அம்மா பேரழகு, அந்த வம்சத்தில் யாருக்குமே இல்லாத உடல்வாகு. கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு சுற்று சுற்றி வந்தால் மின்னல் சுழன்றடிப்பது மாதிரி – அதனழகை விவரிக்க எந்த மொழிக்குத் தகுதி இருக்கிறது? தெருவே அவளுடைய ஆக்ஞைக்குக் கீழ்ப்படிய விரும்பிக் காத்திருப்பது போல் நின்றதில் அதிசயமென்ன? அவளுடைய அழகும் ஆகிர்தியும் கண்களாலேயே உத்திரவிடும் வல்லமையும் இந்த நொடி வரை தொடர்வதன் காரணமென்ன? எல்லா மேன்மைகளும் அவளோடு பிறந்தவை.
இன்னதென்று தெரியவில்லை. உடம்புக்கு முடியலே என்றுகூடச் சொல்லவில்லை. என்னமோ மாதிரி இருக்கு சித்த படுத்துக்கறேன் என்று படுத்தவள்தான். மூன்று வருஷமாய் கூடத்துக் கட்டில் வாசம். முனகல், அவ்வப்போது மனசைப் பிழியும் அழுகை. ஏதோ மனக்கோளாறு. “இந்த வயசிலே பெரிசா வைத்தியம் வேண்டாம். தூக்கத்துக்கு மாத்திரை தரேன் போதும். தொண்ணூறு தாண்டியாச்சில்லையா” என்று டாக்டர் சொல்லி விட்டார். அவர் வாசற்படி தாண்டியிருக்கமாட்டார். “டாக்டருக்கென்ன தெரியும்” என்று மெலிதாகச் சிரித்தாள்.
“அம்மா பட்ட கஷ்டம் கொஞ்சமோ கோகிலம். பாதி எல்லோரும் சொன்னது. மீதி நான் பார்த்தது. ஒரு மனுஷியால் எப்படி ஓயாமல் இப்படி உழைக்க முடியும்? உழைச்சாள். இந்த உடம்பு இந்த சட்டை, இந்தப் படிப்பு இந்த உத்யோகம் இந்த வசதிகள் – அம்மா கொடுத்தது. இப்போ மூணு வருஷமா படுக்கையிலே கிடக்கா. மனசு தாங்கலே. ஆனாலும் பாரேன். கட்டிலில் படுத்துக் கொண்டே ஆட்சி செய்கிறாள் கம்பீரமாய் – ”
கோகிலம் மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். அடிக்கடி இப்படியான வாசகங்கள் பெரும் வதையோ?
ஏழு மாமாங்கம் பார்த்தவளாக்கும்னு பெருமை. வெறும் கோதுமைக் கஞ்சியிலும் வாடாத உடம்பு. நல்ல உசரம். காலம் கூட அவளிடம் வர அஞ்சியது. கோடுகளையும் சுருக்கங்களையும் எழுதிவிட மறந்து போனது. சிவப்பு துளி மாறலே. கன்னக் குழி மாறலே. புன்னகை மாறலே. கண்களின் கூர்மை மாறலே. தும்பைப் பூவாய் இருந்தாலும் அடர்த்தி குறையாத கூந்தல். குரலில் இழையும் மென்மை செம்மையாய் சுருதி கூட்டிய சங்கீதம் மாதிரி.
“ராஜாவை யாரும் கோபிச்சுக்கக் கூடாது. ஒண்ணே ஒண்ணு கறிவேப்பிலை மாதிரி. இந்த வம்சத்திலேயே பொண் வாரிசு இல்லே. சாபமோ. ஐயாறப்பனை வேண்டிண்டேன். நம்பிக்கையா தர்மாம்பாள்னு பேரு கூட வச்சுட்டேன். பட்டுப்பாவாடை சட்டை தச்சுப்போட்டு காதிலே தொங்கட்டான் போட்டு தொடையிலே ஒக்காத்தி வச்சுண்டு லேசாக்கிள்ளி அழவிடணும்னு ஆசை. இவன் பொறந்தான். பொண்கள் நடமாட்டம் இல்லாத வீடு வீடாகுமோ. என்ன பண்ண, பகவான் சித்தம்.”
