அமானுஷ்யன் 30

”என்னை நல்லவன் என்பதை நான் எல்லாம் பேசி முடித்த பிறகு நீ சொல்வது தான் சரியாக இருக்கும்” என்றான் மது.

”நீ என்ன சொல்ல வருகிறாய் என்பது எனக்கு முதலிலேயே தெரியும்” என்று புன்னகையுடன் அக்‌ஷய் சொன்னான்.

”சொல் பார்க்கலாம்”

”சஹானா ஆரம்பத்தில் இருந்தே நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நீயும் கஷ்டம் தருபவனாக இருந்து விடாதே. உன்னை முதலிலேயே போலீஸ் தேடுகிறது. நீ இங்கே இருப்பது தெரிந்தால் அவளுக்கு ஆபத்து. அதனால் சீக்கிரம் அவள் வீட்டை விட்டுப் போய் விடு. அதைத் தானே சொல்ல வந்தாய்”

மது அவனைத் திகைப்புடன் பார்த்தான். ஆமாம் என்று அவன் தலையசைந்தது.

”பயப்படாதே மது. நீ சொல்லும் முன்பே நான் தீர்மானித்து விட்டேன். நான் இரண்டு நாளில் போய் விடுகிறேன்”

”எங்கே போவாய் நீ?” மதுவால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

”எங்கேயாவது”

”நீ வேண்டுமானால் என் வீட்டுக்கு வந்து விடு. என் வீட்டில் மனைவியும் பிரசவத்திற்குப் போயிருப்பதால் வீட்டில் நான் தனியாக இருக்கிறேன்.”

அவன் சொன்னது அக்‌ஷய் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. ”என்னைப் பிடிக்காத ஆள் வீட்டில் நான் தங்குவது சரியாக இருக்குமா மது?”

மதுவுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்று பட்டவர்த்தனமாகச் சொல்லி இருக்க வேண்டாம் என்று தோன்றியது. தர்மசங்கடத்துடன் யோசித்த மதுவிடம் அக்‌ஷய் புன்னகை மாறாமல் சொன்னான். ”விளையாட்டுக்குச் சொன்னேன் மது. நீ என்னை வரச் சொன்னதற்கு நன்றி. நான் ஓட்டலில் போய் தங்கிக் கொள்கிறேன்”

”ஓட்டலில் போய்த் தங்கப் பணம்?”

”எனக்கு வர வேண்டிய பணம் ஒரு பெரிய தொகை என் கைக்கு வந்து விட்டது. இப்போது எனக்கு பணம் ஒரு பிரச்னையே அல்ல மது”

”எப்படி பணம் வந்தது. யார் கொடுத்தார்கள்?”

”சில விஷயங்கள் எவ்வளவு குறைவாகத் தெரிகிறதோ அவ்வளவு நல்லது மது”

மது அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. இருவரும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வீட்டை நெருங்கும் முன் மது சொன்னான். ”நான் சஹானாவின் பழைய கதையைப் பற்றி சொன்னது அவளுக்குத் தெரிய வேண்டாம் அக்‌ஷய். அவளுக்கு மற்றவர் இரக்கம், அது சம்பந்தமான கேள்விகள் எல்லாம் பிடிப்பதில்லை. உன்னிடமே நான் அதை ஏன் சொல்ல வந்தேன் என்றால் முதலிலேயே நிறைய கஷ்டப்பட்டவள் அவள். அவளை நீயும் சேர்ந்து கஷ்டப்படுத்தி விடாதே என்று சொல்லத்தான்…..”

”புரிகிறது மது…”

வீட்டுக்குள் நுழைந்த இருவரையும் சஹானா கூர்ந்து பார்த்தாள். மது அவள் பார்வையை ஏனோ தவிர்த்தான். அக்‌ஷயோ இயல்பாகப் புன்னகைத்தான். ஒரு கணம் அவள் இதயம் துடிக்க மறந்தது.

நண்பனின் பிறந்த நாள் விழாவில் இருந்து வருண் வந்து விட அவள் அவர்களிடம் எதுவும் கேட்கப் போகவில்லை. வருண் வந்தவுடன் அக்‌ஷயிடம் சென்று ஒட்டிக் கொண்டான். மதுவைப் பார்த்து புன்னகை செய்த சிறுவன் பின் யாரையும் கண்டு கொள்ளவில்லை. அக்‌ஷய் மடியில் அமர்ந்து கொண்டு தன் நண்பனின் பிறந்த நாள் விழாவில் யாரெல்லாம் வந்திருந்தார்கள், என்ன பரிசெல்லாம் அவனுக்குக் கிடைத்தது, சாப்பிட என்ன எல்லாம் தந்தார்கள் என்றெல்லாம் அவனிடம் விளக்க ஆரம்பித்தான். அக்‌ஷயும் ஆர்வத்துடன் அவர்களை எல்லாம் மறந்து கேட்க ஆரம்பித்தான்.

