சிபிஐ மனிதன் திகைத்துப் போனான். "என்னது"
மந்திரி சொன்னார். "நானும் அதிர்ச்சியோடு இப்படி தான் கேட்டேன். அவர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற மாதிரி வழிகளைத் தேடி அலைகிறார்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்று ஒரு பழமொழியை எங்கம்மா எப்போதும் சொல்வாள். அதற்கு அர்த்தம் இப்போது தான் புரிகிறது"
"அமானுஷ்யனைப் பிடிக்கிறார்களோ இல்லையோ இவர்கள் பிடிபட்டு விடுவார்கள் போல் இருக்கிறது."
மந்திரி சிபிஐ மனிதனிடம் சொன்னார். "அந்த அமானுஷ்யனைக் கொன்று விட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும். தயவு செய்து அதற்கு ஏதாவது செய்யுங்கள். அவர்கள் அதிகமாக பணம் தருகிறார்களோ இல்லையோ நான் என் சொந்தக் காசை எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்…."
சிபிஐ மனிதன் ஒன்றும் சொல்லாமல் யோசித்தான். வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டால் இதிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று யாராவது உத்திரவாதம் தந்தால் அதற்குத் தயாராக அவன் இருந்தான். ஆச்சார்யாவைக் கொல்ல இவர்களுக்கு கூட்டாக நின்ற போது இத்தனை வில்லங்கங்கள் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
மந்திரி கேட்டார். "இப்போது அவன் எங்கே இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?"
"ஏதாவது ஒரு ஓட்டலில் ஏதாவது ஒரு வேஷத்தில் தங்கி இருக்கலாம். டெல்லி மாதிரி ஒரு பெரிய நகரத்தில் ஓட்டல்களில் தேடுவது சுலபமான காரியம் இல்லை. அதை நாம் ஆரம்பத்திலேயே முயற்சி செய்து பார்த்தாகி விட்டது அல்லவா"
"சரி இனி என்ன தான் வழி"
சிபிஐ மனிதன் உடனடியாக பதில் சொல்லாமல் சிறிது யோசித்து விட்டு சொன்னான். "ஒருவிதத்தில் காட்டான்களானாலும் அவர்கள் சொல்வது தான் சரி. இவ்வளவு தூரம் நாம் வந்தாகி விட்டது. இனி என்ன ஆனாலும் நம் ரகசியங்கள் தெரிந்த அவனை சும்மா விட முடியாது. நான் முன்பு நினைத்தது போல அம்னீஷியா வந்தவனாக அவன் மாறி இருந்தாலும் அவனுக்கு எப்போது வேண்டுமானாலும் எல்லாம் நினைவுக்கு வரலாம். அதனால் எந்த வழியாக அவனைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தாலும் சரி நாம் அதில் தயங்குவதில் அர்த்தம் இல்லை. அதற்கு உங்கள் அதிகாரத்தையும், பணத்தையும் தாராளமாக காட்ட வேண்டி வரும். ஆனால் அதை விட்டால் வேறு வழி இல்லை. இதற்கு தடங்கலாக ஜெயின் போன்றவர்கள் வந்தாலும் பரவாயில்லை. நாம் எதிர்த்து தானாக வேண்டும்"
"அப்படியானால் ஆனந்தையாவது அவன் அம்மாவையாவது அவர்கள் கடத்தினாலும் பரவாயில்லை என்கிறீர்களா?"
சிபிஐ மனிதன் ஆமென்று தலையாட்டினான்.
***********
பவன்குமார் அக்ஷயிடம் இருந்து வாங்கி வந்த கடிதத்தை ஆனந்த் படித்தான்.
