ப்யாரிலால் களைத்துப் போய் வீட்டுக்கு வந்தான். அவன் வீட்டைத் தூரத்தில் இருந்தே சாதாரண உடையில் கண்காணித்துக் கொண்டிருந்த இரண்டு ரகசியப் போலீசாரை அவனால் அறிய முடிந்தது. ஆட்கள் மாறினாலும் காவல் மாறவில்லை. அந்த பாழாய்ப் போன தீவிரவாதி(?) கண்டிப்பாக அவனிடம் வருவான் என்று அவனுடைய மேலதிகாரிகள் நினைப்பது எதனால் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை.
உள்ளே நுழைந்து அவன் விளக்கைப் போட்டுத் திரும்பிய போது அவனுக்கு ஒரு கணம் இரத்தம் உறைந்தது. அந்த சைத்தான் அங்கு ஒரு நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தான்.
"டிஐஜி கேசவதாஸ் வீட்டுக்குத் தான் காவல் அதிகமாயிருக்கிறது என்றால் உன் வீட்டுக்கும் ரகசியமாய் காவல் அதிகமாயிருக்கிறது. அதுவுமில்லாமல் நீ எங்கு போனாலும் தூரத்தில் பாதுகாப்புக்குப் போலீஸ் பின் தொடர்கிறது. உனக்கு ஏதாவது பதவி உயர்வு கிடைத்திருக்கிறதா ப்யாரிலால்"
மிக அமைதியாகக் கேட்டவனை ப்யாரிலால் கிலியுடன் பார்த்தான். ’அந்த இரண்டு பேர் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இவன் எப்படி உள்ளே வந்தான்?’
அவன் மனதில் எழுந்த கேள்விக்கு அக்ஷய் அமைதியாகப் பதில் சொன்னான். "உன் பின் வீட்டில் ஆட்கள் இல்லை ப்யாரிலால். அதற்கு வாசல் பின் தெருவில் இருக்கிறது. இருட்டு நேரத்தில் அந்த வீட்டுக்கு வந்து அந்த மொட்டை மாடியில் இருந்து ஜாக்கிரதையாய் உன் வீட்டு மாடிக்கு உள்ளே வருவது ஒன்றும் கஷ்டமான வேலை அல்ல….."
"உனக்கு என்ன வேண்டும்?"
"நான் இங்கு வந்து போனதை நீ யாருக்குச் சொன்னாய் என்று தெரிய வேண்டும்?"
"நானாய் யாரிடமும் சொல்லவில்லை. அவர்களாய் என்னைக் கூட்டிக் கொண்டு போய்க் கேட்டார்கள்….."
"டிஐஜி கேசவதாஸ்?"
"இல்லை. அவரல்ல….."
"பின் யார்?"
"தெரியவில்லை…" என்ற ப்யாரிலால் பின் சிறிதும் யோசிக்காமல் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் தெரிவித்தான். அவனுக்கு இந்த ஆள் அபாயகரமானவனாகத் தெரிந்தான். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த ஆளை அவன் பகைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. அவனிடம் ஏற்பட்ட ஒரு அனுபவம் வாழ்நாள் முழுவதற்கும் போதும். அவனுக்கும் அந்த மேல் மட்டத்திற்கும் ஏதாவது பகை என்றால் அவர்களாக அதை எப்படியாவது தீர்த்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு இடையே நசுங்கிச் சாக அவனுக்கு மனமில்லை.
அவன் சொன்னதையெல்லாம் அக்ஷய் மிகவும் பொறுமையாகக் கேட்டான். சில இடங்களில் இன்னொரு முறை சொல்லச் சொன்னான். கடைசியில் கேட்டான். "இருட்டில் இருந்து பேசினது உங்கள் போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆள் தானா? குரல் உனக்கு பரிச்சயமானது தானா?"
"இல்லை. எனக்குப் பரிச்சயமான குரல் அல்ல. கேள்வி கேட்ட விதம் எங்கள் டிபார்ட்மெண்ட் ஆட்கள் கேட்கிற மாதிரி தான் இருந்தது. டில்லி அதிகாரிகள் யாராவதாக இருந்தால் நான் கண்டு பிடித்திருப்பேன். அதனால் அது டில்லி அதிகாரி அல்ல"
"அந்த இருட்டில் இருந்தது ஒரு ஆள் தானா? இல்லை வேறு சிலரும் இருந்தார்களா?"
"ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கேள்வி கேட்டது ஒரு ஆள் தான் என்றாலும், அவன் கூட வேறு ஒன்றிரண்டு ஆட்கள் இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது"
"அதற்குப் பிறகு கேசவதாஸ் எப்போதாவது உன்னைத் தொடர்பு கொண்டாரா?"
