அக்ஷய் வீட்டில் சாய்ரா பானுவை முதலில் பார்த்தது பீம்சிங் தான். அவன் அவளைப் பார்த்ததும் வெடித்தான்.
"கொலை செய்ய நீங்களுமா வந்து விட்டீர்கள்?"
சாய்ரா பானு ஒரு கணம் கூனிக் குறுகிப் போனாள். ஆனால் ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்றாள். பீம்சிங் கடுமை குறையாமல் கேட்டான். "என்ன வேண்டும்?"
சாய்ரா பானு பலவீனமான குரலில் சொன்னாள். "எனக்கு அக்ஷயைப் பார்க்க வேண்டும்"
பீம்சிங் அவளை உட்காரச் சொல்லவில்லை. அக்ஷயிடம் அவள் வந்திருப்பதைச் சொல்லப் போனான்.
அக்ஷய் வந்தவுடன் அவளை உட்காரச் சொன்னான். சாய்ரா பானு பலவீனமாகச் சொன்னாள். "பரவாயில்லை"
சிறிது நேரம் அவர்களுக்குள் ஒரு தர்மசங்கடமான மௌனம் நிலவியது. சிறு வயதில் அவன் அவள் வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கிறான். அவள் பிள்ளைகளுடன் விளையாடி இருக்கிறான். அவள் வீட்டில் பல முறை சாப்பிட்டிருக்கிறான். பெரியவனான பிறகு தான் அவள் வீட்டுக்கு அவன் போவது குறைந்து விட்டது. அவனை அவள் பல காலம் கழித்து நாகராஜன் –திலகவதியின் மரணத்திற்கு துக்கம் விசாரிக்க வந்த போது தான் பார்த்தாள். அவன் நிறையவே மாறி இருந்தான் என்று அவள் அப்போது நினைத்திருந்தாள்.
அன்று அவனுடைய துக்கத்தை அவன் வெளியே காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் அமைதியாகப் பேசிய விதம் அவன் மனப் பக்குவத்தைக் கோடிட்டுக் காட்டுவதாக அவள் அன்று நினைத்தாள்.
இன்றும் அவன் அமைதியாகத் தான் இருந்தான். ஆனால் இன்று அந்த அமைதி அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது. பீம்சிங் கேட்டது போல அவனும் கேட்டு விடுவானோ என்று பயந்தாள். நல்ல வேளையாக அவன் அப்படி எதுவும் கேட்டு விடவில்லை.
அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் கேட்டான். "என்ன சாப்பிடுகிறீர்கள்?"
"எதுவும் வேண்டாம்…."
"சரி என்ன விஷயம். சொல்லுங்கள்?"
அவள் கண்கள் குளமாகச் சொன்னாள். "என் பிள்ளைகள் சாகக் கிடக்கிறார்கள்"
அவன் அமைதியாகச் சொன்னான். "அடுத்தவர்களுக்கு என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் எப்போதும் கொஞ்சம் எச்சரிக்கை நல்லது. ஏனென்றால் அது அவர்களுக்கு ஆவதை விட வேகமாக நமக்கு ஆகி விடலாம். "
சாய்ரா பானு குனிந்த தலை திமிராமல் நின்றாள். பின் உடைந்த குரலில் சொன்னாள். "என் பிள்ளைகளுக்கு உயிர்ப்பிச்சை கேட்டு வந்திருக்கிறேன். "
"நான் அவர்களுக்கு அந்த அவகாசமாவது தந்திருக்கிறேன். ஆனால் உங்கள் கணவரும், பிள்ளைகளும் எனக்கு அந்த அவகாசம் கூடத் தரவில்லை. என் அப்பா அம்மாவிற்கும் தரவில்லை. வாய் விட்டு அவர்கள் என்னிடம் கேட்டிருந்தால் நான் எல்லா சொத்தையும் அவர்களுக்கே விட்டுக் கொடுத்து இருப்பேன். என் அப்பா அம்மாவை என் சம்பாத்தியத்தில் காப்பாற்றி இருப்பேன். எனக்கு இப்படி சம்பாதித்த பணத்தை வைத்திருக்க முன்பே விருப்பம் இருக்கவில்லை…. உங்கள் மகன்கள் அனுப்பிய அந்த சகதேவ் வந்த விதமும், பேசிய விதமும் எனக்கு சந்தேகத்தைக் கிளப்பியதால் நான் எச்சரிக்கையாக இருந்தேன். இல்லா விட்டால் நானும் இன்னேரம் செத்துப் போயிருப்பேன். "
.
