அந்த சனிக்கிழமை மறக்க முடியாதது. வழக்கம் போல இரண்டு மணிக்கு வீட்டுக்குப் போய் உணவருந்தி சற்று இளைப்பாறி விட்டு, ஆபீசில் அரை மணி நேரம் விட்ட வேலைகளைப் பார்த்து விட்டு, மாலை மணிக்கூண்டு அருகில் நடக்கும் பேரணி கூட்டத்தில் பொழுது போக்க உத்தேசித்திருந்தேன்.
டிரைவர் முஸ்தபா ஒரு விசித்திரமான பிரச்சினையுடன் வந்தான். அவன் கையில் கியர் ராடு! ”கையோடு வந்து விட்டது சார்!” என்றான் பரிதாபமாக. ”நான் டிரைவிங் கற்றுக் கொள்ளுகிறேன் பேர்வழி என்று வெடுக் வெடுக் என்று இழுக்கிறேன்.. அப்போதெல்லாம் வரவில்லை. நீ கை தேர்ந்த டிரைவர். உனக்கேன் இப்படி?” என்று கனிவோடு கடிந்து கொண்டேன்.
”வண்டி மூன்றாவது கியரில் இருக்கிறது. அப்படியே ஓட்டி விடலாம், மெக்கானிக் ஷாப் வரை” என்றான். வழக்கமான பாண்டியன் ஆட்டோ போவதென்றால் வெகு தூரம். அருகில் திருச்சி ரோட்டில் உள்ள கண்ணுசாமி பட்டறைக்குப் போவதென்று தீர்மானித்தோம்.
சென்று, ரிப்பேர் செய்து ஆபீசுக்குப் போகிறேன். வாசலிலே பரபரப்பு. ரவி, கணபதி, தண்டபாணி, ராமசுப்ரமண்யம், ரமேஷ், சோமு, கணேஷ், ஜாகிர் இப்படி.
”என்ன, என்ன விஷயம்?” என்று கேட்டபடியே போனேன். ஷெட்டில் காரை நிறுத்தி உள்ளே போகிறேன். நிஷா, பிரேமாவதி, ரோஷ்ணி, ராணி எல்லாரும் உட்கார்ந்திருக்கிறார்கள் ஸீரியஸான முகத்துடன். உதவி மானேஜர் தட்சிணாமூர்த்தி போனில் பேசிக்கொண்டிருக்கிறார், ”சார், சார், கவலைப்பட வேண்டாம்! சாரே வந்துட்டாங்க!” என்று சொன்னபடி போனை வைக்கிறார்.
வினாக்குறி முகத்தோடு அவரைப் பார்த்தேன். ”ஊரெல்லாம் கலாட்டாவாக இருக்கு. நீங்க வீட்டிலேர்ந்து வண்டியை எடுத்துக்கிட்டு வர வேண்டாம்னு சொல்லி வீட்டுக்குப் போன் பண்ணினேன். அப்பா நீங்க அப்பவே புறப்பட்டுட்டதாச் சொல்லி கவலைப்பட்டாங்க! நல்ல வேளை, நீங்களே வந்துட்டீங்க!”
”என்ன கலாட்டா?”
”இந்து முஸ்லிம் கலவரமாம். இன்னிக்கு இந்து அமைப்பு பேரணி வெச்சிருந்தாங்க இல்ல? அதுக்குள்ள முஸ்லிம்கள், பேரணி தொடங்க இருக்கிற ஐயப்பன் கோவிலுக்குப் போய் ஆயுதங்களோட இந்துக்களைத் தாக்கி.. கடை வீதிலே கடைகள் எல்லாம் சூறை.. கும்பல் கும்பலா ஓடி வந்துக்கிட்டிருக்காங்க..!”
என் மனது வலித்தது. திண்டுக்கல், காலம் காலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாகப் பழகி வரும் ஊர். என்னை அறியாமல் ஓரக் கண்ணால் அங்கே இருந்த முஸ்தபாவையும், நிஷாவையும், ரோஷ்ணியையும், ஜாகிரையும் பார்த்தேன், ஒரு நெருடலுடன். முகக் குறியில் ஒன்றும் தெரியவில்லை.
