இமாலயத்தில் அமர்நாத் என்ற இடத்தில் பரமசிவன் அமர்ந்து அருள் புரிவது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மஹாராஷ்ட்ராவில் மும்பையில் அம்பர்நாத் என்ற இடம் உள்ளது தெரியுமா?
அம்பர் என்றால் வானம், நாத என்றால் இறைவன் – தலைவன் என்று கொள்ளலாம். தமிழில் ‘ஆகாயநாதன்’ என்று அழைக்கலாம். அம்பர்நாத் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, ஆட்டோவில் சென்றால் ஐந்து நிமிடங்களில் கோயிலை அடைந்து விடலாம். கோயிலைச் சுற்றிலும் வெப்பத்தின் தாக்கம் தெரியாதபடி மாமரங்கள் வளர்ந்து நின்று நிழலைத் தருகின்றன.
எல்லாத் திசைகளிலும் இருக்கும் மாவிலைகளைப் பார்த்தால் ஏதோ திருவிழாவில் தோரணம் கட்டியது போல் தோன்றுகிறது. சதுரம் சதுரமாக கருங்கற்களை இழைத்துச் சேர்த்து வரிசையாகக் கட்டப்பட்டிருக்கிறது இக்கோயிலின் சுவர். இது பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. வெளிப்புறச் சுவர்களில் தெய்வங்கள் மிக அருமையாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
மேற்குவாயில் பக்கமாக உள்நுழைந்தால் முதலில் இருப்பது நந்தி. கோயிலின் வாயிலில் நான்கு தூண்கள் உள்ளன. அதுவே ஒரு மண்டபம் போல அமைந்து பஜன்கள் நடக்கின்றன.
இந்தத் தூண்களிலும் பல புராணங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. உள்ளே நுழைந்ததும் பளீரென்ற சலவைக் கற்களால் ஆன தரை நம்மை வரவேற்கிறது. சத்ரபதி வீரசிவாஜி அங்கு வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அங்கு சிவபெருமானைக் கைகூப்பி வணங்கும் ஒரு காட்சி ஓவியமாய்த் தீட்டப்பட்டிருக்கிறது.
பின் கருவறையை நோக்கிச் செல்ல ஒரு குறுகிய பாதையை நாம் கடக்க வேண்டும். ஒருவர் பின் ஒருவராகச் செல்ல வேண்டும். அங்கு ஒரு பண்டித்ஜி அமர்ந்திருக்கிறார். அவரிடம் பல மங்கலக் கயிறுகள் இருக்கின்றன. பக்தர்கள் ஒவ்வொருவராக அவரிடம் தங்கள் வலது கையை நீட்ட அவரும் அதைக் கட்டிவிடுகிறார்.
பின் மூன்றடி முன்னால் நடந்து செல்ல ஊதுவத்தியின் நறுமணம், சாம்பிராணிப் புகையின் நறுமணம் தென்றலுடன் கலந்து நம்மைக் கைலாசத்திற்கு அழைத்துக் கொண்டு போவது போன்ற உணர்வு நமக்குத் தோன்றுகிறது.
கருவறையில் சிவலிங்கத்தைத் தேடினால் ஏமாறுவது உறுதி. சிவலிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பள்ளம்தான் இருக்கிறது. அந்தப் பள்ளம்தான் அம்பர்நாத் சிவன்! அந்தப் பள்ளத்தை அடைய இரண்டு படிகள் ஏறி, பின் பன்னிரண்டு படிகள் கீழே இறங்க வேண்டும். பின்னர் அந்தப் பள்ளத்தை வணங்க வேண்டும். நம் மனதிலேயே பூஜை செய்வது போல் பாவிக்கலாம். சூன்யத்தில் கடவுள் இருக்கும் தத்துவமோ!?
கிபி 1060ல் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்த ஆலயத்தை நிறுவிய அரசன் பெயர் சித்தராஜா. தான் போரில் பெற்ற வெற்றிக்காக பரமேஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்க இதைக் கட்டினாராம். கோக்கனஸ்த என்று மாராட்டியர் சொல்லும் கொங்கன் பகுதியைச் சேர்ந்தவர்.
இந்தக் கோயிலைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹாசிவராத்திரி, கார்த்திகை சோமவாரம் எனப் பல விசேஷங்களின் போது கூட்டம் அலை மோதும்.
கோயில் என்றாலே ஏதாவது மூர்த்தி, படங்கள் அல்லது லிங்கம் என்று பூஜைக்குரிய ஒன்று இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் பள்ளமே இறைவனாகிறான். உலகத்திலேயே இந்த ஒரு கோவிலில்தான் இப்படி இருக்கும் என தோன்றுகிறது. ஏன் பள்ளமே கடவுள் என்று சிலரைக் கேட்டால் விடை கிடைக்கவில்லை நமக்கு. எல்லாமே நம்பிக்கைதான்!
அம்பர்நாத் சிவ்ஜி கீ ஜய்!