அமானுஷ்யன் (28)

”உடம்பு சரியில்லையா?” ஜெயின் ஆனந்திடம் கவலையுடன் கேட்டார். அவனுடைய ஷேவ் செய்யாத வாடிய முகம் அப்படி அவரைக் கேட்க வைத்தது.

”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்றான் ஆனந்த்.

ஆனால் ஹரித்வாரில் அந்தச் சாது சொன்னதைக் கேட்டதில் இருந்து அவன் இப்படித்தான் இருந்தான். அந்தச் சாது எதிர்காலத்தைப் பற்றிய எல்லாத் தகவலும் முன்பே தெரிவது நல்லதல்ல என்று சொல்லியும் வற்புறுத்திக் கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல் அவனை நிறையவே பாதித்து விட்டது. சிறு வயதிலிருந்தே தாயின் பக்தியையும், விரதங்களையும் பார்த்துச் சலித்துப் போன அவனுக்கு கடவுள் மீது பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆனால் எல்லா வாசல்களும் மூடப்படும் போது கடைசியில் ஒரே புகலிடம் ஆக தெய்வ நம்பிக்கை வந்து விடுகிறது.

”ஒரு காட்சி முழு உண்மையையும் சொல்லி விடுவதில்லை. எல்லாவற்றையும் நடத்தும் இறைவன் இருக்கிறான். அவனை நம்பு. பிரார்த்தனை செய். இந்த மானச தேவி மனதார செய்யும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்குப் பெயர் போனவள்” அந்த சாதுவின் வார்த்தைகள் மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்க அவனும் கடவுளே கடைசி புகலிடம் என்று நம்பினான்.

நிறைய நேரம் மானசதேவியிடம் மனம் உருகி பிரார்த்தித்தான். தன் தாயிற்காகவாவது தம்பியைக் காப்பாற்றும்படி வேண்டினான். ஒரு மணி நேரம் கண்கலங்கிப் பிரார்த்தித்து விட்டு டெல்லி திரும்பியவன் ஹரித்வாருக்குத் தன் தாயின் ஒரு வேண்டுதலை நிறைவேற்றப் போனதாக மட்டும் ஜெயினிடம் தெரிவித்தான்.

அவன் எதையோ மறைக்கிறான், கவலையில் ஆழ்ந்திருக்கிறான் என்று தெரிந்தாலும் ஜெயின் அவனுடைய தனிப்பட்ட விஷயங்களை குடைந்து கேட்க விரும்பாமல் விட்டு விட்டார்.

”ஆனந்த், அந்தத் தீவிரவாதி பற்றி விசாரணை எது வரை இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நான் என் நண்பர் ஒருவரிடம் கேட்டிருந்தேன் அல்லவா? அவர் நேற்று எனக்கு போன் செய்தார்….” என்று ஆரம்பித்து அவர் சொன்னதை எல்லாம் தெரிவித்தார். ஆனந்த் கவனமாகக் கேட்டான். அவனுக்கும் இதில் ஏதோ மர்மம் அடங்கி இருப்பதாகத் தோன்றியது.

”உண்மையில் அந்த விசாரணை யார் தலைமையில் நடக்கிறது சார்”

”பல அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றாலும் எல்லாவற்றையும் கண்காணிப்பது டிஐஜி கேசவதாஸ் தான். ஆனால் அவருக்கும் மேலே இந்த விசாரணையில் ரகசியமாய் ஈடுபாடு காண்பிக்கும் அரசியல்வாதி தான் யார் என்று தெரியவில்லை.”

”அந்த டிஐஜி கேசவதாஸ் எப்படி சார்”

”மனிதர் மிகவும் புத்திசாலி. அனுபவஸ்தர். டிபார்ட்மெண்டில் அவருக்கு நல்ல பெயர் தான் இருக்கிறது. மிக நாணயமான ஆள் என்றும் சொல்ல முடியாது. அதே மாதிரி மிக மோசமான ஆள் என்றும் சொல்ல முடியாது. பிழைக்கத் தெரிந்த மனிதர்…..”

