் இயங்கி வந்தது. 1971இல் இந்த நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்ட பின்னர், நாட்டின் பொருளாதார நிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. இதனுடைய மண்ணில் கிடைக்கும் இயற்கை வாயு, மசகு எண்ணெய் இந்த நாட்டையும் இன்று ஒரு பணக்கார நாடாக்கி இருக்கின்றது. உலகப் பணக்காரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் நிறுவனம், உலகப் பணக்கார நாடுகளில் இந்தச் சிறிய நாடான கட்டாரை முதலிடத்தில் நிறுத்தியுள்ளது.
இங்குள்ள மக்கள்தொகை மிகவும் குறைவுதான். 2,50,000 பேர் வரையில்தான் இங்கு காணப்படுகின்றார்கள். கட்டார் நாட்டுக் குடிமக்களை விட, வெளிநாட்டவர்கள் தொகை இங்கு அதிகம்! மிக அதிகமாகக் காணப்படும் வெளிநாட்டவர்கள் இந்தியர்கள்தான். இவர்களை விட அரபு நாட்டவர்கள், நேபாளியர்கள், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆகியோரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், நாட்டின் மக்கள்தொகை வெகுவாக அதிகரித்து வருகின்றது. 2012இன் முடிவில் இதன் மக்கள்தொகை 1.83 மில்லியன். முன்னைய ஆண்டை விட 7.5 விழுக்காடு மக்கள்தொகை அதிகரித்துள்ளது.
அரபு நாடுகளின் வழமைபோல இங்கு நிலவி வருவது குடும்ப ஆட்சிதான். 1995இல் ஷேக் ஹமாட் பின் கலீபா அல்தானி இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் தன் தந்தையை வெளியேற்றி விட்டுத் தான் ஆட்சியைப் பிடித்துக் கொண்டார். தந்தை குதூகலமாக சுவிட்சர்லாந்தில் விடுமுறை நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தபோது மகன் இராணுவத்தைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு ஆட்சியையும் பிடித்துக் கொண்டார். இங்கு அரசின் முக்கிய பதவிகளை அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் தமதாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்க அரசுடனான நல்லுறவு, அமெரிக்க இராணுவப் பாதுகாப்பு மையங்களை இவர்கள் மண்ணில் நிறுவும் அளவிற்கு மிக நெருக்கமாக உள்ளது.
இவர் ஆட்சிக்கு வந்த பின்பு நாட்டில் பல பாரிய மாற்றங்கள் புகுத்தப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. பல விடயங்களில் பொதுமக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்கள்.
1995இல் மிகப் புகழ்பெற்ற அல் ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் நிறுவப்பட்டது. மாநகர சபைத் தேர்தல்களில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. 2008இல் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. செயற்கையாக, இவர்களாகவே அமைத்த ஒரு தீவு இங்கிருக்கின்றது. 2010இல், 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ‘உலகக் கால்பந்துக் கோப்பை’ப் போட்டியை நடாத்தக் கட்டார் நாடு தேர்வாகியது. மத்திய கிழக்கில் இப்படியொரு பிரம்மாண்டமான போட்டிக்குத் தேர்வாகும் முதல் அரபு நாடு கட்டார்தான்!
கால்பந்தாட்ட விளையாட்டுப் பிரியர்கள் இந்த நாட்டவர்கள். இங்கு இந்த விளையாட்டு மிகப் பிரபல்யமாக இருப்பதுடன், தமது மண்ணில் நல்லதொரு ஆற்றல் வாய்ந்த அணியை உருவாக்குவதில் இவர்கள் தீவிரம் காட்டுகின்றார்கள். 1981இல், அகில உலகரீதியாக நடாத்தப்பட்ட, முதல் 20 இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில், கட்டார் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது! 2011இல் ஆசியக் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றன. இந்தச் சுற்றுப்போட்டி 11ஆவது தடவையாக இங்கே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. டென்னிஸ் கோப்பைப் போட்டிக்கான உலகளாவிய சுற்றுப் போட்டிகளும் இந்நாட்டின் தலைநகரான டோகாவில் நடைபெற்று வருகின்றன.
ஆனால், இவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கும் நாட்டில் படித்தவர்கள் மிகக் குறைவு! 2012ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புப்படி ஆண்களில் 3.1 விழுக்காட்டினர் மாத்திரமே இங்கு படித்தவர்களாக இருக்கின்றார்கள். பெண்களில் 4.2 விழுக்காட்டினர் கல்வியறிவு உள்ளவர்களாக இருக்கின்றார்கள். படிப்பைப் பொறுத்த வரை, அரபு உலகில் கட்டார் நாடுதான் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இங்கு கல்விக்கான செலவைப் பல்கலைக்கழகம் வரை அரசு ஏற்றுக் கொள்கின்றது.
இங்கே தேவாலயங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டாலும், தேவாலயங்களின் முன் பக்கம் சிலுவைச் சின்னங்கள், ஆலய மணிகள் போன்றன அனுமதிக்கப்படுவதில்லை. அதே நேரம், ஆலயங்களை எழுப்ப அரசு காணிகளை நன்கொடையாக வழங்கி வருகின்றது!
பொதுவாக, அரச மாளிகைகளில் நிகழும் கிளர்ச்சிகள், அதிபரின் மரணம் போன்ற காரணிகளுக்காக மாத்திரமே கைமாறும் அதிபர் பதவி, கட்டார் நாட்டில் முதன்முறையாக இப்படி நடந்திருப்பது, ஏனைய அரபு நாடுகளிலும் இப்படி நிகழலாம் என்பதற்கான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது. முதிர்ந்த வயதிலும் ஆட்சியைக் கைவசம் வைத்துக் கொண்டிராமல், பெருந்தன்மையுடன் இளைய தலைமுறையினருக்கு ஆட்சிப் பொறுப்பைக் கையளிக்கும் முறை ஏனைய வளைகுடா நாடுகளிலும் பரவலாம் என்கிற எதிர்பார்ப்பு முளைவிடத் தொடங்கியிருக்கின்றது.
எப்படியோ, நல்லது நடந்தால், நாளைய பொழுதுகள் இந்நாடுகளை நன்னிலைக்கு இட்டுச் செல்லும்!