அமானுஷ்யன் (29)

ப்யாரிலால் போய்ச் சரியாக பதினேழு நிமிடங்கள் கழிந்து, வெளியே யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சிபிஐ மனிதனும், அந்த மந்திரியும் அந்தக் குடோனிலிருந்து கிளம்பினார்கள்.

”நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” காரில் செல்லும் போது மந்திரி சிபிஐ மனிதனைக் கேட்டார். ப்யாரிலால் கிளம்பிய பிறகு ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சிபிஐ மனிதன் ஒன்றும் பேசாமல் இருந்தது அவருக்கு என்னவோ போல் இருந்தது. தனக்கே இன்னும் புரியாத புதிய பிரச்னை ஏதோ இருந்து அவன் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது போல அவருக்குத் தோன்றியது.

அவர் முகத்தில் படர்ந்த கவலையைப் பார்த்த சிபிஐ மனிதன் புன்னகையுடன் சொன்னான். ”பயப்படாதீர்கள். புதிர் விடுபட்டு விட்டது”

”என்ன அது?”

”அமானுஷ்யன் உயிரோடு இருந்தும் பத்திரிகைகளையோ, எதிர்க்கட்சிக் காரர்களையோ, அரசாங்க உளவுத் துறையையோ தொடர்பு கொள்ளாதது எதனால் என்ற கேள்வி என்னை இத்தனை நாளாய் அரித்துக் கொண்டிருந்தது. இப்போது தான் பதில் கிடைத்தது”

”அதுதான் என்ன என்று கேட்கிறேன்”

”மலையுச்சியில் இருந்து அமானுஷ்யன் விழுந்ததில் அவனுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் அழிந்து போயிருக்க வேண்டும்”

மந்திரி சிபிஐ மனிதனை ஒரு மாதிரி பார்த்தார். அந்த சிந்தனையே சினிமாத்தனமாக அவருக்குப் பட்டது.

அந்தப் பார்வையைப் பொருட்படுத்தாமல் சிபிஐ மனிதன் சொன்னான். ”அமானுஷ்யன் தன் எதிரி யார் என்றே தெரியாமல் குழம்புவதால் தான் ப்யாரிலாலிடமும், அந்தப் பையனிடமும் போய் விசாரித்திருக்கிறான்.”

”எனக்குப் புரியவில்லை”

சிபிஐ மனிதன் பெருமூச்சு விட்டான். அரசியல்வாதிகளுக்குத் தலையில் சரக்கு குறைவாக இருந்தும் பட்டவர்த்தனமாகப் பல அட்டூழியங்கள் செய்தும், இவ்வளவு பணத்தையும் சம்பாதித்து அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடிகிறதென்றால் அது அதிர்ஷ்டத்தால் தானே ஒழிய வேறெதாலும் இல்லை என்று நினைத்துக் கொண்டு பொறுமையாக விளக்கினான். ”அமானுஷ்யனுக்கு உங்களை அடையாளம் தெரியும். உங்கள் திட்டமும் தெரியும். அப்படிப்பட்டவன் நேராக பத்திரிகைகள், டிவி, எதிர்க்கட்சிக்காரர்கள் என்று போகாமல், மொட்டைக் கடுதாசியோ, பெயரில்லா ஒரு போன்காலோ கூடப் போடாமல் யார் உங்களை இப்படிச் செய்யச் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டு அந்தப் பையனையும், ப்யாரிலாலையும் போய்க் கேட்கக் காரணம் வேறு என்ன இருக்க முடியும்?”

மந்திரிக்கு மெல்ல விளங்கியது. ஆனால் சந்தேகம் தெளியாமல் கேட்டார். ”அப்படி மறந்தவன் எப்படி தன் வித்தைகளை எல்லாம் மறக்காமல் இருக்க முடியும். ப்யாரிலாலை எப்படி பயமுறுத்தியிருக்கிறான் என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா?”

”அந்த வித்தையெல்லாம் அவனுக்கு மூச்சு விடுவது மாதிரி அவன் உயிரோடு கலந்து விட்ட விஷயம். அதனால் அவனுக்கு இப்போதும் இயல்பாக வருகிறது. இது போன்ற நினைவுகள் எல்லாம் மூளையின் வேறு பக்கம் சம்பந்தப்பட்டது. விழுந்தபோது அந்த இடத்திற்கு அடிபட்டு அவன் சம்பவங்களை மறந்திருக்கலாம்”

”உங்கள் அளவு நான் படித்ததில்லை. எனக்கென்னவோ இன்னும் நம்பக் கஷ்டமாக இருக்கிறது. சரி நீங்கள் அவனுக்கு மறுபடி நினைவுகள் திரும்பும் என்று நினைக்கிறீர்களா?….”