“ஆறுகட்டு வீடு. எல்லாத்திலேயும் கூட்டம் கொள்ளாது. என்ன சாபமோ. திருஷ்டியோ – பாகப்பிரிவினை கோர்ட், வியாஜ்யம்னு களேபகரம். ரெண்டு கோஷ்டி டவுனுக்குத் தனிக்குடித்தனம். இவ்வளவு பெரிய வீடு ஹோன்னு கிடக்கும். உங்கப்பா நான் நீ…. எனக்கு பயமில்லே. வருத்தமில்லே. நாலு பேரோட கலகலனு வாழ்ந்தவ அதிகாரம் பண்ணினவ வசமா மாட்டிண்டேன்.” அம்மா பேசிக் கொண்டே போவாள். இழப்புகளைப் புன்னகையோடு எதிர்கொள்ள யாரால் முடியும்? சவால்களை விரும்பி ஏற்று கூடுதல் பலம் பெற்று நிமிர்ந்து ஆகாசத்தைத் தொட்டுக் கொண்டு கம்பீரமாய் நிற்க யாரால் முடியும் அம்மாவைத் தவிர!
வெளியிலே தெரியவில்லை என்றாலும் அம்மாவிற்கு தளர்ச்சி வந்துவிட்டது. சித்த உட்காரும்மான்னா கேட்க மாட்டாள். “என் வம்சத்திலே எல்லாரும் தொண்ணூறு தாண்டித்தான் போய்ச் சேர்ந்தார்கள். எனக்கு நூறு. சும்மா வயசாயிட்டுது வயசாயிட்டுதுன்னு பயமுறுத்தாதே.” இந்த வயசிலும் இந்த வசீகரப் புன்னகை.
கோகிலம் வந்த பிறகு அம்மாவின் கைகளைப் பிடுங்கிக் கொண்டாள்.
“நீ பேசாம இரு கோகிலம். என் புள்ளயை எனக்குத்தான் தெரியும். உப்பு தூக்கலா இருக்கணும். காபியிலே சக்கரையைக் கொட்டணும் பானகம் மாதிரி குடிப்பான். நான் குடுத்தாத்தான் திருப்தி. கொஞ்ச நாளைக்கு விடு. அப்புறம் நீ தானே எல்லாம்…”
“அம்மா எனக்குக் கேடயம் மாதிரி கோகிலம். இருபத்தியாறு வருஷமா பொத்திப் பொத்தி வளர்த்தா. இன்னும் என்னைக் கொழந்தையாத்தான் நெனச்சிண்டிருக்கா. கொஞ்சம் அனுசரிச்சுப்போ. இன்னும் எத்தனை காலம் இருக்கப் போறா… அம்மாவுக்குச் சேரவேண்டியதையெல்லாம் அபகரிச்சு நிர்கதியா விட்டப்பவும் மனசு தளரலே. வைராக்யத்தோடு நாலு வீட்லே சமையல் செய்து பாத்திரம் தேச்சி அப்பளம் இட்டு வித்து… யாரால் முடியும்…?”
கோபப்பட்டாளோ, இதில் உடன்பாடில்லை என்று உள்ளுக்குள் ஆவேசப்பட்டாளோ, எதுவானாலும் அது நியாயம். கல்யாணமாகி மூணு மாதமாகியும் புருஷனுக்கு ஒரு காபி கொடுப்பதற்குக் கூட உரிமையில்லையா என்று வேகப்படுதலும் நியாயம்தான். முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியலே.
“இவனுக்கு கடலை உருண்டைன்னா ரொம்பப் பிடிக்கும். மாதவனைக் கடைக்கு அனுப்பிச்சு ஒரு கிலோ கடலை வாங்கி வரச் சொல்லு. வெல்லம் இருக்கோ.”
அதீத நேசம் பல நேரம் இம்சைதான்! அளவு தாண்டிய பேரன்பின் சங்கடங்கள் குறித்துச் சொல்ல என்ன இருக்கிறது?கோகிலத்திற்கும் எனக்கும் பூடகமாய் ஒரு யுத்தம். வாள்களின் சப்தமின்றி, பெருகும் ரத்தமின்றி – ஆனால் வலி மட்டும் அவ்வப்போது வந்து போகிறது.