பார்த்தீர்களா? இந்த வகுப்புவாத நச்சு? வருஷக்கணக்காகப் பழகுகிற நமது சகோதரர்களைப் பார்க்கும்போது கூட ஒரு கல்மிஷத்தை உண்டாக்கி விடுகிறது?
தட்சிணாமூர்த்திதான் பேசினார், ”மிச்சமெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். இப்ப இந்தப் பெண்களை எல்லாம் பத்திரமா மதுரைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கணும்!”
”மதுரைக்கு போன் செய்து தகவல் கொடுத்துடறேன். நிலைமை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு வரதுக்கு முன் உங்களை அனுப்ப மாட்டேன். என் வீட்டிலேயாவது, தட்சிணா மூர்த்தி வீட்டிலேயாவது தங்கிக்குங்க!” என்றேன். வேறு வழி இன்றி சரி என்றாலும் பெண்களுக்கு தவிப்பு இயல்புதானே? கணபதிதான் நொந்து கொண்டான். ”ஒண்ணரை மணிக்கே போறேன்னாங்க. நாந்தான் பரீட்சைக்கு பாடம் சொல்லித் தரேன்னு உட்கார்த்தி வெச்சேன்!”
”ஏன் சார், வெளியிலே நிலைமை எப்படி இருக்குன்னு விசாரிச்சீங்களா?” என்று பிரேமாவதி கேட்டாள்.
எனக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. போலீஸ் சூப்பரிண்டெண்டின் அந்தரங்க அலுவலர் எனக்கு நெருங்கிய நண்பர். மறை ஞானப் பேழை என்ற இஸ்லாமிய ஏகத்துவ மெய்ஞ்ஞான ஏட்டின் ஆசிரியர் குழுவில் இருப்பவர். அந்தப் பத்திரிகையின் ஆர்வமுள்ள வாசகன் நான். போனை எடுத்து நம்பரைச் சுழற்றும்போதுதான் அந்த தயக்கம் வந்தது. அவர் முஸ்லிம் ஆயிற்றே? ”என்ன காஜா, நிலைமை எப்படி இருக்கு? எங்க ஆபீசில் அஞ்சாறு லேடீஸ் இருக்காங்க.. மதுரைக்கு அனுப்பி வைக்கணும். நிலைமை எப்படி இருக்கு?” கேட்கும்போதே என் குரல் தடுமாறியது. மறு முனையிலிருந்து இயல்பான குரலிலேயே பதில் வந்தது. ”இப்ப ஒண்ணும் பிரச்சினை இல்லை. பஸ் ஸ்டாண்டிலே போய் நின்னுகிட்டிருக்க வேண்டாம். பஸ்கள் போகுது. பேகம்பூர் வழி போகாம, பைபாஸ் வழியா..”
தண்டபாணியும் ஜாகிரும் மதுரையில் அவரவர்களை வீட்டிலேயே கொண்டு விட்டு விடுவதாக ஒத்துக் கொண்டார்கள். போய்ச் சேரும்போது இருட்டி விடும் இல்லையா?
முஸ்தபா காரை எடுத்தான். அனைவரையும் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு போய்ச் சேர்த்தோம். நிம்மதியுடன் ரயிலேறினார்கள்.
நிஷாவும், பிரேமாவும்!
ரோஷ்ணியும் ராணியும்!
பாதுகாப்பாக தண்டபாணியும், ஜாகிரும்!
ஊரில் இந்து முஸ்லிம் கலவரம்!
திங்கள் காலை.
வருஷாந்திர புது வணிகப் பரபரப்புடன், ஊர்க் கலவரப் பரபரப்பு. பாதி பேர் வரவில்லை. வந்திருந்தவர்கள், ஊழியர்கள், முகவர்கள், ஒரு சில பாலிசிதாரர்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் அடுத்த கிளையிலிருந்து போன் வந்தது. மானேஜர் வெங்கடாசலம்தான் பேசினார். ”ஒரே பரபரப்பா இருக்கு. கும்பல் கும்பலா ஓடி வராங்க! கல்லை வீசி எறியறாங்க! உங்க கிளைப் பக்கம்தான் கும்பல் போகுது! காரை எல்லாம் உள்ளே எடுத்து விட்டுடுங்க! கேட்டையெல்லாம் இழுத்து மூடிடுங்க! பேங்க்குக்கு ஒண்ணும் ரெமிட்டன்ஸ் அனுப்ப வேண்டாம்!”
