ஆனந்த் தன்னை சுதாரித்துக் கொண்டு "ஹலோ" என்றான்.
மறுமுனையில் இருந்து அலட்டிக் கொள்ளாத ஒரு அமைதியான குரல் கேட்டது. "ஹலோ மிஸ்டர் ஆனந்த்"
ஆனந்திற்கு செல் போனை எடுத்துக் கொடுத்த போதே அக்ஷய் செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்திருந்ததால் மறுபக்க பேச்சை அக்ஷயும் தெளிவாகக் கேட்க முடிந்தது.
ஆனந்த் பரபரப்போடு சொன்னான். "ஆமாம். நீங்கள் யார் பேசுகிறீர்கள்?"
"எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன்."
"எக்ஸா. இது என்ன பெயர்?"
"பெயரில் என்ன இருக்கிறது ஆனந்த். ஒரு அடையாளத்திற்காக அப்படி வைத்துக் கொள்ளச் சொன்னேன். உங்களிடம் ஒரு விஷயம் பேசத்தான் போன் செய்தேன். உங்கள் அம்மா என் பாதுகாப்பில் தான் இருக்கிறார்கள்."
"ஹலோ, மிஸ்டர் எக்ஸ். ஏன் என் அம்மாவைக் கடத்திக் கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?"
"ஆனந்த். நான் சுற்றி வளைத்துப் பேச விரும்பவில்லை. எங்களுக்கு உங்கள் தம்பி அக்ஷய் வேண்டும்?"
"ஏன்?"
"சும்மா தான். அவரை நீங்கள் ஒப்படைத்தால் உங்கள் அம்மாவை உங்களிடம் நாங்கள் ஒப்படைத்து விடுகிறோம்"
ஆனந்த் இதை முன்பே எதிர்பார்த்தது தான் என்றாலும் அதை நிஜமாகவே கேட்கையில் ஏனோ மனம் பதைத்தது. அவனுக்கு நாக்கு நகரவில்லை. வாழ்வின் கடைசிப் பகுதியில் இருக்கும் அம்மாவுக்காக, வாழ்க்கையை இன்னும் பெரிதாக ஆரம்பிக்காத தம்பியை எப்படி பலி கொடுப்பது என்ற கேள்வி சில மணி நேரங்களாக அவன் மனதில் எழாமல் இல்லை. அப்படியே தம்பியைப் பலி கொடுத்து தாயைத் திரும்பப் பெறுவது மீண்டும் புத்திர சோகத்தில் அவளைத் தள்ளுவது போலத் தானே? அதுவும் அவளைப் பொருத்த வரை மரணமே அல்லவா?
ஆனந்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அக்ஷய் தானே தன் எதிரியிடம் பேசத் தீர்மானித்தான். ஆனந்திடம் இருந்து செல் போனைப் பறித்து பேசினான். "முதலில் அம்மா உங்களிடம் தான் இருக்கிறார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரிய வேண்டும்."
ஆனந்த் திகைத்தான். தம்பி திடீரென்று அவர்களிடம் நேரடியாகவே பேசுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. தம்பியின் முகத்தில் தெரிய ஆரம்பித்த ஒருவித அசாதாரணமான சலனமற்ற தன்மை ஒருவிதத்தில் அவனை பயமுறுத்தியது. இந்த நேரத்தில் அவன் வேறு ஆளாகவே தெரிந்தான்.
மிஸ்டர் எக்ஸும் ஒரு கணம் அசந்து தான் போனார். பின் சுதாரித்துக் கொண்டு கேட்டார். "யார் பேசுவது?"
"யாருக்காக அந்தம்மாவைக் கடத்தினீர்களோ அதே ஆள் தான் பேசுகிறேன்"
நேரடியாக அவனிடமே பேசுவோம் என்று மிஸ்டர் எக்ஸ் எதிர்பார்க்காதது போல தோன்றியது. சில வினாடிகள் கழித்து மறுபடி குரல் கேட்டது. "அக்ஷய்?"
"ஆமாம். ஏன் குரலைக் கேட்டு கண்டுபிடிக்க முடியவில்லையா?"
ஒருவித அசட்டுச் சிரிப்பை மிஸ்டர் எக்ஸ் உதிர்த்தார். "ஒரு வேஷம், ஒரு குரல் என்று இருந்தால் உடனே கண்டுபிடிக்க முடியும் அக்ஷய். பல வேஷம் பல குரல் இருந்தால் கண்டு பிடிப்பது கஷ்டம் தானே?"