”கண்டிப்பாக ஒரு கட்டத்தில் நினைவு திரும்பலாம்”

அந்தப் பதில் அவருக்கு அதிருப்தியைத் தந்தது. சிறிது யோசித்து விட்டுக் கேட்டார். ”அதுசரி நீங்கள் உண்மையாகவே அமானுஷ்யன் அந்த ப்யாரிலாலைப் திரும்பப் போய்ப் பார்ப்பான் என்கிறீர்களா?”

”ஆமாம். அந்தப் பையன் மூலம் ப்யாரிலால் பற்றி அறிந்து அங்கே போனவன், இப்போது ப்யாரிலால் மூலம் கேசவதாஸ் பற்றித் தெரிந்து கொண்டதால் அங்கே போவான். கேசவதாஸுக்கு இப்போது செக்யூரிட்டி கூடி இருப்பதைப் பார்த்த பிறகு கண்டிப்பாக நாம் கண்டுபிடித்ததைப் புரிந்து கொண்டிருப்பான். அதனால் ப்யாரிலாலிடம் அவன் வந்த விஷயத்தை யாரிடம் சொன்னான் என்று கேட்கப் போக நிறையவே வாய்ப்பிருக்கிறது”

”அப்படியானானால் ப்யாரிலால் வீட்டு முன்னால் காவலுக்கு ரகசியமாய் ஆட்களை ஏற்பாடு செய்யுங்கள். அமானுஷ்யனுக்கு நினைவு திரும்புவதற்கு முன்னால் அவனைக் கொன்று விடுவது தான் நல்லது….”

***********

டிஐஜி கேசவதாஸுக்குத் தன் வீட்டில் அதிகப்படுத்தியிருந்த பாதுகாப்பு மிகவும் அசௌகரியமாக இருந்தது. எந்நேரமும் ஒரு தீவிரவாதியின் தாக்குதலுக்குத் தயாராக இருப்பது போல் சீருடையிலும் மாற்றுடையிலும் இருந்த போலீசார் அவருடைய அமைதியைக் குலைப்பதாகவே அவருக்குத் தோன்றியது. அவருடைய மகனும், மகளும் தங்கள் அதிருப்தியை அவரிடம் தெரிவித்து விட்டார்கள். வெளியே எங்கே போனாலும் அவர்களுக்குப் பின்னால் கூட ரகசியமாக போலீசார் போகிறார்களாம். அவர்களுடைய தனிமனித சுதந்திரம் பறிபோனதாகச் சொல்லிப் பொருமினார்கள்.

அவருடைய மனைவி மட்டும்தான் அதை ஒரு கௌரவமாக நினைத்துப் பெருமைப்பட்டாள். அவளுக்கு ஏன் அந்தப் பாதுகாப்பு என்பது பற்றி எதுவும் தெரியாது. அவளைப் பொறுத்த வரை அதிகமான ஆட்கள் காவலுக்கு நின்றால் அது தன் கணவரின் முக்கியத்துவம் கூடி வருகிறது என்பதுதான் பொருள்.

டிஐஜி கேசவதாஸ் தன் வாழ்க்கையில் என்றும் பயந்தாங்கொள்ளியாக இருந்தவரல்ல. தன் பல வருட போலீஸ் அலுவலில் ஒரு முறை கூட குற்றவாளிகளின் தாக்குதலுக்குப் பயந்தவரல்ல. யாரையும் சமாளிக்கக் கூடிய சாமர்த்தியமும் தைரியமும் கொண்டிருந்த அவர் அந்த மந்திரியிடம் எத்தனையோ சொல்லிப் பார்த்தார். ”சார். அவன் வரட்டும். அவன் எப்படிப் பட்ட கொம்பனாக இருந்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது. இந்த வீட்டின் உள்ளே வந்தவன் வெளியே செல்ல முடியாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். தேவையில்லாமல் இந்தப் போலீஸ் பட்டாளம் வேண்டாம்”

ஆனால் அந்த மந்திரி அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஏதோ ஒரு தீவிரவாதிக்காக இவ்வளவு தூரம் ஏன் பயப்படுகிறார் என்று புரியாமல் கேசவதாஸ் யோசித்துக் கொண்டிருந்த அந்த இரவு வேளையில் தான், அவருடைய நெருங்கிய நண்பரும் மும்பை டிஐஜியுமான சட்டர்ஜி போன் செய்தார்.

வழக்கமான பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின்னர் சட்டர்ஜி கேட்டார். ”இந்தப் போன் பாதுகாப்பானது தானே”

தன்னுடைய போனை வேறு யாரும் ஒட்டுக் கேட்க வாய்ப்பில்லை என்று கேசவதாஸ் உறுதியளித்த பிறகு அவர் கேட்டார். ”கேசவ், ஏதோ தீவிரவாதியின் போட்டோவை இரண்டு நாள் முன்னால் விளம்பரப்படுத்தினீர்களே. விசாரித்ததில் அதெல்லாம் உன் தலைமையில் தான் நடக்கிறது என்று சொன்னார்கள். என்ன தான் நடக்கிறது அங்கே?”

