ஒரு சமயம் நான் அம்பத்தூரில் இருக்கும் என் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அருகில் இருக்கும் தெருவில் சிலர் கையில் பூக்கூடையுடனும் நெற்றியில் விபூதியுடனும் வந்துகொண்டிருந்தார்கள். இங்கு அருகில் ஏதாவது கோயில் இருக்க வேண்டுமென்று எண்ணி அவர்களிடம் விசாரித்தேன். நான் ஒரு கோயில் பைத்தியம்! எங்கு கோயில் இருந்தாலும் என் கால் அங்கு தானே நுழையும்.
நான் நினைத்தது போலவே அங்கு ஒரு சிவஸ்தலம் இருக்கிறது என்று அறிந்துகொண்டேன். மறுநாள் பிரதோஷம். நல்ல நேரம்தான் என்று மாலை அங்கு சென்றேன். அப்பப்பா! என்ன கூட்டம்! கருவறையிலிருந்து ருத்ரஜபம் ஒலிக்க, அருமையான சூழ்நிலை! உள்ளே அருள்புரிபவர் அருள்மிகு அம்பலவாணர். அருகில் சிவகாமியம்மை. அங்கு ஒரு அர்ச்சகர் நின்று கொண்டிருந்தார். கோயில் பற்றி அவரிடம் கொஞ்சம் கேட்டறிந்தேன்.
"சுவாமி! அம்பலவாணர் திருப்பெயரினால்தான் அம்பத்தூர் வந்ததோ?"
"ஆமாம் மாமி! முன்பு இந்தப் பகுதி அம்பாபுரி, அம்பலப்புத்தூர் என்று இருந்தது. பின்னால் மருவி ‘அம்பத்தூர்’ என்றாகிவிட்டது."
"இந்த இடத்தில் என்ன விசேஷம்?"
"இது மிகப் பழமையான சிவன் கோயில். 108 சிவாலயங்களில் இது 51ஆவது சிவாலயம்."
"வழக்கம் போல் இதையும் சோழ மகாராஜாதான் கட்டினாரா?"
"இல்லை. இந்த இடம் தொண்டை மண்டலத்தில் வருகிறது. இப்பகுதியை அரசாண்ட மன்னர்கள் அன்பும் ஆதரவும் காட்டுவதில் மிகச் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். சிவ பக்தர்களாகவும் இருந்தார்கள். இவர்கள்தான் 108 சிவாலயங்களையும் அமைத்ததாகத் தகவல் கூறுகிறது. இந்தக் கோயிலில் கிடைத்த கல்வெட்டில், இங்கு கிருஷ்ணதேவராஜரும், அவருக்குப்பின் வந்த காளத்தி ராஜா, பெத்தராஜா என்பவர்களும் இந்தக் கோயிலுக்கு அதிகமாகத் திருப்பணி செய்தார்கள் என்று தெரிய வருகிறது. ஞாயிறு அன்று இங்கு பெரிய சந்தை நடக்குமாம். அதில் பாதிப் பங்கு லாபத்தை இந்தக் கோயிலுக்கு வழங்கும்படி ராஜா பணித்தாராம்!"
அவர் சொன்னவற்றைக் கேட்டு மனம் நிறைந்து போனேன். இந்த ஆலயத்தில் ஸ்ரீ நாராயணி அம்மன், பிரம்மா ஆகியோரின் சிலைகள் பூமியிலிருந்து கிடைத்தனவாம். அவர்களையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். தவிர பிள்ளையார், முருகன், பைரவர், தட்சிணாமுர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகியோர் புதியதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகளும் நடந்து வருகின்றன.
இங்கு, அருள்மிகு அம்பலவாணருக்குப் பதினோரு சோம வாரங்கள் நெய் விளக்கு ஏற்றப் பலர் வருகின்றனர். இது போல் செய்ய, நினைத்த காரியங்கள் நடந்துவிடும் என்பது நம்பிக்கை. மார்கழித் திருவாதிரை, மாசிச் சிவராத்திரி, மாதச் சிவராத்திரி, பிரதோஷம் எல்லாமே இங்கு மிகச் சிரத்தையாக நடத்தப்படுகின்றன. ஆனித் திருமஞ்சனமும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. பிரதோஷ பூஜையும் விரதமும் மேற்கொண்டால் தோஷங்கள் போய்விடுமாம். மேலும், இது ஒரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
அழகு நிறைந்த அம்பலவாணனைக் கண்டு அவன் ஆசிகள் பெறலாமே!