அம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம்.அந்த மாதிரி ஒரு அபூர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே. அத்தனையையும் இவனே கேட்டு மகிழ வேண்டும். மகிழ வேண்டுமா? அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி?
சந்தோஷமான வாழ்க்கையில் அங்கங்கே சோகமும், துக்கமும், இழையாடுவது உண்டு. ஆனால் வாழ்க்கையே சோகமென்றால்?
கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்காவது அம்மா சிரித்தாளா? எந்த இடத்திலாவது அம்மா- வின் முகத்தில் தன்னையறியாத அல்லது தன்னை மீறிய புன்னகை வெளிப்பட்டதா? எத்தனையோ முறை தேடித்தான் இருக்கிறான். பார்க்க முடிந்ததில்லை. ஆனாலும் அம்மா தன் கதைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாள். இவனும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். சிறு பிராயத்தில் அது அவள் வாழ்க்கைப்பட்ட கதை. அன்றிலிருந்து இன்றுவரை அவள் எதிர்நோக்கிய பிரச்னைகளின் கதை. வாழ்க்கை எவ்வளவு அவலமாகியிருக்கிறது அம்மாவுக்கு. மூழ்கி முத்தெடுத்து மீண்டிருக்கிறாள் அம்மா.
"கேசுவை (கேசவன்) வரச்சொல்லு…எனக்கு அவனோட நிறையப் பேச வேண்டிர்க்கு…"
"என்னத்தப் பேசப்போற…அதான் இத்தனை காலம் எல்லாம் பேசியாச்சே! வீடு போ போங்கிறது…காடு வா…வாங்கிறது…இன்னும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு…? சிவனேன்னு கிட…"
‘ஐயோ பாவம்…அம்மாவின் முகம்தான் எத்தனை வாடிப் போகிறது…எல்லோரும் போக வேண்டியவர்கள்தான். ஆனாலும் அதை வாய் விட்டுச் சொல்லலாமா? அதுவும் பெற்ற தாயாரைப் பார்த்து அந்த வார்த்தை சொல்ல எப்படி மனசு வருகிறது?’
"உன் பிள்ளைதானே…விடு…விடு…மேல போட்டுக்காதே…இத்தனை காலம் எல்லாத்தையும் மேல வழிய விட்டுண்டது போறாதா? இதோ நா வந்துட்டேன்…சொல்லு…சொல்லு…எங்கிட்டச் சொல்லு…உன் ஆசை தீரச் சொல்லு…உன் மன பாரம் அப்படியாவது நீங்கட்டும்…நா கேட்கிறேன் எம்புட்டு வேணாலும்…"
‘வெறும் கதைகளா அவைகள். வாழ்க்கையைப் புடம் போட்டு வடித்தெடுத்த சித்திரங்களாயிற்றே?’
அம்மா சொன்ன கதைகளையேதான் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறாள். சொல்லிக்கொண்டு- மிருக்கிறாள்.ஆனாலும் அவை ஏன் அலுப்பதில்லை. எந்த ஜீவன் அதில் உயிரோட்டமாய்? எது இப்படி நாடியைப் பிடித்து உலுக்குகிறது? ஆச்சரியம்தான். சொன்ன கதைகளையே திரும்பத் திரும்பச் சொல்லி என்று அம்மாவின் மனபாரம் மொத்தமும் இறங்கும்? வறுமையும், துக்கமும், சோகமும் வாழ்க்கையாய் அமைந்துவிட்ட அம்மாவுக்கு ரத்தமும் சதையுமாய் உடம்போடே அவை ஊறிப் போய்க் கிடக்கின்றனவா?
"ராமாயணமும், மகாபாரதமும் எத்தனையோ பேர் சொல்ல காலங்காலமா கேட்டுண்டிருக்கோம். அலுத்தா போயிடுத்து? கேட்கக் கேட்க எவ்வளவு புத்துணர்ச்சி ஏற்படறது மனசுல? அத மாதிரிதான் உன் கதைகளும். எனக்கு அலுக்கவே அலுக்காதாக்கும். நா இருக்கேன் கேட்கிறதுக்கு. நீபாட்டுக்குச் சொல்லு…"
அந்த முகத்தில்தான் எத்தனை திருப்தி? இதமான வார்த்தைகளுக்காக இந்தப் பெரியவர்கள் எத்தனை ஏங்கிப்போய்க் கிடக்கிறார்கள்? வேளா வேளைக்கு சோறு தின்பதைவிட வயிற்றை நிரப்புவதைவிட அன்பு வார்த்தைகள்தானே அவர்களின் மனப்பசியை ஆற்றுகின்றன? வயிறு நிறைவதைவிட மனசு நிறைவது உயிரைப் புதுப்பித்துக் கொள்வதற்கு சமமல்லவா? இது கிடைக்காமல் ஏங்கி ஏங்கி புழுங்கிப் ;புழுங்கி துக்கம் நெஞ்சை அடைக்க வார்த்தைகள் வர இயலாமல் எப்படி வாயடைத்துக் கிடக்கின்றன எத்தனையோ ஜீவன்கள்? யாரேனும் ஆத்மார்த்தமாய் அறிவதுண்டா? உணர்வு ப+ர்வமாய் நுணுகி அறிந்து உயிரோட்டமாய் ஆறதலாய்ச் செயல்பட்டது யார்?