இந்த விஷயத்தில் தன் நண்பரின் ஆர்வம் கேசவதாஸிற்கு வியப்பை அளித்தது. ”வழக்கமான ஒரு தீவிரவாதியைப் பற்றிய விசாரணை தான். ஏன் கேட்கிறாய்?”

”அவனைப் பற்றி உனக்கு நன்றாய் தெரியுமா கேசவ்”

”உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான் உண்மை.”

”அப்படியானால் இதற்கு யார் சூத்திரதாரி?”

தன் நண்பரிடம் ஒளிவு மறைவு தேவையில்லை என்பதால் அந்த மந்திரி பெயரைச் சொன்னார்.

அந்தப் பெயர் சட்டர்ஜியையும் திகைக்க வைத்தது போலத் தெரிந்தது. சில நொடிகள் பேசாமல் யோசித்த சட்டர்ஜி சந்தேகத்தோடு கேட்டார். ”அவனுக்கும் அவருக்கும் என்ன பகை?”

”தெரியவில்லை. என்னிடம் அவன் ஒரு தீவிரவாதி என்றும் அவருக்கும் எதிரி என்றும் சொன்னார். அவனை சாதாரண வழிகளில் பிடிக்க முடியாது, அவன் கவனமாக நடந்து கொள்பவன் அதனால் அவனை ஜோடித்த வழக்கில்தான் பிடிக்க வேண்டும் என்றும் சொல்லி அவரே இந்த திட்டத்தையும் சொன்னார். ஆமாம் உனக்கு அந்த ஆளைத் தெரியுமா?”

”தெரியும்… ”

”யாரவன்?”

”அவனைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால் உனக்குப் புரியாது. உன் ஃபேக்சில் அவனைப் பற்றி முழு விவரம் அனுப்புகிறேன். பத்து நிமிஷம் பொறு……

”நீ சொல்வதைப் பார்த்தால் அவன் பிரபலமான ஆள் போலத்தான் தெரிகிறது. பின் ஏன் எங்கள் விளம்பரத்திற்கு உள்ளூர் ஆள் ஒருவனைத் தவிர வேறு யாரும் தொடர்பு கொள்ளவில்லை”

”அவனுடைய எதிரிகள் அவன் விஷயத்தில் தலையிட விரும்ப மாட்டார்கள். அவனுடைய நண்பர்கள் இமயமலை, திபெத் போன்ற இடங்களில் உள்ள யோகிகள், பிக்குகள், லாமாக்கள்…..அவர்களும் உங்களிடம் தொடர்பு கொள்ள விரும்ப மாட்டார்கள்.. அப்புறம் ஒரு விஷயம்….”

”என்ன?”

”அவனிடம் ஜாக்கிரதையாயிரு கேசவ்…..”

சட்டர்ஜி போனை வைத்து விட்டார். கேசவதாஸிற்குத் தலை சுற்றியது. நண்பர் சொல்வதைப் பார்த்தால் அவன் சாமியார் போலத் தெரிகிறது. மந்திரியோ அவன் பல கொலைகள் செய்தவன் என்று சொன்னார். இதில் எது உண்மை?. ஃபேக்ஸ் வரும் வரை அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

சட்டர்ஜி சொன்னபடி பத்து நிமிடத்தில் பேக்ஸில் பக்கம் பக்கமாய் அவனைப் பற்றிய தகவல்கள் வந்தன. எல்லாவற்றையும் எடுத்து வைத்துப் படிக்க ஆரம்பித்த கேசவதாஸ் காலத்தை மறந்தார். இரவின் அமைதியில் அவர் படித்த விஷயங்கள் நண்பரிடமிருந்து வந்ததாக இருந்திராவிட்டால் கண்டிப்பாக கற்பனை என்று சொல்லியிருப்பார். படித்து முடித்த போது அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. மனதில் பிரமிப்புதான் மிஞ்சியது.

அவனுக்கு யாரோ வைத்திருந்த அந்தப் பெயர் அவரை மிகவும் கவர்ந்தது. ”அமானுஷ்யன்”. எவ்வளவு பொருத்தமான பெயர்! அபாயகரமானவன் என்றாலும் அவனை ஒரு முறை பார்க்கும் ஆவல் அவருக்குள் எழுந்தது. அத்துடன் சட்டர்ஜியின் கேள்வி அவருள்ளும் பெரிதாக எழுந்தது. இந்த அமானுஷ்யன் அந்த மந்திரி வாழ்க்கையில் எப்படி குறுக்கிட்டான்?

(தொடரும்)

About The Author