"அவர்கள் செய்தது அல்லா மன்னிக்கக் கூடிய காரியமல்ல. அவர்களை தண்டித்தது கூட நீயல்ல, அவர் தான் என்று தான் நான் இன்னமும் நம்புகிறேன். ஆனால் அவர்களுக்காக இல்லாவிட்டாலும் இந்த தாயிற்காக நீ கருணை காட்ட வேண்டும்….." சாய்ரா பானு கண்கள் கலங்கினாள்.
அவன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
அவள் மூத்த இரண்டு மகன்களுக்கு ஆபரேஷன் முடிந்து அவர்கள் கோமா நிலைக்குப் போய் விட்டதைச் சொன்னாள். டாக்டர்கள் மரணம் என்னேரமும் வரலாம் என்று சொன்னதைச் சொன்னாள்.
அக்ஷய் வறண்ட குரலில் சொன்னான். "கத்தி பட்ட பின் அதை சரி செய்ய முடியாது. இனி யாரும் எதுவும் செய்வதற்கில்லை."
சாய்ரா பானு கேட்டாள். "அப்படியானால் அஷ்ரஃபையாவது….?"
அக்ஷய் ஒன்றும் சொல்லவில்லை. சாய்ரா பானு அவன் காலில் விழப் போனாள். அவன் தீயைத் தீண்டியது போல விலகிப் போனான். அவன் முகத்தில் முதல் முறையாக வேதனையைப் பார்த்தாள் சாய்ரா பானு.
"அம்மா நீங்கள் என்ன காரியம் செய்யப் போனீர்கள்?"
சிறு வயதில் அவள் பிள்ளைகளோடு சேர்ந்து அவனும் அவளை அப்படித் தான் கூப்பிடுவான். ஆனால் அவன் இப்போது அவளை அம்மா என்றழைத்தவுடன், அவன் முகத்தில் வேதனையைப் பார்த்தவுடன் அவள் கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் பெருகி வர ஆரம்பித்தது.
"அக்ஷய் என் ஒரு குழந்தையையாவது எனக்குத் திருப்பித் தா. இந்த அம்மாவிற்கு கொஞ்சமாவது கருணை காட்டு. பதிலுக்கு நீ என்ன வேண்டுமானாலும் கேள். நான் தருகிறேன்….."
"நீங்கள் என் அம்மாவைத் திருப்பித் தர முடியுமா?"
சாய்ரா பானு விக்கித்து நின்றாள். பின் குனிந்த தலையுடன் அங்கிருந்து கிளம்பினாள். அப்போது அக்ஷய் அழைத்தான். "அம்மா"
அவள் திரும்பினாள். அவன் கேட்டான். "அஷ்ரஃப் எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறான்?"
அக்ஷய் அவளை அழைத்துக் கொண்டு அந்த ஆஸ்பத்திரிக்குப் போனான். இப்ராஹிம் சேட்டின் ஆட்கள் ஆஸ்பத்திரியில் அவனைப் பார்த்த உடனேயே பதுங்கினார்கள். இப்ராஹிம் சேட் அவனைத் திகைப்புடன் பார்த்தார்.
ஐசியூவில் இருக்கும் அஷ்ரஃப் அருகே சென்ற அக்ஷய் அனாயாசமாக அவன் கழுத்தருகே கைகளை வைத்து ஏதோ செய்தான். அடுத்த கணம் அஷ்ரஃப் இயல்பான நிலைக்கு மாறியது அவன் கண்களைப் பார்த்த உடனேயே சாய்ரா பானுவிற்குத் தெரிந்தது. அருகே நின்றிருந்த நர்ஸ் தன் கண்களை நம்ப முடியாமல் பிரமிப்புடன் அக்ஷயைப் பார்த்தாள்.
