நடைப்பிணம் மாதிரி ராணியம்மாவின் அறையிலிருந்து வெளியே வந்தான் மாணிக்கம். அவனுடைய பேயறைந்த முகத்தைப் பார்த்துக் கலவரமடைந்த அப்துல்காதர், என்ன விஷயமென்று விசாரித்ததற்கு பதிலெதுவும் சொல்லாமல் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டு கொஞ்ச நேரம் தனிமையிலிருந்தான்.
தனிமையில் சிந்தனை கன்னாபின்னாவென்று ஓடியது.
அந்த சிவகாமி இவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தவளாயிருக்கலாம். அதற்காக அந்த அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்வதற்குத் தான் உடந்தையாயிருப்பதா? புதையலுக்காகப் புருஷனையே தீர்த்துக் கட்டினவளாமே இந்த ராணியம்மா! இந்தப் பஞ்சமா பாதகியிடமிருந்து அந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டுமே என்று சிந்தித்தான். சின்னதாய் ஒரு பொறி தட்டியது. சுதாரித்துக் கொண்டு போய் ராணியம்மாவின் அறைக்கதவைத் தட்டினான். மதியத் தூக்கம் தடைப்பட்ட கடுப்பில் கதவைத் திறந்து இவனை முறைத்த ராணியம்மாவைப் பணிவாய் நமஸ்கரித்து, ‘ராணியம்மா, நீங்க கோச்சுக்கலன்னா நா ஒரு சின்ன யோசன சொல்லலாமா’ என்றான். வேண்டா வெறுப்பாய் அவள் அனுமதி கொடுத்ததும் இவன் ஆண்டவனை நினைத்துக் கொண்டு வார்த்தைகளை விட்டான்.
"ராணியம்மா, இந்த மந்திரவாதி, புதையல், சமாசாரம் நானும் எங்க கிராமத்துல கேள்விப்பட்டிருக்கேன். பலியாகிற ஆள் சத வச்சு வாட்டசாட்டமா இருந்தாத்தான், புதையலக் காவல் காக்கற சாத்தான் பலிய ஏத்துக்குமாம். இந்த சிவகாமி மாதிரி எலும்புந் தோலுமான ஒரு பொம்பளப்பலி குடுத்தா, அத ஏத்துக்காதுன்னு சொல்லுவாங்க. மஹாராஜா வெய்ட் கூடின ஆள், சரி. ஆனா, இந்த நோஞ்சான் பொம்பளயப் பலி குடுத்து அது வீணாப் போயிரக் கூடாது ராணியம்மா."
"அதுக்கு என்ன செய்யணுங்கற?"
"நம்ம தோட்டத்துப் புதயல் எங்க போயிரப் போகுது ராணியம்மா? கொஞ்சம் லேட் பண்ணுவோம். ஒரு ரெண்டு மாசம் நல்ல தீனி போட்டு இந்தப் பொம்பளயத் தேத்துவோம். ரெண்டு மாசத்துல ஒங்கள மாதிரி கொழு கொழுன்னு ஆயிருவா. அதுக்கு நா கியாரண்டி. அதுக்குப் பெறவு ஜோரா பலி குடுப்போம்."
ராணியம்மா யோசனையில் ஆழ்ந்தாள். மாணிக்கத்துக்கு நம்பிக்கை வந்தது.
‘நீ சொல்றதும் சரியாத்தாண்டா தெரியுது மாணிக்கம்’ என்றாள் ராணியம்மா.
"கெணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டு போயிரப் போகுது? மந்திரவாதி வந்தான்னா நா அவனத் திருப்பி அனுப்பிச் சிர்றேன். நீ சொல்ற மாதிரி நாம லேட் பண்ணுவோம். சனியன் நல்லாக் கொழுக்கட்டும்."
நிம்மதிப் பெருமூச்சோடு மாணிக்கம் தன் இடத்துக்குத் திரும்பினான். சிவகாமி மேலே அவனுக்கொரு பரிவு ஏற்பட்டது. அரண்மனைச் சாப்பாட்டை நன்றாய் சாப்பிடட்டும் என்று அவளுக்கு விதவிதமாய் ஆக்கிப் போட்டான்.
ஒரு மாதம் விர்ரென்று ஓடிவிட்டது.
அன்றைக்கு மதிய உணவு நேரம், ராணியம்மா மாணிக்கத்தைத் தனியாய் அழைத்தாள். ‘நேத்து மந்திரவாதி ஃபோன் பண்ணாண்டா மாணிக்கம். இன்னிக்கி நைட்ல காரியத்த முடிச்சுப் புடலாம்னான்’ என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
மாணிக்கத்துக்கு பகீரென்றது.