"குரலை நான் மாற்றவே இல்லையே மிஸ்டர் எக்ஸ். ஒரு வேளை என் குரலை நீங்கள் முதல் முதலாய் கேட்கிறீர்களோ?"
மிஸ்டர் எக்ஸின் அலட்டிக் கொள்ளாத அமைதி காணாமல் போயிற்று. அவனுடைய இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் முந்தைய பேச்சுக்கு பதில் பேசும் விதமாக மிஸ்டர் எக்ஸ் பேசினார். "உங்கள் அம்மா எங்கள் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார். அப்படி இல்லாமல் நான் பேச முன் வருவேனா?"
"நான் அம்மாவிடம் பேச வேண்டும். பேசினால் தான் நம்ப முடியும்"
"அக்ஷய். நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும். சந்தேகப்படும் நிலைமையில் நீங்கள் இல்லை."
"நம்பிக்கை எல்லாம் கண்ணியமானவர்களுடன் பழகும் போது தானாக வந்து விடும். உங்களிடம் நான் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?"
மிஸ்டர் எக்ஸிற்கு கோபம் வந்தது போலவும் என்ன சொல்வது என்று வார்த்தைகளைத் தேடுவது போலவும் தோன்றியது. ஆனந்த் தம்பியின் பேச்சைக் கேட்டு கவலைப்பட்டான். எதிராளியிடம் தான் தாய் மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பதை மறந்து விட்டு கோபமுறுத்தும் படி இவன் பேசுகிறானே.
"அக்ஷய் நீங்கள் நேராக நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்தால் உங்கள் அம்மாவைப் பார்க்கவும் செய்யலாம். பேசவும் செய்யலாம்."
"முதலில் போனை அவர்களிடம் கொடுங்கள். நான் பேசிவிட்டு அப்புறம் நீங்கள் சொல்லும் இடத்திற்கு நேரில் வருகிறேன்"
மிஸ்டர் எக்ஸ் அக்ஷய் கை இந்த விஷயத்தில் ஓங்குவதை ரசிக்கவில்லை போல் தெரிந்தது. "அக்ஷய், ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சொல்கிறபடி தான் நீங்கள் கேட்க வேண்டுமே ஒழிய நீங்கள் சொல்கிறபடி நாங்கள் கேட்க வேண்டியதில்லை. உங்கள் தாயார் தான் எங்களிடம் இருக்கிறார்களே ஒழிய எங்கள் தாய் உங்களிடம் இல்லை"
"உங்கள் தாயை விட முக்கியமான விஷயம் என்னிடமும் இருப்பதால் தானே நான் உங்களுக்குத் தேவைப்படுகிறேன்" அக்ஷய் மிக அமைதியாகச் சொன்னான்.
மிஸ்டர் எக்ஸ் வாய் விட்டு சிரித்தார். "அக்ஷய் உங்களிடம் இருக்கும் விஷயங்கள் உங்களுக்கு மறந்து போய் விட்டது எங்களுக்கும் தெரியும். சும்மா அட்டைக் கத்தி வீசாதீர்கள்"
அக்ஷய் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். "மறந்தது என்றுமே மறந்ததாகவே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை மிஸ்டர் எக்ஸ். எப்போது வேண்டுமானாலும் நினைவுக்கு வரலாம்"
"உங்களுக்கு நினைவுக்கு வந்து விட்டது என்று சொல்கிறீர்களா அக்ஷய்?"
"சாந்த்னி சௌக், இந்தியா கேட், கனாட் ப்ளேஸ், ரயில்வே ஸ்டேஷன், சன்சாத் மார்க், லோட்டஸ் டெம்பிள், பாரக்கம்பா ரோடு…..இதெல்லாம் என் நினைவில் நன்றாக இருக்கிறது மிஸ்டர் எக்ஸ். இன்னமும் உங்களுக்கு என் மேல் சந்தேகம் இருக்கிறதா?"
மிஸ்டர் எக்ஸ் கேட்டார். "என்ன இது டூரிஸ்ட் கைடாக மாறிவிட்டீர்களா? டெல்லியில் இருக்கும் இடங்களை மனப்பாடமாக சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்?"
"ஓ உங்களுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியாதா? புரிய வேண்டியவர்களுக்கு புரியும்."
