குழந்தைக்குக் கல்யாணம் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. வீட்டிற்கே தனி மணம், கல்யாணக் களை வந்திருந்தது. ஜாதகத்தை நகல் மேல் நகல் எடுக்கிறதும், பார்க்கிற தெரிந்த சிநேகிதர்களுக்கெல்லாம் ஒரு பிரதி தருவதும், வீட்டிற்கு வருகிற எல்லாருடனும் தனி அன்புடனும் பிரியத்துடனும் சிரித்துப் பேசுவதும், அவர்கள் கிளம்பிப் போகிறபோது புவனாவை அழைத்து அவர்களை நமஸ்காரம் பண்ணச் சொல்வதும், "இது என் ஒரே பொண்ணு. இவளுக்குத்தான் இப்ப பாத்திட்டிருக்கேன். நல்ல இடமா வந்தாச் சொல்லுங்க" என்று காதில் ஒரு வார்த்தை போட்டு வைப்பதும், தேவையானால் ஜாதகப் படியை அவர்களுக்குத் தருவதும் என்று வீட்டில் அன்றாட வேலைகள் இருந்தன. புவனாவுக்குக் கல்யாணம் என்கிற விஷயமே அப்பாவுக்குச் சிரிப்பு. அவர் கண்ணில் இன்னும் புவனா சிறு குழந்தைதான். ஒரு வயதிலேயே அவளுக்குப் பட்டுப்பாவாடை வாங்கித் தந்தவர் அவர். பாவாடை சரசரக்க இங்கே அங்கே என்று சும்மாவாச்சும் ஓடித் திரிந்து, பாவாடை புஸ்ஸென்று விரிய உட்கார்ந்து பார்க்கும் அது… அடாடா, தாமரை மேல் லக்ஷ்மி உட்கார்ந்தாற் போலல்லவா அது இருக்கும்!..
அம்மா அவளைச் சிறு வயது முதலே குழந்தையாகப் பார்க்கவில்லை, ஏனோ. பிரசவ அறையில் பெண் குழந்தை என்று தெரிந்த நாள் முதலே அவளிடம் குழந்தையின் பெண்மை சார்ந்த கவனங்கள் வந்திருக்கலாம். வீட்டில் சாமான்கள் என்று வாங்குகையில் "இது புவனாவுக்கு…" என்றே வாங்கினாள். பாத்திரங்கள் வாங்கினால் அதில் தன்னியல்பாய் புவனா என்று பேர் பொறித்தாள். நகைநட்டு பண்டபாத்திரம் என்று புவனா பேர் சொல்லிச் சேர்க்கவாரம்பித்தாள்.
அம்மாதான் குழந்தைக்கு வயசாகிறது என்று தனியே அவரிடம் பேச ஆரம்பித்தது. "ஆ, 22 வயசு ஒரு வயசா! ஆனாலும் உனக்குப் பேரன் பேத்தியப் பார்க்க ரொம்பத்தான் அவசரம்" என்று அப்பா அம்மாவைக் கேலி பேசினாலும், அப்பாவுக்கு உற்சாகம் வந்துவிட்டது. அவர் ஜாதகத்தைக் கையில் எடுத்தார். அதற்குள், காலம் வேறு மாதிரி கணக்குகளைப் போட்டு, விடைகளுக்கும் இத்தனை அவசரப்பட்டால் என்னதான் செய்ய முடியும்?
அப்பா செத்துப் போனார். சாகிற வயசா அது? சாதாரணமாக அலுவலகம் போனதுதான். வரும்போது டாக்சியில் உயிரற்ற சடலத்தை எடுத்து வந்தார்கள். நெஞ்சில் பாரம் சுமந்த நிமிடங்கள். அம்மா முகத்தைப் பார்க்க முடியவில்லை புவனாவால். யார், யாருக்கு ஆறுதல் சொல்ல, என்ன சொல்ல, எப்படி ஒருத்தரை ஒருத்தர் தேற்றிக்கொள்ள, சமாதானம் சொல்லிக் கொள்ள… என்று திகைத்துத் திணறிய நிமிடங்கள். இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. புவனா அப்பா செல்லம். எங்கே போனாலும் அவளை அவர் தவறாமல் கூட்டிப் போவார். பெண் சார்ந்த பெருமிதம், மகிழ்ச்சி அவர் முகத்தில் வெளிப்படையாய்த் தெரியும். தன் பெண்ணை யாராவது பாராட்டும்போது அவர் முகத்தில்தான் எத்தனை குழந்தைத்தன்மை – அசட்டுத்தனம் தெரியும்! சொன்னால் – வெட்கம் பூசிய முகத்துடன் "கேலி பண்ணாதே" என்று மட்டும் சொல்வார். அதை மறுக்கமாட்டார்.