“இன்னிக்கு பகல் காட்சிக்குப் போகணும். நல்ல பெங்காலி படமாம். ரெண்டு பேரும் சேர்ந்து வெளியிலே போயி ரொம்ப நாளாச்சு. அம்மாவிற்கு சீக்கிரம் ஆகாரம் கொடு. மாத்திரையைக் கொடு தூங்கட்டும். மாதவன் காவல்.
அம்மா மெல்ல புரண்டு படுத்தாள். கண்களைக் கசக்கிக் கொண்டாள். ‘தர்மாம்பா’ என கிழக்கு நோக்கி கைகளை உயர்த்தினாள். “கோகிலம் இன்னிக்கு வெள்ளிக்கிழமை. அம்பாள்ட்ட வேண்டிண்டேன். என் குடும்பத்த சுபிட்சமா வச்சிருக்காளே. பூஜை ரூமிலே உட்கார்ந்து லலிதா சகஸ்ரநாமம் சொல்லு. ஒரு கரண்டி பாயசம் நைவேத்யத்திற்கு.” அவள் சொல்லுக்கு மறுப்பேது. மறத்தல் சாத்தியமோ. மறுப்பது இயற்கைக்கு முரண். வழக்கத்திற்கு மாறானது. “கோகிலம் சினிமாவுக்கு இன்னொரு நாள் போகலாம்.”கவலை ரேகைகளை அழித்துக் கொண்டு கோகிலம் உள்ளே போனதில் எந்த மாற்றமும் தெரியவில்லை. பழகிட்டாளோ! நியாயம் உணர்ந்தாளோ!
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி, செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள் இன்னும் அவ்வப்போது திடுமென்று வந்து நிற்கும் விசேஷங்களில் அம்மா முகத்தில் தனி தேஜஸ்… “மடி, ஆசாரம், பூஜை, உபாசனை இதிலேதான் நம்ம சௌக்கியமே இருக்கு. கோகிலம் எங்கிட்டேயே பக்கத்திலே படுத்துக்க.”
சிலநேரம், மௌனம் பெரிய சித்ரவதைதான்.
சந்திரனின் சோம்பலான கிரணங்கள், பொலிவிழந்த வானப்பரப்பு, கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள், உற்பதம் நிகழப்போவது மாதிரியான சங்கேதங்கள். அம்மாவிற்கு ஏதும் நேர்ந்திடுமோ. நேர்வதும் நல்லபடியாக நிம்மதியாக அமைதியாக நேர வேண்டும். மனசுக்குள் ஏதோ குறுகுறுத்தது.
படுக்கையில்தான் வாசம் என்றாலும் வீட்டைச் சுற்றிச்சுற்றி மூலை முடுக்குகளிலெல்லாம் அவள் வியாபித்து நடமாடுவது மாதிரி இருந்தது. அவளறியாமல் இங்கே எந்த அசைவும் சாத்தியமில்லை என்கிற மாதிரி! –
அம்மாவிற்கு குரல் தேன். ‘அகில சராசர… ஜனனி நாராயணீ….’ என்று மேல் ஸ்தாயியில் பாடுவாள். கோகிலத்திற்குக் கரகரத்த குரல். பெயரில்தான் கோகிலம் என்ற அம்மாவின் கேலி வேறு! ஓங்கி நிற்கும் அம்மாவின் குரலோடு இழைய முடியாமல் ஒரு கட்டத்தில் மௌனமாகிவிடுவாள் இவள்.
“குரல் இருக்கோ இல்லையோ, மனசிருந்தா உருகிப் பாடலாம், சங்கீதம் கூட ஒரு உபாசனைதான், எல்லாம் உன் புருஷனுக்காகத்தான். குழந்தையா இருக்கறச்சே நோஞ்சானா இருப்பான். டாக்டர்ண்ட தூக்கிண்டு போகாத நாளே கெடையாது. ஒரு தப்படி நடந்தா மூச்சு வாங்கும். முழி ரெண்டும் துருத்திண்டிருக்கும். சத்யநாராயண விரதம் இருந்தேன். இப்பபாரு ராஜா மாதிரி என் கண்ணே படும் போல… விரதத்திற்கு மிஞ்சிய மருந்துண்டோ…”
பரிசுத்தமான வானத்தில் பறக்கும் தேவதையாய் சத்தியத்தின் பேருருவாய் நீரில் மேலும் மேலும் குளிர்ச்சியுடையவளாய்… அம்மாவின் இருப்பு உன்னதமான சிகரத்தின் உச்சியன்றோ!
