ஆனந்தும் மகேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘நான் சமாளித்துக் கொள்வேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்’ என்று அக்ஷய் சொன்ன விதத்தைப் பார்த்தால் அவன் தன் மரணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதாகவே அவர்களுக்குப் பட்டது. ஆனால் அவர்களை அதைப் பற்றி மேலே யோசிக்க விடாமல் அக்ஷய் சொன்னான். "நமக்கு இப்போது முதல் பற்றாக்குறை நேரம் தான். அதனால் அதை வீணாக்காமல் அடுத்ததாக நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்போம்"
ஆனந்த் சொன்னான். "எனக்கு மிஸ்டர் எக்ஸ் சொன்னதில் ஒரு நெருடல் என்ன என்றால் நாம் போகிற டாக்சியைத் திருப்பி அனுப்பி விட வேண்டுமாம். உன்னை ஒப்படைத்து விட்டு அம்மா வருணை அழைத்துக் கொண்டு நான் வருவது எப்படி என்று அந்த ஆள் சொல்லவே இல்லை. அந்த அதிகாலை நேரத்தில் ஏதாவது டாக்சி கிடைக்கிற வரையில் நாங்கள் என்ன செய்வது?"
மகேந்திரன் சொன்னான். "ஒரு வேளை அவர்களுடைய ஆட்களே திரும்பவும் வந்து உங்கள் மூன்று பேரையும் துப்பாக்கி முனையில் மறுபடி கடத்திக் கொண்டு போனாலும் போகலாம்"
அக்ஷய் சொன்னான். "அதுவும் சாத்தியம் தான். முதலில் நமக்கு அந்த இடம் பற்றி விவரமாகத் தெரிந்தால் சரியாகத் திட்டமிடலாம்."
ஆனந்த் மகேந்திரனிடம் கேட்டான். "மகேந்திரன் நமக்கு அந்த இடத்தைப் பற்றி முழு விவரம் கிடைத்தால் தேவலை. ஏற்பாடு செய்ய முடியுமா?"
"அதில் ஒரு பிரச்சனையும் இல்லை ஆனந்த்…." என்று சொன்ன மகேந்திரன் தன் செல் போனில் இரண்டு நபர்களுக்குப் போன் செய்தான்.
ஒரு மணி நேரத்திற்குள் அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் கிடைத்தன. மகேந்திரன் தனக்கு வந்த தகவல்களை ஒரு தாளில் குறிப்பெடுத்துக் கொண்டான். பின் ஆனந்திடமும் அக்ஷயிடமும் சொன்னான்.
"அவர்கள் நம்மை விட ஒருபடி முன்னாலேயே யோசிக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. என் இரண்டு நண்பர்கள் தனித் தனியாக அந்தப் பகுதிக்குப் போயிருக்கிறார்கள். பாதி கட்டி முடித்த அந்த வணிக வளாகத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் வேஷத்தில் கிட்டத்தட்ட 25 போலீஸ்காரர்களும், வேறு சில ஆட்களும் இருக்கிறார்களாம். அதே போல் அதற்கு ஒரு மைல் சுற்று வட்டாரத்திலும் அங்கங்கே கண்காணிப்புக்கு ஆட்கள் இப்போதிலிருந்தே நிறுத்தப்பட்டிருக்கிறார்களாம். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கட்டிட காண்ட்ராக்டருக்கும், கட்டிட சொந்தக்காரருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்டிட வேலை மூன்று மாதமாய் நின்று போயிருக்கிறதாம். அதனால் இப்போது அங்கே ஏதோ வேலை பார்ப்பது போல் கூடியிருக்கிற ஆள்கள் எதிரியின் ஆட்கள் தான் என்பது நிச்சயம். அதிலும் யாராவது அங்கே சிறிது நின்றால் கூட கூப்பிட்டு என்ன ஏது என்று விசாரிக்கிறார்களாம். என் நண்பன் ஒருவன் ஏதோ வழி கேட்பது போல கேட்டு விட்டு நகர்ந்திருக்கிறான்"
தலையசைத்த ஆனந்த் "சரி அந்த தெருவைப் பற்றியும் பகுதியைப் பற்றியும் சொல்"