கனவுகள் வளர்த்த பருவத்தில் புவனாவின் திகைப்பு அம்மாவுக்குப் புரிந்தது. இனி அவள் தன் பிரக்ஞையை அவளைச் சார்ந்தே பின்னிக் கொள்ள வேண்டும் என்று புரிந்தது. அப்பாவின் கனவுகளை – இந்தப் பெண்ணின் எதிர்காலம் குறித்த கவனங்களைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். தன் துக்கத்தை விழுங்கி மேல்பூச்சான சிறு உற்சாகத்துடன் அம்மா வளைய வந்தாள். குழந்தை வருத்தப்படக்கூடாதே என்று சிறு பொட்டு வைத்துக் கொண்டாள். நகைகள் அணிந்து கொண்டாள்.
அப்பாவின் இடத்தில் குழந்தைக்கு வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள். அப்பா இருந்த வரை அவருக்குக் குழந்தையை வேலைக்கு அனுப்ப இஷ்டமே கிடையாது. அம்மா சரி என்று சொன்னதில் எல்லாருக்கும் ஆச்சரியம். இந்தக் காலத்தில் நாலு இடம் போக்குவரத்து இருந்தால் நல்லதுதானே என்று அம்மா நினைத்தாள். அவளைத் தவிர வேறு ஆண்பிள்ளைகள் இல்லாத வீடு. வெளியே போய் வர அம்மா அவளுடன்தான் போய் வர வேண்டும். அவளுக்கும் ஒண்ணும் தெரியாதிருந்தால் எப்படி, என்றிருந்தது. தவிரவும் – ஆமாம், இது மிக முக்கியம்! இந்தக் காலத்தில் வேலைக்குப் போகிற பெண்களுக்கு நல்ல நல்ல மாப்பிள்ளைகள் தேடி வருகிறார்கள். அவளும் கல்லூரி வரை வாசித்திருக்கிறாள். வீட்டில் தனியே இருக்கும்போதெல்லாம் திடீர் திடீரென்று அப்பா ஞாபகம் வந்து தன்னைப்போல ஏக்கம் கவிந்து மூச்சு முட்ட அழுகிறாள். அம்மாவைப் பார்த்ததும் படுக்கையில் திரும்பிப் படுத்துக் கொள்கிறாள்.
எப்பவும் கலகலவென்று சிரித்துப் பேசி வளைய வரும் புவனாவா இது!… கீழ்த்துணியை உருவி பொம்மைக் கொலுவைச் சரித்து விட்டது காலம். வேலைக்குப் போனால் புது இடம், புது மனிதர்கள் என்று புவனாவிடம் மாற்றங்கள் நிகழும் என்று அம்மா யோசித்தாள். புவனாவுடன் முதல் நாள் அவளும் அலுவலகம் போய் வந்தாள். அப்பாவின் அலுவலகம் பக்கம்தான். தெருக்கோடியில் பஸ் வந்தது. பதினேழு எச். பத்து பதினைந்து நிமிடத்தில் அலுவலக வாசலிலேயே போய் இறங்கிக் கொள்ளலாம்.
அப்பாவின் அலுவலகத்தில் எல்லாரும் நல்ல மாதிரியாய், தன்மையாய்ப் பழகினார்கள். பிரியமாய் நடந்து கொண்டார்கள். ஆர்வத்துடன் புவனாவுக்கு எல்லாம் சொல்லித் தந்தார்கள். அம்மாவுக்குத்தான் போரடித்தது. சாப்பாட்டு அறையில் அவள் தொடர்கதைகள் வாசித்தபடி காத்திருந்தாள். எப்படா மணி ஐந்தடிக்கும் என்றிருந்தது. ஆண்பிள்ளையானால் இப்படியே வெளியே காலாரப் போய் வரலாம். வேறு நபர்களிடம் நாலு வார்த்தை வேடிக்கையாய்ப் பேசலாம். கலகலவென்று நாமும் சிரித்து நாலு பேரையும் சிரிக்க வைக்கலாம்… இவள் அப்பா அப்படித்தான். அவர் இருக்கும் இடம் தனியே தெரியும். குழந்தையிடம் சதா ஏதாவது வேடிக்கை பண்ணிக்கொண்டே இருப்பார். அதுக்கும் இதெல்லாம் வேண்டித்தான் இருந்தது. பெண்ணா இது – காலில் ஈஷும் பூனைக்குட்டி. அதெல்லாம்தான், அந்த இழப்பெல்லாம்தான் புவனாவால் தாங்க முடியாதிருந்தது. சரி, இந்தப் புது இடம், புது மனிதர்கள் அவளுக்கு எப்படி இருக்கிறது பார்ப்போம். ‘பகவானே! என் பெண்ணை நல்லபடியாப் பாத்துக்கோ’ என்று மனதில் கைகூப்பி வேண்டிக் கொண்டாள் அம்மா.