கோகிலத்தின் பார்வை வானத்தில் துழாவியது.
“ராஜா உனக்கு நாழியாச்சில்லே. கிளம்பு. உத்யோகத்திலே சரியா இருக்கணும். நேரத்திற்குப் போகணும். படியளக்கிறவனுக்கு விசுவாசமாய் இருக்கணும். கோகிலம் எங்கே போகப் போறாள். மிச்சத்த சாயங்காலமா பேசிக்கோ.”
சில ஆக்ஞைகளுக்குக் கேள்விகளற்று கீழ்ப்படிதல்தான் மேன்மை, நேர்மை.
பாசத்துக்கும் அன்புக்கும் ஓர் எல்லை இருக்கணும். தாண்டினா கொன்றுபோடும், கூறுபோட்டுவிடும் என்று வியாக்யானம் செய்வாள் இவள். அதிக படிப்பு விவாதத்தைக் கொடுக்கும். தர்க்கத்தைக் கொடுக்கும். தர்க்கமும் விவாதமும் முடிவில் தெளிவைத் தரும் என்பது சரியல்ல. அவற்றின் முடிவு மனஸ்தாபம் – குழப்பம். புரியுமோ கோகிலம்?
கோகிலத்திடம் எந்தவித சலனமும் இல்லை எப்போதும்போல்.
“என்னமோ பண்றதுடா. உடம்பு நெல கொள்ளலே. உங்களை விட்டுட்டுப் போயிடுவேனோ. போய்ச் சேர வேண்டியதுதான். உங்களை யார் பாத்துப்பா… கூடத்திலே என்கிட்டேயே படுத்துக்கோ கோகிலம். காலக் கொடையறது கால சித்த அமுக்கிவிடுடா…” நிற்காமல் பல வருஷங்களாக அசுரத்தனமாக அலைந்த கால்கள்… “ராஜா எங்கேயும் போயிடாதே” என்ற புலம்பல். “உன் மடியிலே தல வச்சு படுத்துக்கணும் போலிருக்கு. பிரகாசமாய் விளக்கைப் போடேன்.” அம்மாவின் பார்வை நாலா பக்கமும் துழாவியது.
“ஒண்ணுமில்லேம்மா பயப்படாதே. ராத்திரி முழுக்க உனக்குத் தூக்கமில்லே. அதான் படுத்தறது.” தொண்ணூற்று ஆறு வயசிலே மரண பயம் சரியா, நியாயமா, அம்மாவிடம் அது இருந்தது புதிர்.கோகிலம் புஸ்தகம் படித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு எழுத்தையும், கண்களால் பிடுங்கி மனதுக்குள் போட்டுக் கொள்வதைப் போல -அம்மா இரண்டு தடவை தண்ணீர் கேட்டாள். “பக்கத்திலேயே இரு போயிடாதே கோகிலம்…” புத்தகத்திலிருந்து கண்களை எடுக்கவில்லை. போக வேண்டிய வயதில் போய்ச் சேர யாருக்கு மனசிருக்கிறத? இன்னும் இன்னும் ஏதோ தனக்கென பூமியில் இருக்கிற மாதிரி. இரவு முழுதும் கண் விழித்ததில் தலை வலித்தது. எங்கேயோ முரண்படுகிறது. இயற்கையின் முரண் நல் நிமித்தமன்று.