"ஆக்ரா நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் அந்த சாலை சுமார் எட்டு கிலோமீட்டர் நீளம் உடையது. கடைசியில் இருப்பது ஒரு தனியார் கல்லூரி தான். அதோடு சாலை முடிந்து விடுகிறது. ஏழாவது கிலோமீட்டர் தூரத்தில் தான் அவர்கள் நமக்கு சொன்ன கட்டிடம் இருக்கிறது. ஆக்ரா நெடுஞ்சாலையில் இருந்து முதல் 2 கிலோமீட்டர் வரை சில வீடுகள் இருக்கின்றன. மூன்றாவது கிலோமீட்டரிலிருந்து கடைசி வரை இடையிடையே இப்போது தான் சில வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதனால் அந்த சாலையில் கல்லூரி ஆரம்பிக்கும் நேரத்திலும், கல்லூரி முடியும் நேரத்திலும் தவிர மற்ற நேரங்களில் அதிகமாய் போக்குவரத்தோ ஜன நடமாட்டமோ கிடையாது. அதிலும் இரவு 10 மணிக்கு மேல் காலை ஏழு மணி வரை அந்த சாலை சுத்தமாகவே வெறிச்சோடி தான் கிடக்கும்…."
ஆனந்த் சொன்னான். "அதனால் தான் அவர்கள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்…… நம்மை வரச் சொல்லி இருக்கிற அந்த இடத்து கட்டிடத்திற்கு எதிரில் என்ன இருக்கிறது?"
"காலி இடம் தான்"
ஆனந்த் சொன்னான். "நாம் அங்கு போகும் போதும் கண்டிப்பாக அந்த கட்டிடத்தில் நிறைய ஆட்களை துப்பாக்கியோடு அவர்கள் மறைவாக நிறுத்தி வைத்திருப்பார்கள்".
மகேந்திரன் தலையசைத்தான்.
"இந்த சாலையில் குறுக்காக வேறெதாவது தெருக்கள் இருக்கின்றனவா?" அக்ஷய் கேட்டான்.
"ஒரே ஒரு தெரு தான் குறுக்கில் செல்கிறது. அது அந்த கட்டிடத்திற்கும் கல்லூரிக்கும் இடையே வருகிறது"
"அந்த தெரு எங்கே முடிகிறது?"
"அது அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு எம்.பி வீட்டோடு முடிகிறது. அந்தக் கல்லூரி அந்த எம்.பிக்கு சொந்தமானது. அதனால் அதற்கு பக்கத்தில் பெரிய பங்களா ஒன்றை அந்த ஆள் நீச்சல் குளத்தோடு கட்டி இருக்கிறார். அந்த ஆள் மாதம் ஒரு முறை வார இறுதி நாட்களில் அங்கு வந்து தங்கி இருப்பார்"
அக்ஷய் சொன்னான். "அந்த எம்.பி பற்றி சொல்"
அதை எதற்குக் கேட்கிறான் என்று விளங்கா விட்டாலும் மகேந்திரன் சொன்னான். "அந்த ஆள் ஆளுங்கட்சி எம்.பி. வயது 35. கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஜாலி பேர்வழி. இப்போது அவர் பிரபல நடிகை ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒரு கிசு கிசு இருக்கிறது…."
அக்ஷய் தொடர்ந்து அந்த பகுதியைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டான். சில கேள்விகளுக்கு மகேந்திரன் தன் நண்பர்களை மறுபடி அழைத்து பதில் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
கடைசியில் மூவரும் என்ன செய்வது என்று ஆலோசித்தார்கள். ஆனந்த் சொன்னான். "என்ன செய்வதாக இருந்தாலும் நாம் அம்மாவும், வருணும் நம் வசம் வந்து சேரும் வரை ஒன்றும் செய்ய முடியாது. நாம் முன் கூட்டி ஆட்களை அங்கே அனுப்பி வைக்கவோ, அங்கு வேறெதாவது ஏற்பாடு செய்யவோ முடியாது. கண்டிப்பாக இன்று இரவில் இருந்தே அவர்கள் ஆட்கள் அங்கே இன்னும் அதிகமாக குவிந்து விடுவார்கள். என்ன செய்தாலும் அவர்களுக்குத் தெரிந்து விடும்….."