மிஸ்டர் எக்ஸ் தர்மசங்கடத்தில் இருந்தது போல் தெரிந்தது. "கடைசியாய் என்ன சொல்கிறீர்கள்?" ஆரம்பத்தில் இருந்த அலட்டலில்லாத அமைதி இப்போது மிஸ்டர் எக்ஸின் பேச்சில் காணாமல் போய் இருந்தது.
"நான் அம்மாவிடம் பேசினால் தான் உங்களுடன் அம்மா இருக்கிறார்கள் என்று நம்புவேன். பேசிய பிறகு எங்கே எப்படி வரச் சொல்கிறீர்களோ அப்படியே வருகிறேன். நீங்கள் அதற்கு முன் ஏடாகூடமாய் நடந்து கொண்டால் அது உங்களுக்கு தான் அதிக ஆபத்து"
"சரி நான் மீண்டும் உங்களைக் கூப்பிடுகிறேன். உங்கள் அம்மாவையும் உங்களோடு பேச வைக்கிறேன். உங்கள் மொபைல் நம்பரைத் தருகிறீர்களா?"
"என்னிடம் மொபைல் போன் கிடையாது. ஆனந்த நம்பரிலேயே கூப்பிடுங்கள். பேசுகிறேன்…"
மிஸ்டர் எக்ஸ் போன் இணைப்பைத் துண்டித்தார்.
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தெளிவாக, பதட்டமே இல்லாமல் அக்ஷய் பேசியதைக் கவனித்து வந்த ஆனந்திற்கு உள்ளூர பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவனாலும் அமைதியாக இருக்க முடியும். ஆனால் தாயை பணயக் கைதியாய் வைத்திருக்கிற ஆட்களிடம் அப்படி அழுத்தந்திருத்தமாய் அலட்டிக் கொள்ளாமல் பேச அவனால் கண்டிப்பாக முடிந்திருக்காது.
"நீ ஏன் அம்மாவுடன் பேச வேண்டும் என்றாய். அம்மாவைக் கடத்தியது அவர்கள் தானா என்று உனக்கு இன்னமும் சந்தேகமா?"
"இல்லை. நான் இன்னும் கொஞ்சம் அவகாசம் வாங்க முயற்சி செய்கிறேன். அதற்குத் தான் இந்த பில்டப் எல்லாம். அவர்களைப் பார்க்கப் போகும் முன் உன் மகேந்திரனைப் பார்த்து விட்டுப் போவது நல்லது என்று நினைக்கிறேன்."
"அவர்களிடம் அப்படியெல்லாம் பேசி கோபத்தில் அவர்கள் அம்மாவை ஏதாவது கஷ்டப்படுத்தினால்…?"
"அப்படி எல்லாம் ஆகாது. நீ சினிமா அதிகம் பார்த்து பயப்படுகிறாய். ஆனந்த் பயம் தான் முதல் எதிரி. பயத்தினால் நாம் நிறையவே குழம்பி விடுகிறோம். அம்மாவை கஷ்டப்படுத்தி அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?"
"சரி அந்த இடங்கள் பற்றியெல்லாம் ஏன் சொன்னாய்?’
"கொஞ்சம் பீதியை அவர்களிடமும் கிளப்பத் தான். நீ ஆச்சார்யா வீட்டில் இருந்து எடுத்த அந்த லிஸ்ட் நினைவு வந்தது. அது எனக்கே தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டேன். எனக்கு எந்த அளவு நினைவு வந்திருக்கிறது என்று தெரியாமல் குழம்பித் தவிப்பார்கள். கொஞ்சம் பயமும் வரும். எதிரிக்கு பயம் இருப்பது நமக்கு நல்லது. நேரடியாய் சந்திக்கும் போதும் உடனடியாகக் கொன்று விடாமல் எனக்கு என்ன எல்லாம் தெரியும் என்பதைத் தெரிந்து கொள்ள நினைப்பார்கள். தெரிந்து கொள்கிற வரையில் என்னை உயிரோடு விட்டு வைக்கலாம்…."
தம்பியின் புத்திசாலித் தனம் பெருமையாய் இருந்த அதே நேரத்தில் கடைசியாய் அவன் சொன்னது கேட்டு ஆனந்திற்கு அழுகையாய் வந்தது.
(தொடரும்)
சார் கதை மிகவும் பரபரப்பாக போகிறது. யாரையும் கொல்லாமல் கதையை முடிக்கவும்.
Ganesan Sir, Yes my request is also same. Do not kill anyone at any cast.