"கேசுவை வரச்சொல்லு…எனக்கு ஆறுதலாப் பேச அவனுக்குத்தான் தெரியும். என் மனசறிஞ்சு பேசுவான். எத்தனை முறை என் கதைகளை அவன்ட்டச் சொன்னாலும் எத்தனை தடவை அவன் அதைக் கேட்டாலும், அலுப்புங்கிறதே கிடையாது அவனுக்கும் எனக்கும்…"
"ஆமா…வெறும் வார்த்த சொன்னாப் போதுமா? எதிர்க்க உட்கார்ந்துண்டு வாயால வழிய விட்டா எல்லாம் ஆச்சா?"
"அது வெறும் வாய் வழிசலா அல்லது ஆத்மார்த்தமான்னு எனக்குத்தானே தெரியும்…"
"அந்த வார்த்தைக்குத்தானே மனசு கிடந்து இப்டி அடிச்சிக்கிறது? வீட்டில இருக்கிற பெரியவாளையும் கூட்டாக்கிப் பேசறதுக்கு எத்தனை பேருக்குத் தெரிஞ்சிருக்கு? முதல்ல மனசு வேணுமே இதுக்கெல்லாம்! அவா மனசு எதெதுக்கு எப்படியெப்படி ஏங்கும்…எதெதுக்கு நாமளும் நாமளும்னு அடிச்சிக்கும்னு உணரத் தெரியணுமே…எல்லாருக்கும் வயசு மட்டும் ஆயிடுத்து…மனசும் அதே அளவுக்கு முதிர்ந்திருக்கான்னா இல்லையே…யாரையும் குத்தம் சொல்ல வரல்லே நா…பொதுவா உள்ள நடப்பைச் சொல்றேன்…வேளா வேளைக்கு வெறுமே சோத்தைக் கொண்டுவந்து வச்சாப் போதுமா? வயிறு நிறைஞ்சா மனசு நிறைஞ்சதாகுமா? வாசல்ல கட்டிப் போட்டிருக்கே நாய்…அதுவும் நானும் ஒண்ணா? அதக்கூட Nஉறய்…ஏய்ய்ய்…ன்னுண்டு வெளியே சிநேகமா அழைச்சிண்டு போறேள்…அந்த நாயோட இருக்கிற நெருக்கம் கூட என்னோட கிடையாதா? அதுக்குக் கிடைச்சிருக்கிற அன்பு இந்த வீட்ல எனக்குக் கிடைச்சிருக்கா? அதத்தூக்கி நெஞ்சோட கட்டிண்டு முத்தா கொடுக்கிறேள்….கைக்குழந்தையாட்டம் வச்சிண்டு கொஞ்சித் தள்றேள்…"
"அதப்போல உன்னையும் கட்டிண்டு முத்தம் கொடுக்கச் சொல்றியா? அப்பத்தான் உன் மேல அன்புன்னு அர்த்தமா? என்ன அபத்தமா இருக்கு?"