**********

ப்யாரிலால் தனக்கு நேரம் தற்போது சுத்தமாகச் சரியில்லை என்று நினைத்துக் கொண்டான். தீவிரவாதி என்று பெயர் சூட்டப்பட்ட அந்த ஜகதலப்பிரதாபன் வந்த அந்தக் கணம் முதல் சனியன் தன்னைப் பிடித்து விட்டது என்பது அவனுடைய கணிப்பாக இருந்தது. பணம் போனதை விட அதிகமாக மானம் போனதை அவனால் சகிக்க முடியவில்லை. அந்த ஆள் போய் வெகு நேரம் வரை வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்தவனுக்கு வலி இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை. உடல்நிலை சரியில்லை என்று லீவு போட்டு வீட்டில் இருந்தவனுக்கு மேலிடத்தில் இருந்து உடனடியாக ஓரிடத்திற்கு வரும்படி உத்தரவு வந்தது.

போனில் ”எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்லை. வர முடியாத சூழ்நிலை” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான்.

”வேண்டுமானால் ஸ்டிரெச்சரை அனுப்புகிறோம்” என்று சொல்லி கடுப்பேற்றினார்கள். வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டான்.

அவனை அழைத்துச் செல்ல டாக்சி ஒன்று வந்தது. போலீஸ் வாகனம் வராமல் டாக்சி வந்தது அவனுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. ஆனால் வேறு வழியில்லாமல் ஏறிக் கொண்டான். அது நகரத்தை விட்டு வெளியே நிறைய தூரம் வந்து ஒரு குடோன் முன் நின்றது.

தன் வீட்டிற்கு வந்து தன்னை அடித்துப் போட்டு பணத்தையும் எடுத்துக் கொண்டு போனவனுடைய திருவிளையாடலாக இருக்குமோ என்று சந்தேகித்த அவன் டாக்சியில் இருந்து இறங்கும் முன் தன் மேலதிகாரிக்குப் போன் செய்து ”நீங்கள் வரச் சொன்ன இடம் புறநகரில் இருக்கும் ஒரு குடோன் தானா?” என்று உறுதிப்படுத்திக் கொண்டான். ”ஆம்” என்று சுருக்கமாகப் பதில் சொல்லி அவர் வைத்து விட்டார். ப்யாரிலாலிற்கு வயிற்றைப் புரட்டியது. என்னவோ நடக்கிறது, யாரும் பிடி கொடுத்துப் பேச மாட்டேன்கிறார்கள் என்று எண்ணுகையில் பயமாக இருந்தது.

இறங்கிய போது குடோன் வாசலில் நின்றிருந்த ஒருவன் செல்போனில் யாரிடமோ பேசுவதைக் கண்டான். அதுவும் சுருக்கமாகத் தான் இருந்தது.

”உள்ளே போகலாம்” என்றான் அந்த ஆள். அவன் உள்ளே நுழைந்தவுடன் குடோன் கதவை அந்த ஆள் சாத்தி விட்டான்.

குடோனில் முன் பாதி ஒளிவெள்ளத்தில் இருந்தது. பின் பகுதி இருட்டாக இருந்தது. விளக்கின் ஒளி உள்ளே நுழைந்தவுடன் அவன் முகத்திலேயே விழுந்ததால் அவன் கண்கள் கூசின. அதைத் தாண்டி அவன் உள்ளே நுழைய யத்தனித்த போது இருட்டிலிருந்து குரல் கேட்டது. ”அங்கேயே நில்”

பல்லைக் கடித்துக் கொண்டு அங்கேயே நின்றான் ப்யாரிலால். அந்தக் குரல் அவனுக்குப் பரிச்சயமான குரல் அல்ல. அவனுடைய மேலதிகாரிகளில் யாருடைய குரலுமல்ல.

”ப்யாரிலால். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான, ரகசியமான ஒரு விசாரணையில் நாம் இருக்கிறோம். அதனால் உங்களுடைய முழு ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்….”

ப்யாரிலால் தலையாட்டினான்.

”மூன்று நாளுக்கு முன்னால் நாம் ஒரு தீவிரவாதி பற்றி விளம்பரம் செய்தோம். அதில் சாட்சி சொல்ல ஒரு பையனையும் ஏற்பாடு செய்தோம். அந்தப் பையனிடமும் அவன் பெற்றோரிடமும் நீங்கள்தான் போய் பேசினீர்கள். சரி தானே”

அவன் தலையாட்டினான்.

”பதிலை வாய் திறந்து சொன்னால் நன்றாக இருக்கும்”

”ஆமாம்”

”டிவியில் அந்தப் பையனைக் காண்பித்த பிறகு அந்தப் பையனோ, அவன் பெற்றோரோ உங்களை வந்து பார்த்தார்களா? பேசினார்களா?”