"இது… வந்து…. ராணியம்மா, இன்னும் ரெண்டு மாசம் முடியலியே ராணியம்மா!"
‘ரெண்டு மாசம்னு ஒரு கணக்காடா இருக்கு?’ என்று அவனை மறுத்தாள் ராணியம்மா.
"இன்னிக்கி அமாவாசயாம் இன்னிக்கி செஞ்சிருவோம்னான், நானும் சரின்னுட்டேன். இந்தச் சனியன் என்ன தீவனம் திங்கிது! இதுக்கு ஆக்கிப் போட்டே கஜானா காலியாயிரும் போலயிருக்கு. சரி, நீ என்ன செய்ற, அன்னிக்கி சொன்ன மாதிரி இன்னிக்கி நைட் சாப்பாட்டுல ஒரு ஐட்டத்ல இந்த மருந்தக் கலந்து குடுத்துர்ற. மத்தத நா பாத்துக்கறேன். இதப் பத்தி யார்ட்டயும் மூச்சு விடக்கூடாது. தெரிஞ்சதா?"
ராணியம்மா கொடுத்த ‘மருந்து’ப்புட்டியை எந்திரம் மாதிரி பெற்றுக் கொண்டான் மாணிக்கம்.
ஐயையோ, இப்போது என்ன செய்வது, இன்னும் சில மணிநேரமே உள்ள நிலையில் இந்தக் கொலையை எப்படித் தடுப்பது? யாரிடம் போய் யோசனை கேட்பது, யாரிடம் உதவி கோருவது?
மாணிக்கத்தின் முன்னே அப்துல்காதர் ஒருவன் மட்டுமே இருந்தான்.
அப்துல்காதரால் என்ன செய்யக்கூடும் என்கிற அவநம்பிக்கை இருந்தாலும், அவனோடு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்வதையன்றி இப்போது வேறெதுவும் செய்வதற்கில்லை யென்கிற சூழ்நிலையில், அப்துல்காதரை இழுத்துக் கொண்டு, அவர்கள் படுக்கிற அறைக்குள் போய்க் கதவைத் தாளிட்டான்.
பிறகு, கலவரக் குரலில் எல்லாவற்றையும் கடகடவென்று அவனிடம் ஒப்பித்தான்.
மஹாராஜாவை சிவலோகப் பதவியடையச் செய்தது, சிவகாமியைக் காவு கொடுக்க ஏற்பாடாகியிருப்பது எல்லாவற்றையும் விலாவாரியாய்ச் சொன்னான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அப்துல் காதர் நம்பிக்கையோடு பேசினான்.
"நீங்க கவலையேப்படாதீங்க அண்ணாச்சி. நானும் எல்லாத் தையும் நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். சிவகாமியக் காப்பாத்திருவோம். இந்த ராட்சசி ராணியம்மாவையும் அந்த மந்திரவாதியையும் புடிச்சி உள்ள தள்ள ஏற்பாடு பணிருவோம். எங்கிட்ட பொறுப்ப விட்டுட்டு நீங்க நிம்மதியாயிருங்க."
"நீ என்ன தம்பி எரும மாட்டு மேல மழ பெஞ்ச மாதிரி சாவகாசமாப் பேசிட்டு நிக்கிற. டைம் ஓடிட்டிருக்கு. சிவகாமிய எப்பக் காப்பாத்தப் போற, எப்படிக் காப்பாத்தப் போற."
படபடவென்று பேசிய மாணிக்கத்தை முதுகில் தட்டி அப்துல்காதர் சமாதானப்படுத்தினான்.
"அண்ணாச்சி, பொறுமையாயிருங்க அண்ணாச்சி. நீங்க என்ட்ட ஒரு பெரீய ரகசியத்தச் சொன்னீக. இப்ப நா ஒங்ககிட்ட ஒரு சின்ன ரகசியத்தச் சொல்லுதேன், கேக்கிகளா?"
மாணிக்கம் அவனை வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டிருக்க, அப்துல்காதர் அழுத்தமாய்ச் சொன்னான்:
"அண்ணாச்சி, நா ஒரு அநாதையுமில்ல, நா பட்லருமில்ல, எம்ப்பேர் அப்துல்காதருமில்ல."
"பெறவு?"
"நா ஒரு போலீஸ் ஸி ஐ டி."
(சமநிலைச் சமுதாயம், ஜூன் 2008)