அவர்களுடைய அன்னியோன்னியத்தை கவனித்த சஹானாவும் மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் மது கிளம்பினான்.

மறு நாள் ஆபிசிற்குப் போன பிறகு சஹானா மதுவிடன் கேட்டாள். ”அவனை வெளியே கூட்டிக் கொண்டு போய் நீ என்ன பேசினாய்?”

மது அவளைப் பற்றி அவனிடம் சொன்னதை சொல்லா விட்டாலும் அக்‌ஷயைப் போய்விடச் சொல்லப் போனதையும் அவன் அதற்கு முன்பே போகத் தீர்மானித்திருந்ததாகச் சொன்னதையும் சொன்னான்.

சஹானாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் மதுவாக அவனைப் போகச் சொல்ல வேண்டியிருக்கவில்லை என்று அவளுக்குத் தோன்றியது. அவள் நலனில் அக்கறை மிகுந்த அக்கறை கொண்டவன் அவன். அவள் நிர்க்கதியாக நின்ற சமயங்களில் அவளுடைய அண்ணன் கூடக் கண்டு கொள்ளாமலிருந்த சந்தர்ப்பங்களிலும் மது மட்டுமே அவளுக்கு உதவியவன். அந்த வகையில் அவன் சொல்லப் போனதில் தவறில்லை என்ற போதும் அவள் மனம் ஏனோ வலித்தது.

அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தபப்டியே மது மெல்லச் சொன்னான். ”யாருமில்லாமல் அனாதையாக நிற்கிறான் என்றாய் சஹானா. ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே அவன் நிறைய பணம் எங்கிருந்தோ கொண்டு வருகிறான். எங்கிருந்து என்று சொல்லவும் மாட்டேன்கிறான். எனக்கு இப்போதும் அவன் அபாயமானவன் என்று தான் தோன்றுகிறது. அப்படியில்லாமல் அவன் நல்லவனேயாக இருந்தால் கூட அவனை வீட்டில் வைத்திருப்பது அபாயம் தான். தயவு செய்து புரிந்து கொள் சஹானா”

சஹானா தலையாட்டினாள். யோசித்த போது இத்தனை வருடங்கள் அவள் மனதில் ஏற்ப்பட்டிராத சலனம் இப்போது தோன்ற ஆரம்பித்ததை நினைக்கும் போது அவன் போவதும் ஒருவிதத்தில் நல்லதே என்று தோன்றியது. ஆனாலும் அவள் மனம் எதையோ இழக்கப் போவதைப் போல கனத்தது.

அவன் போனால் வருண் தான் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவான் என்று தோன்றியது. நாளுக்கு நாள் அவன் தான் அவனிடம் மிக ஆழமாக நெருங்கி வருகிறான். இப்போதெல்லாம் அவனும் அக்‌ஷயும் சேர்ந்து தான் குளிக்கிறார்கள். குளியலறையில் இருந்து வரும் பேச்சு, சிரிப்பு, தண்ணீரை வாரியிறைத்துக் கொள்ளும் ஓசை இதெல்லாம் அவளுக்குப் புதிது. குளித்து முடித்த பிறகும் வருண் பள்ளிக்குப் போகும் வரை எல்லாமே அக்‌ஷய் தான் பார்த்துக் கொள்கிறான். அவளிடம் என்றால் ஆயிரம் பாடு படுத்தும் வருண் சமர்த்தாய் சந்தோஷமாய் அக்‌ஷய் சொல்லும்படியெல்லாம் கேட்பது அவளை ஆச்சரியப்படுத்தியது. இது போல் ஒரு கணத்தை அவள் கணவன் மகனுக்குத் தந்ததில்லை. இது போல் வாய் விட்டுச் சிரிக்கும் சத்தம் அந்த வீட்டில் இது வரை கேட்டதில்லை.

வேலையில் மனம் செல்லாததால் மேலதிகாரியிடம் சொல்லி விட்டு வீட்டுக்குச் சீக்கிரமே வந்தாள். வருண் இன்னும் பள்ளியில் இருந்து வந்திருக்கவில்லை. அவள் உள்ளே நுழையும் போது மரகதமும் அக்‌ஷயும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மரகதம் முகத்தில் பெரும் சோகம் பரவியிருந்ததை சஹானா கவனிக்கத் தவறவில்லை. அவள் போனவுடன் அவர்களுடைய பேச்சு நின்றது. மரகதம் சமையலறைக்குப் போய் விட்டாள்.

சஹானா அக்‌ஷயிடம் சொன்னாள். ”மது நீங்கள் சொன்ன போன் நம்பர் பற்றி விசாரித்தான். அது கொலை செய்யப்பட்ட ஆச்சார்யாவின் வீட்டினுடையது தானாம்”

அக்‌ஷய் தலையசைத்தான்.