“பதினாறு பேர். நான் ஒண்டிக்காரி. ஆளாளுக்கு அதிகாரம். மூணு விறகு அடுப்பிலே சமையல். துளி அலுப்பு துளி சலிப்பு இருக்குமோ?. கல்யாணப் பந்தி மாதிரி கூடத்திலே இரண்டு வரிசை. களேபகரம். அப்பளத்தைக் கொண்டா ரசம் கொண்டா. துளி உப்பு கொண்டா… எல்லாத்தையும் சந்தோஷமாச் செஞ்சேன்….” அம்மா ரொம்பவே வருத்திக் கொண்டிருந்திருக்கிறாள். கடந்த காலம் புலம்பலாய் வரும் சோகம். “ஆறுபடி அரிசிடா. இரண்டு படி உளுந்து. கல்லுரலில் அரைக்கணும்… இட்லியிலே துளி ருசி கொறஞ்சா அப்படியே ஒதுக்கிட்டுப் போயிடும் கும்பல்…”
அம்மா படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்தாள். முகத்தில் தெளிவு. “ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேனாடா. அப்படி இருந்துதடா உடம்பு, கோகிலம். இப்படி வந்து உட்காரு. இதப்படிச்சுக்காட்டு. கண்ணை வலிக்கிறது. கண்ணாடி போட்டுக்கணும். நீ படி… அவர் பேரென்ன…பழுவேட்டரையன். குதிரையிலே வருவானே… என்ன தேவன்… வந்தியத் தேவன்… கல்கி நன்னாத்தாண்டி எழுதியிருக்கான். கிருஷ்ணமூர்த்தி ஒரு விதத்திலே எங்க அம்மா வழியிலே உறவுதான். கிச்சான்னு கூப்பிடுவோம். டிராயரைக்கூட சரியாப் போட்டுக்கத் தெரியாது. மூக்கொழுகி சட்டையிலே வழியும். மூணாம் கிளாஸ் வரை எங்க ஊர்லேதான் படிச்சான். சரி எங்கே விட்டே… குதிரை வேகமாகப் போறது… அப்புறம்… மணி பன்னிரெண்டா ஒண்ணா…”இவளுக்குத் தூக்கம் சுழற்றும். ஒரு கட்டத்தில் “பாக்கிய நாளைக்குப் படிச்சுக் காட்டலாம். இப்படியே படுத்துக்கோ நாளைக்கு அமாவாசை. சீக்கிரம் எழுந்திருக்கணும்.”
இருட்டுக்குள் மெல்லிய ரேகைகள். குறுக்கும் நெடுக்குமாய் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு, தினம் தினம் இந்த நிகழ்வு. எங்கே கோளாறு? இந்தப் புதிர் எப்போது விலகும். விடுபடும்?.
எண்ணெய்க் குளியல் – பொலபொலவென்ற கூந்தல். இவளின் தூக்கலான அழகே மாநிறம்தான். பழைய புடவையைச் சுற்றிக் கொண்டு தலை காயவைத்துக் கொண்டிருக்கும்போது கோகிலம் புதிதாகத் தெரிந்தாள். மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவரில் ஒரு தேவதை உட்கார்ந்திருந்தாற்போல் என்ன அழகு. புதிய அழகு. தூரத்தில் மரவட்டையாய் ரயில். தோட்டத்துக் கொடி மல்லிகை மேல்மாடி வரை வந்து ‘பறிச்சுக்கோ’ என்று ஏராளமான பூக்களோடு சிரித்துக் கொண்டிருந்தது. மார்பில் கன்னத்தை இழைத்துக் கொண்டிருந்தாள். இளஞ் சூரியனின் இதமான வெப்பம். மனதைக் கிறங்கடிக்கும் மணம். அந்த க்ஷணம் நிஜமானது. நித்யமானது. முனகல் வித்யாசமாக இருந்தது. மூர்க்கமாக முத்தமிட்டாள் நூறு தடவை. மேலே சாய்ந்து கொண்டாள். “என்னங்க” என்று சம்பந்தமில்லாமல் குழறினாள்.
“ராஜா எங்கே போயிட்டே. கோகிலத்தையும் காணும்?”. கீழே தொடர் இருமல். அப்படியே அவளை விட்டுவிட்டு விடுவிடுவென கீழே இறங்கினான். இவளும் கூடவே!
ஹேய்… என்று ஒரு அணில் இவர்களைத் தாண்டிக் குதித்துக் கொண்டு ஓடியது.
