அமானுஷ்யன் (89)

குறுந்தாடிக்காரன் கதவைத் தட்டியவுடனே அந்த அறைக் கதவு திறக்கப் படவில்லை. மாறாக பக்கத்து அறைக் கதவு திறந்து ஒரு ஆள் எட்டிப் பார்த்தான். பின் கதவை மறுபடியும் கதவை மூடிக் கொண்டான். ஒரு நிமிடம் கழித்து தான் தட்டிய அறைக்கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த ஒரு ஆள் அவனை உள்ளே விட்டு வெளியே கதவைத் தாழிட்டுப் போய் விட்டான்.

தாடிக்காரனுக்கு பயத்தில் குப்பென்று வியர்த்தது. பக்கத்து அறையிலும் அவர்கள் ஆட்களே இருப்பது புரிந்தது. வந்துள்ளது அவன் தானா என்று ஒரு முறை உறுதி செய்து விட்டு அவன் தெரிவித்த பின் தான் இந்தக் கதவு திறந்திருக்கிறது என்பது தெரிந்தது. அவனை சுட்ட பின் தான் கதவைத் திறப்பார்களா, குண்டுக் கட்டாய் தூக்கிக் கொண்டு போக அந்த பக்கத்து அறைக்காரர்கள் வருவார்களா என்றெல்லாம் சந்தேகம் வந்து அவனைப் பாடாய் படுத்தியது.

அந்த அபாயகரமான நடுத்தர மனிதன் கட்டிலில் உட்கார்ந்திருந்தான். உள்ளே நுழைந்த தாடிக்காரனை உணர்ச்சியே இல்லாமல் பார்த்தான்.

"உட்கார்" என்று எதிரே இருந்த அழுக்கான ப்ளாஸ்டிக் நாற்காலியைக் காட்டினான்.

கோடிக்கணக்கான பணத்தை பட்டுவாடா செய்யும் அளவிற்கு வசதியாக இருக்கும் இந்த இயக்கத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவன் ஏன் இப்படி பிச்சைக்காரன் மாதிரி இந்த மாதிரி இடத்தில் தங்குகிறான்? என்று நினைத்துக் கொண்டே அந்த நாற்காலியில் தயக்கத்துடன் தாடிக்காரன் உட்கார்ந்தான்.

"அவன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடித்து விட்டாயா?"

குறுந்தாடி எச்சிலை மென்று விழுங்கினான். அந்த ஆள் உடனடியாக சுட்டு விடப் போகிறான் என்று பயந்தவன் அவசர அவசரமாக மந்திரியும் ரெட்டியும் அவன் அம்மாவைக் கடத்திக் கொண்டு போய் ஓரிடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும் அவன் அம்மாவை விடுவிக்க அவனை வரச் சொல்லி இருக்கிறார்கள் என்றும் நாளைக்கே அவன் அவர்கள் பிடியில் சிக்கிக் கொள்வான் என்றும் விவரமாகச் சொன்னான்.

அந்த மனிதனுக்கு அவன் சொன்னதில் பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது போலத் தெரியவில்லை. ஆனால் அவன் சென்ற முறை போல முகத்தையும் சுளிக்கவில்லை. தாடிக்காரன் பயந்தது போல துப்பாக்கி எடுத்து சுட்டு விடவும் இல்லை. அவன் சொன்ன விவரங்கள் அந்த மனிதனுக்கு முதலிலேயே தெரியுமோ என்கிற சந்தேகம் தாடிக்காரனுக்கு வந்தது.

"அவர்கள் அவன் அம்மாவை ஏன் நம்மிடம் ஒப்படைக்கக் கூடாது, மீதியை நாம் பார்த்துக் கொள்ளலாமே"

"நானும் அப்படித்தான் சொல்லிப் பார்த்தேன். ஆனால் அந்த சிபிஐக்காரன் ஒத்துக் கொள்ள மாட்டேன்கிறான். மந்திரி அந்த சிபிஐக்காரன் கருத்துக்கு எதிராய் எதையும் செய்ய விரும்பவில்லை. அந்த சைத்தானை சாகடிப்பது நம்மைக் காட்டிலும் அவருக்கு முக்கியம் என்கிறார்"

ஒன்றுமே சொல்லாமல் அந்த மனிதன் அவனையே கண் சிமிட்டாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சொன்னான். "நாளைக்கு இரவிற்குள் அவன் பிணம் நம்மிடம் வந்து சேராவிட்டால் வேறு சில பார்க்க விரும்பாத பிணங்களை அந்த மந்திரி பார்க்க வேண்டி இருக்கும் என்று சொல்"

குறுந்தாடிக்காரன் திகைப்புடன் பார்த்தான்.