”இல்லை”

”அந்தப் பையனும் அவன் குடும்பத்தாரும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு அவசரமாக எங்கேயோ போய் விட்டார்கள். அது உங்களுக்குத் தெரியுமா”

”தெரியாது”

”அவர்கள் அப்படிப் போக என்ன காரணம் இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?”

‘அந்த சைத்தான் அங்கும் போயிருக்கிறான், வேறென்ன காரணம் இருக்க முடியும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் அதைச் சொல்லாமல் ப்யாரிலால் ”இல்லை” என்றான்.

”ஒரு வேளை உங்களை வந்து பார்த்த அந்த தீவிரவாதி அவர்களையும் போய் பார்த்திருக்கலாமோ?”

ப்யாரிலாலிற்கு வியர்த்தது. அவன் வீட்டுக்கு அந்த ஆள் வந்தது இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்….இனம் புரியாத பயம் அவனைக் கவ்வ ஆரம்பித்த அதே நேரத்தில் அவனுக்கு ஒரு விஷயத்தை நினைக்கையில் லேசாக சிரிப்பும் வந்தது.

”நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?”

ப்யாரிலால் சிரிப்பு நின்றது. ”அந்தத் தீவிரவாதி கூடப் பேசும் போது தன்னைத் தீவிரவாதி என்று சொல்லிக் கொள்ளவில்லை. மூன்றாம் மனிதனைச் சொல்வது போல ‘அந்தத் தீவிரவாதிக்கும் உனக்கும் ஏதாவது முன்பகையா?’ என்று கேட்டான். அவனும் ‘அந்தத் தீவிரவாதி’ என்கிறான். நீங்களும் ‘அந்தத் தீவிரவாதி’ என்கிறீர்கள். உண்மையில் இரண்டு பேரும் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பது தான் விளங்கவில்லை”

சிபிஐ மனிதன் புன்னகை செய்தது ப்யாரிலாலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிபிஐ மனிதன் கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினான். ”அவன் மேல் ஒரு வழக்கை நாம் ஜோடிக்க வேண்டி இருந்தது என்பதாலேயே அவன் தீவிரவாதி இல்லை என்று சொல்ல முடியாது. அவன் மிகவும் ஆபத்தானவன். அவனை நேரில் சந்தித்த உங்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லையே?”

ப்யாரிலாலுக்கு அதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்பது அவன் முகத்தைப் பார்த்த போதே தெரிந்தது.

சிபிஐ மனிதன் சொன்னான். ”அவன் எப்படி வந்தான், என்ன செய்தான், என்ன சொன்னான் என்பதை ஒன்றுவிடாமல் சொல்லுங்கள்”

ப்யாரிலால் தர்மசங்கடத்துடன் நின்றான். பல் பேருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அவனை கேலிக்கூத்தாக்கிய கதையை அவன் எப்படி சொல்வான்?

”அவனுடைய கூட்டாளியாக உங்களை நாங்கள் முடிவு செய்ய வேண்டாம் என்றால் தயவு செய்து சீக்கிரம் எல்லாவற்றையும் சொல்லுங்கள்”

ப்யாரிலால் முகத்தில் இருந்து ரத்தம் வடிந்தது. புலிவாலைப் பிடித்த கதை என்பது இதுதானோ? வேறு வழியில்லாமல் தயங்கித் தயங்கி எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான். டிஐஜி கேசவதாஸின் பெயரைச் சொன்னதைச் சொல்லலாமா வேண்டாமா என்று அவன் தயங்கிய போது சிபிஐ மனிதன் தானாக அவனுக்கு உதவி செய்தான்.

”பரவாயில்லை சொல்லுங்கள். உங்கள் நிலைமையில் யார் இருந்தாலும் அதைத் தான் செய்திருப்பார்கள். நீங்கள் அவர் பெயரைச் சொல்ல வேண்டி வந்தது. மேலே சொல்லுங்கள்”

நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தொடர்ந்த அவனுக்குத் தன் பணத்தை பறி கொடுக்க வேண்டி வந்ததைச் சொல்லும் போதும் தயக்கம் வந்தது. ஆனால் உண்மையைச் சொன்னான்.

எல்லாம் கேட்டு முடித்த பிறகு சிபிஐ மனிதனும், உடன் இருந்த அந்த அரசியல்வாதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த அரசியல்வாதியின் குரல் பிரபலமானது என்பதால் அவர் வாயையே திறக்கவில்லை.