"எது அபத்தம், எது அர்த்தம்னு எனக்கும்தான் தெரியும். உங்களுக்கும் தெரியும்தான்…ஆனா தெரியாத மாதிரி நடிக்கிறேள்…உங்களையே உங்க மனசையே நீங்க கேட்டுப் பார்த்துக்குங்கோ…முதல்; உங்க மனசுக்கு நீங்க உண்மையா இருக்கப் பழகுங்கோ…கஷ்டமோ நஷ்டமோ நாங்கள்லாம் அப்படித்தான் வாழ்ந்து முடிச்சிருக்கோம்…எங்க எண்ணங்களையும், எங்க மனசையும், ஏணி வச்சாக்கூட எட்ட முடியாது உங்களால…அவாவாளுக்குத் தாரம்னு ஒண்ணு வந்துட்டா இப்படியா மாறிப் போகும் எல்லாமும்? அந்தக் காலத்து வீட்டு ஆம்பளேள் கொடுமைக்காரான்னு சொல்லுவா…அவாளும் அதுக்குக் கட்டுப்பட்ட பொம்மனாட்டிகளும் அப்படிக் கட்டு செட்டா இருந்ததுனாலதான் குடும்பங்கள் சிதையாம இருந்தது…இன்னைக்கு அப்டியா இருக்கு? வயசானவாளை வச்சு போஷிக்கிறதுன்னு கேள்விப்பட்டிருக்கேளா? உண்மையிலேயே போஷிச்சது நாங்கதான்…போஷிக்கிறதுன்னா என்ன அர்த்தம்னு கேட்பே நீ? அது அர்த்தம் சொல்ற வார்த்தை இல்லை…வச்சு அனுபவிக்கிற வாழ்க்கை…; எங்களோட போச்சு அந்தப் புண்ணியமெல்லாம்…என்னவோ இருந்திண்டிருக்கு இன்னைக்கு. பட்டும் படாமலும், ஒட்டியும் ஒட்டாமலும்…"
"போகட்டும்…நல்லா போகட்டும்…எங்களுக்கும் அந்தப் புண்ணியம் கிடைக்காமப் போகட்டும்…எங்களால இவ்வளவுதான் முடியும்…முடியறது…உங்கள மாதிரி உடம்புலயும் மனசுலயும் எங்களுக்குத் தெம்பில்லை…நீங்க தின்னு வளர்ந்த சாப்பாடு கூட சுத்தம் அன்னிக்கு…ஆனா இன்னைக்கு அப்படியில்லை…எல்லாமே கலப்படம்…அதனால நாங்களும் கலப்படமாப் போயிட்டோம்…"
"நா ஒண்ணும் உங்களைக் குத்தம் சொல்லலை…நா என்னைக் குறைப்பட்டுண்டேன்…பகவானே இன்னும் என்னை வச்சிண்டிருக்கியேன்னு…வேறென்ன சொல்ல…."
அம்மாவின் ஆதங்கங்கள் அனர்த்தம். இந்த ஆதங்கங்கள்தான் அவளிடம் கதை கதையாய் ஜனிக்கின்றன போலும்! எல்லா ஏற்ற இறக்கங்களும் அறிந்தவள் அவள். எல்லோரையும் அறிவாள் அவள். எல்லாவற்றையும் கடந்துதானே வந்திருக்கிறாள்? அவள் அனுபவத்தில் பத்தில் ஒரு பங்கு நமக்கு உண்டா? அம்மாதிரிப் பழுத்த அனுபவஸ்தர்கள் நம்மிடையே இருப்பது நமக்குப் பெருமையல்லவா? அவர்கள் நம்மின் சொத்தல்லவா?
ஏற்ற இறக்கங்கள் என்றால் இறக்கத்தை மட்டுமே சந்தித்த, எதிர் கொண்ட வாழ்க்கை அவளுடையது. ஏற்றம் பெற்ற நாட்களில முதுமை ஆட்கொண்டது. இன்னொருவரின் துணை தேவைப்பட்டது. தான் பெற்ற செல்வங்கள் தன்னைக் கைவிட்டு விடுவார்களா என்ன? எல்லாரும் எல்லாமும் பெற்று இருக்கும் வேளையிலும் அம்மாவின் மனசு உழன்று கொண்டுதான் இருக்கிறது.
"அது அப்படித்தாண்டா. அப்படித்தான். நாங்க கூட்டுக் குடும்பமா இருந்தோம். ஏற்றமோ, இறக்கமோ, நல்லதோ கெட்டதோ, இருந்ததோ இல்லையோ, எல்லாரும் சேர்ந்து அனுபவிப்போம். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம சங்கிலியாப் பிணைஞ்சிண்டிருந்தோம். இன்னைக்கு நீங்க அப்டியா இருக்கேள்? எல்லாரும் தனித் தனித் தீவா நின்னுண்டிருக்கேள்…மூணாவது மனுஷனுக்கு சொல்றாப்லே, உறவுகளுக்குள்ளயே சந்திக்கிற போதும், உறலோ சொல்லிக்கிறேள்…அதுக்கு மேலே ஈஷிண்டா எங்கே எதுக்காவது ஒட்டிண்டிடுமோங்கிற ஜாக்கிரதையோட பழகறேள்…உங்க எல்லாரையும் பணம்ங்கிற ராட்சஷன் பிரிச்சு வச்சிருக்கான்…அங்கிருந்துதான் கிளை பிரியறது எல்லாருக்கும்…வாழ்க்கைக்கு ஆதாரம் பணமாவும் இருக்கலாம்…ஆனா அது மட்டும்தான் வாழ்க்கைன்னு வாழ்ந்துண்டிருக்கேளே…அதத்தான் சகிக்க முடியலை…பணம்ங்கிற ஆதாரத்துல நின்னுண்டிருக்கிறதுனால மதிச்சுப் போற்ற வேண்டிய மேன்மையான விஷயங்களையெல்லாம் உதறிட்டேளே! அது நியாயமா? காலகாலத்துக்கும் அழியாதவைகள்ன்னு சிலது இருக்கு…அவைகளை மதிக்கத் தெரிஞ்சிக்கணும். அதையெல்லாம் பக்தி பண்ணிப் போற்றத் தெரியணும்…அப்பத்தான் நாமளும் நம்ப சந்ததிகளும் நன்னாயிருக்கும்…உங்க சந்ததிகள் உங்களை மதிக்கணும்னா ஆயுசுக்கும் உங்க மேலே அன்பு வச்சிருக்கணும்னா, உங்க காலத்துக்குப் பிறகும் நீங்க மதிக்கப்படணும்னா தொழப்படணும்னா, நீங்க இதையெல்லாம் செய்துதான் ஆகணும்…இந்த உலகத்துல சத்தியமான சில விஷயங்களை என்னைக்குமே அழிக்க முடியாதாக்கும்…ஏன்னா சிரஞ்சீவித்தன்மை கொண்டதாக்கும் அதெல்லாம்…"
எவ்வளவோ சொல்லி விட்டாள் அம்மா. எவ்வளவு கேட்டிருக்கிறான் அம்மாவிடம்! ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும். வாழ்க்கையின் ஒவ்வொரு எட்டிலும் நம் கூடவே வந்து நம்மை வழி நடத்தும்.