அந்த ஆள் அவனிடம் அமைதியாகக் கேட்டான். "ஏன் அந்த மந்திரியிடம் எப்படி சொல்வது என்று உனக்கு தயக்கமாக இருக்கிறதா?"

அவசர அவசரமாக குறுந்தாடி மறுத்தான். "இல்லை. இல்லை. இப்போதே போய் சொல்கிறேன்"

"நீ போகலாம்"

********

ஒரு காலத்தில் அக்‌ஷய் தியானம் செய்வதைப் பார்த்து பல புத்த பிக்குகள் ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள். பூடான், சீன புத்த மடாலயங்களில் எத்தனையோ வித்தைகள் அவன் கற்றிருந்தான். அற்புத சக்திகளைப் பெற்றிருந்த சில மூத்த பிக்குகள் அவன் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட வேகத்தைப் பார்த்து மெச்சியிருக்கிறார்கள். துறவியாகும் எண்ணம் அவனுக்கு இல்லாமல் இருந்தாலும், புத்த பிக்குகள் அவன் ஒரு நாள் உலகம் போற்றும் புத்த மத போதகனாக வருவான் என்று நினைத்திருக்கிறார்கள்.

அதே போல தான் அவன் திபெத்தில் இருந்த போது பல ரகசிய வித்தைகளை அவனுக்குச் சொல்லித் தந்த திபெத்திய லாமாக்களும் அவனுக்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அவன் தியானத்தில் சமாதி நிலையில் எத்தனையோ முறை இருந்திருக்கிறான். மனம் ஒரு சிறு முணுமுணுப்பு கூட செய்திராத நிலைகளில் இருந்திருக்கிறான்.

ஆனால் மும்பையில் அவனை வளர்த்த பெற்றோர் மரணத்திற்குப் பிறகு அவனால் அந்த அற்புத நிலைகளுக்குப் போக முடிந்ததில்லை. ஆழமான பல நிலைகளுக்குப் போக முடிந்தாலும் அந்த அடித்தளம் வரை அவனால் போக முடியவில்லை. அவன் ஒரு முறை ஒரு மூத்த லாமாவிடம் காரணம் கேட்டான். அவர் உடனடியாக அதற்குப் பதில் சொல்லாமல் அவனை சிறிது நேரம் ஊடுருவிப் பார்த்தார். அவன் வாழ்க்கை முழுவதையுமே ஒரு புத்தகம் படிப்பது போல சில வினாடிகளில் அவர் படித்து முடித்தது போல இருந்தது. பிறகு ஒரே வார்த்தை சொன்னார். "கர்மா"

அவன் அவரை விடாது நச்சரித்துக் கேட்ட போது அவர் சொன்னார். "கற்றது எதுவுமே வீண் போகாது. வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக உதவும். ஆனால் நீ சந்திக்க வேண்டியது இனியும் நிறைய இருக்கிறது. நல்லதும், கெட்டதும்….". அதற்கு மேல் அவரிடம் இருந்து அவன் ஒரு வார்த்தை கூட பெற முடியவில்லை.

அந்த நேரத்தில் ‘இருந்த இரண்டு உறவுகளையும் இழந்த எனக்கு இனி என்ன கெட்டது பார்க்க என் வாழ்க்கையில் இருக்கிறது’ என்று அவன் பல முறை எண்ணி இருக்கிறான். ஆனால் அதன் பின் தொடர்ந்த பிரச்னைகளைப் பார்த்த போது அவனால் அந்த லாமாவின் கணிப்பை எண்ணி வியக்காமல் இருக்க முடிந்ததில்லை.

