அமானுஷ்யன் 58

போன் மறுபக்கம் அடித்துக் கொண்டே இருந்தது. யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. அக்‌ஷய் ஒருவித பரபரப்புடன் காத்திருந்தான். கடைசியில் யாரோ எடுத்தார்கள்.

"ஹலோ…" – மூச்சு வாங்கியபடி ஒரு ஆண் குரல் கேட்டது.

"ஹலோ" என்றான் அக்‌ஷய்.

அவன் குரல் கேட்டவுடன் மகிழ்ச்சி பொங்க மறுபக்கத்தில் போன் எடுத்த வயதான மனிதர் சொன்னானர். "அக்‌ஷய்….."

அந்தக் குரலைக் கேட்டவுடன் அவனை அறியாமலேயே அக்‌ஷய் சொன்னான். "பீம்சிங்…"

"ஏன் அக்‌ஷய் இவ்வளவு நாளாய் போன் செய்யவில்லை.? நன்றாகத் தானே இருக்கிறாய்?"

அந்தப் பெயர் ஞாபகம் வந்தது போல அக்‌ஷயிற்கு வேறு எதுவும் ஞாபகம் வரவில்லை. அக்‌ஷய் கவனமாய் பொதுவாகப் பேசினான். "நான் நன்றாகத் தான் இருக்கிறேன். அங்கே…?"

"இங்கே நான் எமன் எப்போது ஓலை அனுப்புவான் என்று காத்திருக்கிறேன். எனக்கு வயது எழுபதாகி விட்டது. இனி என்ன எனக்கு ஆக வேண்டி இருக்கிறது சொல் பார்க்கலாம். உனக்கு கல்யாணம் ஆனால் உன் மகனைப் பார்த்து விட்டுப் போகலாம் என்றிருக்கிறேன். நீ என்னடா என்றால் அந்த புத்த சாமியார்களிடம் பழகி பழகி சாமியாராகியே விடுவாயோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. வீட்டு ஞாபகமே உனக்கு வருவதுமில்லை. இந்தப் பெரிய வீட்டை பார்த்துக் கொள்ள என்னால் முடியவில்லை……

பீம்சிங் என்ற அந்த மனிதர் இடைவெளி விடாமல் பேசிக்கொண்டே போனார். பேச்செல்லாம் அக்‌ஷய் சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. இல்லா விட்டால் அவன் அப்பா அம்மா ஆத்மா சாந்தியடையாது என்று பீம்சிங் அடித்துச் சொன்னார். கடைசியாய் அவர் கேட்டார். "எப்போது வருகிறாய் நீ"

"இன்னும் சில நாள் ஆகும் பீம்சிங்…."

"அக்‌ஷய்…" பீம்சிங் குரல் தாழ்ந்தது.

"என்ன?"

"இங்கு எப்போதும் யாரோ சிலர் நம் வீட்டையே வேவு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். உனக்கு பிரச்னை எதுவுமில்லையே" பீம்சிங் குரல் தாழ்ந்தே இருந்தது.

"இல்லை பீம்சிங்…"

"எனக்கென்னவோ பழைய நாட்கள் போல பயமாக இருக்கிறது அக்‌ஷய்"

அக்‌ஷய் அமைதியாகச் சொன்னான். "எதற்கும் பயப்படுவது முட்டாள்தனம் பீம்சிங். பயம் நம்மை செயல் இழக்க வைக்கிறது. செயல் இழந்த மனிதன் எப்போதும் அபாயத்திற்கு உள்ளாகிறான்…."

பீம்சிங் பெருமூச்சு விட்டது போனில் நன்றாகக் கேட்டது. "நீ மாறவேயில்லை. எப்போதும் எதற்கும் தயாராகவே இருக்கிறாய். எனக்கு அன்றும் அது முடியவில்லை. இன்றும் முடிய மாட்டேன்கிறது….அந்த ஷாங்காய் மடாலய புத்த சாமியார் போன் செய்தார். உன்னைக் கேட்டார். இல்லை என்றவுடன் வந்தவுடன் போன் செய்யச் சொன்னார்…..ஆனால் நீ செய்யாதே. அந்த சாமியார்கள் சகவாசம் இனி வேண்டாம். உன் மனதிற்குப் பிடித்த மாதிரி ஏதாவது நல்ல பெண்ணைப் பார்த்தாயா?"