எதிரேபடுத்துக் கொண்டிருந்த அம்மாவையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் இவன். இப்பொழுதெல்லாம் பேசிக் கொண்டிருக்கையிலேயே சட்டுச் சட்டென்று அம்மா படுத்து விடுகிறாள். படுத்த அடு;த்த நிமிடம் கண்ணயர்ந்து விடுகிறாள். அவயவங்கள் மெல்ல மெல்ல அடங்கி வருகின்றனவோ!
"என்னா…உட்கார்ந்திண்டிருக்கியா? போய் நீயும் கொஞ்சம் படுத்துக்கோ…எத்தனை நேரம் இப்டி என் முன்னாடியே பழியாக் கிடப்பே? உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு நேக்கு…என் மனசு ஆறுதல் படணும்னு எவ்வளவு கேட்கறே நீ? இப்போல்லாம் இப்டித்தான் திடீர் திடீர்னு கண்ணசந்துடறேன்…எனக்கே தெரியறதில்லே…அப்டியே போய்ட்டாப் பரவாயில்லை…யாருக்கும் பாரமில்லாமப் போய்ச் சேரணுமேன்னு பகவானை வேண்டிக்கிறேன்…இன்னும் படுக்கைல விழுந்து அது இதுன்னு…மலம் ஜலம்னு வந்துடக்கூடாது பாரு…" – சொல்லும்போதே அம்மாவின் விழியோரங்களில் நீர்.
ஏதும் வார்த்தைகளின்றி இவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘பதினாலு வயசுலே நா உங்க அப்பாவுக்கு ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டேன்…அன்னைலேர்ந்து எப்டியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பேன்…மனுஷா எந்தக் கஷ்டம் வேணாலும் படலாம்…ஆனா தரித்திரக் கஷ்டம் மட்டும் படவே கூடாது…அது பெரிய கொடுமை…யாராலேயும் தாங்க முடியாதாக்கும்…எத்தனை நாள் பட்டினிச் சேதி அது? ஒரு வேளை ரெண்டு வேளைன்னு உங்களையும் காயப் போட்டு…அப்பப்பா…கொடுமை…கொடுமை…நீ பொறந்தப்புறம்தான் உங்கப்பா உள்ளுரோட வந்து இருக்க ஆரம்பிச்சார்…அதனாலதான் உம்பேர்ல அம்புட்டு இஷ்டம் நேக்கு…’
சென்ற முறை சந்தித்தபோது அம்மா சொல்ல ஆரம்பித்த கதைகளின் தொகையறா. அந்த வார்த்தைகள் இவன் மனதை அப்படியே ஆக்ரமித்திருக்கின்றன. எப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் சிலிர்க்க வைக்கின்றன. இப்பொழுதும் அப்படியே…
"கவலைப்படாதே…உன் மனசு போலவே ஆகும்…உன்னோட பிரார்த்தனை என்னைக்கும் வீண் போகாது. நீதான் சொல்லுவியே…உங்க எல்லாருக்காகவும் எவ்வளவு பிரார்த்தனை பண்ணியிருப்பேன் நான்னு…அது உனக்கு மட்டும் பலிக்காமப் போயிடுமா?"
இவன் அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த முறை அம்மாவிடம் கதைகள் இல்லை, வாழ்க்கை இருந்தது என்று தோன்றியது இவனுக்கு.
*****