அதை ஆமோதித்த அக்ஷய் சொன்னான். "…அப்படியானால் என்ன செய்வதாக இருந்தாலும் அம்மாவும் வருணும் வந்து சேர்ந்த பிறகு செய்ய வேண்டும்…"
மூன்று பேரும் யோசித்தார்கள். பல விதமான திட்டங்கள் அவர்கள் மனதில் எழுந்தாலும் அதில் கூடவே சில சிக்கல்களும் இருந்தன. கடைசியில் ஒரு திட்டத்தை அக்ஷய் சொன்னான்.
கேட்டு விட்டு ஆனந்தும் மகேந்திரனும் யோசித்தார்கள். ஆனந்த் சொன்னான். "திட்டம் பரவாயில்லை. ஆனால் அதை செயல்படுத்தும் நேரத்திலும், விதத்திலும் சிறிய தவறு நடந்தால் கூட நமக்கு ஆபத்து தான்…."
"நம் நிலைமையே இப்போது ஆபத்தில் தான் இருக்கிறது. அதனால் அதன் தீர்வில் ஆபத்தில்லாமல் இருக்காது."
"அக்ஷய், என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதே. இதை நம்மால் மட்டும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை" மகேந்திரன் வெளிப்படையாகச் சொன்னான்.
"அதற்கு இன்னொரு ஆள் நமக்கு உதவ முடியும்"
"யாரது"
"மது" என்று சொன்ன அக்ஷய் மது யார் என்று அவர்களுக்கு விளக்கினான்.
"நமக்காக அவன் செய்வானா?"
"செய்வான் என்று நினைக்கிறேன். எதற்கும் அவனைக் கேட்டுப் பார்க்கலாம்"
ஆனந்த் கேட்டான். "அவனை நம்ப முடியுமா அக்ஷய்"
அக்ஷய் சொன்னான். "நம்பலாம்"
அக்ஷய் வெளியே சென்று பொதுத் தொலைபேசி மூலம் மதுவிற்குப் போன் செய்தான். மது பேசினான். "ஹலோ"
"மது நான் அக்ஷய் பேசுகிறேன். சஹானாவிடம் நான் பேசிய போது நீ எனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று சொன்னதாகச் சொன்னாள். அது ஒரு கண நேர இரக்கத்தில் சொன்னதா? இல்லை உண்மையாகவே சொன்னதா?"
"அக்ஷய் என்ன உதவி வேண்டும் கேள். செய்கிறேன்"
"நேரில் வா. சொல்கிறேன்" என்ற அக்ஷய் மதுவிற்கு வரவேண்டிய இடத்தை விவரித்தான்.
"உடனே கிளம்புகிறேன் அக்ஷய்"
அக்ஷய் நன்றி சொல்வதற்குள் மது போன் இணைப்பைத் துண்டித்து விட்டான்.
‘வீடியோ கேம்ஸ்’ விளையாடிக் கொண்டிருந்த வருணை சாரதா இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். கடத்திக் கொண்டு வந்தவர்கள் அவர்கள் இருவருக்கும் எந்த விதக் குறையும் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். சாப்பிடும் பொருள்கள், வருணுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள், சாரதாவிற்கு ஆன்மிக, கதைப் புத்தகங்கள், என்று அவர்களுக்கு தேவைப்பட்டவை என நினைத்ததை எல்லாம் போதுமான அளவு அங்கே வைத்திருந்தார்கள். ஆனாலும் விளையாடும் வயதுள்ள அந்த சிறுவனுக்கு அந்த வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடப்பது பெரிய தண்டனையாகவே இருந்தது. விளையாடி, காமிக்ஸ் படித்து அலுத்த போதெல்லாம் அவளிடம் வந்து அவன் பேசுவான். பேச்சு எப்போதுமே அக்ஷய் பற்றியே இருக்கும். "சின்ன வயதில் அக்ஷய் அங்கிள் என்னவெல்லாம் செய்வார், குறும்பு செய்வாரா?" என்றெல்லாம் கேட்பான்.