பாதுகாப்புகளை அனுசரித்தோம். சேம்பருக்குள் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் அலுவலக வளாகத்தில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
யாரோ ஒருவர் சுடச் சுடத் தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம்.
”எல்லாம் இந்துக் கடைகளாப் பாத்துப் பாத்து அடிச்சிருக்காங்க! போன மாசம் முஸ்லிம் மாநாடு நடந்தபோது எவ்வளவு அமைதியா இருந்தது? இப்ப மட்டும் ஏன் இப்படி?” சையதும் ஷேக் மஜீதும் அந்தப் பக்கம் வந்தபோது அனைவரும் திடும் என மவுனமாகி விட்டதாக எனக்குப் பட்டது!
கடவுளே! எங்கள் ஊரிலேயா இப்படி? குடும்பமாகப் பழகிய எங்கள் ஆபீசிலேயா இந்தக் கள்ளம்?
போனை எடுத்தேன். கிராஸ் டாக். ”பேரைக் கேட்டிருக்காங்க. அம்ஜத்துனு சொன்னதும் சதக் சதக்குனு குத்திட்டாங்க! ஆள் ஸ்பாட்டிலியே காலி!”
இந்து சங்கக்காரன் ஒரு மாசமா ஸ்பீக்கரை வெச்சுக் கத்திகிட்டு போறான். நாம எல்லாரும் தேச விரோதிகளாம். பாகிஸ்தானுக்கு ஓடிப் போகணுமாம்! பள்ளி வாசலையெல்லாம் கோவிலாக்கணும்னு பாரதியார் சொன்னாராம்! எப்படியெல்லாம் திரிச்சுப் பேசறாங்க பாத்தியா?”
பிடிக்கவில்லை. போனைக் கீழே வைத்தேன். டிவிஷனல் மானேஜரிடம் இருந்து போன் வந்தது. நிலைமை எப்படி இருக்கிறது? புது வணிகத்தை எப்படி பாதிக்கும்? (அவர் கவலை அவருக்கு!)
சொன்னேன். வணிக விஷயமாக பேகம்பூர் போன கோபால ராவ் உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம். அங்குள்ள முஸ்லிம் பெரியவர்கள் தலையீட்டினால் தப்பித்தார்! இத்தனைக்கும் அவரது வணிகத் தொடர்புகள் அத்தனையும் பேகம்பூரில்தான்!
திண்டுக்கல் அமைதியை நொக்கி நொண்டிக் கொண்டிருக்கிறது என்று செய்தித்தாள்கள் தெரிவித்தன. பாரபட்சமில்லாமல் செய்திகளை வெளியிடும் நடு நிலை நாளேடு வெளியிட்ட செய்தி: இரண்டு வகுப்பினருக்கிடையே கலவரம். ஒரு வகுப்பைச் சேர்ந்த நாகராஜன் என்பவரும் மற்றொரு வகுப்பைச் சேர்ந்த அம்ஜத் என்பவரும் கொல்லப்பட்டார்கள்!
ஊரில் மரண அமைதி. போலீஸ் அணி வகுப்பு. ”வதந்திகளை நம்ப வேண்டாம்! யாரும் பீதி அடைய வேண்டாம்! கடைகளைத் திறந்து வைத்திருங்கள். முழு பாதுகாப்பு தரப்படும்!”
”ஆமாம்! கடைகளை திறந்து வெக்கச் சொல்லிட்டு உதைக்க உதைக்க போலீஸ்காரன் வேடிக்கை பார்த்துக்கிட்டிருப்பான்!”- ஒரு கீரைக்காரக் கிழவியின் கமெண்ட்.
”பிணத்தை நாங்களே எரிக்கறோம்னு சொன்னப்போ அந்த நாகராஜனின் தங்கச்சி எஸ்.பி. கிட்டயும் கலெக்டர் கிட்டயும் கேள்வி மேலே கேள்வி கேட்டிச்சே? அவங்களாலே தாக்குப் பிடிக்க முடியலியே?”