அக்‌ஷய் மனதில் சஹானா வந்து போனாள். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் "சரி…பீம்சிங்…. நான் இரண்டு நாள் கழித்து போன் செய்கிறேன். அப்போது விவரமாய் பேசலாம்." என்று சொல்லி விட்டு போன் இணைப்பைத் துண்டித்தான்.

**********

சிபிஐ மனிதனும், மந்திரியும் பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலை மிகக் கவனமாகக் கேட்டார்கள். சிபிஐ மனிதன் இரண்டாவது முறையும் அதை ஆரம்பத்தில் இருந்து கேட்க மந்திரி சலிப்போடு சிபிஐ மனிதனைப் பார்த்தார்.

ஆனால் சிபிஐ மனிதன் அவர் பக்கம் திரும்பாமல் கண்களை மூடியபடியே முழுப் பேச்சையும் மீண்டும் மிகக் கவனமாய் கேட்டான்.

கேட்டு முடித்தவுடன் கண்களைத் திறந்த சிபிஐ மனிதனிடம் மந்திரி கேட்டார். "நீங்கள் அன்று சொன்னீர்கள், அவனுக்கு நினைவு தவறி இருக்க வேண்டும் என்று. அவன் என்னடாவென்றால் தன் வீட்டுக்கு போன் செய்கிறான். அந்த வேலைக்காரன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறான். அந்த அளவுக்கு அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இப்போது என்ன சொல்கிறீர்கள்?"

சிபிஐ மனிதன் ஒத்துக் கொண்டான். "எனக்கு குழப்பமாகத் தான் இருக்கிறது. அவனுக்கு நினைவு பூரணமாக இருந்தால் அவன் எப்போதோ அவனுக்குத் தெரிந்த விஷயங்களை வெளியே சொல்லி இருக்கலாம். இப்போதெல்லாம் மீடியாக்கள் இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டு காசு பார்க்க அலைகிறார்கள். அப்படி இருந்தும் அவன் ஏன் அப்படி செய்யவில்லை.?"

"அவன் என்ன நினைக்கிறான் என்று ஒன்றுமே விளங்க மாட்டேன்கிறது. அவனைக் கொன்று விடலாம் என்றால் கையில் கிடைக்க மாட்டேன்கிறான். அப்படிக் கிடைத்தாலும் சாக மாட்டேன்கிறான். பயப்படவும் மாட்டேன்கிறான். அந்தப் போன் கால் எங்கிருந்து பேசி இருக்கிறான் பார்த்தீர்களா?"

"சாந்த்னி சௌக் ஏரியாவில் ஒரு பப்ளிக் பூத்தில் இருந்து பேசி இருக்கிறான். அந்த பூத்திற்கு உடனடியாக நம் ஆள்கள் போய் விசாரித்திருக்கிறார்கள். அந்த பூத் காரன் யாரோ கூலித் தொழிலாளி வந்து பேசி விட்டுப் போனதாக சொல்கிறான்."

"எத்தனை வேஷம் போடுகிறான். அதைக் கண்டுபிடிக்க முடியாத நம் ஆள்கள் எல்லாம் தண்டம் என்கிறான் அந்த தாடிக்காரன்"

"ஏன் அந்த புஸ்தக சேல்ஸ்மேனாக அமானுஷ்யன் போன போது பின்னால் போனதில் அவன் ஆள்களும் தானே இருந்தார்கள். எப்படி அந்த சுரங்கப் பாதையில் கோட்டை விட்டார்கள்?"

"அதை நானும் தான் கேட்டேன். கோபப்படுகிறான். ஆனந்தைப் பிடித்து கேட்கிற விதத்தில் கேட்டால் அமானுஷ்யன் பற்றி அவன் சொல்ல மாட்டானா? அதை ஏன் செய்ய மாட்டேன்கிறீர்கள் என்று கேட்கிறான்"

"அவன் ஒரு சிபிஐ அதிகாரி. அவனை எப்படி பிடித்து கேள்வி கேட்க முடியும்.?"

"இதற்கு முன் ஒரு சிபிஐ டெபுடி டைரக்டரையே கொன்றவர்களுக்கு இது ஒரு கஷ்டமா என்று கேட்கிறார்கள்"

சிபிஐ மனிதன் மந்திரியை திகைப்புடன் பார்த்தான்.