எழ முயற்சித்த அஷ்ரஃபிடம் அக்ஷய் சொன்னான். "கொஞ்ச நேரம் அப்படியே படுத்திரு. ஓரேயடியாக எழுந்திருக்க முயற்சி செய்யாதே. எங்கேயாவது சுளுக்கிக் கொள்ளும். முதலில் சின்னச் சின்ன அசைவுகள் செய். பிறகு எழுந்து கொள்"
அஷ்ரஃப் தான் காண்பது கனவா நினைவா என்று திகைக்க, சாய்ரா பானு நன்றி கலந்த கண்ணீருடன் கை கூப்பி நிற்க அக்ஷய் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான். அரை மணி நேரம் கழித்து கடைசி மகன் அவரருகே வந்து அமர்ந்த போது இப்ராஹிம் சேட் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.
இரண்டு நாள்கள் கழித்து அவருடைய மூத்த இரண்டு மகன்களும் இறந்து போனார்கள். அவர்களைப் புதைத்த மறு நாள் இப்ராஹிம் சேட் அக்ஷய் வீட்டிற்குப் போனார். நாகராஜனுக்குச் சேர வேண்டிய பங்கு பணத்தையும், பத்திரங்களையும் அக்ஷயிடம் தந்தார்.
"நீ சாய்ராவிடம் உன் அம்மாவின் உயிரைத் திருப்பித் தர முடியுமா என்று கேட்டாய் என்று சொன்னாள். அல்லா எனக்கு அந்த சக்தியைத் தந்திருந்தால் கண்டிப்பாக நான் என் உயிரைக் கொடுத்தாவது உன் அம்மா, அப்பா இருவருடைய உயிரையும் திருப்பித் தர முய்ற்சி செய்திருப்பேன். என்னால் இப்போது முடிந்ததெல்லாம் நாகராஜனுக்கு சேர வேண்டிய பங்கைத் திருப்பித் தருவது தான். அவன் இதையெல்லாம் தர்மம் செய்து விட நினைத்திருப்பதாகச் சொன்னான். அதை நீயே உன் கையால் செய். முடிந்தால் என்னை மன்னித்து விடு"
அக்ஷய் இப்ராஹிம் சேட்டிடம் சொன்னான். "நான் ஒன்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?"
இப்ராஹிம் சேட் ஒரு கணம் அவனையே உற்றுப் பார்த்தார்.
"பழி வாங்குவதால் நம் துக்கம் குறைந்து விடுவதில்லை என்பதை நான் உணர்கிறேன். இஸ்மாயிலும் அமானுல்லாவும் இறந்ததைக் கேட்டு எனக்கு சந்தோஷப்பட முடியவில்லை…என்னால் அப்பா அம்மா மரணத்தை மட்டுமே நினைத்து இருக்க முடியவில்லை. சின்ன வயதில் சேர்ந்து விளையாடிய நாட்களையும் என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை…. முடிந்தால் நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்…"
இப்ராஹிம் சேட் முகத்தில் அளவிட முடியாத துக்கம் தோன்றியது. அவருடைய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி, ஆர்வத்துடன் குரான் படித்து குடும்பத்து நபராக அவன் இருந்த நாட்கள் அவர் நினைவில் நிழலாடியது. உடைந்த குரலில் அவர் சொன்னார். "என் ஒரு மகனை நீ எப்போது திருப்பித் தந்தாயோ அப்போதிருந்தே எனக்கு உன் மேல் இருந்த கோபம் போய் விட்டது. இப்போதைக்கு என்னைத் தான் என்னால் மன்னிக்க முடியவில்லை அக்ஷய். நான் சரியாக இருந்திருந்தால் இது எதுவுமே நடந்திருக்க வாய்ப்பில்லை…."
மேற்கொண்டு எதுவும் பேசாமல் இப்ராஹிம் சேட் தளர்ச்சியுடன் கிளம்பினார்.
(தொடரும்)
நல்ல அழகான திருப்பங்கள். அக்ஷய் – உயர்ந்தவன்! படிக்கையில் கண்கள் பனித்தது.. வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. வாழ்த்துகள் கணேசன்!