புவனாவுக்கு அந்த அலுவலகம் ரொம்பப் பிடித்து விட்டது. வேலைகள் கடினமானவை அல்ல. வந்த புதிதில் அவளுக்கு அதிகச் சுமை தர அவர்கள் விரும்பாதிருக்கலாம். வேலைக்குச் சுணங்கியவள் அல்ல அவள். அம்மாவுக்குச் சில சமயம் உடம்பு கிடம்பு படுத்தினால் அவளே சமையலறைக்குள் புகுந்து விடுவாள், விருப்பத்துடன். போதாக்குறைக்கு அப்பாவும். என்னென்னவோ புதுப் புது ஐட்டங்கள் பண்ணுவது பற்றி அலசி ஆராயப்படும். “நீங்க ரெண்டு பேரும் என்ன, நான் எப்படா படுப்பேன்னு காத்திட்டிருந்தா மாதிரில்ல தோணுது…” என்பாள் அம்மா வேடிக்கையாய்.
புவனாவிடம் பழைய அந்த மலர்ச்சி, கலகலப்பு மீண்டது. தளிர்கள் அசைந்தாடின அவளிடம். அம்மாவுக்கு ஆசுவாசமாய் இருந்தது. அம்மா அவளுக்கு அலுவலகம் போக வர போட்டுக் கொள்கிறா மாதிரி சுடிதார்கள் புதுசாய் எடுத்துத் தந்தாள். உட்கார வைத்துத் தழையத் தழையப் பின்னி விட்டாள். காலையில் டிபன் பாக்சில் ஏதாவது கட்டிக் கொடுத்தாள். இன்றைக்கும் காலையில் அம்மாதான் புவனாவை எழுப்ப வேண்டும். "மணியென்ன?" என்று கொஞ்சலாய்க் கேட்டபடி அப்படியே அது அம்மாவைக் கட்டிக்கொள்ளும். "அம்மா நீயும் படுத்துக்கறியா என் பக்கத்துல?" என்று கிறுக்குத்தனமாய்க் கேள்வி கேட்கும். சலிப்புடன் எழுந்து பாத்ரூமுக்குப் போகும். அவள் பல்துலக்கி வருமுன் சூடாய்க் காபி வேண்டும். "ஏண்டி! நான் படுத்துக் கிடந்தா காபி எவ குடுப்பா உனக்கு?" என்று கிண்டல் பண்ணினாள் அம்மா.
தினசரி அலுவலகம் விட்டு வரும்போது அம்மா அவளைக் கூட்டி வர பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தாள். புவனாவுக்கு அது சிறிது வெட்கமாய் இருந்தது. "நானே வந்திர மாட்டேனாம்மா? நான் என்ன சின்னக் குழந்தையா?" என்பாள் புவனா. இருந்தாலும் அம்மா காத்திருப்பது அவளுக்கு உள்ளூரப் பிடித்துதான் இருந்தது. இருவருமாய்க் காய்கறி, அவசரத் தேவைக்கான பலசரக்கு சாமான்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்கள். அம்மா அவளுக்குப் பூச்சரம் வாங்கித் தருவாள். பஸ் நிறுத்தத்துக்கு வருவதில் அம்மாவுக்கு எந்தச் சங்கடமும் இல்லை. அவளுக்கு வீட்டில் என்ன வேலை இருக்கிறது? கோவில் குளம் என்று போய்ப் பழக்கமும் கிடையாது. வீட்டிலேயே மனசில் தோணியபடி நாலு சுலோகம் சொல்லி, கிடைத்த பூவைப் போட்டு நமஸ்காரம் பண்ணுவதுதான். அப்பாவும் புவனாவுமாய் வெளியே போனால் அவள் கூடப் போவதில்லை. அவளது தோழி, தொடர்கதைகள் என்று பழகியிருந்தது. மதியங்களில் டி.வி தொடர்கள் பார்ப்பாள். குடும்பத் தொடர்கள். மர்மம் அது இதுவெல்லாம் பிடிக்காது. அதிலும் சாவு கீவு என்று வரும் தொடர்களைப் பார்க்கிறபோது மனசு கஷ்டப்பட்டு அணைத்து விடுவதும் உண்டு.