"இல்லை"
அக்ஷய் எழுந்தான். "நான் போகிறேன். அவர்கள் பதவி உயர்வையும், பத்து லட்ச ரூபாயையும் ஆசை காட்டியதை மனதில் வைத்து நீ ஏதாவது முட்டாள் தனம் செய்தால் வாழ்நாள் பூராவும் நீ கோமாவில் கிடக்க வேண்டி இருக்கும் ப்யாரிலால். அது மட்டுமல்ல அபராதமாய் உன் பீரோவில் இருக்கும் பணம் நகை எல்லாவற்றையும் நான் எடுத்துக் கொள்வேன்"
ப்யாரிலால் அவசர அவசரமாகச் சொன்னான். "எனக்கு பதவி உயர்வோ, பத்து லட்சமோ வேண்டாம். இரண்டு பக்கத்திலிருந்தும் எனக்கு எதுவும் தொந்தரவு வராமல் இருந்தால் போதும்."
"நீயாக என் வாழ்க்கையில் இன்னொரு தடவை குறுக்கிட்டால் ஒழிய நான் இனி வர மாட்டேன் ப்யாரிலால்."
ப்யாரிலால் கையெடுத்துக் கும்பிட்டான். "நான் சத்தியமாய் உன் வழிக்கு வர மாட்டேன். வேலையே போனாலும் பரவாயில்லை. ஆனால் நீ வந்து போனது தெரிந்து அவர்கள் மறுபடி கூப்பிட்டால்…"
"நீயாகச் சொன்னால் ஒழிய அவர்களுக்குத் தெரியாது"
"போன தடவை நானாகச் சொல்லாமலேயே அவர்களுக்குத் தெரிந்து விட்டதே"
"போன தடவை அந்தப் பையன் வீட்டுக்காரர்களும், நீயும் பயந்து போய் விட்டதைப் பார்த்து அவர்கள் யூகித்தார்கள். இப்போது யூகிக்க நீயாக எதுவும் செய்யாதே"
அவன் மாடியேறி இருட்டில் மறைந்தான். ப்யாரிலால் அரை மணி நேரம் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அவன் போகும் போது வெளியில் இருக்கும் யாராவது ஒரு ரகசியப் போலீஸ் பார்த்து விட்டால் என்ன ஆகும் என்று பயத்துடன் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் வெளியே எந்த மாற்றமும் நிகழ்ந்ததற்கு அறிகுறியே இல்லாமல் போன பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
****************
"ஏதாவது தகவல் கிடைத்ததா?" சிபிஐ மனிதன் போனில் கேட்டான்.
"இல்லை உங்கள் பக்கத்தில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா?"
"ஆனால் ஆனந்த் திடீரென்று ஹரித்வார் போய் வந்திருக்கிறான். அவன் போவது தெரிந்தவுடன் நான் ஹரித்வாரில் அவனைக் கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்தேன். அவன் அங்கே சங்கரமடம் போய் பின் மானச தேவி கோயிலிற்குப் போயிருக்கிறான். அங்கே அவன் சந்தித்த ஒரே மனிதன் ஒரு சாமியார் மாதிரி தெரிந்திருக்கிறான்…."
"அப்புறம்?" மந்திரியின் குரலில் சுவாரசியம் தெரிந்தது.
"அங்கே அந்த ஆள் முன்னால் உட்கார்ந்து ஏதோ சிறிது நேரம் பேசியிருக்கிறான். பேசி விட்டு கோயிலின் உள்ளே கும்பிடப் போனவன் நிறைய நேரம் கழித்துதான் வெளியே வந்திருக்கிறான். அவன் போன பின் அவனை இரண்டு பேர் தொடர்ந்து போக, வேறு இரண்டு பேர் அந்த சாமியார் மாதிரி தெரிந்த ஆசாமியிடம் போயிருக்கிறார்கள். "போலீஸ்" என்று சொல்லி காட்டிய அடையாள அட்டையை அந்த ஆள் கண்டு கொள்ளவேயில்லையாம்."
"அவர்கள் ‘சிறிது நேரத்திற்கு முன் உங்களிடம் ஒருவன் பேசி விட்டுப் போனானே அவன் என்ன கேட்டான், நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று அந்த சாமியாரிடம் கேட்டிருக்கிறார்கள். அந்த சாமியார் ’போலீஸ்’ என்று சொன்ன நம் ஆளிடம் "மற்றவன் சமாச்சாரம் எல்லாம் அப்புறமாகத் தெரிந்து கொள். முதலில் கால் உடைந்து இருக்கிற உன் சம்சாரத்தை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போ" என்று சொல்லியிருக்கிறார். அந்த சாமியார் சொல்லச் சொல்ல நம் ஆளின் செல்போன் அடித்திருக்கிறது. எடுத்துப் பேசினால் அந்த ஆளின் மனைவிக்கு உண்மையாகவே அப்போதுதான் காலுடைந்து போனதாகத் தகவல் வந்திருக்கிறது. நம் ஆள் அதற்கு மேல் வாயைத் திறக்காமல் வீட்டுக்கு ஓடியிருக்கிறான்"
"இன்னொருவன் கூட இருந்தானே அவனாவது அந்த சாமியாரிடம் ஆனந்த் என்ன சொன்னான் என்று கேட்டானா?"