இப்போதும் அவன் தியானத்தில் ஆழமாக சென்று கொண்டிருக்கிறான். மனதின் மௌனமான நிலை இப்போது அவன் லட்சியமல்ல. ஆழ்மனதின் பழைய பதிவுகளைப் படிக்க முடிவது தான் அவன் இப்போதைய லட்சியம். பழைய நினைவுகள் எல்லாம் பறி போன பிறகு இமயமலைச்சாரலில் இருந்த அவன் விழித்தெழுந்த அந்த புத்த விஹாரத்தில் இருந்தே அவன் இதை முயன்று வருகிறான். ஆனால் பல முறை அவன் முயன்றும் அவன் ஆழ்மனம் அவனுக்கு கண்ணா மூச்சு காட்டிக் கொண்டிருந்ததே தவிர அதிகமான விவரங்கள் தரவில்லை. சிறிது நேரத்திற்கு முன் திடீரென்று வந்த கோமா மருந்து நினைவும், ஆனந்த் சொன்னதைப் போல இப்போதைய இக்கட்டான நிலைமையும், அவனை மீண்டும் முயற்சி செய்ய வைத்திருக்கிறது.

கட்டாய எதிர்பார்ப்பு, பரபரப்பு, கவலை போன்ற உணர்வுகள் அவன் முயற்சியைத் தோல்வி அடைய வைக்கும் என்பதை அவன் அறிவான். தலைக்கு மேல் தொங்கும் மரணக்கத்தி பற்றி அவன் கவலைப்படவில்லை. விதி மேல் அவனுக்கு இருந்த அபார நம்பிக்கை ‘நடக்க இருப்பதே நடக்கும்’ என்ற எண்ணம் இந்த இக்கட்டான நிலையிலும் வலுப்பட்டு இருந்தது. அதனால் அவனுடைய இன்றைய முயற்சியில் அசாதாரணமான ஒரு அமைதி அவனுக்குள்ளே இருந்தது.

அவனது தியானம் ஆழப்பட்ட போது சிறு சிறு அமைதியான இடைவெளிக்குப் பிறகு அவன் மனதில் பழைய நிகழ்வுகள் வந்து போயின. ஆரம்பத்தில் வந்தவை அவன் எதிர்பார்த்தவை அல்ல என்றாலும் விருப்பு வெறுப்பில்லாத பார்வையாளனாக அவன் அவற்றைக் கவனித்தான்.

ஆறு வயது சிறுவனான அவனை அம்மா திலகவதி ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறாள். "இன்னும் வேகமாய்…. இன்னும் வேகமாய்…" என்று சந்தோஷத்தோடு அவன் கத்திக் கொண்டிருக்கிறான்.

….. …… ….. …..

மரணப்படுக்கையில் இருந்த தந்தை நாகராஜன் அவனிடம் சொல்கிறார். "எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் நீ தான்….. நாங்கள் பெருமைப்படுகிற ஒரே சொத்தும் நீ தான்… அழாதே… உன் அழுகையைப் பார்க்கிற சக்தி எனக்கில்லை…. சந்..தோஷ…..மா….ய்……இ..ரு……….."

…… …… …… …..

சீன புத்த விஹாரத்தில் அவனுக்கு ஒரு மூத்த புத்த பிக்கு சண்டைப் பயிற்சிகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். "எப்போதுமே சக்தியை அளவுக்கு அதிகமாக விரயம் செய்யாதே. சீக்கிரமே நீ களைத்துப் போவாய். எவ்வளவு தேவையோ அவ்வளவு சக்தி மட்டும் பிரயோகித்தால் நீ நிறைய நேரம் தாக்குப் பிடிக்கலாம்"

……. ….. …… ….. …….

ஒரு பாடல் அவன் இதயத்தின் ஆழத்தில் இருந்து எதிரொலித்தது.

"Every night in my dreams
I see you, I feel you
that is how I know you go on.

…. ….. ….. …..

Love can touch us one time
and last for a lifetime
and never let go till we’re gone."