இந்தப் பெண்ணுக்கு வயசாகிறதே தவிர, அதற்கேற்ற மனப் பக்குவம் கிடையவே கிடையாது. அவள் மாறவே இல்லை. இன்றைக்கும் வீட்டில் ரேடியோவைச் சத்தமாய் வைத்துக் கொண்டு பாட்டு கேட்டாள் புவனா. எல்லாம் இந்தக் காலப் பாடல். சோளாபூரி, பம்பாய் லேடி – அது இதுவென்று… இது என்ன பாடல், என்ன ராகம், இதை எப்படி ரசித்துக் கேட்கிறதோ தெரியவில்லை. கூடவே பாடுகிறது. ரொம்ப உற்சாகமானால் விசில் அடிக்கிறது.
வேலைக்குப் போன புதிதில் அவளிலிருந்து கடல் போல் வார்த்தைகள் பொங்கி அலைபோல் நாலாபுறமும் சிதறித் தெறித்தன. இத்தனை நாள் துக்கமும் கரைந்துருகிக் கசிவது போலத் தெரிந்தது. வாய் வலிக்க வலிக்கப் பேசிக் கொண்டேயிருந்தாள். அம்மா வருத்தப்படுவாள் என்று அவள் அப்பா பற்றிய பேச்சை எடுக்கவேயில்லை போலிருந்தது. அலுவலகத்தில் யார் யார் எப்படி, என்னென்ன நடந்தது எல்லாம் விலாவாரியாய்ச் சொல்லாவிட்டால் அவளுக்குத் தூக்கம் வராது போலிருந்தது. அதைக் கேட்க அம்மாவுக்குத் தூக்கம் வந்தது.
காலம் வேறு சுருதியில் அவர்களை இணைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆயிற்று – இனி புவனாவின் கல்யாணம் பற்றி அம்மா யோசிக்கலாம் என்றிருந்தது. தம்பிகளிடம் சொன்னால் நாலு இடம் துப்புக் கொண்டு வருவார்கள். அவர்கள் எல்லாருக்குமே புவனாவைப் பிடிக்கும். சின்னக் குழந்தையாய் இருக்கையில் அவர்கள் வர, வீடே அமர்க்களப்படும். ஆளுக்காள் அவளை உயரே தூக்கித் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடுவார்கள். அப்பாவுக்கு பயமாய் இருக்கும். சொல்ல முடியாது. அசட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார். புவனாவுக்கு உற்சாகமாய்த்தான் இருக்கும்.
வெயில் உள்பதுங்கினாற் போல புவனாவிடம் சிறு சலனங்கள் தெரிந்தன. காற்றில் குளத்தின் நீர்மேற்பரப்பின் சலனங்கள். தனக்குள் நிறைய அவள் யோசிக்கிறதாய் அம்மாவுக்குப் பட்டது. வாய் நிறைய வார்த்தை சுமந்து ஓடியாடித் திரிகிற புவனா, சற்று அமைதியாகி வந்தாள். இது காலம் வளைத்த நியதி என்று தோணவில்லை. வார்த்தைகளை அளந்து நல்ல நிதானத்துடன் பேசினாள். சிரிப்பில் ஒரு புரிந்த தன்மை, முதிர்ச்சி வந்திருந்தது. அவள் முகத்தில் மனசின் தோணிகள் அலைக்கழிக்கப்படுவதில் வண்ண மாற்றங்கள் ஏற்பட்டன. எல்லாம் போட்டுக் கொட்டி முழக்காத, மழை மூட்டம். மேக மூட்டம்.
சரி, அவளே தன் மௌனத்தை உடைப்பாள் என்று அம்மா நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். புவனா சிறு குழந்தை அல்ல. இப்போது வேலைக்கும் போகிறாள். பொறுப்பு சுமக்கிற பருவம். அவளாக என்னிடம் எதுவும் கேட்டால் சொல்லுவேன். நானாக ஏன் கேட்க வேண்டும் என்றிருந்தது. அத்தோடு முக்கியமான ஒரு விஷயம் என்றால் அவள் அம்மாவிடம் கேட்காமல் யாரிடம் கேட்பாள் என்று தோன்றியது. அவள் காத்திருப்பாள். அவள் அம்மா.
–முடிவு அடுத்த வாரம்…
“