”அவர் இறந்த பின்னால் அவர் மனைவி வீட்டைக் காலி செய்து விட்டு பெங்களூரில் இருக்கும் தன் மகள் வீட்டிற்குப் போய் விட்டாராம். அதனால் தான் நேற்று போன் செய்த போது உபயோகத்தில் இல்லை என்று வந்தது.”

அவன் அப்போதும் ஒன்றும் சொல்லாமல் அவளைப் பார்த்து சரியென்று மறுபடியும் தலையசைத்தான். வர வர அவனுடைய பார்வை அவளை என்னவோ செய்ய ஆரம்பித்தது. இத்தனைக்கும் மேலோட்டமாய் பார்க்கையில் அவன் சாதாரணமாய் பார்ப்பது போலத் தான் தெரிந்தது. ஆனாலும் அவன் பார்வையில் இனம் புரியாத ஒன்று அவளை அலைக்கழித்தது. அவன் என்ன நினைக்கிறான்?.

அக்‌ஷய் மெல்ல சொன்னான். ”சஹானா. எனக்கு ஒரு நல்ல தொகை கிடைத்திருக்கிறது. அதனால் ஏதாவது ஓட்டலில் போய் தங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முடிந்தால் நாளைக்கே போகலாம் என்று இருக்கிறேன்…”

மாமியாரின் முகத்தில் இருந்த சோகத்திற்குக் காரணம் புரிந்தது. அவளிடமும் அவன் போவதைச் சொல்லி இருக்க வேண்டும்.

சஹானாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் தலையசைத்தாள்.

அக்‌ஷய் அறைக்குப் போய் ஒரு பார்சலை எடுத்துக் கொண்டு வந்தான். அவளிடம் தந்தான்.

”என்ன இது?”

”வருண் பிறந்த நாளுக்கு வாங்கினேன். அந்த நாள் அவனிடம் கொடுத்து விடுங்கள்”

அப்போது தான் வரும் திங்கள் கிழமை வருண் பிறந்த நாள் என்கிற ஞாபகம் சஹானாவுக்கு வந்தது. பிறந்த நாள் உடையை இரண்டு வாரம் முன்பே தைத்தாகி இருந்தது. அக்‌ஷய் வரவிற்கு முன் வரை தினமும் வருண் தன் பிறந்த நாளுக்கு அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அக்‌ஷய் வரவிற்குப் பின் அவளிடம் பேசும் நேரமே குறைந்து போயிருந்ததால் அந்தப் பேச்சு அவளிடம் வரவில்லை.

ஆனால் அவளிடம் வருண் அது பற்றிப் பேசவில்லையே ஒழிய அக்‌ஷயிடம் தினமும் அது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த நாள் வரை அங்கு இருந்து விட்டுப் பின் மறுநாளே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைத்திருந்த அக்‌ஷய் மது அவனிடம் பேசிய பின் மனதை மாற்றிக் கொண்டான். வருண் பிறந்த நாள வரை காக்க வேண்டாம் என்று தீர்மானித்து விட்டான்.

சஹானா அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ”அவன் பிறந்த நாளுக்கு மூன்று நாள் தானே இருக்கிறது. அதை முடித்து விட்டே பிறகு போங்களேன்”

”இல்லை. என்னேரமும் என்னால் உங்களுக்கு ஆபத்து வரலாம்”

சஹானாவுக்கு மது மேல் கோபம் வந்தது. அதை அப்படியே விழுங்கிக் கொண்டு அமைதியாகச் சொன்னாள். ”நீங்கள் போய் விட்டால் வருண் பிறந்த நாளை சந்தோஷமாய் கொண்டாடுவான் என்று நினைக்கிறீர்களா?”

அக்‌ஷய் தர்மசங்கடத்துடன் பார்த்தான்.

சஹானா கண்டிப்புடன் சொன்னாள். ”திங்கட்கிழமை பிறந்த நாள் என்றால் செவ்வாய் கிழமை போங்கள். நான் தடுக்க மாட்டேன்.” அவன் தந்த பார்சலை அவனிடமே திருப்பித் தந்தாள். ”இதை அன்றைக்கு நீங்களே அவனுக்குத் தந்து விடுங்கள்”

அவன் மௌனமாக சம்மதித்தான். சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு கனத்த மௌனம் அவர்களுக்குள் நிலவியது.

அந்த மௌனத்திற்குக் காரணமாக இருந்த எண்ணங்களின் சுமை தாளாமல் அக்‌ஷய் இனி ஆக வேண்டியதை யோசித்து சஹானாவிடம் கேட்டான். ”பெங்களூரில் இருக்கும் ஆச்சார்யாவின் மகளின் போன் நம்பர் கிடைக்குமா?”

சஹானா சொன்னாள். ”மதுவிடம் சொல்கிறேன். கண்டிப்பாகக் கண்டுபிடித்துச் சொல்வான்”

(தொடரும்)

About The Author