காரில் போகும் இடமெல்லாம் அங்கங்கே காவிக் கொடிகள்! பச்சைக்கொடிகள்! வேல் கம்புகள்! திரிசூலங்கள்!
இதென்ன மீண்டும் நவகாளியா? காஷ்மீரா? வடக்கே எங்கேயாவதா? இல்லை. இது எங்க ஊர் திண்டுக்கல்லில். வெறி பிடித்துத் திரிகிறவர்கள், தீவிரவாதிகள் இல்லை. உங்களையும் என்னையும் போலச் சாதாரணர்கள். எப்படி இவ்வளவு வெறுப்பை மக்கள் மனத்தில் பயிரிட முடிகிறது? அன்பை விட துவேஷத்துக்குத்தான் சக்தி அதிகமா?
என் மனத்தில் ரத்தம் கசிகிறது.
குழந்தைக்கு சாறு கொடுப்பதற்காக பாய் கடையில் ஆரஞ்சுப் பழம் வாங்க வேண்டும். அவர்தான் பார்த்துப் பார்த்து சாறுள்ள பழமாக பொறுக்கி எடுத்துக் கொடுப்பார். கடையை நெருங்கியபோது என் மனதுக்குள் ஓர் உறுத்தல்.
”முஸ்லிம் கடையில் வாங்காதே!” அண்மையில் கேட்ட ஒரு முழக்கம் என்னை தடுத்து நிறுத்தியது.
ஆண்டவா! என்னை என்ன செய்து விட்டாய்? ஸ்வாமி! நான் சாயி பக்தன். அல்லா ஏசு நீ அல்லவா? அரனும் அரியும் நீ அல்லவா? என்று பாடுகிறவன். காந்தியவாதி என்று சொல்லிக் கொள்கிறவன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று சொல்லி சப்கோ சன்மதி தே பகவான் என்று பிரர்த்திக்கிறவன்! என் மனத்தையே எப்படி குழப்பி விட்டர்கள்?
என் மனத்திலுமா இந்த களங்கம்? இந்த நஞ்சு? ”அறியாமையிலிருந்து அறிவுக்கும், இருளில் இருந்து வெளிச்சத்துக்கும், மரணத்திலிருந்து அமரத்வத்துக்கும் இட்டுச் செல்வாயாக என்ற வீரிய வாசகம் அல்லவா நான் பயின்றது? சர்வே ஜனா சுகினோ பவந்து என்று இந்துக்கள் சொல்வதும், ”அசத்தியம் அழிந்து விட்டது, சத்தியம் வந்து விட்டது” என்று இஸ்லாமிய மறை புகழ்வதும் என்ன ஆயிற்று?
நினைத்து நினைத்து என் தலை வெடிக்கும் போல் ஆயிற்று. வழக்கம் போல் பணத்தைக் கொடுத்து பாயிடம் ஆறு பழங்களை வாங்குவதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போய்க் கொண்டிருந்தேன்.
பக்கத்து ஜூஸ் கடை காவி வேட்டி தரித்திருந்த கடைக்காரர், ”பாய்!கடையைப் பத்து நிமிஷம் பார்த்துக்குங்க, வந்திடரேன்!” என்றார்.
பாய், ”சரி, சாமி! போய்ட்டுப் பொறுமையா வாங்க! அபிராமி கோவில்லே சாயரட்சை ஆரம்பிச்சிடுச்சு, சீக்கிரம் போங்க!” என்றார். அந்தக் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் ”என்ன ஜூஸ் வேணுங்க?” என்று விசாரித்தார்.
அபிராமி அம்மன் கோவில் மணி கணகண என்று அடித்தது. கண்ணெதிரே தெரிந்த அம்மன் சன்னிதியில் மெய் குளிர தீபாராதனை.
”அல்லாஹூ அக்பர்!” என்றார் பாய்.
”நம்ம ஊர் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாதுங்க!” என்றேன் உணர்ச்சி வசப்பட்டு.
”இன்ஷா அல்லா!” என்றார் பழக்கடை சாயபு.
(நன்றி : சாவி – 30.5.1990)