"அந்த ஆள் அந்த சாமியார் தான் ஏதோ ஏவல் செய்து தன் சகாவின் மனைவி காலை உடைத்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறான். அதனால் மேற்கொண்டு எதுவும் அவனும் கேட்கவில்லை"
"என்ன இது அந்த ஆட்கள் இப்படித் தொடை நடுங்கிகளாக இருக்கிறார்கள்"
"அவர்கள் அமானுஷ்யனை இமய மலை உச்சியில் பார்த்திருக்கிறார்கள். அத்தனை பேர் விடாமல் சுட்டு ஒரே ஒரு குண்டு தான் அவன் மீது பாய்ந்திருக்கிறது. அவன் அந்தக் குண்டுகள் படாமல் மின்னல் வேகத்தில் நகர்ந்த விதம் எல்லாம் சினிமாவில் கூடப்பார்க்க முடியாது என்கிறார்கள். அவன் சம்பந்தப்பட்ட வேலைகளில் எல்லாம் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவர்கள் நினைக்கிற மாதிரி தெரிகிறது. இந்த விஷயமும் இப்படியானதில் அவர்களுக்கு இனம் புரியாத பயம் இருக்கிற மாதிரி தெரிகிறது."
"அப்புறம்?"
"ஆனந்தைத் தொடர்ந்தவர்கள் அவன் டில்லிக்குத் திரும்பி விட்டதாகச் சொன்னார்கள். அந்த சாமியார் யார் அவனை எதற்கு ஆனந்த் சந்திக்கப் போனான். அமானுஷ்யன் விஷயம் தானா இல்லை ஏதாவது தனிப்பட்ட விஷயமா என்று தான் தெரியவில்லை. நான் மறு நாள் வேறு ஆட்களை விட்டு அந்த சாமியாரைப் போய் பார்க்கச் சொன்னேன். அந்த ஆள் யார் கண்ணிற்கும் அகப்படவில்லை. எங்கேயோ போய் விட்டிருக்கிறார்."
அந்தத் தகவலைக் கேட்டு சிறிது நேரம் மௌனமாயிருந்து விட்டு மந்திரி சொன்னார். "கேசவதாஸ் மறுபடி போன் செய்து அமானுஷ்யன் பற்றிக் கேட்டார். எப்போதும் நான் சொன்னதற்கெல்லாம் மறு பேச்சுக் கேட்காமல் செய்யக் கூடிய அவர் இப்படி மறுபடி கேட்டது எனக்கு சந்தேகத்தைக் கிளப்புகிறது"
"ஆச்சார்யா கேஸில் நீங்கள் அவரை நேரடியாக ஈடுபடுத்தவில்லை அல்லவா?"
"இல்லை. அவருக்குக் கீழே இருக்கிற எனக்கு வேண்டப்பட்ட மற்ற அதிகாரிகளை வைத்துத்தான் காய்களை நகர்த்தினேன்."
"நல்லது. அந்தக் கேசுக்கும் இந்தக் கேசுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கேசவதாஸுக்குத் தெரியாமல் இருப்பது நல்லது. தெரிந்தால் இரண்டும் இரண்டும் நான்கு என்று அந்த ஆள் கண்டுபிடித்து விட வாய்ப்பு இருக்கிறது"
"அமானுஷ்யனுக்கு நினைவு திரும்புவதற்கு முன்னால், மற்றவர்கள் எல்லாம் இந்தக் கேஸில் ஆர்வம் காட்ட ஆரம்பிப்பதற்கு முன்னால் அவனைக் கண்டு பிடித்துக் கொன்று விட்டால் நன்றாயிருக்கும். இப்போதைக்கு நான் செய்யக் கூடியது வேறெதாவது இருக்கிறதா"
"இப்போது நாம் செய்யக் கூடியதெல்லாம் அவனைப் பற்றி ஏதாவது ஒரு தகவல் வரும் வரை பொறுமையாகக் காத்திருப்பது தான்."
அது தான் கஷ்டம் என்பது போல் மந்திரி பெருமூச்சு விட்டபடி கேட்டார். "ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?"
"ஆமாம். கூடிய விரைவில் கிடைக்கும் என்று என் உள்மனம் சொல்கிறது"
(தொடரும்)