"உன் அறைக்கு வந்த புத்தக சேல்ஸ்மேன் என்று சந்தேகப்பட்டு நேற்று ஒருவனைக் கொன்று விட்டார்கள். அதனால் நான் உன்னை சந்திக்க வருவது இப்போதைக்கு உசிதம் அல்ல. நீ எப்படியாவது அவர்கள் கண் பார்வையில் இருந்து தப்பி என்னை சீக்கிரம் வந்து பார்"
ஆனந்த் ஒரு கணம் திக் பிரமை பிடித்தது போல் ஆனான். மரணம் தம்பியின் பின்னால் செல்ல ஆரம்பித்து விட்டது என்பதற்கு அடையாளம் தானோ அந்த எவனோ ஒருவனின் மரணம். இந்த முறை தப்பியவன் எத்தனை காலம் இவர்களிடம் இருந்து தாக்குப் பிடிக்க முடியும்?
அந்த நேரத்தில் சாரதாவின் போன் வந்தது.
"ஏன் ஆனந்த் அக்ஷயை அந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தாயிற்றா?"
ஆனந்த் சொன்னான். "ஆயிற்று அம்மா"
"டாக்டர் என்ன சொல்கிறார்?"
"சிகிச்சையை ஆரம்பித்து இருக்கிறார். அவர் அவனுக்குப் பழைய நினைவு எல்லாம் கண்டிப்பாக வரும் என்று சொல்கிறார். ஆனால் எப்போது அது முடியும் என்பது நம் கையில் இல்லை என்கிறார். நீங்கள் அவனுக்காக நன்றாய் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா. எல்லாம் சீக்கிரம் நல்ல படியாக முடிந்து விடும்…."
"அனுமாருக்காக தனியாய் ஒரு விரதம் ஆரம்பித்திருக்கிறேன் ஆனந்த். அவர் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லட்சுமணனுக்கே நினைவு திரும்ப வைத்தவர். நம் அக்ஷயிற்கு அவர் செய்வது ஒரு பெரிய விஷயமா? எனக்கு நம்பிக்கை இருக்கு."
அம்மாவின் நம்பிக்கை அவனுக்கு ஒரு டானிக்காக இருந்தது.
"ஆனந்த்"
"என்னம்மா?"
"எனக்கு ஒரே ஒரு தடவை அவன் கிட்ட பேச ஆசையாய் இருக்குப்பா"
"நான் நாளைக்கே அவனைப் பேசச் சொல்கிறேனம்மா"
போனை வைத்த போது அவனுக்கு மனம் கனத்தது. அம்மாவை எவ்வளவு நாட்கள் ஏமாற்ற முடியும்?
உடனடியாகத் தம்பியைக் காணச் செல்வது என்று அவன் தீர்மானித்தான். உடை மாற்றிக் கொண்டு ஒரு ரெயின் கோட்டைப் போட்டுக் கொண்டு அக்ஷய் பற்றி வந்த ஃபேக்ஸ் காகிதங்களை எடுத்து ஒரு உறையில் போட்டுக்கொண்டு அதை தன் பனியனுக்குள் வைத்துக் கொண்டு வெளியேறினான்.
அவனை வேவு பார்ப்பவர்களும் தயாரானார்கள்.
ஆனந்த் ஓட்டலுக்கு வெளியே சென்று ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டான்.
"எங்கே சார் போகணும்"
ஆனந்த் ஆட்டோ டிரைவரைப் பார்த்தான். அந்த ஆட்டோ டிரைவர் இளைஞனாக இருந்தான். பார்வைக்கு நாணயமாகத் தெரிந்தான். அவனிடம் மெல்ல சொன்னான். "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது தெரிந்து சிலர் என்னை பின் தொடர்கிறார்கள். அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு என்னை பாதுகாப்பாய் எங்கே இறக்கி விட்டாலும் சரி. தூரம் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. மீட்டருக்கு மேலே நூறு ரூபாய் தருகிறேன்"
ஆட்டோ டிரைவர் தலையசைத்த படியே சுற்றிலும் முற்றிலும் பார்த்தான். அவன் கண்களுக்கு பின்னால் பைக்கில் ஒருவனும், முன்னால் கால் டாக்சியில் ஒருவனும் தெரிந்தார்கள். துடிப்புள்ள இளைஞனான அவனுக்கு சினிமாவில் வருவது போல் ஒரு பரபரப்பான சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது. சினிமா கதாநாயகன் போல் தன்னை பாவித்துக் கொண்டான். அவன் ஆட்டோ அடுத்த கணம் காற்றாய் பறந்தது.