மகனுடைய சிறு வயதுக் குறும்புகளை ரசிக்கும் முன்னே அவன் காணாமல் போனதை அவள் சொன்னாலும் வருண் விடாமல் கேட்பான். "அவர் காணாமல் போவதற்கு முன்னால் என்னவெல்லாம் செய்தார்"
தன் மகன் மீது அவனுக்கிருந்த அளவு கடந்த பாசத்தை எண்ணி சாரதாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கண்டிப்பாக அக்ஷய் அங்கிள் தங்கள் இருவரையும் காப்பாற்றி விடுவார் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. அவன் அவ்வப்போது சாரதாவிற்கு தைரியம் சொன்னான்.
அவனிடம் பேச்சுக் கொடுக்கும் போது அவன் தன் தந்தை பற்றி பேச நேர்ந்த போதெல்லாம் முகம் வாடினான். அவன் சொன்ன ஒருசில நிகழ்வுகள் அவனுடைய தந்தை ஒரு மட்டமான மனிதன் என்பதை அவளால் கணிக்க முடிந்தது. "எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் உலகில் இருக்கிறார்கள்" என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் மனம் அக்ஷயைப் பற்றி அதிகம் நினைத்தது. வருண் அளவிற்கு அவளால் தைரியமாக இருக்க முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன் ஒருவன் வந்து "நாளை காலை மூன்றரை மணிக்கு தயாராக இருங்கள். உங்களை உங்கள் வீட்டாரிடம் ஒப்படைத்து விடப்போகிறோம்" என்று சொல்லி விட்டுப் போனான். வருண் அதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டான். தாயைப் பிரிந்து இது வரை பிரிந்திராத அவனுக்கு வீடு திரும்புகிறோம் என்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அந்தக் கணத்தில் இருந்து சாரதாவிற்கு வயிற்றை ஏதோ ஒன்று பிசைய ஆரம்பித்தது. அக்ஷயிற்கு என்ன ஆகும் என்ற பயம் அவளை பலமாக ஆட்கொண்டது. என்ன தான் மனதை வேறு பக்கம் திருப்பினாலும் மனம் திரும்ப அதே பயத்தில் நின்றது.
பெருமூச்சு விட்டவளாக வருணிடம் சொன்னாள். "வருண் சாப்பிடுகிறாயா? ஏதாவது தயார் செய்யட்டுமா?"
வருண் திரும்பி அவளைப் பார்த்தபடி கேட்டான். "நீங்களும் சாப்பிடுகிறீர்களா பாட்டி"
"எனக்கு வேண்டாம்"
"ஏன்?"
"நான் விரதம்"
"எதற்கு?"
அவனிடம் எப்படி விளக்குவது என்று புரியாமல் விழித்த சாரதா சுருக்கமாகச் சொன்னாள். "அக்ஷய் அங்கிளுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அதற்கு விரதம்…"
"விரதம் இருந்தால் கடவுள் அவரைப் பார்த்துக் கொள்வாரா?"
"ஆமாம்"
"அப்படியானால் நானும் சாப்பிடாமல் விரதம் இருக்கிறேன். இரண்டு பேர் விரதம் இருந்தால் கடவுள் இன்னும் நன்றாகப் பார்த்துக் கொள்வாரில்லையா?"
சாரதா கண் கலங்கினாள்.
(தொடரும்)
“
Please do not kill Akshay.
Ganesan sir, please dont kill akshay.
கதை மிகவும் அருமையாக உள்ளது. தொடரவும். சுபமாக முடிக்கவும்
அன்பான நண்பர்களை ஆபத்தில் அறியலாம் என்பதற்கு உதாரணம் மகேந்திரன், மது! வருணின் ஆழமான அன்பு அக்ஷயைக் காப்பாற்றும்!
கணேசன் ஸார் இந்த கதை அருமையாக உள்ளது.