சிபிஐ மனிதனுக்கு அமானுஷ்யன் கேட்ட கேள்விகள் ஆச்சரியப்படுத்தின. ”உனக்கும் அந்த தீவிரவாதிக்கும் முன்பகையா, டிஐஜிக்கும் அவனுக்கும் ஏதாவது பகையா” என்ற கேள்விகள் அமானுஷ்யன் கேட்க வேண்டிய அவசியம் அவனுக்கு விளங்கவில்லை. அவன் அந்தக் கேள்விகள் கேட்டது உண்மை தானா என்பதை இன்னொரு முறை ப்யாரிலாலிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான்.

பிறகு கேட்டான். ”அவன் உங்களிடம் பேசும் போது கோபப்பட்டானா?”

ப்யாரிலால் சொன்னான். ”கொஞ்சம் கூட கோபப்படவில்லை.”

”நீங்கள் அவனைப் பார்த்து நிறையவே பயந்திருப்பது தெரிகிறது. ஏன்?”

ப்யாரிலாலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பின் சொன்னான். ”அவனைப் பார்த்தால் சாதாரண மனிதன் மாதிரியே தெரியவில்லை. அவன் மிரட்டியது எதுவுமே பயமுறுத்த அல்ல என்பது எனக்குப் புரிந்தது. அவன் நினைத்திருந்தால் சுலபமாக என்னை கோமாவில் ஆழ்த்தியிருக்கவோ, சாகடித்திருக்கவோ முடிந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆயுதம் எதுவுமில்லாமல் ஒரு மனிதன் இப்படியெல்லாம் செய்ய முடியும் என்பதே எனக்கு …….”

சிபிஐ மனிதன் அவன் முடிக்க முடியாமல் திண்டாடுவதைப் பார்த்தான். ப்யாரிலால் பேச முடியாமல் நிறுத்திக் கொண்டு அடுத்தது என்ன என்பது போல் முன்னால் தெரிந்த இருட்டைப் பார்த்தான்.

”ப்யாரிலால். நீங்கள் சொன்ன தகவல்களுக்கு நன்றி. அவன் இன்னொரு தடவை உங்களைப் பார்க்க வரக் கூடும். வந்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மேலதிகாரிக்குத் தகவல் சொல்ல வேண்டும். சரியா…”

ப்யாரிலாலின் முகத்தில் பீதி வெளிப்படையாகத் தெரிந்தது. இன்னொரு தடவை அந்த சைத்தானைப் பார்க்க அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை. அவன் இன்னொரு தடவை வர முடியும் என்ற எண்ணமே இது வரை இல்லாமல் இருந்ததால் இது என்னடா புதிய தலைவலி என்ற திகில் அவனிடம் குடியேறியது. அவன் பலிகடாவைப் போலத் தலையாட்டினான்.

”நீங்கள் அவனை மறுபடி பர்த்து ஏதாவது செய்து அவனைக் கொல்ல முடிந்தால் உங்களுக்கு உடனடியாக உத்தியோக உயர்வும், பத்து லட்ச ரூபாயும் சன்மானமாகக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது”

ப்யாரிலால் நினைத்துக் கொண்டான். ‘அவனை இன்னொரு தடவை பார்த்த பின் முதலில் நான் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் பார்த்துக் கொள்கிறேன். நாசமாய் போனவன்களா. நீங்கள் தைரியமிருந்தால் அவனுடன் நேரடியாக மோதினால் அதில் அர்த்தம் இருக்கிறது. அதை விட்டுக் கீழ் உத்தியோகஸ்தனான என்னை ஏனடா பலிகடாவாக்குகிறீர்கள்?”

”நீங்கள் ஏதோ நினைக்கிறாற் போல இருக்கிறது, அது என்ன ப்யாரிலால்”

”ஒருவேளை அடுத்த தடவை வந்தால் எப்படி அவனை பிடிப்பது என்று யோசித்தேன் சார்”

”ஏதாவது திட்டம் பிடிபட்டதா?”

”இல்லை”

”அவன் உங்கள் அருகில் வருவதற்கு முன் அவனைச் சுட்டு விடுங்கள் ப்யாரிலால். அதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் அவன் உயிருடன் இருக்கும் வரை மறுபடியும் வரச் சாத்தியமிருக்கிறது. அவனைத் திரும்பப் பார்க்க உங்களுக்கு ஆசை இருக்கிறதா?”

ப்யாரிலாலுக்குக் காய்ச்சல் வருவது போல் இருந்தது. ”கண்டிப்பாய் இல்லை” என்று பரிதாபமாகச் சொன்னான்.

(தொடரும்)

About The Author

2 Comments

Comments are closed.