இதை எதிர்பாராத பைக் ஆசாமியும், கால் டாக்சி ஆசாமியும் திடுக்கிட்டாலும் சுதாரித்துக் கொண்டு அதே வேகத்தில் அந்த ஆட்டோவைப் பின் தொடர்ந்தார்கள். திடீரென்று வேகத்தைக் குறைத்து மிக மெதுவாக ஊர்ந்தும், திடீரென்று படுவேகமாகவும் போய் ஆட்டோக்காரன் தன் சாகசத்தைக் காண்பித்தான்.
அமானுஷ்யன் விஷயத்தில் ஏமாந்தது போல ஏமாந்து விடக்கூடாது என்று நினைத்த பைக் ஆசாமி போகும் போதே அவசர அவசரமாக செல்லில் சகாக்களைக் கூப்பிட்டான்.
ஆனந்த் சொன்னான். "அவன் இன்னும் சில ஆட்களைத் துணைக்குக் கூப்பிடுகிறான். அவர்கள் வந்து விட்டால் பார்வையில் இருந்து தப்புவது கஷ்டம். அதனால் எங்கேயாவது ஒரு கூட்டத்தில் என்னை விட்டு விடு. நான் கூட்டத்தில் கலந்து தப்பித்துக் கொள்கிறேன்."
அந்த நேரத்தில் ஒரு கல்யாண மாப்பிள்ளை ஊர்வலம் பாண்ட் வாத்தியத்துடன் கும்பலாக வர ஆட்டோக்காரன் அதன் அருகில் மிக வேகமாக கொண்டு போய் நிறுத்தினான். உள்ளே அமர்ந்த படியே அவன் கையில் பணத்தை திணித்து விட்டு தன் ரெயின் கோட்டை ஆட்டோவிலேயே விட்டு விட்டு அதை எடுத்துக் கொள் என்று சொல்லி விட்டு வேகமாக இறங்கி கூட்டத்தோடு ஐக்கியமானான்.
ஆட்டோக்காரன் மீண்டும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பறக்க, ஆட்டோக்காரன் அந்தக் கல்யாண ஊர்வலத்தைப் பார்த்து நிறுத்தி வேறு வழியாகப் போகிறான் என்று பின் தொடர்ந்தவர்கள் நினைத்தார்கள். அவர்கள் ஆனந்த் இறங்கியதைக் கவனிக்கவில்லை.
ஆட்டோக்காரன் சுமார் ஒரு கிலோ மீட்டர் பயணித்து விட்டு பீடாக்கடை ஒன்றின் முன் சாவகாசமாக நிறுத்தினான். அவன் பீடாவிற்கு ஆர்டர் செய்ய அவன் ஆட்டோவில் ஆனந்த் இல்லை என்பதை அருகே வந்த பின் தான் கண்டு பிடித்த பின் தொடர்ந்தவர்கள் கோபத்துடன் அவனிடம் "நீ ஏற்றி வந்த ஆள் எங்கே?" என்று கேட்டார்கள்.
"அந்த ஆள் அங்கேயே இறங்கி விட்டான்."
"எங்கே?"
"அந்தக் கல்யாண ஊர்வலத்தின் பக்கத்தில். அவன் அந்தக் கல்யாணத்துக்குத் தான் போக வேண்டுமாம். அதனால் அங்கேயே இறங்கி அவர்களுடன் சேர்ந்து கொண்டான். ஏன் கேட்கிறீர்கள்?"
அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
**********
ஆனந்தும் அவன் தாயும் பேசிய பேச்சை டேப் செய்த மனிதன் சிபிஐ மனிதனிடம் அதைத் தந்து சன்மானத் தொகை பெற்றான்.
(தொடரும்)
அருமை!! படம் பார்ப்பதுபோல் உள்ளது.
கதை மிகவும் அருமையாக உள்ளது. Dont kill anybody on final episode like Manitharil Ethanai Nirangal Sivakami. சுபமாக முடிக்கவும்.