மந்திரி சொன்னார். "அமானுஷ்யனுக்குப் பதிலாய் யாரோ ஒரு சின்ன திருடன் அகப்பட்டு செத்ததில் அவர்களுக்கு கோபம். இப்போது அவர்கள் வெறியோடு இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நாளுக்கு முன்னால் அமானுஷ்யனைப் பிணமாக்க என்ன விலையும் தரத் தயாராக இருக்கிறார்கள். இனியும் பணம் வேண்டுமானாலும் தருகிறார்களாம்……"

சிபிஐ மனிதன் கேட்டான். "அவன் தான் இது வரைக்கும் வாய் திறக்கவில்லையே. இனியா வாய் திறக்கப்போகிறான். ஏன் அவர்கள் இப்படி பரபரக்கிறார்கள்?"

"அவர்கள் அவன் ஒரு காரணமாகக் காத்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். அவனைப் போல் ஒரு ஆளுக்கு நீங்கள் சொன்னது போல் அம்னீஷியா வர வாய்ப்பில்லை என்கிறார்கள்"

சிபிஐ மனிதன் எரிச்சலோடு கேட்டான். "சரி அந்தக் காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்?"

"அந்த நாளுக்கான ஆயத்தங்கள் அவர்கள் ஆரம்பிக்கும் போது கையும் களவுமாய் பிடிப்பதற்காக அவன் காத்திருக்கலாம் என்று பயப்படுகிறார்கள்"

"முட்டாள்கள். இப்படியெல்லாம் கூட பயப்படுவார்களா என்ன"

மந்திரி வரண்ட குரலில் சொன்னார். "அவனைப் பற்றி என்று வரும் போது எந்த பயமும் அர்த்தமில்லாதது அல்ல என்று நினைக்கிறார்கள்"

சிபிஐ மனிதன் அந்த சொற்களில் இருந்த உண்மையை உணர்ந்து மௌனமானான்.

மந்திரி சொன்னார். "ஆனந்தைப் பிடித்து உண்மையை வரவழைக்க நமக்கு பயமாக இருந்தால் அந்த வேலையை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்களாம். நம்மை விலகி இருக்கச் சொல்கிறார்கள்"

"ஆச்சார்யாவைக் கொன்றவனாக ஒரு பலிக்கடாவைக் காட்டி இருக்கிறதில் சந்தேகம் வந்து தான் ஜெயின் ஆனந்திடம் இந்த விசாரணையை செய்யச் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் ஆனந்திற்கும் ஏதாவது ஆகி விட்டால் அவர் சந்தேகம் உறுதிப்பட்டு விடும். ஆச்சார்யா கொலைக் கேஸில் இருந்து மறுபடியும் ஆரம்பிப்பார்கள். போலீஸ் டிபார்ட்மென்டில் கூட சிலர் நாம் ஓவராய் போகிறோம் என்று நினைக்கலாம்…."

"இதெல்லாம் அந்தக் காட்டான்களுக்கு எங்கே புரிகிறது. அமானுஷ்யனைக் கோட்டை விட்ட ஆத்திரத்தில் இருக்கிறார்கள். அமானுஷ்யன் பிணத்தைக் கேட்கிறார்கள். இல்லா விட்டால் அவனைக் கண்டுபிடிக்க ஆனந்தைக் கேட்கிறார்கள். அதுவும் இல்லா விட்டால்…." மந்திரி நிறுத்தினார்.

சிபிஐ மனிதன் கேட்டான். "அதுவும் இல்லாவிட்டால்….?"

"ஆனந்தின் வாயில் இருந்து உண்மையை வரவழைக்க ஆனந்தின் தாயை கடத்துவதாக இருக்கிறார்கள்"
(தொடரும்)

About The Author

3 Comments

  1. saivakothuparotta

    ராக்கெட் வேகத்தில் செல்கிறான் அமானுஷ்யன்!! ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  2. Kalyan

    கனெச, நே ரொம்ப நன்ன எழுதர. Pஅடிக்க பிடிசிர்கு. Yஒஉ கவெ அ க்ரெஅட் fஉடுரெ, எச்பிcஇஅல்ல்ய் அச் யொஉ உன்டெர்ச்டன்ட் ப்ச்ய்சொலொக்ய் நெல்ல்.

Comments are closed.