“சும்மா சும்மா தொந்தரவு கொடுக்கறேனோ கண்ணு. ஒடம்பு வேர்த்துக் கொட்டியது. நெஞ்ச அடைக்கிற மாதிரி இருந்தது…. எங்கே போயிட்டேள். பயமா இருக்குடா…” அம்மாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. “இன்னிக்கு லீவு போட்டுடேன் ராஜா….”
அம்மாவிற்கு படுக்கையே வியாதி. மனசு ஒடிஞ்சு போயிருக்கு. ஓடி ஓடி உழன்றவள்… ஒரு பெரிய தேரையே தனியாய் கட்டி இழுத்தவளுக்கு இது பிரச்சினைதான் –
“என்னங்க அம்மாவிற்கு மனசிலே ஏதோ தோண்றது. அதான் சொல்ல முடியாம அல்லாடறாள். அம்மா ஒரு வாய் காபி சாப்பிடுங்க தெம்பாய் இருக்கும்.”
“கோகிலம் பக்கத்திலே உட்காரு”. தலையை வாஞ்சையாகத் தடவி விட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவின் முகம் வெளிறினாற் போலிருந்தது. கொள்ளையாய்க் குடியிருந்த அழகு மட்டும் அப்படியே. கம்பீரமும் தூக்கலாய்….
“கோகிலம் இவனோட அப்பா சாகும்போது இருபத்தி நாலு. எனக்கு இருவது. இவன் மூணு மாசக் கைக்குழந்தை. ஆச்சு எழுபத்தி நாலு வருஷம். என் கணக்கு சரியோ…”
“இப்ப எதுக்கும்மா இதெல்லாம். தூங்கு…”
“எனக்கு சாட்டை மாதிரி முடி. நிகுநிகுனு உடம்பு. உன்னப் பொத்திக் காப்பாத்தறதே பெரிய வேலைடி… நம்ம வம்சத்திலேயே இந்த உடம்புவாகு இல்லை என்பாள் பெரியம்மா. என்ன பண்றது அவர் நட்ட நடுவிலே விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டார்.”
“அம்மா ரொம்பப் பேசற… பாக்கிய நாளைக்குச் சொல்லு…”
“அவர் போயிட்டா நானும் கூடப் போயிடணுமோ. எவ்வளவு புழுக்கம். நெருப்பு மாதிரி உடம்பு எரியும். வாளிவாளியா கிணற்றுத் தண்ணிய மொண்டு மொண்டு ஊத்திப்பேன். பாதி ராத்திரியிலே என்னடி குளியல்னு சண்டைக்கு வருவா. என்னோட மனசு ஆருக்குப் புரிஞ்சுது. எத்தனை யுகம் இப்படி வெந்து சாகணும். கணக்கு தெரிலே. நானும் மனுஷிதானே. மனசக் கருக்கிண்டேன். உடம்ப வதச்சுண்டேன். உனக்கு எதுவும் கிடையாதுன்னு அப்பப்ப ரெண்டு தட்டு. இப்படி யுத்தம் பண்ணின்டே காலத்தத் தள்ளினேன். எனக்கு எப்படிடீ இந்த ஈன புத்தி, குரூர மனசு வந்தது. தெரிஞ்சா தெரியாமலா. ஏழு ஜென்மத்திற்கும் தீருமோ பாபம்..”.
திருத்தமான அம்மாவின் சொற்களில் தெரிவதென்ன. பிரக்ஞை போய்விட்டதா? நீளமாகப் பேசினாள். துளி சோர்வு ஏது… “என்னம்மா சொல்றே…”
வானத்தில் எங்கோ இடி முழக்கம்.
“உங்களை ரொம்பத்தான் படுத்திட்டேன். என் புத்தி… என் புத்தி கோணாலாச்சுடி… கோகிலம்… இப்படிவா… இனி சந்தோஷமா இருங்கோ. என்னோட என் வக்கிர புத்தியும் நாசமாகட்டும்.”
திடீரென்று பேய் மழை பிடித்துக் கொண்டது.
இரண்டு பேரையும் ஒரு சேர அணைத்துக் கொள்ள முயன்று, முடியாமல் அப்படியே சாய்ந்தாள். வெப்பம் தணிந்து உடம்பு ஜில்லிட்டிருந்தது. முகத்தில் பேரமைதி.