சஹானா அவனை நேராகப் பார்த்துப் பாடவில்லை என்றாலும் அந்தப் பாடல் அவனுக்காகவே பாடியது போலவே இப்போதும் உணர்ந்தான். பாடல் முடிந்த பின்னும் அவள் உருவம் மனதில் நிழலாடியது…. திடீரென்று வருண் கலங்கிய கண்களுடன் சத்தியம் வாங்கியது நினைவுக்கு வந்தது. "நீங்கள் கண்டிப்பாய் ஒரு நாள் திரும்பி வருவீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள்"

உடனே ஒரு வலியை அக்‌ஷய் உணர்ந்தான். அப்போதும் அவன் தன் அந்த வலியையும் ஒரு பார்வையாளனாகவே பார்த்தான்.

…… …… …….. …..

மங்கிய விளக்கொளியில் ஒரு சிறு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஒரு பேச்சாளர் சொல்லிக் கொண்டிருந்தார். "நம் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரும், சிறந்த பேச்சாளருமான அப்துல் அஜீஸ் அவர்களை பேச அழைக்கிறேன்".

எல்லோரும் கை தட்டினார்கள்.

அக்‌ஷய் பேச எழுந்தான்.

…….. ……. ……. …..

ஒரு ப்ரவுசிங் செண்டரில் இருந்து அக்‌ஷய் வெளியே வருகிறான். அவன் கையில் ஒரு ‘பென் டிரைவ்’ இருக்கிறது. அதை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். யாரோ அவனைப் பின் தொடர்கிறது போல் இருந்தது. இத்தனை நாட்கள் இது நடக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறான். இனி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான். பின் தொடர்பவனின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த ‘பென் டிரைவை’ பத்திரப்படுத்துவது தான் மிக முக்கியம் என்று தோன்றுகிறது.

…… …… ……… ……

அவன் ஒரு பொதுத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறான். "ஆச்சார்யா. இங்கே நான் ஆபத்தை உணர்கிறேன். நீங்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்"

"பயப்படாதே அக்‌ஷய். எல்லாமே என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது"

அவரது நம்பிக்கையான பேச்சு அவனுக்கு ஏனோ ஆறுதலைத் தர மறுத்தது.

"ஆச்சார்யா. என் உள்மனம் வேறு மாதிரியாகச் சொல்கிறது….."

அவரிடம் இருந்து ஒரு நீண்ட மௌனம். பின் சொன்னார். "சரி அக்‌ஷய். நான் ஜாக்கிரதையாகவே இருக்கிறேன்…"

……. ……. ……. ……

அவன் ஒரு ஓட்டல் அறையில் இருந்து ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். அறையில் விளக்கில்லாததால் வெளிச்சமில்லை. வெளியே பனிக்காற்று வீசிக் கொண்டு இருந்தது. இருண்ட ஆகாயத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருப்பது மிகவும் ரம்மியமாக இருக்கிறது.

தெருவில் சத்தமில்லாமல் மூன்று கார்கள் அந்த ஓட்டல் முன் வந்து நின்றன. காரின் கதவைக் கூட உள்ளே இருந்தவர்கள் சத்தமில்லாமல் திறந்தார்கள். மூன்று கார்களில் இருந்தும் துப்பாக்கியோடு ஆட்கள் இறங்கினார்கள்.

அக்‌ஷய் இனி அங்கு இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தான்.

…… …… ……… …….

அங்கிருந்து கிளம்ப முற்பட்ட அக்‌ஷய் கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு திடீரென்று வந்து சேர்ந்தான். கண்களைத் திறந்து பார்த்த போது எதிரில் உள்ள சோபாவில் உட்கார்ந்திருந்த ஆனந்த் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஆனந்த் ‘என்ன ஆயிற்று?’ என்பதைப் போல அக்‌ஷயைப் பார்த்தான்.

மும்பை பெற்றோர் நினைவையும், சஹானா-வருண் நினைவையும் தவிர்த்து மற்ற புதிய நினைவுகளைப் பற்றி அக்‌ஷய் ஆனந்திடம் விவரித்தான்.

ஆனந்த் கேட்டான். "யார் அந்த அப்துல் அஜீஸ்?"

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Sundar

    அமானுஷ்யன் மிகவும் பரபரப்பாக போகிறது. படித்துக் கொண்டே வரும் போது தொடரும் என்ற தடை வருகையில் தான் பொறுக்க முடியவில்லை.

Comments are closed.